நேருவுடன் முரண்பட்டு நின்றாரா சர்தார் படேல்?

By ஆ.கோபண்ணா

இன்றைய அரசியல் சூழலில், பண்டித ஜவாஹர்லால் நேருவையும், சர்தார் வல்லபபாய் படேலையும் நேரெதிராக நிறுத்தி விவாதங்கள் நடைபெறுகின்றன. இருவருக்கும் இடையில் நிலவிய முரண்களைப் பெரிதுபடுத்திப் பலர் அர்த்தமற்ற வாதங்களை முன்வைக்கின்றனர். நேருவின் பிறந்தநாளான இன்று, அந்த இருபெரும் தலைவர்களுக்கு இடை யிலான உறவின் மேன்மையைப் பார்ப்போம்.

பரஸ்பர மரியாதை: இந்தியக் கலாச்சாரத்திலும், அதன் அடையாளங்களிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டி ருந்தவர் படேல். நேருவோ தேசத்தின் பெருமைகளைத் தாண்டிய உலகளாவிய கருத்துக்களைக் கொண்டி ருந்தார். இதனால், இயல்பாகவே இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் காந்தியின் தலையீட்டைக் கோருவதை நேரு வழக்கமாகக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் கடந்து நேருவும் படேலும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை செலுத்தினார்கள்.

விடுதலைப் போரில் நேருவின் பங்கைப் பற்றி 1936 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தின்போது, காந்திக்கு எழுதிய கடிதத்தில், “மெழுகுவத்தி இருமுனைகளிலும் எரிவதைப் போன்ற நிலையில் மிகவும் அற்புதமான பணியை நேரு செய்துள்ளார். அவருடன் ஒத்துழைத்து செயல்படுவதிலும், குறிப்பிட்ட சில கருத்துகளைப் பற்றிய அவரது பார்வையுடன் அனுசரித்துச் செல்வதிலும் லேசான சங்கடம்கூட எங்களுக்கு இருந்ததில்லை” என படேல் குறிப்பிட்டார். அதேபோல, படேலுடன் ஒத்துழைக்குமாறு காங்கிரஸ் கட்சியின் சக ஊழியர்களிடம் 1940 ஜூலையில் பம்பாயில் நேரு கேட்டுக்கொண்டார்.

சுதந்திரப் போராட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவுக்கு படேலின் தலைமை தேவைப்படுகிறது என்று நேரு அப்போது அழுத்தம் திருத்தமாகக் கூறினார். படேல் அளவுக்குத் தகுதியும் திறமையும் மன உறுதியும் அர்ப்பணிப்பும் வெகு சிலருக்கே உண்டு என்றும் நேரு புகழ்ந்துரைத்திருக்கிறார்.

அரசியல் போட்டி: 1946ஆம் ஆண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி நடைபெற்றபோது, நேருவுக்கும் படேலுக்கும் இடையே எதிர்பாராத போட்டி உருவானது. காங்கிரஸின் தலைமைப் பதவிக்கு வேட்பு மனு அளிப்பதற்கான நாள் முடிவதற்கு ஒன்பதுநாள்களுக்கு முன்பாக, தனது தெரிவு நேருதான் என்பதை மகாத்மா காந்தி தனிப்பட்ட முறையில் கோடிட்டுக் காட்டிவிட்டார். இதற்கிடையில், மீண்டும் காங்கிரஸ் தலைவராக வருவதற்கு அபுல் கலாம் ஆசாத் விரும்பினார். அதைத் தவிர்க்குமாறு காந்திஅறிவுறுத்தினார். நேரு, படேல் இருவரும் போட்டியிட்டனர்.

15 பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளில் 13 கமிட்டியினர் படேலுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அப்படி வாக்களித்தவர்கள் காங்கிரஸ் தலைவர் பதவி என்பதால் படேலுக்கு வாக்களித்தோம். இந்தியாவின் பிரதமர் பதவி என்றால் நேருவுக்கு வாக்களித்திருப்போம் என்று கூறியிருந்தார்கள். இரண்டு கமிட்டியினர் தங்களின் விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. இந்தச் சூழலில் படேலிடம் பேசி, காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து அவரை விலகச்செய்தார் காந்தி.

“அமைச்சரவையில் நேரு இரண்டாம் இடத்தை ஏற்க மாட்டார். படேலை விடவும் நேருதான் வெளிநாடுகளில் பிரபலமானவர். பன்னாட்டு உறவுகளில் இந்தியா பங்காற்றும்படி செய்வதற்கு அவரால்தான் முடியும். சர்தார் இந்தியாவில் உள்நாட்டு விஷயங்களைப் பார்த்துக்கொள்வார். அரசாங்க வண்டியில் பூட்டப்பட்ட இரட்டைக் குதிரைகளாக இருவரும் செயல்படுவார்கள். ஒருவருக்கு இன்னொருவர் தேவைப்படுவார். இருவரும் ஒன்றிணைந்து வண்டியை இழுத்துச் செல்வார்கள்” என்று காந்தி விளக்கமளித்தார்.

இணைந்த கைகள்: காந்தியின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நேரு வென்றார். காந்தியின் மீதிருந்த மதிப்பின் காரணமாகவும், நேருவின் மீதிருந்தஅன்பினாலும் படேல் ஒதுங்கிக்கொண்டார். சுதந்திரத்துக்குப் பிந்தைய புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தருணம் நெருங்கியது. நேருவிடம் அந்தப் பொறுப்பு இருந்தது. 1947 ஆகஸ்ட் 1 அன்று படேலுக்கு நேரு இவ்வாறு எழுதினார்: ‘புதிய அமைச்சரவையில் சேர்ந்துகொள்ளும்படி முறைப்படியான அழைப்பினைத் தங்களுக்கு விடுக்கிறேன். நீங்கள்தான் இந்த அமைச்சரவையின் வலிமையான தூண்.’

இதற்குப் பதில் எழுதிய படேல், ‘நம் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கமும் அன்பும் நம்மிருவரின் தோழமையும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இடையறாமல் தொடர்ந்துவருகின்றன. நீங்கள் விரும்பும்வண்ணம் என்னுடைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எஞ்சியிருக்கும் எனது வாழ்நாள் முழுவதும் முழுமையான அர்ப்பணிப்பையும் விசுவாசத்தையும் உங்களுக்கு அளிப்பேன். இந்தியாவில் நீங்கள் செய்திருக்கும் தியாகத்தின் அளவுக்கு எந்த ஒரு மனிதரும் செய்யவில்லை என்பதுதான் இதற்குக் காரணம்.

நம் இருவருடைய இணைவும் என்றுமே சிதைவுறாது. நமது வலிமை அதில்தான் அடங்கியிருக்கிறது’ என்று குறிப்பிட்டார். இருவரும் ஒன்றிணைந்து பணிபுரிந்தார்கள். ஒருவர் வீட்டுக்கு இன்னொருவர் சென்று கலந்தாலோசித்துச் சிக்கலான கொள்கை முடிவுகளை மேற்கொண்டார்கள்.

தேசப் பிரிவினை, சுதந்திரம் எனப் பல தருணங்களில் இருவரும் தங்களின் கருத்துகளைச் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மதச்சார்பின்மைக்கான தங்களின் அர்ப்பணிப்பை உணர்த்தினர். “தலைமைப் பொறுப்பில் நான் இருக்கும் வரையிலும் இந்தியா ஒருபோதும் இந்து நாடாக மாறாது” என்று நேரு உத்தரவாதம் அளித்தார். “இந்து மதத்துக்கு இந்தியாவில் ஆபத்து எதுவும் நேர்ந்துவிடவில்லை” என்று படேலும் உறுதிபடக் கூறினார்.

காந்திக்குப் பிறகு... 1948 ஜனவரி 30 அன்று கோட்சேவால் சுட்டுக் கொல்லப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புகூட, சர்தார் படேலுக்கு காந்தி அறிவுரை கூறினார் என்ற செய்தி பலருக்கும் வியப்பை அளிக்கலாம். “நேருவிடம் கருத்து வேறுபாடு கொண்டு, அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டாம். அவருடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்பதுதான் காந்தி கொடுத்த அறிவுரை. காந்தி படுகொலை நிகழ்ந்த பிறகு, கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டின் நலனுக்காக இணைந்து பணியாற்ற நேருவும் படேலும் முடிவுசெய்தனர். எனினும், சர்ச்சைக்குரிய கருத்துகளை படேல் நியாயப்படுத்தினார்.

வெளித் தோற்றத்துக்கு நட்புடன் இருந்தாலும், நேருவின் தலைமையை மனரீதியாக படேல் ஏற்காததையே அவரது கருத்துகள் வெளிப்படுத்தின. அதேவேளையில், தனக்கும் நேருவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த சிலர் முயல்கிறார்கள் என்று, இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், 1950 அக்டோபர் 2 அன்று, இந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் படேல் குறிப்பிட்டிருக்கிறார்.

“பண்டித ஜவாஹர்லால் நேரு நம்முடைய தலைவர். நேருவைத் தனது வாரிசாக காந்தியடிகள் நியமித்தார். இந்த ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவரது தொண்டர்களின் கடமை. மனப்பூர்வமாக இதனை ஏற்கத் தயங்குபவர்கள், கடவுளின் முன்பு பாவம் செய்தவர்களாவர். நான் விசுவாசமற்ற சிப்பாய் அல்ல. எந்த இடம் கிடைக்கும் என்பது எனக்கு முக்கியமல்ல. காந்தியடிகள் எந்த இடத்தில் நிற்கச் சொன்னாரோ அந்த இடத்தில் நிற்கிறேன் என்பதை மட்டுமே நான் அறிந்திருக்கிறேன்” என்று படேல் உறுதியாகச் சொன்னார். 1950 டிசம்பர் மாதம் 15ஆம் நாள் படேல் இறந்த அன்று, நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய நேரு, “அநேகமாக நம்மில் பலர் சுதந்திரப் போராட்டத்துக்கான தலைசிறந்த ஒரு படைத் தலைவராக சர்தார் படேலை நினைவில் வைத்திருப்போம்.

இக்கட்டான தருணங்களிலும், வெற்றித் தருணங்களிலும் நமக்கு உரத்த அறிவுரைகளை வழங்கியவர் அவர். நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோதெல்லாம் நண்பராக, சக பணியாளராக வலுவான பலத்தைக் கொடுத்து நம் இதயங்களை ஆட்கொண்டவர். அவரை நண்பராக, சக பணியாளராக, தோழராக, அதற்கும் மேலேயும் நாம் நினைவுகொள்ளலாம். இங்கே அமர்ந்திருக்கும் நமக்கு, காலியாக இருக்கும் அந்த இருக்கையைப் பார்க்கும்போது, நம் அருகில் அவர் அமர்ந்திருப்பது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது. காலியான இந்த இருக்கையைப் பார்க்கும்போது, என்னுள் வெறுமை சூழ்ந்துகொள்கிறது” என்று குறிப்பிட்டார். இருபெரும் தலைவர்களின் மகத்தான சாதனை களையும் ஆக்கபூர்வமான நல்லுறவையும் ஒருதலைப் பட்சமான அணுகுமுறையால் விமர்சனத்துக்கு உள்ளாக்குவது ஆரோக்கியமற்ற செயலாகும்.

நவ. 14 – ஜவாஹர்லால் நேரு 135 ஆவது பிறந்தநாள்

To Read in English: Did Patel face off with Nehru?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

14 days ago

மேலும்