கணை ஏவு காலம் 41 | நீங்கள் எப்படி ஆள்வீர்கள்? @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

அரபு எழுச்சி என்று இன்று சரித்திரம் குறிப்பிடுகிறது. 2011-ம் ஆண்டு அரபு நாடுகள் பலவற்றில் நடைபெற்ற மக்கள் புரட்சிகளும் ஆட்சி மாற்றங்களும் பெரிய அளவில் அம்மக்களுக்கு உதவியதாகச் சொல்ல முடியாது. ஆனால் புரட்சி நடக்காத பகுதிகளில் அது உண்டாக்கிய தாக்கம் பெரிது. நாம் பாலஸ்தீனத்தில் நடந்ததை மட்டும் கவனிப்போம். இக்கணம் வரை பாலஸ்தீனம் என்பது தனி நாடல்ல. சுதந்திரத்துக்காக, தங்கள் மண்ணுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் வசிக்கும் ஒரு பிராந்தியம்.

பாலஸ்தீன சுதந்திர இயக்கம் என்பது தொடக்கம் முதலே ஆயுதப்போராட்டங்களால் வடிவமைக்கப்பட்டது. பேச்சுவார்த்தை வழி என்பது பாதியில் யாசிர் அர்ஃபாத்தால் முன்னெடுக்கப்பட்டது மட்டுமே. அவரது வழி வந்தவர்கள் அல்லது அவரை மட்டும் தலைவராக ஏற்றுக்கொண்டவர்களும் அவர்களது தலைமுறையினரும் இன்று வரை அவ்வழியைப் பின்பற்ற நினைக்கிறார்கள்.

அது சரிப்படாது என்று நினைப்பவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுக்கிறார்கள். ஹமாஸ் அந்த வழியில்வந்தது. குறிப்பாக இந்த இடத்தில் இதனை நினைவூட்டுவதற்கு ஒரு காரணம் உண்டு. அரபு எழுச்சி என்பது, சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக மக்கள் நடத்திய புரட்சி.

பல நாடுகளில் சர்வாதிகாரம் அகற்றப்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல்நடந்து புதிய ஆட்சிகள் அமைந்தன. பாலஸ்தீனர்களும் அப்படி நிம்மதியாக வாழ வேண்டுமானால் அனைத்து விதஅடிப்படைவாத சக்திகளையும் நிராகரித்துவிட்டு, ஜனநாயகத்தை விரும்பக் கூடியவர்களைமட்டுமே தங்களது தலைவர்களாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் பல்வேறு ராகங்களில் பாடிக்கொண்டிருந்தது.

இதை இஸ்ரேலைக் காட்டிலும் உக்கிரமாக ஃபத்தாவும் சொல்லத் தொடங்கியது. ஒரே அர்த்தம்தான். ஹமாஸைக் கைவிடுங்கள். இது உக்கிரமடையத் தொடங்கியபோது ஹமாஸ் ஒரு முடிவு செய்தது. இஸ்ரேல்இருக்கட்டும். முதலில் இந்த ஃபத்தாவை ஒழித்துவிட்டுத்தான் மறுகாரியம். இஸ்ரேலுக்குக் கட்டுப்பட்டு,அவர்கள் சொல்லும்படி நடனமாடிக்கொண்டு, அவர்கள் பேசுவதையே இவர்களும் பேசுவார்கள் என்றால் என்ன பொருள்?

இஸ்ரேலின் ஊதுகுழலாக ஒரு பாலஸ்தீன இயக்கம் இருப்பது என்பது ஏற்கக் கூடியதே அல்ல. அதுவரையேகூட அவர்கள் ஒன்றும் ஒற்றுமையாக இருந்ததில்லைதான். ஆனால் எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சிக்கு, அதன் வெற்றிக்குப் பிறகு பாலஸ்தீனர்களின் ஒரே அரசியல் முகம் ஃபத்தாதான் என்று ஆகிவிடக் கூடாது என்கிற பதற்றம் ஹமாஸிடம் அதிகம் காணப்பட்டது.

தோதாக, ஹமாஸ் ஆட்சியை அப்பாஸ் கலைத்ததற்குப் பின்னிணைப்பாக பெஞ்சமின் நெதன்யாகு ஒருகருத்தைச் சொன்னார். ‘இஸ்ரேல் எக்காலத்திலும் ஹமாஸுடன் சமரசமாகப் போகவாய்ப்பில்லை. இஸ்ரேலியர்களைக் கொல்வதையே கொள்கையாக வைத்திருப்போருடன் நான் எப்படி உட்கார்ந்து பேசுவேன்? எந்த இஸ்ரேலியத் தலைவரும் அதற்கு உடன்பட மாட்டார்’ என்றார்.

அதாவது மம்மூத் அப்பாஸ்செய்தது சரி. அப்பாஸ் நல்லவர். அவரது நடவடிக்கையை இஸ்ரேல்ஆதரிக்கிறது. இனி, பாலஸ்தீனத்துக்குச் சேர வேண்டிய நிதி உள்ளிட்ட அனைத்தும் முறைப்படி அனுப்பி வைக்கப்படும். இஸ்ரேல் மட்டுமல்லாமல், பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் மம்மூத் அப்பாஸையும் ஹமாஸ் அமைச்சரவையைக் கலைத்த அவரது முடிவையும் பலமாக ஆதரித்தது மக்கள் மத்தியில் வேறு விதமான சிந்தனையை விதைத்துவிடுமோ என்று ஹமாஸ் கவலைப்பட்டது.

அதாவது, நாம் ஹமாஸுக்கு ஓட்டுப் போட்டிருக்கக் கூடாது. நீண்ட நாள் நோக்கில் அது பாலஸ்தீனர் நலனுக்கு நல்லதல்ல என்று அவர்கள் நிரந்தரமாக நினைக்கத் தொடங்கிவிட்டால்? இதுதந்த பதற்றமும் அவர்களது கோபத்தைஅதிகப்படுத்தியது. எல்லாமுமாகச் சேர்ந்து ஹமாஸ்-ஃபத்தா இடையிலான சகோதரச் சண்டை அதற்குமுன் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வெடித்தது.

காஸாவில் இருந்த அத்தனை ஃபத்தாவினரையும் ஹமாஸ் மொத்தமாக வெளியேற்றும் பணியில் இறங்கியது. உறுப்பினர்கள் மட்டுமல்ல. ஆதரவாளர்கள், அனுதாபிகளுக்கும் இடமில்லை. நீயாகப் போய்விட்டால் உயிரோடு போவாய். அல்லது உன்னைநான்கு பேர் எடுத்துச் செல்வார்கள். எது வசதி என்று நீயே முடிவு செய்துகொள். எந்த இலக்கணத்துக்கும் உட்படாத மிகக் கோரமான யுத்தம் அது.

தொடக்கம், முடிவு எதுவும் கிடையாது. கண்ட இடத்தில் சுட்டுக்கொண்டார்கள். வெடி வைத்துத் தகர்த்துக் கொண்டார்கள். நிலைமை எல்லை கடந்து சென்றுகொண்டிருந்தது. இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி என்ற முடிவின்றி, அன்றாடம் எவ்வளவு மரணங்கள் என்ற கேள்விக்கு மட்டுமே பதில் வந்துகொண்டிருந்தது. சில சமாதான முயற்சிகள் நடந்தன. ஆனால் பலனில்லை. இஸ்ரேலுக்கு அது போதுமல்லவா? உங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. நீங்கள் எப்படி ஒரு நாட்டை ஆள்வீர்கள் என்று கேட்கத் தொடங்கினார்கள்.

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 40 | பல நாடுகளுக்கு பரவிய மக்கள் புரட்சி @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE