கணை ஏவு காலம் 10 | உயிர் விளையாட்டு @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

By பா.ராகவன்

மக்கள் தவறு செய்தால் அரசு தட்டிக் கேட்கலாம். அரசு தவறு செய்தால் மக்கள் கேட்கலாம். மக்களும் அரசும் சேர்ந்து ஆத்ம சுத்தியுடன் ஒரு தவறை செய்ய முடிவுசெய்து விடும் பட்சத்தில் கேட்க நாதியற்றுப் போவதுதான் விதி.

பாலஸ்தீன விஷயத்தில் இஸ்ரேலிய அரசும் யூத மக்களும் என்றென்றும் ஒரே நிலைபாட்டினையே கொண்டிருக்கிறார்கள். அவர்களை மொத்தமாக அகற்ற முடியாது என்பதால் தவணை முறையில் முயற்சி செய்வார்கள். இதற்கு உதாரணம், இரண்டாயிரமாவது ஆண்டில் தொடங்கிய இண்டிஃபாதாவும் அதில் இஸ்ரேல் நிகழ்த்திய கோரத் தாண்டவங்களும்.

இன்றைக்குப் பாலஸ்தீனத்தில் நடைபெறுகிற போர் வேறு ரகம். ஹமாஸ் என்கிற இயக்கத்துக்கும் இஸ்ரேலிய அரசுக்கும் இடையில் நடக்கிற போர். ஹமாஸின் தாக்குதலைக் காரணமாக முன்வைத்து காஸா முழுவதையும் இஸ்ரேலியப் படைகள் பந்தாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இரண்டாவது இண்டிஃபாதா முற்றிலும் வேறு. அதுபோரல்ல. மக்கள் தமது அதிருப்தியை வெளிக்காட்டும் விதமாகக் கோஷமிட்டுக் கொண்டு ஊர்வலம் சென்றது மட்டும்தான் நடந்தது. வலுக்கட்டாயமாக அவர்களை வன்முறையின் பக்கம் இழுத்துப் போட்டது இஸ்ரேலிய ராணுவம்.

அதுவும்கூட நடந்தது வேறு விதம். மக்களை ஒதுங்கி நிற்கச் சொல்லிவிட்டுப் பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் பதில் தாக்குதலைத் தொடங்கின. இந்த விஷயத்தில் யாசிர் அர்ஃபாத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு சிறிய கணக்கைச் சொன்னால் இது எளிதில் புரியும்.

இரண்டாவது பாலஸ்தீன இன்டிஃபாதா என்பது 2000-வது ஆண்டு தொடங்கி ஐந்தாண்டுகளுக்கு நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம். எந்த ஒரு சாதகமான முடிவும் அமையாமல் சோர்ந்து போய்தான் போராட்டத்தைக் கைவிட்டார்கள். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது 4,973 பேர் முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அதில் 1,262 பேர் குழந்தைகள் (15 வயதுக்குட்பட்டவர்கள்). இறந்த பெண்களின் எண்ணிக்கை 274. இது மனித உரிமை கமிஷன் தரப்புப் புள்ளிவிவரம்.

இறந்தவர்கள் ஒருபுறம் என்றால் படுகாயம் அடைந்து படுக்கையில் விழுந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்துக்கும் அதிகம். இவை தவிரசுமார் 11,200 பாலஸ்தீன குடியிருப்புகள் அந்த நாட்களில் இஸ்ரேலியப் படைகளால் குண்டு வீசித் தகர்க்கப்பட்டிருக்கின்றன.

மறுபுறம் பி.எல்.ஓ.வில் உறுப்பினர்களாக இருந்த ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் நடத்திய பதில் தாக்குதல்களில் சுமார் ஆயிரம் இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்களால் ஓரெல்லைக்கு மேல் தமது தாக்குதலைத் தொடர முடியவில்லை. இதற்கு அன்றைக்குப் பல காரணங்கள் இருந்தன.

முதலாவது அர்ஃபாத் மிகவும் பயந்தார். அமைதிப் பேச்சு என்றுஒரு பாதையில் இறங்கிவிட்ட பிறகு மீண்டும் இதுஒரு முழு நீள யுத்தமாக வடிவம் கொண்டுவிட்டால் எல்லாமே கெட்டுச் சீரழிந்துவிடுமே என்கிற கவலைஅவருக்கு இருந்தது. அமைதி, அமைதி என்றுநீங்கள்தான் சொல்கிறீர்களே தவிர, இஸ்ரேல் தரப்பில்யார் அமைதிக்கு முன்வருகிறார்கள் என்று அவரது கட்சிக்குள்ளேயே அத்தனை பேரும் கேள்வி கேட்டார்கள். அவரிடம் அதற்குச் சரியான பதில் இருக்கவில்லை.

இரண்டாவது காரணம், தொடர்ச்சியான தாக்குதல்கள், வெளியேற்றங்கள், தொழில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாலஸ்தீனர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் நலிவுற்றுப் போயிருந்தார்கள். இயக்கங்களை நடத்தப் பணம் வேண்டும். ஆனால் இரண்டாயிரத்தில் பாலஸ்தீன இயக்கங்களுக்குக் கிடைத்த உதவிகள் ஒன்றுமேயில்லை. ஆயுதங்கள் போதுமான அளவுக்கு இல்லை. மறுபுறம் இஸ்ரேலிய ராணுவத்துக்கு அமெரிக்கா நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி, இடைவிடாமல் ஆயுத சப்ளை செய்தது.

மூன்றாவதும் மிக முக்கியமான காரணம், இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில் காஸா பகுதியில் ஹமாஸ் அடைந்து கொண்டிருந்த அபரிமிதமான வளர்ச்சியும் அதற்குக் கிடைத்த மக்கள்ஆதரவும். பாலஸ்தீனத்தை உடைத்து இஸ்ரேல் என்கிற தேசத்தைச் செருகியதன் விளைவைத்தான் அவர்கள் அதுநாள் வரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது பாலஸ்தீனமே இரண்டுபட்டு நிற்குமானால் பொதுஎதிரிக்கு அது வசதியாகிவிடாதா? இது தந்த குழப்பமும் அதிர்ச்சியும் மனத்தளவில் அவர்களை மிகவும் தளரச் செய்திருந்தன.

கடந்த 2002-ம்ஆண்டு நிலவரம் மிகவும் மோசமடைந்தது. மேற்குக்கரையில் இண்டு இடுக்கு விடாமல்தினசரி இஸ்ரேலிய ராணுவத்தின் ரெய்டு நடவடிக்கைகள் இருந்தன. ஆயுதக் குழுவினரைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டு குடியிருப்புகளுக்குள் புகுந்து அடித்து துவம்சம் செய்துவிட்டுப் போய்விடுவார்கள். மறுபுறம் பீரங்கி, வான்வழித் தாக்குதல்கள்.

அப்போது சவுதி அரேபியா ஓர் அமைதி முயற்சிக்கு ஏற்பாடு செய்யப் பார்த்தது. யாசிர் அர்ஃபாத்தும், இஸ்ரேலிய அரசுடன் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் இஸ்ரேல் மறுத்துவிட்டது. அதுவரை போராட்டத்தில் பெரிய ஈடுபாடு காட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஹமாஸ், இப்போது களத்தில் இறங்கலாம் என்று முடிவு செய்தது.

(தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 mins ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்