முக அடையாளத் தொழில் நுட்பம் சகலர் மீதும் சந்தேகமா?

By ச.பாலமுருகன்

இந்தியாவில் உள்ள 1,300 காவல் நிலையங்களுக்கு மரபணுத் தகவல் சேகரிப்பு, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதிகளைச் செய்துதர உள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டத்தின்படி இந்த வசதிகளைச் செய்துதரப்போவதாக அரசு கூறியிருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவரின் கைரேகைகள், மரபணு மாதிரிகளைப் பாதுகாத்துவைப்பது எதிர்காலத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தவறு செய்யும்போது எளிதில் கண்டுபிடிக்க இந்த முறை வசதியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மறுபுறம், இதன் காரணமாகத் தனியுரிமை கடுமையாகப் பாதிக்கப்படும் என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் அடையாளம்: இதற்கு முன் இருந்த, சிறைவாசிகளை அடையாளம் காணும் சட்டம் 1920இன் கீழ், குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் கைரேகை, ஒளிப்படம் எடுக்க நீதிபதியின் அனுமதி தேவை. அது மட்டுமல்ல, நீதிபதியின் முன்னிலையில்தான் கைரேகை எடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய சட்டத்தில் ஒரு காவல் நிலைய அதிகாரிக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் எல்லா காவல் நிலையங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டு, தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தில் 75 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனில், ஒரு முறை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவரின் தகவல்கள் அவரின் வாழ்நாள் முழுதும் அங்கு இருக்கும். தேவைப்படும்போது இவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம். தகவல் என்பது குற்றம்சாட்டப்பட்டவரின் கைரேகை, கைவிரல் ரேகை, கால்ரேகை, ஒளிப்படம், கண் கருவிழிப் பதிவு, கையெழுத்து உள்ளிட்டவை ஆகும்.

காவல் நிலையங்களில் முகத்தை அடையாளம் காணும் செயலித் தொழில்நுட்பத்தை 4.10.2021 அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திவைத்தார். விமான நிலையங்களில் பல கோடி ரூபாய் செலவில் இது நிறுவப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இது போன்ற உளவுக் கண்காணிப்புகள், நோயைக் காரணம் காட்டி பொதுச் சமூகத்தில் இயல்பாக மாற்றப்பட்டன. இது போன்ற செயலிகள் பொதுவாகக் கண்காணிப்பு கேமராக்களோடு இணைக்கப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பம் ஏற்கெனவே தேடப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் நபர் எனப் பதிவுசெய்யப்பட்ட ஒளிப்படத்துடன் கேமராவின் முன் உள்ள நபரை ஒப்பிட்டுக் காணக் கூடியது. இது போன்ற செயலிகளுக்குப் பதிவேற்றப்படும் ஒருவரின் ஒளிப்படங்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களிலிருந்தோ வேறு வகையிலிருந்தோ எடுக்கப்பட்டுப் பதிவேற்றப்படுகின்றன. கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களில் முகத்தைக் காட்ட நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது.

மனித உரிமை மீறல்: இது போன்ற தொழில்நுட்பங்களைக் காவல் துறை பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதுதான் சிக்கல். தவிர, இந்தத் தொழில்நுட்பத்தில் தவறுகள் ஏற்படவும் சாத்தியம் உண்டு. மேலும், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக விரிவான சட்டங்களும் பாதுகாப்பு தொடர்பான விதிகளும் இன்னும் வகுக்கப்படவில்லை.

இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000இல் தொழில்நுட்பச் செயல்பாடு குறித்து எந்த விவரமும் இல்லை. தொழில்நுட்பத் தரவுகள் பாதுகாப்பு விதி 2011இன் கீழ் இந்தத் தரவுகள் பாதுகாப்பு பெறுவதும் இல்லை. வரும் காலத்தில் இதற்கென விதிகள் உருவாக்கப்பட்டாலும்கூட, இதன் அடிப்படையே உரிமை மீறலுக்கு வழி வகுக்கக்கூடியதாகும்.

உச்ச நீதிமன்றம், ஆதார் வழக்கில் (Justice K.S.Puttaswamy (Retd) vs Union Of India) தனியுரிமை (Right to privacy) என்பதை அடிப்படை உரிமையாக விரிவுபடுத்தியதைக் காண அரசு தவறி உள்ளது. குடிமக்கள் எந்தச் சூழலில், முகத்தைக் காணும் தொழில்நுட்பத்தின் கண்காணிப்புக்கு உள்படுத்தப்படுவார்கள் எனத் தெளிவுபடுத்தவில்லை. என்ன காரணத்துக்காக ஒருவர் சந்தேகத்துக்குள்ளாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்றும் அறிய முடியவில்லை.

மேலும், சேகரிக்கப்படும் தகவல்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. சமீபத்தில், 81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட ஆதார் தகவல்கள் திருடப்பட்டு வெளிச்சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக வெளியான தகவல்கள் இதுபோன்ற விஷயங்களில் ஒளிந்திருக்கும் ஆபத்தை உணர்த்துகின்றன.

மேலும், இதுபோன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் நபர்களின் விருப்பு வெறுப்புகள், பாகுபாட்டின் அடிப்படையிலான பார்வைகள் இந்தச் செயலியில் வெளிப்படச் சாத்தியம் உண்டு என வல்லுநர்கள் கருதுகின்றனர். உதாரணமாக சாதி, நிறப் பாகுபாடு சார்ந்தோ மத சிறுபான்மையினருக்கு எதிராகவோ இந்தத் தொழில்நுட்பம் ஒரு அடக்குமுறை ஆயுதமாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு உண்டு. இதனால்தான், இந்தத் தொழில்நுட்பம் மனித உரிமை மீறலுக்கு இட்டுச் செல்லும் என்கிற அச்சம் உருவாகியிருக்கிறது.

எழுந்திருக்கும் கேள்விகள்: டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற அமைதியான போராட்டங்களுக்குப் பின் நிகழ்த்தப்பட்ட கலவரத்தில், இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பல குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதாக டெல்லி காவல் துறை கூறியது. மேலும், டெல்லியின் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் கூடுதல் முகம் காணும் தொழில்நுட்ப ஒளிப்பதிவுக் கருவி பொருத்தப்பட்டதாகவும் டெல்லி காவல் துறையினர் கூறியுள்ளனர்.

ஆனால், இச்செயலி தவறாக நபர்களை அடையாளப்படுத்த கூடுதல் வாய்ப்புண்டு. சென்னை, அலகாபாத், தெலங்கானா உள்ளிட்ட பல உயர் நீதிமன்றங்களின் இந்தத் தொழில்நுட்பத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள், இதன் அடிப்படை குறித்துக் கேள்வி எழுப்பி வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஒரு ஜனநாயகச் சமூகம், தொடர்ந்து தனது குடிமக்களை இது போன்ற ஏதேனும் ஒரு கருவி வழியாகக் கண்காணிப்பதன் மூலம், அந்த மக்களின் தனியுரிமையில் அது தலையீடு செய்கிறது. எளிய மக்களை எந்நேரமும் கண்காணிக்கும் அரசின் பார்வை தவறானது. பொதுச் சமூகத்தை எதிர்காலத்தில் தவறுசெய்யச் சாத்தியம் உள்ளவர்கள் (potential criminal) எனக் கருதுவதாக உள்ளது. இது ஒரு முரண்.

மேற்கத்திய நாடுகளில் என்ன நிலை? - இந்தத் தொழில்நுட்பம் பாதுகாப்பாக, தீங்கின்றிப் பயன்படுத்தப்படும் என உறுதிசெய்யும் வரை இவற்றைப் பொதுவெளியில் பயன்படுத்துவதை இத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகள் தடை செய்துள்ளன. ஐரோப்பா முழுவதும் இந்தச் செயலியினைத் தடைசெய்ய ஆட்சியாளர்களுக்குச் செயல்பாட்டாளர்கள் தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

மேலும், அமெரிக்காவின் நியு ஆர்லியன்ஸ், சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன் உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட நகரங்கள் இது போன்ற செயலியைத் தடைசெய்துள்ளன.

இந்தத் தொழில்நுட்பம் தனியுரிமையையும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகவும், அரசியல் மாற்றுக் கருத்தாளர்களைக் குறிவைப்பதாகவும் மனித உரிமைக் கண்காணிப்பகம் உள்ளிட்ட 180 அமைப்புகள் கூறியிருக்கின்றன. பல மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கண்ட காரணங்களால் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில்லை என அறிவித்திருக்கின்றன.

மக்களின் அடிப்படை உரிமையான தனியுரிமை - ஜனநாயகப் பண்புகளை அரசு மதிக்க வேண்டும். மக்களை வேவு பார்க்கும் தவறான செயல்பாடு நாட்டின் அடிப்படைக் கட்டுமானத்துக்கு எதிரானது. அரசு இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

- தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com

To Read in English: Facial recognition tech: A Damocles’ sword spying over our heads

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE