மனித நாகரிகத்தின் திசைவழி...

By சு.அருண் பிரசாத்

“சினமுற்ற ஒருவன் கோபாவேசத்தில் பாறையைத் தூக்கி எறிவதற்குப் பதிலாக வார்த்தையை எறிந்த சமயத்தில் மனித நாகரிகம் தோன்றிவிட்டது” என நாகரிகத்தின் தோற்றம் குறித்து சிக்மண்ட் ஃபிராய்ட் கூறியதாகப் பிரபலமான கூற்று ஒன்று உண்டு.

நாகரிகத்தின் அழிக்க முடியாத கறை: மனித நாகரிகத்தின் இயங்குவிசையாக மொழி பரிணமித்ததுஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கற்களும் கம்புகளுமாக இருந்து காலப்போக்கில் மேம்பட்டுவிட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களே மனித நாகரிகத்தின் திசைவழியைத் தீர்மானிக்கும் முதன்மையான விசையாக எல்லா காலத்திலும் இருந்துவந்தன; இன்றும் அவ்வாறே இருந்துவருகின்றன. ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘மனித நாகரிகம்’ என்றால் என்ன என்பதை வரையறுப்பதைத்தீர்மானிக்கும் கருவிகளாக ஆயுதமும் மொழியும் இருந்துவருகின்றன என்பது உண்மை.

மனித நாகரிகம் அளப்பரிய சாத்தியங்களை எட்டி முன்னேறிக்கொண்டிருப்பதாக நம்பப்படும் இந்த 21ஆம் நூற்றாண்டில்தான், இரண்டு வெவ்வேறு இனக்குழுக்கள் ஒரே நிலப்பகுதியில் ஒன்றிணைந்து இணக்கமாக வாழ்வது பிரச்சினைக்குரிய நிலையாக - நாகரிகத்தின் வெட்கக்கேடான ஓர் அம்சமாகத் தொடர்கிறது. அறிவியல்-தொழில்நுட்ப ரீதியில் மனித நாகரிகம் எத்தகைய எல்லைகளைக் கடந்தாலும் மற்றமை (other) மீதான கடக்க முடியாத வெறுப்பும் சகிப்பின்மையும் நாகரிகத்தின் அழிக்க முடியாத கறைகளாக உள்ளன.

ஆனானப்பட்ட (தத்துவவியலாளர்) சார்த்ரே (Jean-Paul Sartre), “நரகம் என்பது மற்றமைதான்” (The other is hell) என்கிற அவப்புகழ் பெற்ற வரியை எழுதிக் கடுமையான எதிர்வினைகளைப் பெற்றார். பின்னாள்களில் அதற்கு அவர் வருத்தம் தெரிவித்தாலும்,மற்றமை பற்றிய விவாதங்களில் எல்லாம் எடுத்தாளப்படும் ஒரு கருத்தாகவே அது இன்றளவும் தொடர்கிறது.

தோட்டம், விலங்குகள், கரையான்கள்: “ஐரோப்பா ஒரு தோட்டம். நாம் ஒரு தோட்டத்தை உருவாக்கியுள்ளோம். இங்கு எல்லாமே செயல்படுகிறது. அரசியல் சுதந்திரம், பொருளாதாரச் செழுமை, சமூகக் கூட்டிணைவு ஆகியவற்றின் சிறந்த கலவையாகும்... உலகின் பெரும்பாலான மற்ற பகுதிகள் காடாக உள்ளன; அந்தக் காடுகள் [ஐரோப்பா என்கிற] தோட்டத்தை ஆக்கிரமிக்கும்” - ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு-பாதுகாப்புக் கொள்கைகளுக்கான பிரதிநிதி ஜோசப் போரெல், இனவாதம் கொப்பளிக்கும் இந்த ஐரோப்பிய மையவாதக் கருத்தை அக்டோபர் 2022இல் நிகழ்த்திய உரை ஒன்றில் வெளிப்படுத்தினார்.

இந்தக் கருத்துக்குச் சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ‘தோட்டம்-காடு’ ஒப்புமைக்கு மன்னிப்புக் கோரினாலும் இன்றைய புவிஅரசியலின் பின்னணியில் தான் பேசியவை சரிதான் என்று போரெல் வாதிட்டார். கடந்த 500 ஆண்டுகளில், ‘ஐரோப்பியத் தோட்டக்காரர்கள்’ உலகின் பெரும்பாலான ‘காடு’களை ஆக்கிரமித்துச் சீரழித்த காலனியாதிக்க வரலாற்றை நினைவில்கொள்ள அவர் ஒருவேளை (விருப்பத்துடன்) மறந்திருக்கலாம்.

போரெலின் கருத்து ஐரோப்பிய மேட்டிமைவாதத்தின் குரலாக ஒலித்தாலும் மற்றமை மீதான இத்தகைய குரூர மனப்பான்மையை ஒத்த கருத்துகளை மேற்கு-கிழக்கு பாகுபாடில்லாமல் தலைவர்கள் பலரும் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவருகின்றனர்.

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவான இஸ்ரேல், கடந்த 75 ஆண்டுகளாகப் பாலஸ்தீன மக்கள் மீது சொல்லொணா அடக்குமுறைகளை ஏவிவருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் தொடங்கிய அதிரடித் தாக்குதலை எதிர்கொள்வது குறித்தஇஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட்-இன் பேச்சிலிருந்து, மனித ‘நாகரிகம்’ இன்று வந்தடைந்துள்ள இடத்தை நாம் அடையாளம் காணமுடியும்: “நாங்கள் மனித விலங்குகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.” அதேபோல், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2019இல்நடந்த ஒரு கூட்டத்தில் குடியுரிமை பற்றிப் பேசும்போது“வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் கரையான்கள்போன்றவர்கள்” என்கிற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சினமுற்ற மனிதன் கோபாவேசத்தில் ஆயுதங்களை வீசுவது இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது; பேச்சுவார்த்தைகள் என்கிற பெயரில் மொழி எனும் அதிகாரத்தைக் கொண்டும் மனிதன் போரிட்டு வருகிறான்.

ஒருபுறம், அரசியல்ரீதியாக மனித நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்லும் செல்வாக்கும் அதிகாரமும் பொறுப்பும் கொண்ட தலைவர்களும் அரசாங்கப் பிரதிநிதிகளும் பிற நாடுகளைக் காடுகளாகவும் பிற மனிதர்களை விலங்குகளாகவும் கரையான்களாகவும் கருதும் நிலை; மறுபுறம், விளையாட்டில் மாற்று மதத்தைச் சேர்ந்த எதிர்நாட்டு வீரரை மதக் கோஷங்களால் அவமதிக்கும் மக்கள் கூட்டம்.

அடிப்படையில் மனிதர்கள் சுயநலமிக்கவர்கள், தீய இயல்பைக் கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமான அறிவியல் ஆய்வுகள், வரலாற்று நூல்கள் பலவும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் ருட்கர் பிரெக்மன் போன்ற ஆய்வாளர்கள் மனித குலத்தின் நல்லியல்புகளையும் ஆராய்ச்சி செய்து மனித குலம் பற்றிய ‘நம்பிக்கைக்குரிய’ நூல்களை (உதாரணம்: ‘Humankind: A Hopeful History’) எழுதிவருவது கவனிக்கத்தக்கது.

வீழும் பூவுலகு: மனித நாகரிகம் அரசியல்-பண்பாட்டுத் தளங்களில் வருந்தத்தக்க நிலையை எட்டியிருக்கிறது என்றால், சுற்றுச்சூழல் சார்ந்த மனிதச் செயல்பாடுகள் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் அந்நிலையை மேலும் சிக்கலாக்கியிருக்கின்றன. எல்லாமே இன்று ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் சூழலில், மனித சமுதாயத்தின் எதிர்காலம் பற்றி அறிஞர் நோம் சோம்ஸ்கியின் எச்சரிக்கை திடுக்கிடச் செய்கிறது: “இன்னும் இரண்டு தலைமுறைகளில், ஒருங்கிணைந்த மனித சமுதாயம் நீடித்திருக்கப் போவதில்லை.

இது மக்களின் அறிவில் ஆழமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும். ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றில் இதுபோன்று முன்பு நிகழ்ந்ததில்லை. ஒருங்கிணைந்த மனித சமுதாயம் மேலும் இரண்டு தலைமுறைகளுக்குத் தாக்குப்பிடிக்குமா என்பது தற்போதைய தலைமுறை எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது.”

புவி என்பது மனிதர்களால் ஆனதோ மனிதர்களுக்கு மட்டுமானதோ அல்ல; அது பல கோடிக்கணக்கான உயிர்களுடனும் உயிரற்ற பொருள்களுடனும் மனிதர்களையும் ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது. காடு, மலை, கடல் போன்றவற்றை உள்ளடக்கிய அதன் புவியியல் அமைப்புகள் மிகச் சிக்கலானவை; அவற்றுள் காலநிலை அமைப்பும் ஒன்று. பல நூற்றாண்டுகளாகச் சூழலியல் சமநிலையை இவை பேணிவந்தன.

ஆனால், புவியின் பிரம்மாண்ட வரலாற்றில் மிக அண்மைக் காலத்தில் தோன்றிய மனிதர்களால் அந்தச் சமநிலை கடுமையாகக் குலைக்கப்பட்டிருக்கிறது. மனிதச்செயல்பாடுகள் புவியின் சுற்றுச்சூழல், புவியியல் அமைப்புகள் ஆகியவற்றில் தாக்கம் செலுத்தி, அதன்போக்கை மாற்றியமைத்திருக்கும் இந்தக் காலகட்டத்துக்குப் புவியியல் அடிப்படையில் ‘ஆந்த்ரோபோசீன்’ (Anthropocene) என்கிற பெயரை அறிவியலாளர்கள் முன்மொழிந்துள்ளனர்.

கட்டுக்குள் அடங்காத காட்டுத் தீ, தாள முடியாத வெப்ப அலைகள், தப்பிக்க முடியாத பெருவெள்ளம் என மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகள், உலக வரைபடத்தில் எந்தப் புள்ளியைத் தொட்டாலும், அங்கு ‘புதிய இயல்’பாக மாறிவருகின்றன.

அதே வேளை, அமெரிக்காவில் ஒரு நாளில் விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது (ஜூன் 30: 28,83,595 பேர்);ஐஏஜி, ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் போன்ற ஐரோப்பிய விமான சேவை நிறுவனங்கள் உச்சபட்ச லாபத்தைஈட்டின; (கச்சா) எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றின் உற்பத்தியில் புதிய உச்சம் எனக் காலநிலை மாற்றத்துக்குப் பங்களித்துவரும் மனிதச் செயல்பாடுகளில் முன்பைவிட தீவிரம்கூடியிருப்பது உண்மையில் வெட்கக்கேடானது.

உலக மக்கள்தொகை இன்று 800 கோடியைத் தாண்டிவிட்டது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளால்,வளங்கள் கட்டுப்பாடின்றி குறைந்துவருகின்றன; பூவுலகின் உயிர்ப்பன்மைச் சுருங்கிக்கொண்டிருக்கிறது. ஏராளமான உயிரினங்கள் அற்றுப்போய்க்கொண்டிருக்கின்றன.

சுற்றுச்சூழலைப் பொறுத்தமட்டில், மனித நாகரிகம் ஏற்கெனவே தோல்வியின் விளிம்பைத் தொட்டு நிற்கிறது; சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதன் மூலம், சமூகத்தில் அரசியல்-பண்பாட்டு நிலையின் சமநிலையைப் பேணுவது மனித குலம் இன்று எதிர்கொண்டிருக்கும் முக்கியச் சவால். இதை உணர்ந்துகொள்ளும் சுரணை நமக்கு இருக்கிறதா என்பது அதைவிட முக்கியமான கேள்வி.

- தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

To Read in English: The direction human civilization is taking

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

37 mins ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்