தமிழ்நாடு உருவான தருணம்

By பி.யோகீசுவரன்

ஆந்திரம், கன்னடம், கேரளம் ஆகிய மாநிலங்கள் பிரிந்து, தமிழர்களுக்கு உரித்தான ஒரு மாநிலம் (தமிழ்நாடு) உருக்கொண்ட நவம்பர் 1ஆம் நாள், தமிழர் வரலாற்றில் சிறப்புமிக்க நாள். அந்த இலக்கை அடைந்ததன் பின்னணியில் பெரும் போராட்ட வரலாறு இருக்கிறது.

காங்கிரஸின் ஆர்வம்: தேச விடுதலைக்குப் போராடிய காலத்தில் எதிர்கால இந்தியாவின் கட்டமைப்பைப் பற்றியும் அகில இந்திய காங்கிரஸ் திட்டமிட்டது. 1905 முதலே மொழிவழியான மாநில அமைப்பு குறித்துக் காங்கிரஸ் மாநாடுகளில் பேசப்பட்டது. அதனால்தான் பிரிட்டிஷ் அரசு வங்காளத்தில் இருந்து பிஹாரைப் பிரித்தபோதும் (1912), ஒடிசாவை வங்காளத்தில் இருந்து பிரித்தபோதும் (1936) காங்கிரஸ் அவற்றை வரவேற்றது.

1917இல் அன்னி பெசன்ட் அம்மையார் உள்ளிட்ட சில காங்கிரஸார் மொழிவழிப் பிரிவினையை ஏற்கவில்லை. ஆயினும் 1920ஆம் ஆண்டு முதல் மொழிவழியாக மாநிலப் பிரிவுக் கோட்பாட்டை காங்கிரஸ் மகா சபை வரவேற்று மகிழ்ந்தது.

1927இல் கூடிய காங்கிரஸ் ஆந்திரம், சிந்து, கர்நாடகம் போன்றவை தனித்தனி மாகாணங்களாகச் செயல்படுத்துவதற்கு ஆதரவு நல்கியது. அவ்வாறான மொழிசார்ந்த மாநிலப் புனரமைப்பு அந்தந்த மொழி பேசும் மக்களின் பரம்பரையையும் கலாச்சாரத்தையும் வளர்த்தெடுக்கப் பயன்படச் செய்யும் என்ற கருத்தோட்டம் காங்கிரஸுக்கு இருந்தது. 1928இல் லக்னோவில் கூடிய காங்கிரஸ் சபையில் நேருவின் தலைமையில் அமைந்த ஒரு குழு மொழிவழியான புனரமைப்பை வரவேற்றது.

மாறிய நிலைப்பாடு: எனினும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு நேருவின் கண்ணோட்டம் மொழிவழிக்கு ஆதரவாக இல்லை. பாதுகாப்பான, உறுதித்தன்மை கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்குவதிலேயே அவர் முனைப்புக் காட்டினார். மொழிவழியைப் பற்றி ஆலோசிக்க அரசால் அமைக்கப்பெற்ற தார் ஆணையமும் மொழிவழிக்குப் பரிந்துரை செய்யவில்லை.

தென்னாட்டு மக்கள் இதை ஏற்கவில்லை. தெலுங்கு மக்கள் ஆந்திர மாநிலக் கோரிக்கையை முன்னெடுத்துப் போராடத் தொடங்கினர். ‘சம்யுக்த கன்னடம் வேண்டும்’ - என நிஜலிங்கப்பா தலைமையில் குரல்கள் எழுந்தன. கன்னியாகுமரி முதல் காசர்கோடு வரையிலான ஐக்கியக் கேரளம் அமைய வேண்டும் என டி.கே.நாராயணப் பிள்ளை, பனம்பிள்ளி கோவிந்த மேனன் போன்றோரின் தலைமையில் மலையாள மக்கள் ஓர் அணியாக நின்றனர்.

கேரளப் பிரதேச காங்கிரஸின் தலைவரான கேளப்பன் ஸ்ரீதர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தென்பகுதியிலுள்ள தமிழர்களையும் ஐக்கியக் கேரள அமைவுக்கு ஒருங்கிணைக்க வேண்டும் என எண்ணி அங்குள்ள தமிழர்களை ஈர்க்கும் நோக்கில் காங்கிரஸாரின் துணையோடு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அத்தகைய சூழலில் நாகர்கோவில் காங்கிரஸ் கமிட்டி 18.11.1945 அன்று கூடியது. அக்கூட்டத்தில், ஐக்கிய கேரள அமைவுக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை ஸ்ரீதர் முன்மொழிந்தார். அதனைச் செயலாளர் சிவன் பிள்ளையும் பிரபல தமிழ் அங்கத்தினர்களும் வரவேற்றனர். எனினும் செயற்குழு உறுப்பினர் பி.எஸ்.மணி, “திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்” என்று வீரியமாய்ப் பேசினார்.

அவரது பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த மணி, தன் கருத்தை ஏற்றுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து, திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸைத் தோற்றுவித்தார். அதுவே பின்னர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் ஆனது.

ஒரு மொழி பேசும் நிலப்பரப்பை ஒருங்கிணைப்பதன் முன்னோட்டமாக திருவிதாங்கூர் - கொச்சி சமஸ்தானங்களை ஓர் ஆட்சி அரசாக மத்திய அரசு மாற்றியது. அந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்ட நாளில் திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதியைத் தாயகத்துடன் இணைக்க வேண்டும் எனத் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் போர் முரசு கொட்டியது. மத்திய அரசும் அகில இந்திய காங்கிரஸும் தலையிட்டு, ‘மொழிவழி மாகாணம் அமைக்கப்படும்போது, தமிழர்களின் உணர்வு மதிக்கப்படும்’ என்ற வாக்குறுதிகளைத் தலைவர் காமராஜர் மூலம் வழங்கின.

இப்படி அடுத்தடுத்து தொடர்ந்த நிகழ்வுகளுக்கு இடையே, போராட்டத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் நேரு அரசு ஆந்திரப் பிரதேசம் அமைய ஒப்புதல் கொடுத்தது. சென்னை மாகாணத்திலுள்ள தெலுங்கு மாவட்டங்களையும் ஹைதராபாத் சமஸ்தானத்தையும் ஒருங்கிணைத்த ஆந்திரப் பிரதேசம் 1953இல் தோற்றுவிக்கப்பட்டது. இதையடுத்து, கன்னடர்களும் மலையாளிகளும் தனிமாநிலக் கோரிக்கையை உரக்க எழுப்பவே, பஷல் அலி தலைமையில் மொழிவழி மாகாண அமைப்பை ஆய்வுசெய்து கருத்துரை வழங்க ஓர் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.

மூன்று பேர் கொண்ட ஆணையத்தில்,நேருவின் நண்பரான கே.எம்.பணிக்கர் என்கிற மலையாளியும் அடக்கம். அவர் கன்னியாகுமரி முதல் காசர்கோடு வரையிலான ஐக்கியக் கேரளம்விரைவில் அமையும் என உறுதிபடப் பேசினார். அவரை மலையாள ஏடுகளும் மக்களும் பாராட்டினர். இந்தச் சூழ்நிலையில், சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் பட்டம் தாணுப் பிள்ளையின் தலைமையில் திருக்கொச்சியில் ஒரு புதிய அரசு பதவிக்கு வந்தது. திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதியைப் பிரிவினை செய்ய தாணு பிள்ளை தீவிர எதிர்வினை ஆற்றினார்.

எழுச்சி பரவியது: இவ்வாறான சூழலில் தங்கள் கோரிக்கை நிறைவேறாது என அச்சமடைந்த திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டக் களம் அமைக்க முனைந்தது. தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தவிர, பிற கட்சிகள் அதற்கு ஆதரவளித்தன. தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் அடிக்கடி வருகை தந்து எழுச்சிக்குத் துணைநின்றார்.

அந்நாளில் தேவிகுளம், பீர்மேடு தமிழர்கள் கேரளத்தின் பட்டம் அரசால் கடுந்துயரத்துக்கு ஆளானார்கள். நிலைமையைக் கண்டறிய அங்கு சென்ற நேசமணி, சிதம்பரநாதன், ஏ.ஏ.ரசாக் ஆகிய தலைவர்களும் 144 தடையுத்தரவை மீறியதால் கைதாகினர். தென் திருவிதாங்கூரிலும் தேவிகுளம், பீர்மேட்டிலும் அரசுக்கு எதிராகத் தமிழர்கள் அறப் போராட்டம் நடத்தினர்.

தமிழர் போராட்டத்துக்குப் பொதுவுடைமைக் கட்சியினரும் திமுகவினரும் ஆதரவு நல்கினர். ஜீவா அடிக்கடி வருகை தந்து ஊக்கப்படுத்தினார். 30.07.1954 அன்று நாகர்கோவிலில் பேசிய அண்ணா, “நான் இப்போராட்டத்தில் ம.பொ.சிவஞானம், ஜீவா ஆகியோருடன் சிறை செல்லத் தயாராக இருக்கிறேன்” எனப் போர்க்குரல் கொடுத்தார்.

11.08.1954 ஆம் நாளைத் தமிழர் விடுதலை நாள் என குஞ்சன் நாடார் அறிவித்தார். அந்நாளில் அதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பேரெழுச்சியான ஊர்வலம் தென் திருவிதாங்கூர் நகர் எங்கும் நடந்தது. நாகர்கோவிலில் அலையெனக் கூட்டம் திரண்டது. மார்த்தாண்டத்தில் போராட்ட எழுச்சியைத் தாங்க முடியாத அரசு, துப்பாக்கிச் சூட்டில் ஏழு தமிழர்கள் உயிரை எடுத்தது. புதுக்கடையிலும் நான்கு தமிழர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.

உதயமானது தமிழ்நாடு: ஒருவழியாக பஷல் அலி ஆணையம் தன் தீர்ப்பை அரசிடம் சமர்ப்பித்தது. நாடாளுமன்றத்தில் ஆணையத்தின் தீர்ப்பு விவாதத்துக்கு வந்தபோது, தமிழர்க்கு உரிய நியாயங்களை நேசமணி எடுத்துரைத்தார். ஆனால், மத்திய அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. மாறாக, மலையாளத் தலைவர்களின் தூண்டுதலுக்கு ஆளாகி 95 விழுக்காடு தமிழர் வாழும் செங்கோட்டையின் வளமான ஒரு பகுதி கேரளத்துக்கு ஒதுக்கப்பட்டது.

தேவிகுளம் பீர்மேடு தமிழர்க்குக் கிடைக்காது போயிற்று. 01.11.1954 அன்று சென்னை மாகாணத்தில் இருந்த மலபார் பகுதி கேரளத்தோடு இணைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகள் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்காக தமிழரசுக் கழகமும் அங்குள்ள பாதுகாப்புக் கமிட்டியும் போராட்டத்தைத் தொடர்ந்தன. 1959இல் திருத்தணி, சித்தூர் ஆகிய தாலுகாக்களில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைந்தன.

1954 நவம்பர் 1இல் ஆந்திரம், மலையாளம், கன்னடம் பகுதிகள் இல்லாத சென்னை மாகாணம் தமிழ்நாடாயிற்று; தமிழர்களுக்கு உரித்தான நிலத்தில் புதிய தமிழ்நாடு தோற்றமெடுத்தது. 1967 ஆட்சிக்கு வந்த அண்ணா, சென்னை மாகாணம் என்ற பெயரை நீக்கிவிட்டுத் தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார்.

To Read in English: The moment Tamil Nadu was born

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்