நா
கை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் திருச்சிற்றம்பலம் என்னும் கிராமம். ஞாயிற்றுக்கிழமை அன்றும் பள்ளிச் சீருடையுடனும் புத்தகப் பையுடனும் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள் காந்தி வித்யாலயா பள்ளியின் மாணவர்கள். அவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இல்லை; வெள்ளிக்கிழமைதான். காந்தி சுடப்பட்டு இறந்த வெள்ளிக்கிழமையை மாணவர்கள் நினைவு கூரும் பொருட்டு இந்த நடைமுறை இன்றளவும் பின்பற்றப்படுகிறது. காந்தியின் ஆதாரக் கல்வியை அடிப்படையாகக்கொண்டு, மு.அருணாசலனாரால் தொடங்கப்பட்டது இப்பள்ளி.
1909-ல் பிறந்து 1992 வரை நிறைவாழ்வு வாழ்ந்தவர் மு.அ. என்று அழைக்கப்படும் மு.அருணாசலனார். ஏறக்குறைய 20-ம் நூற்றாண்டு முழுவதும் தமிழ்ச் சமூகத்தில் பயணித்தவர்; தமிழியலின் பல்வேறு தளங்களில் மிகத் தீவிரமாக இயங்கியவர். எனினும், நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய அறிஞர் என்கிற ஒற்றை அடையாளத்தைத் தவிர, இவரது பிற துறைச் செயல்பாடுகள் பேசப்படவில்லை. திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த மு.அ., கணிதப் பாடத்தில் பட்டம் பெற்று, சென்னையில் அரசுப் பணி கிடைக்கப்பெற்றதால் தன் குடும்பத்துடன் 1930-ல் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். உ.வே.சா., வையாபுரிப் பிள்ளை, டி.கே.சி, அனவரத விநாயகம் பிள்ளை, கல்கி, திரு.வி.க. போன்ற தமிழறிஞர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். சைவ சித்தாந்த மகாசமாஜத்தைத் தோற்றுவித்த ஞானியாரடிகளிடம் பாடம் கேட்டுச் சைவ சித்தாந்தச் சாத்திரத்தின் அடிப்படைகள் அனைத்தையும் கற்றார். காசி இந்து பல்கலைக்கழகத்தில், சைவ சித்தாந்தத் தத்துவவியல் மற்றும் தமிழ்ப் பேராசிரியராக 1944-ல் பணிவாய்ப்புப் பெற்றார்.
1944-ல் தொடங்கிய காசி பல்கலைக் கழகப் பணி, அவரது வாழ்க்கையின் போக்கையும் சிந்தனையை யும் முற்றிலும் வேறு திசையில் நகர்த்தியது. தமிழறிஞர்களின் நேரடித் தொடர்பிலிருந்து விடுபட்ட அவரது சிந்தனையை காந்தியம் முழுமையாக ஆட்கொண்டது. இயல்பிலேயே காந்தியவாதியான மு.அ. அக்காலகட்டத்தில் வட இந்தியப் பகுதிகளில் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட காந்தியின் ஆதாரக் கல்வி, கிராம நிர்மாணத் திட்டம் போன்றவற்றால் மேலும் ஈர்க்கப்பட்டார். காசி பல்கலைக்கழகமா, காந்தியமா என்ற மனப் போராட்டத்தில் காந்தியமே இறுதியில் வென்றது. 1946-ல் பேராசிரியர் பணியிலிருந்து விலகி, மகாராஷ்டிரத்தில் உள்ள வார்தா நகர், சேவாக்கிராமத்தில் இயங்கிக்கொண்டிருந்த இந்துஸ் தான் தாலமி சங்கத்தில் இணைந்து, ஆதாரக் கல்விப் பயிற்சி நிறுவனங்கள் அமைப்பதற்கான பயிற்சியை முறையாகப் பெற்றார்.
இவ்வமைப்புடன் தொடர்புகொண்டிருந்ததால், ஆதாரக் கல்வி சார்ந்து இயங்கிய ஜாகீர் உசேன், வினோபா பாவே, ஆச்சார்ய கிருபளானி, ஜே.சி.குமரப்பா ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்று, அவர்தம் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டார். வார்தா நகரில் ஆதாரக் கல்விக்கான பயிற்சி யைப் பெற்ற அவர், அக்கல்வி முறையைத் தன் சொந்தக் கிராமத்தில் செயல்படுத்தி, தன் கிராம மக்களை முன்னேற்ற வேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து, திருச்சிற்றம்பலத்தில் ஆதாரக் கல்விச்சாலைகளை நிறுவினார். ‘காந்தி வித்யாலயம்’ என்ற பெயரில் நடுநிலைப் பள்ளி, பெண்கள் உயர் நிலைப் பள்ளியை ஏற்படுத்தினார்.பெண்கள் தங்கிப் படிக்க விடுதி, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கபிலர் ஆதரவற்றோர் இல்லம், ஆசிரியர் பயிற்சிச் சாலை என்று பல அமைப்புகளைத் தன் கிராமத்திலேயே தொடங்கி, ஏறக்குறைய 25 ஆண்டுகள் இக்கல்விப் பணியிலேயே தன்னை இணைத்துக்கொண்டார்.
மு.அ. எழுதி வெளியிட்ட இலக்கிய வரலாற்று நூல்களும் பிற நூல்களும் காந்தி வித்யாலய வெளியீடுகளாகவே வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தொடங்கி வைத்த இக்கல்வி நிலையம், தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் இன்றும் அவரது வாரிசுகளால் நடத்தப்பட்டுவருகிறது!
- ஜெ.சுடர்விழி,
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை,
சென்னைக் கிறித்தவக் கல்லூரி.
தொடர்புக்கு: sudaroviya@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago