அறியப்படாத அக்டோபர் புரட்சி!

By புனிதப் பாண்டியன்

உலகளவில் புகழ்பெற்ற அக்டோபர் புரட்சி என்றழைக்கப்படும் ரஷ்யப் புரட்சி (1917) பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். அது ஓர் ஆயுதப் போராட்டமாகவும் அரசியல் புரட்சியாகவும் பரிணமித்தது. ஆனால், இந்தியாவில் அக்டோபர் மாதம் (1956) ஒரு சமூக - பண்பாட்டுப் புரட்சி அறவழியில் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள், பிறப்பின் காரணமாகத் தங்களை ஒடுக்கும் சாதி அடிமைத்தளையிலிருந்து வெளியேறி விடுதலை பெற்றனர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

அம்பேத்கர் முன்வைத்த இறுதித் தீர்வு: மக்களிடையே பாகுபாட்டையும் வெறுப்பையும் கற்பித்த சாதியை ஒழிப்பதற்காகவும், கடும் இன்னல்களைச் சந்திக்கும் தலித் மக்களைக் கொடிய பாகுபாட்டுச் சிந்தனையிலிருந்து விடுதலை செய்யவும் 40 ஆண்டு காலம் பல்வேறு தீர்வுகளை முன்னிறுத்திப் போராடிய அம்பேத்கர், ஓர் அரிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்வைக் கண்டறிந்ததோடு, இறுதியாக தாம் இறப்பதற்கு 50 நாள்களுக்கு முன்னால் நாக்பூரில் அதைச் செயல்படுத்தியும் காட்டினார்.

சாதியை நிர்மூலமாக்க வேண்டுமெனில் - அதற்கு ஆதாரமாக இருக்கும் கடவுள், மதச் சிந்தனையிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் - தங்களை முற்றாக விலக்கிக்கொள்வதோடு, வேறொரு சமத்துவச் சிந்தனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கரின் இறுதி முடிவாக இருந்தது.

தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருமளவில் இல்லாத ஒரு காலகட்டத்தில் அம்பேத்கர் 10 லட்சம் மக்களுடன் பௌத்தம் ஏற்று மாபெரும் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்டதை நினைவுகூரும் பொருட்டே ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் ‘அக்டோபர் புரட்சி’ கொண்டாடப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு (அக்டோபர் 14, 15, 16) அந்நிகழ்விடமான நாக்பூரில் திரண்டு, அம்பேத்கர் அறிமுகப்படுத்திய 22 பெளத்த உறுதிமொழிகளை ஏற்பதோடு கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் பொதுக்கூட்டங்கள் நிகழ்த்தி, சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கான உணர்வெழுச்சியைப் பெறுகின்றனர். சுயமரியாதையையும் சமத்துவத்தையும் உள்ளடக்கிய மானுடப் பண்பைக் கடத்தும் விழாவாகக் காட்சியளிக்கும் நிகழ்வு இது.

புதிய உடலில் புத்துயிர்: ‘‘நான் ஓர் இந்துவாகப் பிறந்தேன். அது ஒரு விபத்து. ஆனால், நான் ஓர் இந்துவாகச் சாக மாட்டேன்’’ என்று 1935இல் உறுதியேற்ற அம்பேத்கர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் எண்ணிக்கையிலான மக்களுடன் பௌத்தம் ஏற்ற இம்மாபெரும் நிகழ்வை ஒரு மதமாற்றச் சடங்காகக் கருதி, பொதுச் சமூகம் கடந்துவிடுகிறது.

ஆனால், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப்பட்ட அடிமை உளவியலை - எந்தச் சேதாரமுமின்றித் தகர்த்து - சட்டபூர்வமான முறையிலேயே சகோதரத்துவ ஓர்மையை வென்றெடுத்து, மனித மாண்பை மீட்டெடுக்கும் மானுடக் கலையை அம்பேத்கர் அருமையாக விளக்குகிறார்: ‘‘மதமாற்றம் என்ற சொல் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ‘புத்துயிர்’ என்பதே அதன் உள்ளார்ந்த பொருள்.

ஆனால், சவத்துக்குள் புத்துயிர் நுழைய முடியாது. புதிய உடல் தோன்றுவதற்குப் பழைய உடல் அழிய வேண்டும். அந்தப் புதிய உடலில்தான் புத்துயிர் நுழைய முடியும். சுருங்கச் சொன்னால், புத்துயிர் பெற்றுப் பரிணமிக்க முதலில் பழமை செத்து மடிய வேண்டும்.’’

மதத்தை மறுவரையறை செய்தவர்: அம்பேத்கர் மதம் மாறவிருக்கும் செய்தி பரவியதும் இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம் போன்ற மதங்களின் தலைவர்கள் அவரைத் தங்களுடைய மதத்தில் இணைய அழுத்தம் கொடுத்தனர். ஆனால் எவரும் எதிர்பார்த்திராத வகையில், அம்பேத்கர் பெளத்தத்தைத் தேர்வுசெய்தார். அதற்கான காரணம் உற்று நோக்கத்தக்கது.

பிற மதங்களெல்லாம் இந்நாட்டில் ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் அமைந்த வர்ண - சாதிக் கோட்பாட்டை அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; ஆனால் பௌத்தம் மட்டுமே வர்ண - சாதிக் கோட்பாட்டை அழித்தொழிப்பதையே லட்சிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

தவிர, கடவுளை மையமாகக் கொண்டு சடங்குகளும் மரபான வழக்கங்களும் நிறைந்ததுதான் மதம் என உலகளவில் மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் வரையறையை ஏற்க மறுத்த அம்பேத்கர், மதத்தை மறுவரையறை செய்தார் என்பது பலரும் அறிந்திடாத செய்தியாகும்.

ஒரு மதத்துக்குக் கடவுள் தேவையில்லை என்று அறுதியிட்டுக் கூறிய அம்பேத்கர், அதற்கு மாறாக, அந்த இடத்தில் அறத்தை முன்னிறுத்தினார். அது மட்டுமல்ல, மதம் அறிவியல் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்; ஒரு மதம் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமெனில், அது பகுத்தறிவுக்கு ஒத்துப்போவதாக இருக்க வேண்டும். மேலும், ஒரு மதத்தின் அறநெறிகள் வாழ்வின் அடிப்படைக் கூறுகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றார் அம்பேத்கர்.

அம்பேத்கரின் வரையறையின்படி, பௌத்தம் என்பது மரபார்ந்த பொருளில் ஒரு மதமாகாது. அதை ஓர் அறநெறி அல்லது கொள்கை என்றே பொருள் கொள்ள முடியும். அதனால்தான் பௌத்தம் குறித்து எழுதிய நூலுக்கு ‘புத்தரும் அவருடைய மதமும்’ என்று தலைப்பிடாத அம்பேத்கர், ‘புத்தரும் அவர் தம்மமும்’ எனத் தலைப்பிட்டார்! தம்மம் என்பது மதமல்ல; அது ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் கட்டப்பட்ட சமூகத்தைப் பகுத்தறிவின் துணை கொண்டு அறநெறியுடனான ஒரு சமத்துவச் சமூகமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

அம்பேத்கருக்குப் பிறகு... அம்பேத்கரின் மறைவுக்குப்பிறகான தலித் இயக்கங்கள், குறிப்பாக மகாராஷ்டிரத்தில் அவருடைய மரபுவழி வந்தவர்களாகத் தங்களைப் பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்கூட, அண்ணலுடைய முழுச் செயல்பாடுகளில் ஒரு பகுதியான நாடாளுமன்றத் தேர்தல் அரசியலை மட்டுமே முழுமூச்சாக ஏற்றுக்கொண்டு, பல நூறு கட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் சாதியை அழித்தொழித்து, உரிமைகள், பொறுப்புகள், சமூக நிலை ஆகியவை - பிறப்பு என்கிற விபத்தின் அடிப்படையில் அல்லாமல் - தகுதி, நீதியின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்பதற்கான புரட்சிகரக் கோட்பாட்டை விதைத்த அம்பேத்கரிய சிந்தனைத் தொடர்ச்சியை முன்னெடுக்காமல் கைவிட்டுவிட்டனர்.

சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளாகச் சட்டங் களை இயற்றக்கூடிய மக்கள் பிரதிநிதிகளாக நாடாளு மன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் தலித் மக்கள் அங்கம் வகிக்கின்றனர்; மத்திய, மாநில அரசு நிர்வாகத் தில் இடஒதுக்கீட்டின் மூலம் அதிகாரத்திலும் தலித் மக்கள் இடம்பெற்றிருந்தாலும், ஏற்றத்தாழ்வுகளால் அவமானங்களையும் வன்கொடுமைகளையும் சந்திப் பவர்களாக ஒரு முரண்பட்ட வாழ்க்கைக்குள் தள்ளப் பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இதுவரை கிட்டியுள்ள அரசியல் அதிகாரம், சமத்துவ சமூகத்துக்கான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதாக இல்லை; சாதி இழிவை நீக்கிடவில்லை. தவிர, அம்பேத்கர் பெற்றுக்கொடுத்த உரிமைகள் தொடர்ச்சியாகப் பறிக்கப்படுவதும் அதை மீட்டெடுப்பதற்கான போராட்டமுமே தலித் மக்களின் வாழ்க்கையாக மாறிவிட்டது. சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை எனில், சட்டம் அங்கீகரித்துள்ள அரசியல் உரிமைகளைக்கூடத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போய்விடும்.

அறம் வென்ற அம்பேத்கர்: தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு ஆட்சியதிகாரத்தில் இருந்த தமிழ் மன்னர்களிலிருந்து தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திராவிடக் கட்சிகள் வரை, பிறவி இழிவான சாதியைத் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழிக்க இயலவில்லை என்பது நமக்கான பாடமாக இருக்க வேண்டும். சாதி ஒழிப்புப் பணி பின்னடைவைச் சந்திக்கும் என்பதால்தான் பெரியார், தேர்தல் அரசியலை முற்றாகத் தவிர்த்தார் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

ஒரு குடும்பத்தில் சொத்து எப்படி பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்குத் தன்னியல்பாக வந்து சேர்கிறதோ அப்படித்தான் மதமும் இயல்பாக வந்துசேர்கிறது. அதைத் தேர்வுசெய்யும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவ்வாறு இயந்திரத்தனமாக வந்திணையும் மதத்தைக் கேள்வி கேட்டு, அதைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்கும் வாய்ப்பை எந்த மதமும் அனுமதிப்பதில்லை.

இந்தியாவைப் பொறுத்த அளவில் சாதிக்கும் மதத்துக்குமான ஒட்டுறவை எந்த அதிகாரத்தாலும் பிரிக்க முடியாததால்தான் பௌத்தம் என்கிற பகுத்தறிவின் துணைகொண்டு, ஒட்டுமொத்தச் சமூகத்தையும் ஜனநாயகப்படுத்த விழைந்த அம்பேத்கர், சாதி என்னும் மத அநீதியை அறம் என்கிற தம்மத்தால் வென்றெடுத்தார்!

- தொடர்புக்கு: dalitmurasu@gmail.com

To Read in English: Another October revolution not much known

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE