கணை ஏவு காலம் 28 | உடைந்த ஆலிவ் கிளை @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

பாலஸ்தீனத்தின் விடுதலைப் போராட்டத்தை யாசிர் அர்ஃபாத்துக்கு முன் - பின் என்று மட்டுமே பிரித்துப் பார்க்க முடியும். அந்த மண்ணின் அனைத்துத் தலைவர்களுமே 1948 யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். சிறு வயதில் உயிருக்காக ஊர் ஊராகத் தப்பி ஓடியவர்களாக இருப்பார்கள். பிறகு உணவுக்காக அகதி முகாம்களில் தஞ்சமடைந்தவர்களாக இருப்பார்கள்.

அவலமும் துயரமும் அனைவருக்கும் பொதுவானவையே. ஆனால் அவற்றிலிருந்து மீள்வதற்கான பாதையைக் கண்டடைந்தவர்களுள் அர்ஃபாத் சிறிது வேறுபட்டவர். இஸ்ரேலைத் திருப்பி அடிப்பது என்பதுதான் அர்ஃபாத்துக்கும் தொடக்க கால நோக்கமாக இருந்தது. 1929-ம் ஆண்டு கெய்ரோவில் பிறந்த யாசிர் அர்ஃபாத், தமது 20-வது வயது முதல் புரட்சிகர ஆயுதப் போராட்டம் ஒன்றே பாலஸ்தீனர்களின் விடுதலைக்கு உதவும் என்று நம்பினார்.

ஐம்பதுகளின் இறுதியில் தமது நண்பர்களுடன் இணைந்து ஃபத்தா (Fatah) என்றொருஆயுதக் குழுவை அவர் உருவாக்கிச் செயல்படத் தொடங்கியபோது, மத்தியக் கிழக்கின் அனைத்து தேசங்களுமே அவரை வியப்புடன் பார்த்தன. காரணம், அந்நாளில் அந்தளவுக்குக் கட்டுக்கோப்பாக நடத்தப்பட்ட இன்னோர் இயக்கம் கிடையாது. அர்ஃபாத், சலிக்காமல் எல்லா அரபு நாடுகளுக்கும் பயணம் செய்து, அரசுப் பிரதிநிதிகளுடன் பேசினார். பாலஸ்தீன விடுதலைக்கு உதவும்படி கோரிக்கை வைத்தார். ஃபத்தாவுக்குப் பொருளுதவி, ஆயுத உதவிகளைக் கேட்டுப் பெற்றார்.

பிரிட்டன் ஆதரவுடன் பாலஸ்தீனத்து மண்ணில் தனி நாடு கண்டு ஆட்சியமைத்துவிட்டாலும் இஸ்ரேல் முதல் முதலில் கவலை கொள்ளத் தொடங்கியது அர்ஃபாத்தின் எழுச்சியைக் கண்டுதான். காரணம், அது ஒரு ஃபத்தாவுடன் முடிந்துவிடக் கூடிய நடவடிக்கையாக இல்லை. அர்ஃபாத்தின் ஃபத்தா, அம்மண்ணில் இன்னும் பல இயக்கங்கள் தோன்றவும் வேரூன்றவும் மிக நேரடிக் காரணமானது.

ஃபத்தா உருவாவதற்கு முன்னரும் பாலஸ்தீனத்தில் சில போராளிக் குழுக்கள் தோன்றியிருந்தன என்றாலும் அம்மண்ணுக்கான பிரச்சினையைத் தீர்க்க எவ்வாறு போராட வேண்டும் என்ற திட்டவட்டமான பாதையைப் போட்டுக்காட்டியவர் அர்ஃபாத்தான். ஆனால் அதே மனிதர்தான் 1974-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சபையில் பேசும்போது, ‘ஒரு கையில் ஆலிவ் கிளையையும் மறு கையில் ஆயுதத்தையும் ஏந்தி வந்திருக்கிறேன்’ என்றார்.

அறுபதுகளின் தொடக்கம் முதல்அவரது ஆயுதப் போராட்டம் சூடுபிடித்ததை முன்வைத்து 14 ஆண்டு காலத்தில் அவர் வந்து சேர்ந்திருந்த இடத்தை உற்றுப் பார்க்கலாம். அதே அர்ஃபாத்தான் 1993-ம்ஆண்டு இஸ்ரேல் அரசுடன் ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். நவீன காலத்தில் ஓர் இனத்தின் விடுதலையை ஆயுதங்களால் பெற்றுத் தரவே முடியாது என்றமுடிவுக்கு அப்போது அவர் வந்து சேர்ந்திருந்தார்.

அதன் பிறகு அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே அமைதி வழியில்தான் இருந்தன. ஹமாஸ் உள்பட பாலஸ்தீனத்தின் அனைத்துப் போராளிக் குழுக்களுடனும் தனது இறுதிக் காலம் வரை அவர் அதற்காக வாதாடிப் பார்த்தார். ஆயுதங்கள் கூடவே கூடாது என்று அவர் பிறருக்குச் சொன்னதில்லை. ஆனால் அமைதி வழியைப் பரிசீலிக்காமல் தவிர்க்காதீர்கள் என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அவரது தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த பிற பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் (பி.எல்.ஓ.) அனைத்தும் பிடித்தாலும் பிடிக்காது போனாலும் அவர் சொன்னதைக் கேட்டன.

ஹமாஸ் மட்டும் இறுதி வரை அர்ஃபாத்தை எதிர்த்து நின்றது. நவம்பர் 11, 2004-ம் ஆண்டு யாசிர் அர்ஃபாத் உடல்நலக் குறைவால் காலமானார். எளிய சளி, காய்ச்சலில்தான் அது தொடங்கியது. நினைவிழந்து போகும் அளவுக்குத் தீவிரமடையவே அவரை சிகிச்சைக்காகப் பிரான்சுக்கு எடுத்துச் சென்றார்கள். ஒரு ராணுவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் பலனின்றி தனது 75-வது வயதில் அவர் உயிர் நீத்தார்.

அர்ஃபாத்தின் மரணத்திலும் சில விடை காண இயலாத ரகசியப்பகுதிகள் உண்டு. அவர் இறந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு ‘அது மரணமே அல்ல;கொலைதான்’ என்று மம்மூத் அப்பாஸ்பகிரங்கமாகச் சொன்னார். காரணமானவர்களைத் தனக்குத் தெரியும் என்றும் சொன்னார். அவர் சொன்ன ‘விசாரணை அறிக்கை’ இன்றுவரை வெளியாகவில்லை என்பது ஒருபுறம் இருக்க, 2004-ல் இறந்தது அர்ஃபாத் மட்டுமல்ல; அம்மண்ணின் அமைதியும்கூட என்பதுதான் நிரூபிக்கப்பட்ட ஒரே உண்மை.

அர்ஃபாத் காலமானதும் பாலஸ்தீன அத்தாரிடியின் தலைமைப் பொறுப்பை மம்மூத் அப்பாஸ் ஏற்றுக்கொண்டார். இனியும் இவர்களைத் தொடர்ந்து ஆளவிட்டால் பாலஸ்தீனம் அமைதிப் பூங்கா ஆகிறதோ இல்லையோ, ஒரு நிரந்தர அடிமைப் பூங்காவாகிவிடும் என்று அப்போதுதான் ஹமாஸ் தேர்தல் அரசியலுக்கு ஆயத்தமானது.

(தொடரும்)

முந்தையை அத்தியாயம்: கணை ஏவு காலம் 27 | காலமும் காட்சியும் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE