உ
லகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு அரசியலை அணுகுபவர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆள நினைப்பவர்கள் முதலில் தங்களைப் பற்றிய கதைகளை உருவாக்குகிறார்கள்; கூடவே எதிரிகளைப் பற்றிய கிசுகிசுக்களையும் உருவாக்குகிறார்கள். கதைகளின் வழியாகவே அதிகாரத்தின் சூட்சமக் கயிறுகள் இயக்கப்படுகின்றன.
நரேந்திர மோடி அதிகாலை நான்கு மணி வரை உழைக்கிறார் என்று நேற்று செல்பேசிக்கு வந்த ஒரு கதை சொன்னது. ஆச்சரியம் என்னவென்றால், அவர் நள்ளிரவு மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார் என்று முந்தைய வாரத்தில்தான் இன்னொரு கதையை வாசித்திருந்தேன். ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஓய்வுக்குப் பின் இப்படி தமிழ்நாட்டைச் சுழற்றியடிக்கும் ஒரு கதை, ‘தமிழ்நாட்டு அரசியலில் பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது!’
வாசகர்களைச் சந்திக்கையில், இப்போதெல்லாம் நான் அதிகம் எதிர்கொள்ளும் கேள்வி: ‘ஊடகங்கள் சொல்கின்றனவே, இந்த வெற்றிடத்தை யார் நிரப்புவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ நான் பதிலுக்கு இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவைக்கிறேன், ‘வெற்றிடமா, அது எங்கே இருக்கிறது?’ எனக்கு இந்தச் சந்தேகம் இருக்கிறது. உண்மையாகவே வெற்றிடம் வெளியே இருக்கிறதா அல்லது கதையாக உருவாக்கப்படுகிறதா?
கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே பெரும் ஆளுமைகள். இன்றைய தமிழக அரசியல் களத்தில் அவர்கள் இருவரின் இருப்பும் இல்லாமலிருப்பது ஒரு பேரிழப்பு; அவர்களுடைய வழித்தோன்றல்களை அவர்களோடு ஒப்பிட முடியாதது என்பது உண்மை. ஆனால், நினைவில் கொள்ளுங்கள். இன்று கருணாநிதி, ஜெயலலிதாவோடு அவர்களுடைய வழித்தோன்றல்களை ஒப்பிடுகையில் வழித்தோன்றல்கள் எப்படி பலவீனமாகக் காட்சியளிக்கிறார்களோ, அப்படியே நேற்று கருணாநிதி, ஜெயலலிதாவும் அவர்களுடைய முன்னோடிகளோடு ஒப்பிடுகையில் பலவீனமாகக் காட்சியளித்தவர்கள். அண்ணா காலத்திய அண்ணாவும் கருணாநிதியும் ஒன்றா அல்லது எம்ஜிஆர் காலத்திய எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஒன்றா?
திமுக, அதிமுக இரு கட்சிகளும் தலா கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேரை உறுப்பினர்கள், அபிமானிகளாகக் கொண்ட கட்சிகள். தமிழ்நாட்டு மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால், மூன்றில் ஒரு பங்கினர் இந்த இரு கட்சிகளோடு தங்களை ஏதோ ஒரு வகையில் பிணைத்துக்கொண்டவர்கள். இரு ஆளுமைகளோடு எப்படி இரு கட்சிகள் காணாமல் போகும்?
அரசியல் இயக்கங்களை அவற்றின் பண்புகளோடு அல்லாமல் வெறும் தலைவர்களாகப் புரிந்துகொள்ளும் அபத்தத்தின் வெளிப்பாடு இது! ஒரு கேள்வி கேட்டுக்கொள்வோம், ஜெயலலிதா மட்டும்தான் அதிமுக என்றால், எப்படி அந்தக் கட்சி இன்னும் வலுவாக நீடிக்கிறது? தங்களுக்குள் பல கோஷ்டிகளாகப் பிரிந்திருக்கும் அதிமுகவினர் அதேசமயம் ஏன் வேறு கட்சிகளை நோக்கி நகராமல் இருக்கிறார்கள்? வெறுமனே ஆட்சியதிகாரம் மட்டுமே அதிமுகவின் கடைசி தொண்டரையும் அந்தக் கட்சியோடு பிணைத்திருக்கிறது என்று நான் நம்பவில்லை.
இந்தியா தன்னுடைய இயல்பில் ‘காங்கிரஸ்தன்மை’யை அதிகம் கொண்டிருக்கிறது என்றால், தமிழ்நாடு தன்னுடைய இயல்பில் அதிகம் ‘திராவிடத்தன்மை’யைக் கொண்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் அரசியல் கலாச்சாரமும் தமிழர்களின் அரசியல் கலாச்சாரமும் வெவ்வேறானவை அல்ல. திராவிடக் கட்சிகளின் சாதனைகள் தமிழர்களின் சாதனைகள் என்றால், திராவிடக் கட்சிகளின் இழிவுகளும் தமிழர்களின் இழிவுகள்தானே? வெறுமனே கட்சிகளை மட்டும் அவற்றுக்கு எப்படி பொறுப்பாக்க முடியும்?
ஜனநாயகத்தை நேசிக்கும் ஒருவனாக நீண்ட கால நோக்கில் இந்த ஓராண்டு தமிழக அரசியல் நகர்வுகளை ஆக்கபூர்வமானவையாகவே பார்க்க விரும்புகிறேன். கருணாநிதி, ஜெயலலிதா இருவருடைய ஆளுமையின் மறைவிலிருந்த நம்முடைய அமைப்பின் பல பலகீனங்களை இந்த ஓராண்டின் நகர்வுகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. ஆளுநர் நடத்தும் ஆய்வுகள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பலகீனத்தை மட்டும் அல்ல; அரசியலமைப்பின் கோளாறுகளையும் சேர்த்துதானே காட்டுகின்றன?
சிக்கல்களினூடாகத்தான் தலைவர்கள் உருவெடுக்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்குப் பின்னும் அப்படி இரு தலைவர்கள் உருவெடுத்துவிட்டதாகவே தோன்றுகிறது.
எண்ணிக்கை பலமற்றதும் அழுத்தப்பட்டதுமான ஒரு சமூகத்திலிருந்து வந்த கருணாநிதி இந்தச் சாதிய சமூகத்தில் இத்தனை ஆண்டுகள் திமுக எனும் பேரியக்கத்தைக் கட்டியாண்டது ஒரு பெரும் சாதனை என்றால், எந்தச் சலனமுமின்றி கருணாநிதியைப் பதிலீடு செய்து அந்த இடத்தில் ஸ்டாலின் உறுதியாக அமர்ந்ததும், கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் குறிப்பிடத்தக்க தொடக்கமே!
ஜெயலலிதாவுக்குப் பின் எதிரே பிரதான கட்சியான அதிமுக முழுக்க தமிழ்நாட்டின் பெரும் சாதிகளின் ஆதிக்கத்துக்குள் போய்விட்ட நிலையில், திமுக அந்த அலைக்குள் சிக்காததோடு மெல்ல எல்லாச் சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் முனைப்பையும் வெளிப்படுத்திவருகிறது. ராசாவின் எழுச்சியும் கட்சியின் ஒரே தலித் மாவட்டச் செயலரான கணேசனுக்கு ஸ்டாலின் அளிக்கும் முக்கியத்துவமும் கட்சியின் அக்கறைகள் நகரும் திசையைத் துல்லியமாகச் சொல்கின்றன.
அதிமுக – திமுக இரு கட்சிகளுக்கும் இடையிலான எண்ணிக்கை வேறுபாடு சட்ட மன்றத்தில் மிகக் குறைவாகவே இருக்கும் சூழலிலும், “எந்தக் கட்சியையும் உடைத்து ஆட்சி அமைக்கப்போவதில்லை” என்ற ஸ்டாலினின் அறிவிப்பை முக்கியமானதாகப் பார்க்கிறேன். ‘தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை; இனி ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் இழிவு வேண்டாம்’ என்ற அவருடைய நிலைப்பாடு இன்று அவருக்குத் தோல்வியைத் தந்திருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தை மேம்படுத்துவதோடு கட்சியின் கண்ணியத்தையும் வளர்த்தெடுக்கும் முடிவு அது. கடந்த கால தவறுகளிலிருந்து கட்சியை மீட்டெடுப்பதில் ஸ்டாலின் கொண்டிருக்கும் பொறுப்பை இது உணர்த்துகிறது.
வெட்டு ஒன்று – துண்டு இரண்டு என்று பேசும் ஸ்டாலினின் அணுகுமுறை கருணாநிதியினுடையது அல்ல. ஆனால், கடந்த கால அலங்காரப் பேச்சுகளிலிருந்து திமுக விடுபடுவதும் கூடுதல் வெளிப்படைத்தன்மையான மொழிக்கு அது மாறுவதும் நல்லது என்றே நினைக்கிறேன்.
மோடிக்கு எதிராகத் திரள்வது தொடர்பாக நாடு முழுக்க எதிர்க்கட்சிகள் பேசிவந்தாலும், தேசிய அளவில் ஒரு குடைக்குள் எதிர்க்கட்சிகள் இன்னும் திரண்ட பாடில்லை. பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் இன்னும் மோதிக்கொண்டிருக்கின்றன. ஸ்டாலினால் தமிழ்நாட்டில் ஒரு கூட்டணிக்கு வித்திட முடிந்திருக்கிறது. தன்னுடைய கடுமையான விமர்சகரான வைகோவை அவர் உள்ளிழுத்தது அவரிடம் வளர்ந்துவரும் நெகிழ்வுத்தன்மைக்கு உதாரணம்.
திமுகவுக்குள் இளைய தலைமுறையினரை வளர்த்தெடுக்கும் முயற்சிகள், சித்தாந்தரீதியிலான சரிவிலிருந்து கட்சியை மீட்டெடுக்கும் முனைப்புகள் தொடங்கியிருப்பதைக் கட்சிக்குள் பேசுகிறார்கள். திருமணங்கள், கூட்டங்களில் புத்தகங்களைப் பரிசளித்துக்கொள்வதில் தொடங்கி கட்சியின் கடந்த கால வரலாற்றை இளையோருக்குக் கடத்தும் நிகழ்ச்சிகள் வரை பட்டியலிடுகிறார்கள். இவை யாவும் நல்ல அறிகுறிகள்.
எதிரிலும் மாற்றங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. அதிமுகவுக்குள் ஓராண்டாக நடந்துவரும் அதிகாரச் சண்டைகளின் மத்தியில், அடுத்த தலைமைக்கான அக்கட்சியினரின் தேடலுக்கு ஆர்கே நகர் தேர்தல் முடிவு ஒரு தெளிவைக் கொடுத்திருப்பதுபோலவே தோன்றுகிறது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தினகரன் பேட்டிகளையும் பேச்சுகளையும் ஒரு பெரிய கூட்டம் ரசிப்பதை இன்று பார்க்க முடிகிறது. காரணம் இல்லாமல் இல்லை. சமகால அரசியல் மொழியிலிருந்து மாறுபட்ட ஒரு மொழி அவருக்குச் சாத்தியமாகி இருக்கிறது.
பழனிசாமி, பன்னீர்செல்வம்போல பதுங்காமல் ஊடகங்களுக்கு முகங்கொடுப்பதும், அலட்டிக்கொள்ளாத உடல்மொழியோடு யதார்த்த தளத்தில் உரையாடுவதும், எந்தக் கேள்விக்கும் சிரித்தபடி அனாயசமாக பதில் அளிப்பதுமான அணுகுமுறை அவர் மீதான கவன ஈர்ப்பின் மையமாக மாறியிருக்கிறது. எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ விவரிக்காத கட்சியின் கள அரசியல் நிலவரங்களை தன்னுடைய விவாதங்களின் வழி மையப்புள்ளிக்கு தினகரன் கொண்டுவருகிறார். தேவையற்ற போலி மதிப்பீடுகளையும் பிம்பங்களையும் உடைக்கிறார். “அரசியல்வாதிகளுக்கு வசதி எங்கிருந்து வருகிறது?” என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு, “அரசியல்வாதி என்றால் கோவணத்தோடு நிற்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?” என்ற அவருடைய பதில் கேள்வியை ஒரு பதமாகச் சொல்லலாம்.
கீழ் நிலையிலுள்ள அதிமுக தொண்டர்களிடம் பேசுகையில் எதிர்வரவிருக்கும் கணக்குகள் மேலும் துல்லியமாகின்றன. “மாநில அரசாங்க இயந்திரம், மத்திய அரசாங்க துணை, பணம் இவ்வளவும் இருந்தும் பழனிசாமி – பன்னீர்செல்வம் ரெண்டு பேரும் சேர்ந்து தினகரனைத் தோற்கடிக்க முடியலை. பொதுவில பேசுறவங்க அவரு காசு கொடுத்து ஜெயிச்சுட்டாருன்னு பேசுறாங்க. நேத்திக்கு ஜெயலலிதாவும் இங்கே செலவு செஞ்சுதான் ஜெயிச்சாங்க. எம்ஜிஆர், ஜெயலலிதா ரெண்டு பேருமே எல்லாருக்கும் முன்னாடி கெத்தா நின்னவங்க. அதிமுக தலைமைன்னா அப்படி ஒரு கெத்து வேணும். டெல்லியை எதிர்க்குற கெத்து தினகரனுக்கு இருக்கு. பழனிசாமியோட ஆட்சி போனா கட்சி தினகரன்கிட்ட போயிடும்!”
மதச்சார்பின்மைப் பாதையே தன் பாதை என்றும் பாஜக நிரந்தரமான எதிரி என்றும் தினகரன் அறிவித்ததும் முன்னதாக அலைக்கற்றை வழக்கிலிருந்து கனிமொழி விடுவிக்கப்பட்டபோது “ஒரு தமிழனாக இதை வரவேற்கிறேன்” என்று சொன்னதும் அரசியலில் வேறொரு தளம் நோக்கியும் தினகரனை நகர்த்தியிருக்கின்றன.
விருப்பங்களுக்கும் விளைவுகளுக்கும் அப்பாற்பட்டு ஒரு விஷயம் திட்டவட்டமாகப் புலப்படுகிறது. ஸ்டாலினும் தினகரனும் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தை நிர்ணயிப்பதற்கான எல்லா அறிகுறிகளும் வெளிப்படுகின்றன. இவர்கள் இருவரும் தமிழகத்தின் இரு துருவ அரசியல் குமிழுக்குள் பொருந்தும் சூழலில் வெற்றிடம் எங்கே இருக்கிறது?
எல்லாக் கதைகளுமே அதன் முழு இலக்கையும் எட்டிவிடுவதில்லை. ரஜினி, கமல், விஷால் எல்லோருமே அரசியலுக்குள் வரலாம். அவர்களுக்கான இடத்தை அவர்களே உருவாக்க வேண்டும். காலியிடம் என்று ஏதுமில்லை!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago