புதுமையும் பித்தனும் குழந்தையும்

By சா.தேவதாஸ்

சுமார் நூறு சிறுகதைகளைத் தமிழுக்குக் கொடையாக வழங்கிச் சென்றிருக்கும் புதுமைப்பித்தன் என்ற சொ. விருத்தாசலம் தன் காலத்தின் மிக முக்கியமான அறிவுஜீவிகளுள் ஒருவராக விளங்கியவர். உலகச் சிறுகதைகளைத் தமிழாக்கித் தந்தவர். டி.எஸ். சொக்கலிங்கத்துடன் சேர்ந்து தினமணியிலும் தினசரியிலும் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அவர், திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வம்காட்டினார்.

குடும்பம், சமூகம், நாட்டு நடப்பு இவற்றிலிருந்து விலகிய தனிமனிதனின் அக உலகப் பயணங்களில் சஞ்சாரங்களில், வீணை மீட்டல்போல, தியான நிலைகள்போலச் சிறுகதைகளை வடித்திருப்பவர் மௌனி. மௌனியைச் சிறுகதையின் திருமூலர் என்று பாராட்டிய புதுமைப்பித்தன், சமூக நிகழ்வுப் போக்குகளைப் பரிசீலிப்பவராக அவலங்கள் கண்டு சீற்றம்கொள்பவராக, தனிமனிதனின் சிக்கல்களை - முரண்பாடுகளை வெளிப்படுத்துபவராக, நாகரிகங்களை, பண்பாடுகளை மதிப்பீடு செய்பவராக, இதிகாசக் கதைகளை மறுஉருவாக்கம் செய்பவராகச் சிறுகதைகள் எழுதினார். யதார்த்தப் போக்கில், திருநெல்வேலி வட்டார நிலவியல் பின்புலம் அல்லது சென்னையின் நகர நெருக்கடியுடன் வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கும்போது ஒரு கலைஞனிடமிருந்து சீறும் தார்மீகக் கோபத்தை அவர் கச்சிதமாக வெளிப்படுத்தினார்.

வறுமை நெருக்கடியால் அடித்தட்டு மக்கள் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்குப் புலம்பெயர்ந்தது அல்லது கிறித்தவ மதத்துக்கு மாறியது அல்லது பிச்சைக்காரர்களாகத் திரிய நேர்ந்தது போன்றவற்றையெல்லாம் தன் கதைகளில் பதிவுசெய்தார். நடுத்தரக் குடும்பங்களின் பிரச்சினைகள், ஆண்-பெண் உறவில் விரிசல்கள், சாதிய மோதல்கள் போன்றவற்றைத் தன் கதைகளில் அலசிப்பார்த்தார். பண்பாட்டின் போக்கில் ஏற்பட்ட சரிவுகளையும் மனிதப் பலவீனங்களையும் அவர் பரிகசித்தார்.

குழந்தைகளின் உலகம்…

புதுமைப்பித்தன் கதைகளில் உள்ள பல்வேறு அம்சங்களைப் பற்றி நிறைய எழுதியாயிற்று. புதுமைப்பித்தனின் கதைகளில் குழந்தைகளை மையமாக வைத்து அல்லது குழந்தைகள் தொடர்பாக உருவாகும் சூழல்களில், அமானுஷ்யமான அதிசயமான விவரிப்புகள் கூடிவந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே கொஞ்சம் பேசலாம் என்று எண்ணுகிறேன்.

இரவெல்லாம் மழை பெய்து - இதமாகப் புலர்ந்த விடியலில், சிரிப்புடன் தொட்டிலிலுள்ள குழந்தையைப் பார்த்துக் கனிவுகொள்ளும் மனைவியைப் பற்றி ‘புதிய ஒளி’ கதையில் எழுதிவிட்டு, புதுமைப்பித்தன் இப்படிக் குறிப்பிடுகிறார் : “அன்று விடியற்காலம். கீழ்த்திசையிலே தாயின் ஆதரவு, குழந்தையின் கனவு இரண்டும் கலந்த வான் ஒளி. என் மனதில் ஒரு குதூஹலம்....”

பிச்சை பெறக் காத்திருக்கும் ஒருத்தி, பாலருந்தும் கைக்குழந்தையின் ஆனந்தத்தில் தெய்வத்தையோ லட்சியத்தையோ தரிசித்து நிற்பவளென பிரமித்துப் போகிறாள் ‘நம்பிக்கை’ கதையில். புதுமைப்பித்தனின் வரிகள் இப்படித் தொடர்கின்றன: “அந்தத் தாயும் குழந்தையும்... அவள் நீட்டிய கை... அதற்குத்தான் என்ன நம்பிக்கை. அந்தக் கண்கள் ஒளியிழந்துதான் இருக்கின்றன. அதில் என்ன நம்பிக்கை! சோர்வினாலா?... வேறு கதியில்லாமலா... இருந்தாலும் நம்பிக்கைதானே... அந்தப் பிரமையாவது இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிடித்துக்கொள்ள வேறு என்ன இருக்கிறது?”

கடவுளைக் கேள்வி கேட்கும் குழந்தை

“மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.” இருவருக்குமிடையே போட்டி. யார் வென்றவர் என்று சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் ஒரு சாமியாருக்குப் படித்துறையில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுமி சீடையைக் கொறித்துக்கொண்டிருக்கும்போது, சூரியக் கதிர்கள் பட்டு அவளுடைய கால்காப்புகள் ஒளிர்வதை ‘சாமியாரும் குழந்தையும் சீடையும்’ கதையில் புதுமைப்பித்தன் அபூர்வ வாசகமாகத் தருகிறார் - ‘சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிருந்து வெளிவரும்போது ஓய்ந்துபோன சூரிய கிரணம் அதன்மேல் கண்சிமிட்டும். அடுத்த நிமிஷம் கிரணத்துக்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்றுவிடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் தூளிக்குத் தவம் கிடந்துதான் ஆக வேண்டும்.”

‘மனக்குகை ஓவியங்கள்’ சிறுகதையில் வரம் தருவதற்குத் தன்னை நாடிவரும் விஷ்ணுவைப் பொருட்படுத்தாமல் தவமிருக்க விரைகிறது ஒரு குழந்தை; இன்னொரு நிகழ்வில், குழந்தை நசிகேதன், மரணத்தின் புதிரை அவிழ்த்துக்காட்டுமாறு எமனை நச்சரித்து, சஞ்சலத்துக்குள்ளாக்குகிறான். அழிக்கும் தன் திறனில் பெருமிதம் கொண்டிருக்கும் சிவனுடைய அகந்தையைத் தவிடுபொடியாக்கிவிடுகிறது ஒரு குழந்தை:

“உமக்கு எல்லாவற்றையும் அழிக்க முடியும், உம்மை அழித்துக்கொள்ள முடியுமா? நீர் மட்டும் மிஞ்சுவதுதான் சூன்யம் என்று அர்த்தமா? உம்மையும் அழித்துக்கொள்ளும்படி நீர் தொழிலை நன்றாகக் கற்றுவந்த பின்பு நெஞ்சைத் தட்டிப்பார்த்துக்கொள்ளும்.”

மகாமசானம்

‘மகாமசானம்’ கதையில் கிழட்டு முஸ்லிம் பிச்சைக்காரர் ஒருவர் இறந்துகொண்டிருக்கும் தருணங்கள். அவருக்குத் துணையாக இன்னொரு பிச்சைக்காரர். நடைமேடையில் நிகழும் இந்த அவலத்தை ஏறெடுத்துப் பார்க்காமலேயே கூட்டம்கூட்டமாக மக்கள் சென்றுகொண்டிருக்க, ஒரு குழந்தை மட்டும் குறுகுறுப்புடன் பார்த்துக் கொண் டிருக்கிறது. தன்னிடமுள்ள புதுத் துட்டை (காசு) அந்தப் பிச்சைக்காரருக்குத் தருகிறது. இறந்து கொண்டிருப்பவரின் உதட்டில் அமரும் ஈயை விரட்ட அவர் முற்படும்போது, கோணுகின்ற வாயைப் பார்ப்பது குழந்தைக்கு வேடிக்கையாயிருக்கிறது. “பாவா” என்று அழைக்கிறது.

குழந்தையைக் கொல்லும் கொடூரம்

‘கொடுக்காப்புளிமரம்’ கதையில் இடம்பெறும் பணக்காரரான ஜான் டென்வர் சுவாமிதாஸ் ஐயர் பிச்சையிடுவதை ஒரு சடங்காகக் கொண்டிருக்கிறார். தவறாது அவர் பிச்சையிடும் பெர்னாண்டஸுடன் வந்த அவரது குழந்தை, சுவாமிதாஸுக்குத் தெரியாமல் அவருடைய வீட்டுக் கொடுக்காப்புளிப் பழங்களைப் பொறுக்குவது சுவாமிதாஸ் ஐயருக்கு அநீதியாகப் படுகிறது. தடிக் கம்பால் எறிந்து குழந்தையைக் கொன்றுவிடும் அவரை மண்டையில் அடித்துச் சாய்க்கிறார் பெர்னாண்டஸ்.

இருளகற்றும் ஒளி

சாமியார், பிச்சைக்காரர், தெய்வம் உள்ளிட்டவர்களெல்லாம் குழந்தையிடம் பெரும் நம்பிக்கையையும் அளவற்ற ஆனந்தத்தையும் காணுகின்றார்கள். அது மட்டுமல்ல; தெய்வம்/ ஞானி என யாராயினும் குழந்தையால் பரிகாசம் செய்ய முடிகிறது. கள்ளமற்ற மனம் என்பது அவ்வளவு ஆற்றல் மிக்கது, ஆனந்தமானது என்பது புதுமைப்பித்தனின் அழுத்தமான நம்பிக்கை. அத்தகைய குழந்தையைக் கூட தடியால் அடித்து ஒருவர் கொன்றுவிடுகிறாரெனில், அவரது தர்மமும் மதமும் என்ன நற்பேற்றினை வழங்கிடும் என்னும் கேள்விதான் பூதாகாரமாக எழுகின்றது. “கோடீஸ்வரர்கள் அன்னதான சமாஜம் கட்டிப் பசிப் பிணியைப் போக்கிவிட முயலுவதுபோல்” என்று ‘மகாமசானம்’ கதையில் இதனைப் புதுமைப்பித்தன் குறிப்பிடுவார்.

பொதுவாக, புதுமைப்பித்தன் கதைகளில் துன்பம், நம்பிக்கை வறட்சி, முடிவற்ற சோகம் மேலோங்கியிருக்கும் என்று கூறப்படுவதுண்டு. இந்தத் தன்மையை மாற்றுவதற்குத் துணைபுரிபவர்களாக, இருளகற்றும் ஒளியாகக் குழந்தைகள் இருக்கின்றனர்.

படைத்த தெய்வம் தன் பொறுப்பை நிறைவேற்ற வில்லை. அதனை நிறைவேற்ற வேண்டிய மதங்கள் போலியான சடங்குமுறைகளாகிப் பிரச்சினைகளைப் பூதாகாரமாக வளர விடுகின்றன. மனிதர்களுக்குள் தார்மீக உணர்வில்லை. இந்தச் சூழலில் அவர்களுக்கு யார்தான் அன்பும் ஆறுதலும் அளிக்க இயலும், மாசுமறுவற்ற குழந்தையைத் தவிர?

(இன்று புதுமைப்பித்தன் பிறந்த நாள்)
- சா. தேவதாஸ், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்.
ஓவியம்: ஆதிமூலம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்