இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ‘‘அதிபரின் பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளிலிருந்து நான்கு ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார். 2015-ல் இலங்கை அதிபர் பதவிக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பொலனருவ மாவட்டத்தில் ஜனவரி 26-ல் பேசிய அதிபர் சிறிசேனா இவ்வாறு பேசியிருக்கிறார்.
நல்ல நிர்வாகியாக இருந்தால், சீர்திருத்தங்களை அமல்படுத்த நான்கு ஆண்டுகளே போதும் என்று தென்னாப்பிரிக்க அதிபராக இருந்த நெல்சன் மண்டேலாவை உதாரணமாகவும் கூறியிருக்கிறார். “நான் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட அரசியல் சட்ட நிபுணர்களும் அரசியல் தலைவர்களும் ஐந்தாண்டு பதவிக்காலம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?
அதிபர் பதவியேற்று மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், ‘2021 வரையில் அதிபர் பதவியில் நீடிக்க முடியுமா?’ என்று அரசியல் சட்ட நிபுணர்களிடம் கடந்த வாரம் ஆலோசனை கேட்டிருக்கிறார் சிறிசேனா. அதாவது, பதவியேற்றதிலிருந்து ஆறு ஆண்டுகள் பதவியில் தொடர முடியுமா என்று கேட்டிருக்கிறார். இதற்குக் காரணம், அரசியல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள 19-வது திருத்தம்தான்.
2015 ஏப்ரலில் நிறைவேற்றப்பட்ட இந்தத் திருத்தப்படி, அதிபரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகிவிட்டது. அந்தத் திருத்தத்திலேயே இன்னொரு பிரிவு, இப்போது அதிபர், பிரதமர் ஆகிய பதவிகளில் இருப்பவர்கள் அதே பதவியில் நீடிக்கலாம் என்றும், அதேசமயம், புதிய சட்டத் திருத்தம் அனுமதிக்கும் பதவிக்காலம் வரையில்தான் நீடிக்க முடியும் என்றும் தெளிவுபடுத்துகிறது.
அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஆறு ஆண்டுகளுக்கு என்று இருந்தாலும், புதிய திருத்தம் காரணமாக, ஐந்து ஆண்டுகள் பூர்த்தியான பிறகு அவர் பதவிக்காலமும் முடிந்துவிடுகிறது.
சட்டப்படி என்ன நிலை?
கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடந்தது. கொழும்பில் இருக்கும் ‘மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்’ என்ற மையம் சார்பில் வாதிட்டவர்கள், ‘ஐந்தாண்டு பதவிக்காலம் என்ற வரையறை இப்போது பதவியில் இருப்பவருக்கும் பொருந்தும்’ என்றனர். ஆனால் அட்டர்னி ஜெனரலோ, ‘அவர் ஆறு ஆண்டுகள் பதவி வகிக்கத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல், இந்தச் சட்டம் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதல்ல’ என்று வாதிட்டார். ஆனால், இது பலராலும் ஏற்கப்படவில்லை.
இந்த சர்ச்சைகளால் கோபமடைந்த சிறிசேனா, “இன்றைக்கேகூட இப்பதவியிலிருந்து விலகத் தயாராக இருக்கிறேன். அரசியல் சட்டப்படி என்ன நிலை என்று அறிவதுதான் முக்கியம்” என்று பதிலளித்திருக்கிறார். அரசியல் சட்டம் தொடர்பான இந்தக் குழப்பம் யாருக்கு, எங்கே முதலில் ஏற்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை.
சந்தேகம் உணர்த்தும் சங்கதி!
நாடாளுமன்றத்தின் நான்கரை ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்னால், சிறிசேனாவின் பதவிக்காலம் 2020 ஜனவரியில் முடிந்துவிடும். நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் 2015 செப்டம்பர் முதல் தேதி நடந்தது.
அன்றிலிருந்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்டால், நாடாளுமன்றத்தை எப்போது வேண்டுமானாலும் கலைக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு என்கிறது 19-வது அரசியல் சட்டத் திருத்தம்.
‘‘சிறிசேனாவின் கேள்விக்குப் பின்னால் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது, சட்டப்படியாக எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க அதிபருக்கு உரிமை உண்டு’’ என்று அவர் சார்ந்துள்ள இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் மத்திய அமைச்சருமான துமிண்ட திஸ்ஸநாயக கூறுகிறார்.
“இலங்கை சுதந்திரக் கட்சி தன்னுடைய முக்கிய அரசியல் போட்டியாளரான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்திருக்கிறது. இப்போது இந்த உறவு வலுவாக இல்லை.
இப்போது மட்டுமில்லை, இன்னும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் தான் அரசியலில் தீவிரப் பங்காற்ற இருப்பதைத் தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.), அதிகார வர்க்கம், மக்கள் ஆகிய மூன்று தரப்புக்கும் தெரிவிக்கத்தான் இந்த ஐயத்தை சிறிசேனா எழுப்பியிருக்கிறார்” என்கிறார், இலங்கை அரசின் மூத்த அதிகாரி ஒருவர்.
தமிழில்: சாரி,
©: ‘தி இந்து’ ஆங்கிலம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago