சாமியா அங்குரூமா. கானாவின் முதல் அதிபரான குவாமி அங்குரூமாவின் மகள். தனது தந்தை தோற்றுவித்த சி.பி.பி. கட்சியின் தற்போதைய தலைவர். ‘மண்டேலாவின் பெண் அவதாரம்’ என்று கூறப்படுபவர். இந்தியாவின் பிரதானக் கட்சியொன்றுக்குப் பெண்ணொருவர் தலைவராக இருந்தும் தேர்தல், அதிகாரம் போன்றவற்றில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கும் சூழலில், சாமியா அங்குரூமாவின் கருத்துகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன…
1966-ல் உங்கள் குடும்பமே நாட்டை விட்டுத் துரத்தப் பட்டது. நீண்ட நாட்கள் வெளிநாட்டில் இருந்த நீங்கள், கானாவின் அரசியலுக்குத் திரும்பியதற்குக் காரணம் என்ன?
நான் அரசியல் குடும்பத்திலிருந்து வந்திருப்பதால் இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது! எனது தந்தையின் எழுத்துகளைப் படித்தபோது, எனக்கு ஒன்று தோன்றியது. அவருடைய சிந்தனைகளெல்லாம் வெறுமனே படிப்பதற்கானவை அல்ல, செயல்படுத்தப்பட வேண்டியவை. கானா, ஆப்பிரிக்கா ஆகியவற்றைக் குறித்த அவருடைய சிந்தனைகளுக்கு உயிரூட்டும் ஆசைதான் என்னை கானாவுக்குத் திரும்பச் செய்தது.
1992-லிருந்து கானாவில் நிலவ ஆரம்பித்த ஜனநாய கப் போக்கும் ஒரு முக்கியக் காரணம். பல வருட ராணுவ ஆட்சி, ராணுவப் புரட்சிகளுக்குப் பிறகு, நாடு பல கட்சி ஜனநாயகத்துக்கு அந்த ஆண்டுதான் திரும் பியது. அப்போதிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலைச் சந்தித்துவருகிறோம். ஆளும் கட்சி தோல்வியைச் சந்தித்து, அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்திருக்கிறது. நாட்டை விட்டுத் துரத்தப்பட்டிருந்தவர்கள் மறுபடியும் நாட்டை நோக்கி வரக் காரணம், இந்தச் சூழல்தான்.
உங்கள் தந்தை தொடங்கிய ‘கன்வென்ஷன் பீப்பிள்ஸ் பார்ட்டி’யின் (சி.பி.பி.) தற்போதைய தலைவர் நீங்கள். உங்கள் கட்சியைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்?
எங்கள் கட்சி பல ஆண்டுகளாக (1966-1996) தடைசெய்யப்பட்டிருந்தது. இப்போது புத்துயிர் பெற்றுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இளைஞர்கள் எங்கள் கட்சியின் மீது ஆர்வம் காட்டுகிறார்கள்.
எங்களை ஆப்பிரிக்க அரசியல் கட்சி என்றே சொல்லலாம். அனைத்து ஆப்பிரிக்க நாடுகள் என்னும் கருத்தாக்கத்தில் நாங்கள் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறோம். ஆப்பிரிக்க நாடுகள் ஒருங்கிணைந்து திட்டமிடுதல், ஒருங்கிணைந்து உழைத்தல், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுதல் - இதுதான் அனைத்து ஆப்பிரிக்க நாடுகள் என்ற எங்கள் கருத்தாக்கம். இதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். இதில் ஆப்பிரிக்கக் கண்டத்தினர் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த ஆப்பிரிக்கர்களும் உள்ளடங்குவார்கள். வளர்ந்துவரும் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பும் இதில் அடங்கும். இதனால்தான், அணிசாரா நாடுகள் அமைப்பில் 1960-களில் நாங்கள் மிகப் பெரிய சக்தியாக விளங்கினோம்; அப்போதுதான் இந்தியாவுடன் எங்கள் நட்பு வலுவடைய ஆரம்பித்தது.
சமூக நீதி என்பது எங்கள் சித்தாந்தத்தின் இன்னொரு தூண். கானாவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது என்றும், மகிழ்ச்சியான, மனிதத்தன்மை நிறைந்த ஒரு சமூகமாக கானா உருவாவதற்கு எங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வது என்றும் அதற்கு அர்த்தம்.
எங்கள் சி.பி.பி. கட்சியின் மூன்றாவது தூண் தன்னிறைவும் சுயநிர்ணயமும்தான். எங்கள் பிரச்சினைகளுக்கு, எங்கள் பொருளாதாரத்துக்குத் தேவையான தீர்வுகளை நாங்களே அளித்துக்கொள்ள முடியும் என்று அதற்கு அர்த்தம். அதாவது, வெளியிலிருந்து வரும் உதவிகளையும் தீர்வுகளையும் நம்பியிருப்பது என்பதைவிட, சுயேச்சையான ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான தீர்வைப் பின்பற்றுவது என்று அதற்கு அர்த்தம். எங்களால் இதைச் சாதிக்க முடியும். பிறருடைய ஆலோசனைகளை நாங்கள் மதிப்போம்தான். ஆனால், சுயேச்சையான வளர்ச்சிப் பாதையைத்தான் நாங்கள் பின்பற்றுவோம். இதை எப்படிச் சாதிப்பது என்பதுதான் சவால். எங்களுடைய வளங்கள், வளர்ச்சி, பொருளாதாரம் ஆகியவற்றைச் சிறந்த முறையில் கையாள வேண்டுமென்றால், நாங்கள் அதைச் சாதித்தே ஆக வேண்டும்.
சி.பி.பி. கட்சியின் முதல் பெண் தலைவர் நீங்கள். அரசியலில் பெண்களுக்குப் பங்களித்ததில் உங்கள் தந்தைதான் முன்னோடி. இன்று ஆப்பிரிக்காவில் நிலவும் வன்முறைகளுக்கிடையே பெண் அரசியல்வாதிகளால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கானா மக்கள்தொகையில் பெண்கள் 51% இருந்தாலும், அதிகார மட்டத்தில் பெணகளின் சதவீதம் மிகவும் குறைவே. எனவே, பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது. வளர்ச்சியின் பலன்களை உணர வேண்டுமென்றால், மக்கள்தொகையின் அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இது ஒன்றும் தர்மத்துக்காகச் செய்ய வேண்டிய விஷயமல்ல. நம் முயற்சிகள், வளங்கள் ஆகியவற்றின் பலன்களை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால், பெண்களின் பங்கேற்பு அதிக அளவில் இருந்தாக வேண்டும்.
அமைதி நடவடிக்கைகள், அமைதிப் பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் முன்பைவிட இப்போது பெண்களின் பங்கு அத்தியாவசியமாகியிருக்கிறது. அவர்களுடைய யோசனை களும் கருத்துகளும் நமக்குத் தேவை. அரசியலிலும் அதிகாரத்திலும் பெண்கள் இருக்கும்போது குழந்தைகள், நலிவுற்றோர், விளிம்புநிலை மக்கள் ஆகியோருக்கான சட்டதிட்டங்கள் அதிக அளவில் கொண்டுவரப்படுவது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பிரச்சினைகளைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்கும்போது, தீர்வுக்கான உத்தரவாதம் அதிகம் இருப்பதாகவும் தெரிகிறது.
உங்களைப் பொறுத்தவரை கானாவின் இன்றைய சவால்கள் என்ன?
எங்களுக்கே உரித்தான திறன்களில் அக்கறை கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை நாங்கள் தீவிரமாக உணர்கிறோம். நாட்டின் பொருளாதாரக் குறியீட்டெண் 7.4 சதவீத வளர்ச்சியைக் காட்டினாலும் இந்த வளர்ச்சி தெளிவாக உணரப்படவில்லை.
உள்நாடு சார்ந்து அதிக அளவில் நாங்கள் உற்பத்தி செய்யும்போதுதான், வளர்ச்சியை நாங்கள் உண்மையாக உணர முடியும். கானா மட்டுமல்லாமல் வேறுசில ஆப்பிரிக்க நாடுகளும் எதிர்கொண்டிருக்கும் சவால் என்னவென்றால், உள்நாடு சார்ந்து அதிக அளவில் உற்பத்திசெய்வதற்கான சூழலை எப்படி உருவாக்குவது என்பதுதான். இதற்குத்தான் நாம் முன்னுரிமை கொடுத்தாக வேண்டும். மிகவும் அதிக அளவில் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்; இது தேவையற்றது. வளம் மிக்க நாட்டினர் நாங்கள் - தங்கம், பாக்ஸைட், மாங்கனீசு, எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற வளங்கள் எங்களிடம் இருக்கின்றன. எனவே, இறக்குமதிக்கு இங்கு என்ன வேலை?
அரசியல் விடுதலை என்பது பொருளாதார விடுதலைக்கு அதாவது, செல்வத்தை உருவாக்கிக்கொள்வதற்கான விடுதலைக்கு ஒரு அச்சாரம் மட்டுமே என்பதை மக்க ளெல்லாம் உணர ஆரம்பித்துவிட்டார்கள். தேசக் கொடியை ஏற்றுவதற்காகவும், தேசிய கீதத்தைப் பாடுவதற்காகவும் நாங்கள் விடுதலை பெறவில்லை.
பொருளாதார விடுதலையை அடைவதற்கான ஒரு வழிமுறைதான் அரசியல் விடுதலை. ஆப்பிரிக்க நாடுகள் எதிர்கொண்டிருக்கும் சவால் இதுதான். அரசியல் விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டுகள் ஆன நிலையில், எங்கள் லட்சியத்தின் இரண்டாவது கட்டத்தைப் பூர்த்திசெய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. அறிவின் மீது, அறிவியலின் மீது, தொழில்நுட்பத்தின் மீது செலுத்தும் ஆதிக்கத்தின் மூலம் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதுதான் அதற்குரிய வழி.
உங்கள் தந்தை குவாமி அங்குரூமா காந்தியால் மிகவும் தாக்கம் பெற்றவர். ஆனால், இன்றைய உலகத் துக்கு காந்தியின் செய்தி தேவையற்றது என்று கருதுகிறீர்களா?
சில செய்திகள் எந்தக் காலத்துக்கும் உரியவை. சமகாலச் சூழலுக்கு ஏற்றவாறு அவற்றை எப்படி நீங்கள் பொருத்திப்பார்க்கிறீர்கள் என்பது முக்கியம். தன்னிறைவைப் பற்றி காந்தி அன்று போதித்தார். இப்போது நாம் அதைப் பற்றித்தான் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். வன்முறையின் துணை இல்லாமலேயே நீங்கள் போராடவும், மாற்றத்தை ஏற்படுத்தவும், உங்கள் நம்பிக்கையில் தீவிரமாகவும் இருக்க முடியும் என்றும் அவர் சொன்னார். இதைச் சாதிக்க நமக்குத் தேவை மிகுந்த ஈடுபாடு, விடாமுயற்சி, தியாகம், அர்ப்பணிப்பு, பொறுமை. அதற்காக நாம் பாடுபட்டாக வேண்டும். அவருடைய செய்தி இன்றைக்கும் பொருத்தமாகவே இருக்கிறது.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago