மொழியை அறிவுக்கான கருவியாக மாற்றினால்தான் நிலைக்கும்!- கணேஷ் தெவி நேர்காணல்

By ந.வினோத் குமார்

ரிஷ் மொழியியலாளர் சர் ஜார்ஜ் ஆபிரகாம் கிரீர்ஸன் என்பவரால் 1923-ல் இந்திய மொழிகள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு சுமார் நூறு ஆண்டுகள், இந்தியாவில் மொழிகளுக்காக முறையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2010- ல் ஒரு தனி மனிதரின் முயற்சியால் மீண்டும் மொழிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு அரிய தகவல்களை வெளிக்கொணர்ந்த இந்தக் கணக்கெடுப்பை நடத்தியவர் பேராசிரியர் கணேஷ் தெவி. எழுத்தாளர், மொழியியலாளர், மானுடவியலாளர் எனப் பல முகங்கள் கொண்ட அவர் பழங்குடி மொழிகளைப் பாதுகாக்க ‘பாஷா ஆய்வு மையம்’ என்ற அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

மரணம் தொடர்பான உங்களின் பார்வைதான், உங்களைப் பழங்குடிகள் குறித்து ஆய்வுசெய்யத் தூண்டியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளீர்கள்... அது குறித்து?

எனது 30 வயதில் பரோடா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தேன். 45 வயதில், ‘என்னுடைய நாட்கள் எண்ணப்படுகின்றனவோ’ என்று திடீரென ஒரு பயம் தோன்றியது. அந்தப் பயம் தோன்றியவுடனே வாழ்க்கையின் மீது எனக்கிருந்த கவலை, பிடிப்பு ஆகியவை நீங்கிவிட்டன. அது எனக்கு மிகப்பெரும் சுதந்திரத்தைக் கொடுத்தது. அந்தச் சமயத்தில் நான் பழங்குடி கள் பேசும் மொழிகளைப் பற்றி ஆய்வுசெய்து வந்தேன். வெறுமனே ஆய்வுசெய்வதோடு மட்டும் நின்றுவிடாமல் அந்த மொழிகளைக் காப்பாற்றவும் முடிவெடுத்தேன்.

அழிந்துவரும் மொழிகள் குறித்து உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

1961-ல் நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 1,652 தாய்மொழிகள் (mother tongue) இருப்பதாகக் கூறப்பட்டது. அவை ‘மொழிகள்’ (languages) என்று குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ‘தாய்மொழி’ என்பது ஒரு பகுதி யில் பேசக்கூடிய மொழியாக இருக்கலாம். சில சமயம், ஒரு குடும்பத்தில் பேசக்கூடிய மொழியாகவும் இருக்கலாம். அன்று நடந்த கணக்கெடுப்பு, இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் பேசும் மொழிகள் என்று பட்டியலிட்டு, மேற்சொன்ன எண்ணிக்கையை வந்தடைந்தது. அந்தக் கணக்கெடுப்பு, ‘மொழி என்பது என்ன?’ என்பதைக்கூட முறையாக வரையறை செய்யவில்லை.

1971-ல் நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்னும் மோசமாக இருந்தது. அப்போது, 108 மொழிகளை மட்டுமே அந்தக் கணக்கெடுப்பு கவனத்தில் கொண்டது. காரணம், அன்று 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் பேசும் மொழிகளை, மொழியாகக் கருதாமல், அவற்றைக் கணக்கெடுப்புக்குள் கொண்டுவரவில்லை. ஆக, 1,544 மொழிகள் மறைக்கப்பட்டுவிட்டன. விடுபட்ட மொழிகள் தொடர்பாக ஆராய்ந்தபோது, அவை பெரும்பாலும் பழங்குடிகள் பேசும் மொழிகள் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்துதான் குஜராத்தின் தேஜ்காட் எனும் பகுதியில் ‘ஆதிவாசி அகாடமி’ ஒன்றைத் தொடங்கினேன்.

சில காலம் கழித்து, அந்த மொழிகளை ஆவணப்படுத்தும் எண்ணம் எனக்குத் தோன்றியது. ‘தோல்’ (தமிழில் ‘மத்தளம்’) என்ற தலைப்பில் 11 பழங்குடி மொழிகளில் பத்திரிகையைத் தொடங்கினேன். 1997 முதல் 2006-ம் ஆண்டு வரை அந்தப் பத்திரிகைகள் வெளிவந்தன. இதன் காரணமாக, 1991-2001-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், மேற்கண்ட 11 மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை 90%-ஆக வளர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் மேற்கொண்ட இந்திய மக்கள் மொழியியல் கணக்கெடுப்பு பற்றிக் கொஞ்சம் கூறுங்கள்…

20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரிஷ் மொழியியலாளர் ஜார்ஜ் கிரீர்ஸன் மேற்கொண்ட மொழிக் கணக்கெடுப்புக்குப் பிறகு, இந்தியாவில் அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. 2007-ல் ‘புதிய மொழிக் கணக்கெடுப்பு’ ஒன்றை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக, இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தின் மூலம் சுமார் ₹ 600 கோடி செலவில், 10 ஆண்டுகளுக்கு மொழிக் கணக்கெடுப்பு மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. பல்வேறு மொழியியலாளர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. அதில் நான் முக்கியப் பொறுப்பில் இருந்தேன். 2010-ல், போதுமான அளவு மொழியியலாளர்களும், முறையான பயிற்சி பெற்ற மனித வளமும் இல்லை என்று கூறி அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

‘அரசால் செய்ய முடியாவிட்டால் என்ன, நாம் செய்யலாமே’ என்று நான் முடிவெடுத்தேன். அதைத் தொடர்ந்து, பரோடாவில் 320 மொழிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்து ஒரு கூட்டம் நடத்தினோம். அந்தக் கூட்டத்தில், அவரவர் பகுதியில் அவரவர் கணக்கெடுப்பு நடத்துவது என்று முடிவானது. ‘இந்திய மக்கள் மொழிக் கணக்கெடுப்பு’ இப்படித்தான் உருவானது. நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் மொத்தம் 92 தொகுதிகளாக வெளிவர இருக்கின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவாகவே நாங்கள் செய்து முடித்தோம்.

நாட்டில் தற்சமயம் 780 மொழிகள் உள்ளதாகச் சொல்கிறீர்கள். ஆனால் 22 மொழிகள் மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றனவே. எனில், இதர மொழிகளின் நிலை?

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் 22 மொழிகள் மட்டுமே பட்டியலிடப்பட்டிருப்பது வேதனைக்குரியது. அது வெறும் 3% மட்டுமே. 2006-ல் பட்டியலிடப்படாத இதர மொழிகளின் மேம்பாட்டுக்காக மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ‘பாரத் பாஷா விகாஸ் யோஜனா’ என்ற ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அதைச் செயல்படுத்துவதற்கான குழுவுக்கு நான் தலைவராக இருந்தேன். திட்டக் குழு சார்பில் ரூ.240 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ‘பட்டியலிடப்படாத மொழிகள் எவை என்ற அதிகாரபூர்வமான பட்டியல் எங்களிடம் இல்லை’ என்று சொல்லி அரசு அமைப்புகள், அதிகாரிகள் சிலர் கைவிரித்துவிட்டனர். அதனால் அந்தத் திட்டமே கைவிடப்பட்டது. எங்களுடைய கணக்கெடுப்பில்கூட, சுமார் 70 முதல் 80 மொழிகளை ஆவணப்படுத்த முடியவில்லை. காரணம், அவை பெரும்பாலும் மாவோயிஸ்ட் பிரச்சினை, காஷ்மீர் எல்லைப் பிரச்சினை போன்ற சச்சரவுகள் மிகுந்த பகுதிகளில் பேசப்படுகின்றன. எந்த வகையிலாவது பட்டியலிடப்படாத மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையென்றால், அடுத்த 50 ஆண்டுகளில் மேலும் 400 மொழிகளை நாம் இழக்க நேரிடும்.

உங்களின் ஆய்வில் எழுத்து வடிவம் இல்லாத மொழிகளின் நிலை குறித்து நீங்கள் அறிந்துகொண்டது என்ன?

ஒரு மொழிக்கு எழுத்து வடிவம் என்பது முக்கியமானதே இல்லை. இன்று வரைக்கும் ஆங்கிலத்துக்குத் தனியான எழுத்து வடிவம் கிடையாது. அது ரோமானிய எழுத்து வடிவத்தைத்தான் பயன்படுத்துகிறது. அதேபோல இதுவரை எழுத்து வடிவம் இல்லாத மொழிக்குப் புதிதாக எழுத்து வடிவம் கொடுக்கலாம்.

தொல்காப்பியத்தில் உள்ள இருமொழிக் கொள்கைகள் குறித்தெல்லாம் நீங்கள் ஆய்வுசெய்திருக்கிறீர்கள். அதன் அடிப்படையில் கேட்கிறேன்... தமிழ் மொழி பற்றி உங்கள் கருத்து என்ன?

எந்த ஒரு மொழியையும் அறிவுக்கான கருவியாக மாற்றாத வரையில், அந்த மொழி வெகுகாலத்துக்கு நிலைக்காது. மருத்துவம், பொறியியல், கணினி என எல்லா துறை சார்ந்த விஷயங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும். தமிழில் இருக்கும் தத்துவம், அரசியல் சிந்தனைகளை எல்லாம் இதர மொழிகளில் கொண்டுசெல்ல வேண்டும். தமிழ் மொழி உயிர்த்திருக்க அது ஒன்றே வழி!

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்