உலகப் போரின் சில பக்கங்கள்

போர் தொடங்கியாயிற்று. சண்டையிடப் போதுமான வீரர்கள் வேண்டுமே! இதற்கு பிரிட்டன் ஒரு தீர்வு கண்டது. ‘பிரிட்டன்வாசிகளே, உங்கள் நாட்டுக்கு நீங்கள் தேவை’ என்று சுவரொட்டிகள் மூலம் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முகத்துக்கு வெளியே நீளும் முறுக்குமீசையுடன் பிரிட்டன் போர்த் துறை அமைச்சர் லார்ட் கிட்சனர் விரலை நீட்டி அழைப்பதுபோல் வடிவமைக் கப்பட்ட அந்தச் சுவரொட்டிக்கு மிகப் பெரிய பலன் கிடைத்தது. நாட்டுப்பற்று கொண்டவர்களிலிருந்து சரியான வேலை இல்லாதவர்கள் வரை, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்குப் போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தனர். அவர்களில் பலர் தேர்வு செய்யப்பட்டு, பிரான்ஸில் உள்ள போர் முனைகளுக்கு அனுப்பப்பட்டனர். என்றாலும், இந்தப் புதிய ஆர்வம் பெருமளவில் எதிர்மறையான விளைவுகளையே தந்தது. ஆகஸ்ட் 1914-ல் ஜெர்மனியுடனான சண்டையில் பிரிட்டன் சந்தித்த பின்னடைவுக்குக் காரணமாக இந்தப் புதிய வீரர்களே இருந்தனர். ராணுவத்தில் சேர்ந்தாலும் போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத அவர்களில் பலர் போர்க்களத்தில் பலியாயினர். பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரியா - ஹங்கேரி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளைப் போல், பிரிட்டனில் கட்டாய ராணுவப் பயிற்சி முறை அப்போது இல்லை. பல இழப்புகளுக்குப் பிறகு, ஜனவரி 1916-ல்தான் பிரிட்டனில் கட்டாய ராணுவப் பயிற்சி கொண்டுவரப்பட்டது. அதன்படி, 18 முதல் 41 வயதுள்ள ஆண்கள் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டனர். உடல் தகுதி இல்லாதவர்கள், ஆசிரியர்கள், முக்கியமான தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

1918 இறுதியில் 51 வயதுள்ள ஆண்களும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப் பட்டனர். இதற்கு மக்களிடம் எதிர்ப்பும் எழுந்தது. ஆட்களைக் கட்டாயமாக ராணுவத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் உள்ள ட்ரஃபால்கர் சதுக்கத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடிப் போராட்டம் நடத்தினர். பிரிட்டன் அரசு மக்களின் கோபத்துக்கும் மரியாதையளித்தது. கட்டாய ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கு, மற்ற துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கியது குறிப்பிடத் தக்கது.

போரும் அதிர்ச்சியும்!

போரின் பாதிப்புகள் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு மிகக் கொடூரமானவை. முதல் உலகப் போரில் மனிதர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது. அவற்றில் ஒன்று, மனநலக் கோளாறு. வெடிகுண்டு அதிர்ச்சி (ஷெல் ஷாக்) என அழைக்கப்பட்ட மனநலப் பாதிப்பு போர் வீரர்களைக் கடுமையாகத் தாக்கியது. தங்கள் கண்முன்னர் நண்பர்களும், எதிரி நாட்டு வீரர்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதைக் கண்ட வீரர்கள் அதிர்ச்சியில் தங்கள் சுய உணர்வை இழந்தனர். பிரிட்டன் தரப்பில் மட்டும் 80,000 வீரர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டனர்.

சரியாகப் பேச முடியாமை, வலிப்பு நோய், பதற்றம், செரிமானக் கோளாறு முதல் பெரிய அளவிலான நரம்பியல் பாதிப்புகள் வரை வீரர்களுக்கு ஏற்பட்டன. போர் முடிந்து பல காலம் ஆன பின்னரும் இப்படியான பாதிப்புகள் தொடர்வதைக் கண்டு மருத்துவர்கள் குழப்பமடைந்தனர். இந்தப் பாதிப்புகளிலிருந்து பலரால் மீண்டுவர முடியாததால், அவர்கள் ராணுவத்தில் மீண்டும் சேர்க்கப்படவில்லை. அதன் பின்னர் நடந்த இரண்டாம் உலகப் போர் மற்றும் வியட்நாம் போர் போன்றவற்றில் பங்கேற்ற போர் வீரர்களும் இதுபோன்ற பாதிப்புகளைச் சந்தித்தனர்.

போரும் புதுக் கலையும்!

முதல் உலகப் போர் ஒரு பக்கம் பேரழிவைத் தந்தாலும் மற்றொரு பக்கம் அறிவியல் சாதனங்கள், புதிய ஊடகங்கள் வளர்ச்சி பெறவும் வழி வகுத்தது.முதல் உலகப் போரின்போது திரைப்படத் துறையின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருந்தது. ரஷ்யத் தத்துவவியலாளர் அலெக்சாந்தர் போக் தனோவிடம், சோவியத் ரஷ்யாவின் முதல் அதிபரான லெனின் 1907-ல் இப்படிக் கூறினார்: “பொதுமக்களின் கல்விக்கு மிக முக்கியப் பங்காற்றப்போவது திரைப்படம்தான்.” அவரது கூற்று சரியானதுதான் என்று முதல் உலகப் போர் நிரூபித்தது.

போர் தொடங்கிய நாட்களில் அந்தப் புதிய கலை, பல நாட்டு மக்களுக்கும் அரசுகளுக்கும் அத்தனை பரிச்சயமில்லாத ஒன்றாகவே இருந்தது. எனினும், அமெரிக்காவில் 1915 முதல் 1918 வரை சுமார் 2,500 திரைப்படங்கள் தயாரிக்கப் பட்டன. பிரிட்டன் போன்ற நாடுகள் பின்னர் சேர்ந்துகொண்டன. அந்நாட்டில் 1916-ல் தயாரிக்கப்பட்ட ‘தி பேட்டில் ஆஃப் சோம்' என்ற பிரச்சாரத் திரைப்படம், போரில் அமெரிக்காவும் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதுவரை நடுநிலை வகித்த அமெரிக்கா 1917-ல்தான் அந்தப் போரில் களமிறங்கியது. பிரச்சாரப் படங்களுக்கிடையில் போரின் பாதிப்புகளை விளக்கும் திரைப்படங்களும் வெளியாயின. 1916-ல், தாமஸ் ஹார்ப்பர் இன்ஸ் என்ற அமெரிக்கர் தயாரித்து இயக்கிய ‘சிவிலைசேஷன்' திரைப்படம் அமைதியை வலியுறுத்தியது. சார்லி சாப்ளின் தயாரித்து, இயக்கி 1918-ல் வெளியான ‘ஷோல்டர் ஆர்ம்ஸ்' திரைப்படம் முத்தாய்ப்பாக அமைந்தது. போர் முனையில் நிகழும் பயங்கர அனுபவங்களை மெல்லிய நகைச்சுவை கலந்த சோகத்துடன் சொன்ன படம் அது!

தி கார்டியன், தொகுப்பு: வெ.சந்திரமோகன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE