கணை ஏவு காலம் 17 | பக்கத்து வீட்டுப் புரட்சி @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

ஹமாஸ் அமைப்பு உருவானதற்குப் பின்னால் இருந்த முக்கியமான காரணமாக பிரிட்டன் மீதான எகிப்தின் சூயஸ் யுத்த வெற்றியை மட்டும் சொன்னால் என்னவோ தெய்வக் குத்தம் போலச் சிலர் அலறுவார்கள். மத்தியக் கிழக்கு வரலாற்று ஆசிரியர்களிலேயே சிலர் ஈரானில் நடைபெற்ற புரட்சியை இதன் காரணங்களுள் ஒன்றாகச் சேர்த்து எழுதுவது உண்டு.

ஒப்பீட்டளவில் ஈரான் புரட்சி ஹமாஸ் தோன்றிய காலத்துக்கு நெருக்கமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுவது வழக்கம். இருக்கலாம். இல்லவேயில்லை என்று அடித்துச் சொல்ல எப்படி நியாயமில்லையோ, அதே போன்றதுதான் ‘அது ஒரு முக்கியக் காரணம்’ என்று அடித்துப் பேசவும் நியாயமில்லை.

ஈரானில் ஷா முஹம்மது ரெஸா பாலவி என்றொரு மன்னர் அப்போது ஆண்டுகொண்டிருந்தார். மன்னராட்சி என்ற ஒன்று இருக்கும்போது மக்களில் சிலர் கலகக்காரர்களாவார்கள் அல்லவா? ஆயதுல்லா ருஹொல்லா கொமேனி அந்த வழியில் வந்தவர். புரட்சிகர சிந்தனைகள், இளைய தலைமுறையின் ஆதரவு, அதிரடி நடவடிக்கைகள், மன்னருக்கு எதிரான கலகங்கள் உள்ளிட்ட காரணங்களால் அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டார். எனவே அவர் மேலும் பிரபலமானார்.

கொமேனி, ஈரானிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்பு முதலில் சில காலம் இராக்கில் உள்ள நஜஃப் என்ற நகரத்தில் குடியிருந்தார். பிறகு துருக்கிக்குச் சென்று அங்கே ஒரு ராணுவ உளவுத் துறை அதிகாரியின் பாதுகாப்பில் வசித்தார். பிறகு மீண்டும் இராக். அப்போது இராக்கின் துணை அதிபராக இருந்தவர் சதாம் ஹுசைன். கொமேனியை இராக்கில் வைத்துக்கொண்டால் அநாவசியப் பிரச்சினைகள் வரும் என்று உடனே அவரை மீண்டும் நாடு கடத்தப்போக, இம்முறை கொமேனி பிரான்சுக்குச் சென்றார்.

பதிநான்கு ஆண்டுக் காலம் இப்படி நாடு நாடாகச் சுற்றியபடியே ஈரானில் புரட்சி வளர்த்துக் கொண்டிருந்தார். முதலில் ஈரான் மன்னருக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க அரசு, தனது பாரம்பரியக் கொள்கையின்படி இப்போது கொமேனிக்கும் ஆதரவுத் தரத் தயார் என்றது. இதில் உள்ள அவல நகைச்சுவை என்னவென்றால், ஈரானியர்கள் அமெரிக்க மோகத்தில் வீழ்ந்து, மேற்கத்திய கலாச்சாரத்துக்கு அடிமையாகி தமது பாரம்பரிய மத ஒழுக்கங்களில் இருந்து விலகுவது குறித்த அதிருப்திதான் கொமேனியின் புரட்சி மனோபாவத்துக்கே அடிப்படை.

நாடு கடத்தப்பட்ட காலங்களில் கொமேனி எழுதிய பல குறிப்புகளில் இதனைப் பார்க்க முடிகிறது. ஆனால் அவர் ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார். மதத்தை முன்னிறுத்தித்தான் அவரது புரட்சியைக் கட்டமைத்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஈரானிய மன்னரை அகற்றிவிட்டு ஒரு புதிய ஆட்சியை நிறுவும்போது அது ஒரு மதத் தலைவரால் வழிநடத்தப்படும் ஆ ட் சி
யாக மட்டுமே இருக்கும் என்று சொல்வதைக் கவனமாகத் தவிர்த்தார்.

முன்பே அதைச் சொல்லிவிட்டால் ஈரானில் அன்றைக்கு இருந்த பெரும்பான்மை மதச்சார்பற்ற இளைய தலைமுறை தன்னை ஆதரிக்காமல் போய்விடும் என்கிற எச்சரிக்கை உணர்வு காரணமாக இருக்கலாம். எப்படியோ புரட்சி. எப்படியோ மக்கள் ஆதரவு. கூடவே தாம் அமெரிக்காவுக்கு எதிரான ஆள் இல்லை என்ற பிம்பத்தையும் அழகாகக் கட்டமைத்துக் காட்டியிருந்தார்.

1979-ம் ஆண்டு நவம்பரில் அவரது மிக நீண்ட போராட்டம் வெற்றி கண்டது. மகத்தான மக்கள் ஆதரவுடன் ஈரானில் மன்னராட்சியை அகற்றிவிட்டு ஓர் இஸ்லாமியக் குடியரசை நிறுவினார். ஜூன் 3, 1989-ம் ஆண்டு இறக்கும் வரை அவர்தான் தலைவர். கொமேனியின் ஈரானியப் புரட்சி, எகிப்து அதிபர் நாசரின் பிரிட்டன் மீதான வெற்றியைப் போலவே பெரிதும் கொண்டாடப்பட்டதொரு சம்பவம். இதனை எப்படிப் புரிந்துகொள்வது?

அடக்கி ஆளும் சக்தி எத்தனை வல்லமை பொருந்தியதாக இருந்தாலும், மக்கள் ஒன்றுபட்டால் முடியாதது ஏதுமில்லை என்கிற புள்ளியில் இது மத்தியக் கிழக்கு மக்களை ஈர்க்கிறது. அதே வகையில் இது ஹமாஸையும் கவர்ந்திருக்கலாம். ஆனால் ஈரான், ஷியா பெரும்பான்மை உள்ள நாடு. கொமேனி ஒரு ஷியா முஸ்லிம். அவர் நிறுவிய மதச்சார்பு அரசாங்கம் ஹமாஸை அவ்வளவு கவர்ந்திருக்குமா என்று தெரியவில்லை.

வேண்டுமானால் இப்படி எடுத்துக் கொள்ளலாம். ஈரானில் நடந்த புரட்சி அவர்கள் கவனத்தைக் கவர்ந்திருக்கலாம். மதத்தை முன்னிறுத்தி மக்களை ஒருங்கிணைப்பது என்ற அளவில் ஏற்புடையதாக இருந்திருக்கலாம். பாலஸ்தீனத்து மண்ணிலும் அது சாத்தியமாகி, இஸ்ரேலியர்களை மொத்தமாக விரட்டியடிக்க முடியுமானால் நல்லதுதான் என்று நினைத்திருக்கலாம். அதற்கு அப்பால் ஈரானியப் புரட்சி ஹமாஸை பாதித்திருக்கக் காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை.

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 16 | காலமும் ஒரு கால்வாயும் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE