‘தலைக்கு மேல் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. ஒரு மாநில முதலமைச்சர் இதைப் பற்றியெல்லாம் பேசுவாரா?’ என வியப்பாக இருந்தது. எனினும் அந்த உரை இப்போதும் உழவர்களுக்கு ஆறுதலாகவும் அருமருந்தாகவும் உள்ளது. 1967இல் சி.என்.அண்ணாதுரை தமிழக முதலமைச்சரான சில நாள்களில் தஞ்சை விவசாயிகள் மாநாட்டில் உரையாற்றினார். சிறவி என்ற பறவை இனம் பயிர்களுக்கு ஏற்படுத்திய சேதம் பற்றி அதில் பேசினார். ‘சிறவியை ஒருவேளை அபூர்வமான பறவை என்று காட்டு இலாகா அதிகாரிகள் சொன்னால், அதைவிட மனிதன் அபூர்வமான பிறவி என்பேன். சிறவி இல்லாவிட்டால் போகட்டும், மனிதன் பிழைக்கட்டும்’ என்பது அவரது உரையின் சாராம்சம் ஆகும். அவர் சொன்ன வார்த்தைகள் தமிழகத்துக்கு இப்போதும் பொருந்தும்.
குமுறும் விவசாயிகள்: நெல், கரும்பு, வாழை, தென்னை, பாக்குமரம், மக்காச்சோளம், தக்காளி, வெண்டை, அவரை, கால்நடைத் தீவனப் பயிர்கள் என அனைத்துவகை விளைபொருள்களும் யானை, காட்டுப்பன்றி, காட்டுமாடு, புலி, சிறுத்தை, குரங்கு, செந்நாய், எலி, மயில், நாரை, கொக்கு என உயிரினங்களாலும், பறவைகளாலும் அழிக்கப்படுகின்றன என விவசாயிகள் குரல் எழுப்புகிறார்கள். பாதிப்புக்கு இழப்பீடு கேட்டும் அதற்குக் காரணமான உயிரினங்களை அழிக்கக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் முறையிடுகிறார்கள். விவசாய வளர்ச்சி என்பது உற்பத்திப் புள்ளிவிவர வளர்ச்சிப் பெருக்க எண் கணிதம் அல்ல. உற்பத்தி செய்யும் உழவர்களின் சொந்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிவருகின்றனர்.
மனிதன் எதிர் விலங்கு: வெள்ளம், வறட்சி, அடர்பனி போன்ற இயற்கைப் பேரிடர்களோடு மோதும் உழவர்கள், இன்னொரு புறம் உயிரினங்கள், பறவைகள் பயிர்கள் மீது நடத்தும் செயற்கையான தாக்குதலில் மனம் ஒடிந்துபோகிறார்கள். அதே தருணம், ஒருவேளை உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் பேச வாய்ப்புக் கிடைத்தால், இந்தப் பூமி யாருக்குச் சொந்தம் என்ற கேள்விகளை அவை எழுப்பவும் முடியும். பூமி என்பது வெறும் நஞ்சை - புஞ்சை புறம்போக்கு நிலம் மட்டுமல்ல. மாக்கடல்கள், மலைத்தொடர்கள், பீடபூமிகள், பிளவுப் பள்ளத்தாக்குகள், பாலை நிலங்கள், பொங்கும் அருவிகள், பெருங்காடுகள் அடங்கியது.
கற்கால மனிதன் குகைச் சுவர்களில் பறவைகளை வரைந்து ரசித்தான். இப்போது ஐரோப்பாவில் அதே மனிதன் வானம்பாடிப் பறவைகளால் விவசாயம் வீழ்ந்ததாகப் புலம்புகிறான். குறிப்பாக, மயில்கள் பயிர்களை நாசப்படுத்துவதாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் புலம்புகிறார்கள். சராசரியாக 20 ஆண்டுகள் ஆயுள் காலம் கொண்ட மயில்கள், இரண்டு வயதாக இருக்கும்போதே இனப்பெருக்கத்தைத் தொடங்கிவிடுகின்றன. அவற்றின் முட்டைகளைக் கண்டறிந்து அழிப்பது என்பது அசாதாரணமான விஷயம்.
உழவுத் தொழிலைப் பாழ்படுத்துவதில் முக்கியப் பங்கு எலிகளுக்கு உண்டு. உலக உணவு தானிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சேதமடைய எலிகள்தான் காரணம். சேமிப்புக் கிடங்குகளில் 30% சேதம், பயிர் மகசூலில் 25% இழப்பு ஆகியவற்றை எலிகள் ஏற்படுத்துகின்றன. விவசாயத்தின் ஓர் அங்கமான கால்நடைகளை உணவுக்காக வேட்டையாடும் புலி, சிறுத்தை போன்ற உயிரினங்களும் விவசாயிகளை அச்சுறுத்துகின்றன.
உயிர்க்கொல்லி மனிதர்கள்: உழவுத் தொழிலே பாவம் எனக் கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. துஷ்யந்தன், சகுந்தலை குறித்து காளிதாசன் எழுதிய காலத்தில் மண் மாதாவைக் கலப்பையால் கீறக் கூடாது என்கிற கருத்து மேலோங்கியிருந்தது. சுரங்கத் தொழிலுக்காகப் பூமியை மண்வெட்டியால் வெட்டக் கூடாது என்று மனிதர்கள் கருதிய காலமும் உண்டு. கால ஓட்டத்தில் கருத்துக்கள் மாறின.
பயிர்களைக் காக்கும் நோக்கத்தில், சக உயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தச் சிலர் தயங்குவதில்லை. இந்தியாவில் 2010-20இல் 1,300 வன உயிர்கள் மின்சார வேலிகளில் சிக்கி உயிரிழந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 600 யானைகள் இப்படி அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் நீலகிரி பகுதியில் கடந்த செப்டம்பரில் 10 புலிகள் மாண்டுள்ளன. அவற்றில் இரண்டு புலிகள் மரணத்துக்கு விஷம் காரணம் என்றும் மற்ற புலிகள் மரணத்துக்கான வேறு காரணிகளையும் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது. புலன் விசாரணை நடைபெறுகிறது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மின்வேலி அமைத்துக் கொல்லப்பட்ட ஒரு புலியின் இறைச்சியை 12 பேர் சமைத்து உண்டுள்ளனர். மாமிசத்தைப் பங்கு போடும்போது பிரச்சினை ஏற்பட்ட நிலையில், விஷயம் வெளியில் தெரிந்து வனத் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மனிதர்கள், உயிரினங்கள், பறவைகளுக்குமான உறவுகள் எல்லாக் காலத்திலும் சிக்கலாக இருப்பதாகக் கூறிவிட முடியாது. மேட்டுப்பாளையம், புங்கம்பாடி, மீனாட்சிபுரம், செல்லப்பன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளிக் கொண்டாட்டங்கள், கோயில் திருவிழாக்களின்போது பறவைகள் அச்சப்படுமோ என வெடிகள்கூட வெடிக்கப்படுவதில்லை. பழங்குடியினர் உயிரினங்களோடு பேணும் நட்பும் வித்தியாசமானது.
என்ன செய்ய வேண்டும்? - மனிதர்களும் உயிரினங்களும் அருகருகே வசிக்க வேண்டிய இந்தச் சூழலில், உயிரினங்கள் குறித்த நமது பார்வையிலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அரசின் வேளாண், வனக் கொள்கையில் மாற்றம் அவசியம். வேளாண் வனவியல் கோட்பாடு வளர்க்கப்பட வேண்டும். இப்போதைய வளர்ச்சியில் காட்டுப் பண்ணைகள், காப்புக் காடுகள் எனக் காடுகளை வகைப்படுத்தலாம்.
சூரிய ஒளியில் நடைபாதைகளும் ஒளியை வடிகட்டும் மரங்களும் காடுகளில் அமைந்துள்ளன. குறைந்த உடல் உழைப்பு, குறைந்த கருவிகள், அதிக நேரக் கண்காணிப்பு என்கிற முறைப்பாட்டை இங்கு கடைப்பிடிக்கலாம். மரங்களில் வளரும் அவரை போன்றவற்றை அதிகமாகச் சாகுபடி செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட தானியங்களும் கூட்டுப் பண்ணை முறையில் மாற்றுப் பயிர்களும் விளைவிக்கப்படலாம். இவை தவிர்த்து, வனவிலங்குகளின் சுதந்திர தேசமாகக் காப்புக் காடுகளை உருவாக்கலாம். தாகத்துக்காகவோ பசிக்காகவோ அவை வெளியேறாத வகையில் வசதிகளை உருவாக்கலாம்.
கனிகள், கிழங்குகள், ஓடைகளோடு காடும் தானிய மகவுகளை ஈனும் விவசாய பூமி என்பது நிறுவப்பட வேண்டும். யானையின் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பல நீதிமன்றத் தீர்ப்புகள் உண்டு. எவ்வகை ஆக்கிரமிப்பும் தடுக்கப்பட வேண்டும். தொன்மையிலேயே காடுகளில் வழிபாடு இருந்தது. சிலை அமைத்து வழிபட்டனர். அங்கு பெரிய கோயில்களைக் கட்ட அனுமதிக்கக் கூடாது.
இதேபோல் உயிரினங்களை, பறவைகளை அணுகுவதில் மனிதர்களின் பார்வையில் விசாலமான மாற்றம் தரும் கல்வி தேவை. காட்டுயிர் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறும் வகையில் ஆப்ரிக்க மாதிரியில் சூழலியல் சுற்றுலாத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். எந்த மோதலும் இழப்பைத்தான் தரும். இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகளான மனித – விலங்கு மோதல்களை முற்றிலும் தடுக்க ஆக்கபூர்வமான திட்டங்கள் தேவை. அரசுகள் மட்டுமல்ல விவசாயிகள், காட்டுயிர் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொழில் துறையினர் என அனைவரும் ஒருங்கிணைந்து இந்தத் திட்டங்களை உருவாக்க வேண்டும்!
- தொடர்புக்கு: vjeeva63@gmail.com
To Read in English: Man-animal conflict: It’s time for change in outlook
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago