கணை ஏவு காலம் 25 | இரண்டு இழப்புகளால் ஏற்பட்ட மாற்றம் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

ஹமாஸுக்கு அதற்கு முன் தேர்தல் என்றால் என்னவென்று தெரியாது. நாடாளுமன்ற ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் அறிந்ததெல்லாம் ஆயுதம் ஒன்றுதான். ஆனால், யாசிர் அர்ஃபாத் காலத்துக்குப் பிறகு பாலஸ்தீன அத்தாரிடிக்கு நடந்த பொதுத் தேர்தலில், ஹமாஸ் பங்கு பெற்றதுடன் நில்லாமல் அவர்களே நம்ப முடியாத மிகப் பெரிய வெற்றியையும் அடைந்திருந்தார்கள். இதைப் பிறகு விரிவாகப் பார்க்கலாம். இப்போது இஸ்மாயில் ஹனியாவை மட்டும் கவனிக்கலாம்.

இஸ்மாயில் ஹனியா, பிறவிகாசாவாசி. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் பிறவி அகதி முகாம்வாசி. கடந்த 1948-ம்ஆண்டு இஸ்ரேல் என்ற தேசத்தைப் பாலஸ்தீனத்து மண்ணில் வலுக்கட்டாயமாக பிரிட்டன் செருகி வைத்த போதுநடந்த யுத்தத்தில் ஹனியாவின் குடும்பம் ஓர் அகதி குடும்பமானது. அவரது முன்னோர்கள் எந்தெந்த முகாம்களில் எவ்வளவு காலம் இருந்தார்கள் என்று தெரியாது. ஆனால் ஹனியா பிறந்தது காசாவில் உள்ள அல் ஷாத்தி அகதி முகாமில். பிறந்த வருடம் 1962 என்று சொல்வார்களே தவிர, உறுதியாகச் சொல்ல முடியாது. எல்லா அகதி முகாம் பிள்ளைகளையும் போல கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டு யார் தயவிலோ படித்து முன்னேறி அரபு இலக்கியத்தில் ஓர் இளங்கலைப் பட்டம் பெற்றார். கடந்த 1987-ம் ஆண்டு ஹமாஸில் இணைந்தார். அடுத்த 10 ஆண்டுகளில் அதன் முன்னணித் தலைவர்களுள் ஒருவர் ஆனார்.

கடந்த 2004-ம் ஆண்டு இரண்டாவது இண்டிஃபாதா யாருக்கும் லாபமின்றி ஒரு முடிவுக்கு வந்ததாக முன்னர் பார்த்தோம் அல்லவா? அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. முதலாவது, அந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி ஷேக் அகமது யாசீன் படுகொலை செய்யப்பட்டார். இது ஹமாஸ் தரப்புக்கு நேர்ந்த பெரிய இழப்பு. இரண்டாவது காரணம், அதேஆண்டு நவம்பர் 11-ம் தேதியாசிர் அர்ஃபாத் காலமானார். இது மொத்தபாலஸ்தீன முஸ்லிம்களுக்கும் நேர்ந்த பேரிழப்பு. இந்த இரண்டு மரணங்களும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை வேறு வழியில்லாமல் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்ததோடு பாலஸ்தீனம் அதுவரை காணாத சில அரசியல் மாற்றங்களையும் காணச் செய்தது.

தேர்தல். அதில் ஹமாஸ் போட்டியிட்டது. இஸ்மாயில் ஹனியா பிரதமரானது. அர்ஃபாத்துக்குப் பிறகு பி.எல்.ஓ.வின் பொறுப்பை ஏற்று நடத்தத் தொடங்கிய மம்மூத் அப்பாஸுடன் அவருக்கு அறவே ஒத்துப் போகாதது. இரு தரப்பும் எதிரிகள் என்றே உணர ஆரம்பித்தது. இன்னும் என்னென்னவோ.

இஸ்ரேலியப் பிரதமர், மொசாடிடம் உறுதியாகச் சொல்லியிருந்தார். இப்ராஹிம் ஹமீத் எங்கிருந்தாலும் வேண்டும். ஒன்று, உயிருடன். அல்லது பிணமாக. அது நடக்காமல் திரும்பி வராதீர்கள்.

ஏனெனில், இரண்டாயிரத்துக்குப் பிறகு இஸ்ரேலில் எக்கச்சக்கமான குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்கத்தொடங்கியிருந்தன. நடந்த சம்பவங்களில் சரி பாதி அளவுக்குத் தற்கொலைத் தாக்குதல்களாக இருந்தன.அதில் ஈடுபட்டவர்களில் பலர் பெண்களாக இருந்தபடியால் இஸ்ரேலியக் காவல் துறையினரால் ஒன்றுமே செய்ய முடியாதிருந்தது.

இதனைக் குறிப்பிட்டு இஸ்மாயில் ஹனியாவிடம் அவர்கள் முன்வைத்த நிபந்தனை ஒன்றுதான். எங்களுக்கு இப்ராஹிம் ஹமீத் வேண்டும். இருக்குமிடத்தைச் சொல்லிவிட்டால் பிரச்சினை செய்யாமல் போய் விடுவோம். இல்லாவிட்டால் விபரீதங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு.

இஸ்மாயில் ஹனியா பாலஸ்தீன அத்தாரிடியின் பிரதமராக இருக்கலாம். ஆனால், ஹமாஸின் தலைவர் அல்லவா? எனவே, கூடிய வரை பதிலே சொல்லாதிருந்தார். நெருக்கடி மிகவும்அதிகரித்தது. ஆனது ஆகட்டும் என்று‘எனக்குத் தெரியவே தெரியாது’ என்றுசொன்னார். தேர்தல் அரசியல், பொதுவெளிக்கு வருவது, முகம் காட்டுவது,பிறர் அணுகும்படியாக இருப்பதுஎல்லாம் என்றைக்கு இருந்தாலும் சிக்கலே என்று ஷேக் அகமது யாசின்ஏன் கூறினார் என்பது அப்போதுஅவருக்குப் புரிந்திருக்கும்.

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE