நா
டு விடுதலை பெற்ற நாளிலிருந்தே இந்தியாவின் இதர பகுதிகளோடு ஒட்டாமல் இந்திய அரசுக்கு எதிராகப் புரட்சி செய்துகொண்டு, மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறைகளால் இன்றளவும் ‘சவலைப் பிள்ளை’யாய் இருக்கும் வட கிழக்குப் பகுதி மக்களின் விரக்தியைத் தனக்குச் சாதகமாய்த் திருப்ப பாஜக முயல்கிறது. அதில் வியப்பேதும் இல்லை. ஒருபுறம் கடந்த 70 ஆண்டுகளாக மத்திய ஆட்சியாளர்களின் கடைக்கண் பார்வையால் வசதிபெற்று, அப்பகுதியின் வளர்ச்சிக்கான நிதியை எல்லாம் தங்கள் வளர்ச்சிக்காகவே மடைதிருப்பி, வசதியானவர்களுக்கு இப்போது புதுச்சட்டை கிடைத்தது. அருணாச்சல பிரதேசத்தில் எப்படி காங்கிரஸ் முதல்வரே கட்சி மாறி, சட்டையை மாற்றிக்கொண்டாரோ, அதேபோல, அசாமிலும் ஹேமந்த பிஸ்வா சர்மாவின் தயவில் பாஜக அரியணை ஏறியது.
திரிபுராவில், காங்கிரஸிலிருந்து திரிணமூல் வழியாக பாஜக பக்கம் வந்த ஏழு எம்.எல்.ஏ-க்களின் உதவியுடன் கடந்த செப்டம்பரில் எதிர்க்கட்சியாகவும் ஆனது அக்கட்சி. பின்பு, மணிப்பூர் சட்ட மன்றத்தில் பிரிவினை கோரும் நாகா குழுக்களோடு சமரசம் செய்தபடி கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கும் வந்தது. இப்போது அதன் அடுத்த இலக்கு வரவிருக்கும் சட்ட மன்றத் தேர்தல்களில் திரிபுராவையும் மேகாலயாவையும் வசப்படுத்துவதே.
வன்முறை வழி
இந்த வகையில், திரிபுராவில் பாஜகவின் முயற்சி முழுவீச்சில் தொடங்கியதைக் கடந்த ஆண்டு இறுதியில் தனி மாநிலம் கோரும் ஐபிஎஃப்டி (திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி)யின் வன்முறை முன்னறிவித்தது. இப்பிரிவின் தலைவர்கள் சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசியதும், அவர்களின் கோரிக்கையை ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என அவர் உறுதியளித்திருப்பதும், இரு தரப்பும் கூட்டணி அமைத்திருப்பதை வெளியே கொண்டுவந்திருக்கிறது. இவர்களில் நான்கு மூத்த தலைவர்கள் முன்கூட்டியே தங்கள் இடத்தை நிச்சயப்படுத்திக்கொள்ள பாஜகவில் சேர்ந்துவிட்டார்கள் என்பது தனிக்கதை.
இந்தப் பின்னணியில்தான் ஜனவரி 7 அன்று பாஜக தலைவர் அமித் ஷா உதய்பூரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
‘தொடர்ந்து ஐந்து முறையாக வெற்றி பெற்றுவரும் இடது முன்னணியும், நான்கு முறை முதல்வராக இருக்கும் மாணிக் சர்க்காரும் அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டனர். தேர்தலுக்குப் பிறகு ஊழல் குற்றங்களுக்காக சர்க்கார் அகர்தலா மத்திய சிறைக்குப் போவார்; மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் 7-வது சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கப்படும்’ என்றெல்லாம் பேசினார் அமித் ஷா.
மாநிலத்தின் மூன்று பக்கமும் வங்கதேசத்தை எல்லையாகக் கொண்டு அசாமுக்குச் செல்லும் ஒரே ஒரு தேசிய நெடுஞ்சாலையின் வழியாக மட்டுமே இந்தியாவின் இதர பகுதிகளைத் தொட வேண்டிய நிலையில் உள்ள சின்னஞ்சிறு மாநிலம் திரிபுரா. கடந்த 2016-ல்தான் டெல்லிக்குச் செல்வதற்கான நேரடி ரயில் வசதியைப் பெற்ற திரிபுரா, இடது முன்னணியின் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் எண்ணற்றவை.
இந்தியாவின் அதிகபட்ச எழுத்தறிவு பெற்றவர்கள் (8.9.2014 அன்று இது 96.82%-ஐ எட்டியது) உள்ள மாநிலம் என்ற பெருமையை எட்டியதோடு, 2001-2011 பத்தாண்டு காலத்தில் இந்தியாவிலேயே எழுத்தறிவு வளர்ச்சியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான இடைவெளியை 7%-ஆக் குறைத்ததற்கான அகில இந்தியாவிலேயே மாநிலங்களுக்கான சிறப்பு விருதைப் பெற்ற மாநிலமாகவும் திகழ்கிறது. அகில இந்திய அளவில் ஆண்-பெண் விகிதம் 1,000-க்கு 943 என்று இருக்கையில் திரிபுரா 960-ஐ எட்டியுள்ளது.
ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம், இந்தியாவிலேயே அதிகபட்சமாக வருடத்துக்குக் குறைந்தபட்சம் 85 நாட்களுக்கு (இரண்டாவது இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா ஆண்டுக்கு 50 நாட்களுக்கு மட்டுமே தருகிறது) வேலையும், அதற்கான ஊதியத்தை இரண்டு வாரங்களுக்குள் வழங்கும் ஏற்பாடும் கொண்ட மாநிலம்.
1998-க்கு முன்பு அங்கு கோலோச்சி, அமைதியைக் குலைத்துவந்த தீவிரவாதத்தை மாநில காவல் துறையைக் கொண்டே 2012-ல் முற்றிலுமாக ஒழித்தது திரிபுரா அரசு. வட கிழக்கில் கடந்த 60 ஆண்டுகளாக இருந்துவரும் ராணுவத்தின் சிறப்பு அதிகாரத்தைத் தானாகவே 2015-ல் விலக்கிக்கொண்ட ஒரே மாநிலம். 2011 புள்ளிவிவரங்களின்படி பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், பிறக்கும்போதே இறக்கும் குழந்தைகள் விகிதம், கருத்தரிப்பு விகிதம் என்று எல்லாவற்றிலும் திரிபுரா மேம்பட்ட நிலையிலேயே இருக்கிறது.
வியூகம் வெல்லுமா?
திட்டக் கமிஷனின் புள்ளிவிவரங்களின்படி 2004-05க்கும் 2011-12-க்கும் இடைப்பட்ட காலத்தில் வறுமைக் குறைப்பு என்பது தேசிய அளவில் 34%-ஆக இருக்கையில், திரிபுராவில் இது 62%-ஆக இருந்தது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் 14%.
ஒருகாலத்தில் இம்மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருந்து, இன்று சிறுபான்மையாகியுள்ள பழங்குடிகளின் நலனுக்கான சுயாட்சி நிர்வாக அமைப்பு தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவருவதை, இந்த அமைப்புக்கான தேர்தல்களில் தொடர்ந்து இடது முன்னணி வெற்றிபெற்று வருவதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
இத்தகைய தீவிர முயற்சிகளை இடது முன்னணி எடுத்துவந்தபோதிலும், எதைச் செய்தாவது ஆட்சி யைக் கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ள பாஜக ஏராளமான அரசு அதிகாரம், பணபலம், ஊடக வெளிச்சம் ஆகியவற்றின் பக்க பலத்துடன் களமிறங்கியுள்ளது. இந்தியாவில் நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாகத் திகழும் மாணிக் சர்க்காருக்கு மாற்றாக, பாஜக விரிக்கும் வலையில் திரிபுரா மக்கள் விழுவார்களா என்பதை வரவிருக்கும் தேர்தல் எடுத்துக்காட்டும்!
- வீ.பா.கணேசன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: vbganesan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago