அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரின்மீது தற்போது சர்வதேசக் கவனம் குவிந்திருக்கிறது. இங்குதான் ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் (ஏபெக்) மாநாடு நடைபெறுகிறது. இன்றைய தினம் (நவம்பர் 15) மாநாட்டின் சம்பிரதாயமான நிகழ்ச்சி நிரலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் சந்தித்துப் பேசுகிறார்கள். இந்தச் சந்திப்பு பன்னாட்டரங்கில் இன்னும் பல நாள்களுக்குப் பேசுபொருளாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு, ஒருவர் மற்றவரை அழைத்து விருந்தோம்பும் நிலையில் இல்லை. சிக்கல்கள் மிகுந்ததாக மாறிவிட்டது. இன்றைய சந்திப்பின் மூலம், இந்த நிலை மாற வாய்ப்பு உண்டா?
அமெரிக்க - சீன உறவின் கதை: ஆதியில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பெரிய விரோதம் இல்லை. இரண்டாம் உலகப் போரில் இரண்டு நாடுகளும் நேச நாடுகளின் கூட்டணியில்தான் இணைந்திருந்தன. நேச நாடுகள்தான் போரில் வென்றன. அப்போது சீனாவை ஆண்டது கோமிங்டாங் கட்சி. தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில் கோமிங்டாங்கை முறியடித்து மா சேதுங்கின் தலைமையில் 1949இல் ஆட்சியைக் கைப்பற்றியது கம்யூனிஸ்ட் கட்சி; புதிய ஆட்சி அமெரிக்காவுக்கு இணக்கமாக இல்லை.
கொரியப் போரில் (1950-53) அமெரிக்கா தென் கொரியாவுக்கு ஆதரவாகப் போரிட்டது. சீனாவும் சோவியத் ஒன்றியமும் வட கொரியாவுக்கு ஆதரவாகப் போரிட்டன. தொடர்ந்து நடந்த வியட்நாம் போரிலும் (1955-75) அமெரிக்காவுக்கு எதிராக சீனா இருந்தது. இந்தப் பகை 1972இல் குறைந்தது. அந்த ஆண்டுதான் அதிபர் நிக்சன், பெய்ஜிங் நகருக்குப் பயணித்தார். 1979இல் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ராஜீய உறவுகள் தொடங்கின. இதே காலகட்டத்தில்தான் மூடுண்டிருந்த சீனக் கதவுகளை அகலத் திறந்தார் டெங் சியோபிங். அந்நிய முதலீடுகள் குவிந்தன. அபரிமிதமான மனித வளத்தால் சீனா தொழில்மயமானது.
புத்தாயிரமாண்டில் சீனா உலக வணிக அமைப்பில் (WTO) உறுப்பினரானது. அமெரிக்காவின் உதவியினாலேயே இது சாத்தியமாகியது. கட்டற்ற வணிகம் எனும் சித்தாந்தம் சீனப் பொருள்களை உலகெங்கும் கொண்டு சென்றது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகச் சீனா உயர்ந்தது.
» டெண்டர் பிரச்சினையால் காலி கோணிப்பைகள் தேக்கம்: நியாயவிலைக் கடைகளில் இடப்பற்றாக்குறை
» போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கான தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு
முரண்பாடுகள் மூன்று: பில் கிளிண்டன் (1993-2001), ஜார்ஜ் புஷ் (2001-2009), பராக் ஒபாமா (2009- 2017) ஆகியோரின் காலங்களில் அமெரிக்காவும் சீனாவும் பல கண்ணிகளில் முரண்படவே செய்தன. என்றாலும் அரசியல் உறவு தொடர்ந்தது. வெள்ளை மாளிகையிலும் மக்கள் மாமன்றத்திலும் தலைவர்களின் சந்திப்புகள் நடந்தன. அப்போதைய முரண்பாடுகளில் முக்கியமானவையாக மூன்றைச் சொல்லலாம். அவை: வணிகம், தைவான், மனித உரிமை. முதலாவதாக வணிகம். சீனா தாராளமயத்தைக் கைக்கொண்ட காலம் தொடங்கி இரு நாடுகளுக்கு இடையில் வணிகம் வளர்ந்தது. இதில் சீனாவின் ஏற்றுமதிதான் அதிகமாக இருந்தது. இது சமனற்ற வணிகம் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. விலை குறைந்த சீனப் பொருள்களால் அமெரிக்க நுகர்வோரும் வணிகர்களும் பயனடையவில்லையா என்று கேட்டது சீனா.
அடுத்தது தைவான். 1949இலிருந்து தனி நாடாக இயங்கிவருகிறது தைவான். சீனாவின் பிரிக்க இயலாத பகுதி தைவான் என்பதுதான் சீனாவின் கொள்கை. அமெரிக்கா, இந்தியா உள்பட உலக நாடுகள் பலவும் இதை ஏற்றுக்கொண்டுள்ளன. எனினும் அமெரிக்கா தைவானுக்கு வழங்கிவரும் ராணுவ, பொருளாதார உதவிகள் தொடர்கின்றன. இது சீனாவுக்கு உவப்பாக இல்லை. மூன்றாவதாக, சின் ஜியாங், திபெத் முதலான மாகாணங்களில் சீனா மனித உரிமைகளை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. இணையக் கட்டுப்பாடு, எதேச்சதிகாரம் முதலானவை பிற குற்றச்சாட்டுகள். இவை உள்நாட்டு விவகாரங்கள் என்பது சீனாவின் பதில்.
இந்தக் கருத்து வேறுபாடுகளைக் கடந்து இரண்டு நாடுகளின் தொழிலும் வணிகமும் பயன் பெற்றுவந்தன. கூடுதல் ஏற்றுமதியால் ஈட்டிய அந்நியச் செலாவணியை அமெரிக்காவின் பங்குப் பத்திரங்களில்தான் சீனா முதலீடு செய்திருந்தது. இது சேமிப்புப் பழக்கம் குறைவாக உள்ள அமெரிக்காவுக்கு உதவியாகவே இருந்தது. அரசியல் முரண்பாடுகளுக்கு இடையே வணிகம் தொடர்ந்தது.
வணிக யுத்தம்: டிரம்ப் (2017-21) அதிபரான பின்னர் அமெரிக்க – சீன உறவில் கசப்புணர்வு அதிகரித்தது. 2018இல் சீனாவுடன் வணிக யுத்தம் ஒன்றை அறிவித்தார் டிரம்ப். சீனப் பொருள்கள் பலவற்றின் மீது தீர்வை விதித்தார். அமெரிக்க நிறுவனங்கள் பல சீனாவில் நிறுவியிருந்த தொழிற்சாலைகளை இடம் மாற்றின. தைவானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்கா தொடர்ந்தது. 2021இல் பதவியேற்றார் பைடன். டிரம்ப் வகுத்த விதிகள் பலவற்றை மாற்றி எழுதினார். ஆனால், டிரம்ப் சீனாவுக்கு எதிராக மேற்கொண்ட கடும்போக்கை பைடன் தளர்த்தவில்லை.
சமீபத்திய இரண்டு நிகழ்வுகள் உறவுகளை மேலும் சிக்கலாக்கின. முதலாவது, கடந்த பிப்ரவரி மாதம் சீனாவின் பலூன் ஒன்று அமெரிக்க வானில் பறந்தது. அது வானிலை ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டது என்றது சீனா. அதை உளவு பலூன் என்று சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா. அடுத்து, கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் அதிபரைச் சந்தித்தார். இரண்டு நிகழ்வுகளையும் சீனா வன்மையாகக் கண்டித்தது.
என்ன பேசுவார்கள்? - இந்த இறுக்கமான சூழலில்தான் தலைவர்கள் சந்திக்கிறார்கள். அப்போது, தைவானுக்கான ஆதரவைக் கைவிடுமாறும், தங்கள் பொருள்களின் மீதான தீர்வைகளை நீக்குமாறும் சீனா கோரும். சீனாவின் மனித உரிமைப் பிரச்சினைகளை அமெரிக்கா எழுப்பும்.
மேலும், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் களமிறங்கக்கூடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. அதைத் தவிர்க்குமாறு ஈரானிடம் சீனா வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அணு ஆயுதம் எதையும் முடுக்கிவிட வேண்டாம் என்று வட கொரியாவிடம் பேசுமாறும் சீனாவிடம் அமெரிக்கா கோரலாம்.
இவற்றுக்கு அப்பால் காலநிலை மாற்றம், அணு ஆயுதம் தொடர்பான சர்வதேசக் கட்டுப்பாடுகளும் உரையாடலில் இடம்பெறும் என்கிறார்கள் அரசியல் அவதானிகள். செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைத் தானியங்கி ஆயுதங்களிலும் அணு ஆயுதங்களிலும் பயன்படுத்துவதைத் தடைசெய்வதில் இரண்டு நாடுகளுக்கும் அக்கறை இருக்கிறது. இது குறித்த தீர்மானங்கள் வகுக்கப்படலாம். இந்திய-சீன எல்லைப் பிரச்சினை, அமெரிக்க – சீன அதிபர்கள் உரையாடலில் இடம்பெறாது என்று தெரிகிறது. எனினும், அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் இந்தியா இந்த உரையாடலைக் கூர்ந்து கவனிக்கும்.
இரண்டாம் பனிப்போர்: அமெரிக்க - சீனப் பகையை நோக்கர்கள் சிலர் இரண்டாம் பனிப்போர் என்று வர்ணிக்கிறார்கள். ஆனால், இனி ஒரு பனிப்போர் வர முடியாது. ஏன்? முந்தைய பனிப்போரின் (1945-1991) காலத்தில் பல நாடுகள், இரண்டு வல்லரசுகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்து நின்றன. இப்போது அப்படியான நிர்ப்பந்தங்கள் இல்லை. அடுத்து, அப்போது இரண்டு வல்லரசுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல போர்களில் ஈடுபட்டன. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் அது எளிதானதில்லை. முக்கியமாக, அப்போது சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் ஒன்றையொன்று சார்ந்திருக்கவில்லை.
இது உலகமயத்தின் காலம். எந்த நாடும் தனித்து இயங்குவது கடினம். அமெரிக்காவும் சீனாவும் வணிகத்தால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு நாடுகளாலும் அவற்றை உதற முடியாது. ஆகவே, அவை உரையாடித்தான் ஆக வேண்டும். மொத்த முரண்களும் இந்தச் சந்திப்பில் தீர்ந்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படலாம். நம்பிக்கைகளால் ஆனதுதானே உலகம்!
- தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
To Read in English: APEC summit: Will US-China conflict come to an end?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago