கணை ஏவு காலம் 23 | எதிலும் பெண், இதிலும் பெண் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

அவர் பெயர் இப்ராஹிம் ஹமீத். இந்தப் பெயரில் ஒரு நபர் இருக்கிறார், அவர்தான் ஹமாஸின் தற்கொலைப் படைப் பிரிவின் தலைவர் என்பதை இஸ்ரேல் ராணுவத்தின் தீவிரவாத எதிர்ப்புப் படைப்பிரிவு 2006-ம் ஆண்டு கண்டுபிடித்தது. கண்டுபிடித்த சூட்டோடு 96 பேரின் மரணங்களுக்கு அவர்தான் காரணம் என்றும் தீர்ப்பு எழுதப்பட்டது. இஸ்ரேலிய நீதிமன்றங்களில் அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறித்த சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால், 45 ஆயுள் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. எல்லாமே அவர் வடிவமைத்து நடத்திய தற்கொலைத் தாக்குதல்களுக்காக வழங்கப்பட்ட தண்டனைகள்.

ஒரு வினோதம், மேற்படி இப்ராஹிம் ஹமீத், காஸாவில் பிறந்து வளர்ந்தவரல்லர். அவர் பரம்பரை பரம்பரையாக மேற்குக் கரைவாசி. ரமல்லாவுக்குச் சிறிது தள்ளி இருக்கும்சில்வாத் என்னும் கிராமத்தில் பிறந்தவர். இப்ராஹிமின் அப்பா, தாத்தா இதர உறவினர்கள் எல்லோரும் யாசிர் அர்ஃபாத்தின் விசுவாசிகள். ஆனால் இப்ராஹிமுக்கு அர்ஃபாத்தின் அரசியல் பிடிக்காது. பாலஸ்தீனத்து மண்ணில் இரண்டே இரண்டு அரசியல்கள்தாம். ஒன்று, அர்ஃபாத் வழியில் அமைதிப் பேச்சுவார்த்தை. அல்லது ஹமாஸ் வழியில் ஆயுதப் போராட்டம். இப்ராஹிமுக்கு இரண்டாவதுதான் சரியென்று பட்டது. எனவே அவர் தொண்ணூறுகளின் இறுதி ஐந்தாண்டுகளில் ஏதோ ஓராண்டில் ஹமாஸில் இணைந்திருக்கிறார்.

தொடக்கம் முதல் அவர் காட்டிய வேகமும் செய்த சில காரியங்களும் மிக விரைவில் அவரை ஹமாஸ் ராணுவத்தில் முன்னணிப் பிரமுகர்களுள் ஒருவராக்கின. சென்ற அத்தியாயத்தில் கண்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு பரவலாகப் பல பாலஸ்தீனர்கள் ஹமாஸில் இணைந்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்த முன்வரவே அதை ஒரு தனிப் பிரிவாக்கி, இப்ராஹிமை அதன் பொறுப்பாளராக்கினார்கள்.

பொறுப்புக்கு வந்ததுமே அவருக்கு ஏற்பட்ட பெரும் பிரச்சினை, பெண்கள். அந்த முதல் சம்பவத்தின் தொடர்ச்சியாகப் பத்து பதினைந்து பெண்கள் தாமாக முன்வந்து தற்கொலைப் போராளிகளாகப் பதிவு செய்தே தீரவேண்டும் என்று கேட்க, விஷயம் வெளியே பரவி பிராந்தியமெங்கும் அது ஒன்றே பேசுபொருளானது.

ஏனெனில் அதற்குமுன் மத்தியக் கிழக்கில் எந்த ஒரு விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் இருந்தது கிடையாது. குறிப்பாகத் தற்கொலைப் படைப் பிரிவில் பெண்களைச் சேர்ப்பது தேவையற்ற விமர்சனங்களை உருவாக்கும், பெயர் கெடும் என்று அனைவரும் சொன்னார்கள். விஷயம் ஷேக் அகமது யாசீனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவர் தமது ஃபத்வாவைப் (என்றால் தீர்ப்பு) பின்வருமாறு வழங்கினார்:

1. பெண்கள் போரிட வரலாம். அதில் தவறில்லை. ஆனால் கட்டாயப்படுத்தி அவர்களை அழைத்து வந்தால் அது தவறு. நீ இயக்கத்துக்கு வா என்று ஒரு பெண்ணிடம் கேட்பது எப்படித் தவறாகுமோ, அதே போன்றதுதான் வருகிறேன் என்று தன் சுய விருப்பத்தின் அடிப்படையில் சொல்லும் பெண்ணிடம் கூடாது என்று சொல்வதும்.

2. நடப்பது யுத்தம். எனவே பாதிக்கப்படும் அனைவருக்கும் திருப்பி அடிக்கும் ஆவேசம் எழுவது இயல்பு. அதில் ஆண் பெண் பேதம் பார்ப்பது கூடாது.

3. அவர்கள் எந்தப் பிரிவில் பணியாற்ற விரும்பினாலும் அதற்குரிய பயிற்சியையும் போதிய பாதுகாப்பையும் அளிப்பது நம் கடமை. நீ இதில்தான் இருக்க வேண்டும், இந்தப் பணியைத்தான் செய்ய வேண்டும் என்று எதையும் திணிக்கக் கூடாது.

யாசின் இப்படிச் சொல்லிவிட்ட பின்பு, ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட இயக்கமான ஹமாஸில் பத்திருபது பெண்களைச் சேர்ப்பது இயக்கத்துக்குக் கூடுதல் பொறுப்புதானே தவிர, அதனால் பெரிய லாபங்கள் இராது என்று இதர மத்தியக் கிழக்கு இயக்கங்கள் அமைதியாகிவிட்டன. ஆனால் தற்கொலைப் போராளிகளாகப் பெண்கள் செல்லும்பட்சத்தில் அதில் சில லாபங்கள் நிச்சயமாக உண்டு என்றுதான் ஹமாஸ் கருதியது.

1. அன்றைய தேதியில் இஸ்ரேல் காவல் துறையில் பெண்கள் பிரிவு என்ற ஒன்று கிடையாது. எனவே தற்கொலைப் போராளிகளாகப் பெண்களை அனுப்பும் போது அத்தனை எளிதில் அவர்கள் கெடுபிடி வளையத்தில் சிக்க மாட்டார்கள்.

2. மக்கள் கூட்டத்தின் நடுவே பெண்கள் புகுந்து முன்னேறுவது எளிது. பெண்கள் நெருங்கி வந்தால், யூதர்களே ஆனாலும் ஆண்கள் நகர்ந்து வழிவிடுவார்கள். குறிப்பாக, ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் விஷயத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் நெருங்கிப் பரிசோதிக்கத் தயங்குவார்கள். விசாரணைகள் கூட சிறிது தொலைவில் நிறுத்தியே நடக்கும் என்பதால் இடுப்பில் கட்டியிருக்கும் வெடிகுண்டுக்கு ஆபத்து நேராது.

3. ஒரு பெண் போராளி லட்சியத்துக்காக உயிரை விடும்போது அது உண்டாக்கும் தாக்கம் மிகப் பெரிதாக இருக்கும்.

இவ்வளவையும் யோசித்த பின்னர்தான் ஹமாஸ் பெண்களைப் படையில் சேர்க்கத் தொடங்கியது.

(தொடரும்)

முந்தையை அத்தியாயம்: கணை ஏவு காலம் 22 | முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE