கணை ஏவு காலம் 18 | ஹமாஸ் மீது நம்பிக்கை வைத்த இஸ்ரேல் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

சிலவற்றை நம்ப முடியாது. அதிர்ச்சியாக இருக்கும். சிலவற்றை ஜீரணிக்க முடியாது. குழப்பமாக இருக்கும். சிலவற்றை ஏற்க முடியாது. கோபம் வரும். ஆனால், இதெல்லாம் தனி மனித அளவில் நடப்பவை மட்டும்தான். அரசியலில் எப்போதும் எதுவும் நடக்கும். முன்னொரு காலத்தில் ஹமாஸ் ஒரு நல்ல இயக்கம்; நமக்கு அவர்கள் சகாயம் தேவை என்று இஸ்ரேல் நினைத்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆனால் அது உண்மை. உணர்ச்சிவசப்படாமல் இந்த விவகாரத்தைப் புரிந்து கொண்டால்தான் ஹமாஸ் இன்று அடைந்துள்ள வளர்ச்சியின் பின்னணி புரியும்.

ஆதியில் ஹமாஸ் ஓர் ஆயுதக் குழு அல்ல. இதை முன்னரே பார்த்தோம். யாசிர் அர்ஃபாத்தின் பிஎல்ஓ வெடி, வெடி, வெடியென்று வெடித்துத் தள்ளிய காலத்தில் எல்லாம் ஹமாஸ் ஒரு சாது இயக்கமாகவே இருந்தது. என்னதான் எகிப்திய நாசரின் இஸ்லாமிய சகோதரத்துவ சித்தாந்தத்தால் உந்தப்பட்டு, ஓர் இயக்கமாகச் செயல்பட்டு பாலஸ்தீன் விடுதலைக்காகப் பாடுபட வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் அப்போதே வந்திருந்தாலும், தேர்ந்தெடுத்திருந்த வழி என்னவோ மைக் பிடித்துப் பிரச்சாரம் செய்யும் வழிதான். அமைதி ஊர்வலங்கள். தெருமுனைச் சொற்பொழிவுகள். துண்டுப் பிரசுரங்கள். மக்கள் நலப் பணிகள். அகதிமுகாம் சேவைகள். இவை தவிர வழிபாடுகள், பிரார்த்தனைக் கூட்டங்கள், மத போதனை வகுப்புகள், இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது தொடர்பான பிரச்சாரங்கள்.

மக்கள் நலப் பணிகளே நோக்கமாக இருந்தாலும் ஒரு வலுவான மத அடிப்படைவாத இயக்கமாக மட்டுமே ஹமாஸ் தன்னைக் கட்டமைத்துக் கொண்டது. நாம் செய்வது சுதந்தரப் போராட்டம் என்று அர்ஃபாத் சொல்லும் போதெல்லாம், ‘ஆம். ஆனால் அல்லாவின் பெயரால் மட்டுமே செய்வோம்’ என்று ஹமாஸ் அதில் ஒரு திருத்தம் சேர்க்கும்.

அந்நாட்களில் யாசிர் அர்ஃபாத் ஒரு வார்த்தை சொன்னால், அதை ஆதரிப்பது மட்டுமே இதர எந்த இயக்கமும் செய்யும் முதல் பணியாக இருக்கும். பாலஸ்தீனத்துக்குள் மட்டுமல்ல. சுற்று வட்டார நாடுகள் அனைத்துமே அப்படித்தான். ஹமாஸ் மட்டும்தான் அர்ஃபாத்தின் மதச்சார்பற்ற சுதந்தரப் போராட்டத்தைக் கருத்தளவில் தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்தது. அர்ஃபாத்தால் சில தற்காலிக நிவாரணங்களைப் பெற்றுத் தர முடியுமே தவிர, பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது என்று ஷேக் அகமது யாசீன் உறுதியாகச் சொன்னார்.

கவனியுங்கள். இப்படி அரசியல் கருத்து ஹமாஸ் தரப்பில் இருந்து வந்து கொண்டிருந்ததே தவிர, செயல்பாடு என்று பார்த்தால் வேறுவிதமாக மட்டுமே இருக்கும். உதாரணமாக, அந்நாட்களில் காஸா பகுதியில் இருந்த அனைத்துத் திரையரங்குகளையும் அவர்கள் இழுத்து மூடினார்கள். ஊரில் ஒப்புக்குக் கூட ஒரு ஒயின் ஷாப் இருக்காது. யாராவது திறந்தால் அன்றே கொளுத்தப்படும். எப்படி உடுத்த வேண்டும், எப்படி நடக்க வேண்டும், என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று மக்களின் வாழ்க்கையை முழு இஸ்லாமிய மயமாக்குகிற பணியை மட்டும்தான் செய்து கொண்டிருந்தார்கள்.

இவர்கள் எக்காலத்திலும் இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம் என்று களமிறங்க மாட்டார்கள் என்று எழுபதுகளின் இறுதியில் இஸ்ரேல் அரசு மிகத் தீவிரமாக நம்பியது. தவிர, யாசிர் அர்ஃபாத்துக்கு எதிரான ஒரு வலுவான சக்தியாக ஹமாஸ் நிலை பெறுமானால் அது தங்களுக்கு நல்லது என்றும் நினைத்தார்கள்.

புரிகிறதா? அன்றைக்கு இஸ்ரேல் பயந்தது அர்ஃபாத்தைக் கண்டு மட்டும்தான். ஹமாசெல்லாம் அவர்களுக்கு ஒன்றுமேயில்லை. ஏனெனில் ஒரு விடுதலை இயக்கமாக உருப்பெறத் தேவையான தேசியவாத மனோபாவம் அவர்களிடம் இல்லை என்று இஸ்ரேல் நினைத்தது.

ஆனால் ஆக்ரோஷமான குழுவினர். வீரத்துக்குப் பஞ்சமில்லை. ஒரு அவசியம் ஏற்பட்டால் அவர்களை ஆயுததாரிகளாக்குவது சுலபம். பயிற்சி கொடுத்து பிஎல்ஓ.வுக்கு எதிராகவே களமிறக்கலாம். முடியாதா என்ன? உலகம் முழுவதும் அமெரிக்கா எத்தனை தேசங்களில் இதனைச் செய்திருக்கிறது? ஒரு சரியான சீடனாக, உள்நாட்டில் அதைத் தான் செய்து பார்த்தால்தான் என்ன?

ஹமாஸாக அறிவித்துக் கொள்ளாமல் இஸ்லாமிய காங்கிரஸாக அவர்கள் உருத் திரண்டு கொண்டிருந்த காலத்தில், அவர்களது மதம் மற்றும் சமூக நலப் பணிகளுக்கு உதவலாம் என்ற குறிப்புடன் அன்றைய காஸா ஆளுநர் நிதிக்குப் பணம் அனுப்ப ஆரம்பித்தது இஸ்ரேலிய அரசு. அன்றைய காஸாவின் ஆளுநர் யிட்ஸாக் செகெவ் (Yitzhak Segev) இதனை 1979-ம் ஆண்டு உறுதி செய்திருக்கிறார். இன்று வரை ஹமாஸ் மறுத்ததில்லை.

தொடரும்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE