கடந்த 1967-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடந்த மூன்றாவது அரபு - இஸ்ரேல் யுத்தம், அடிப்படையில் பாலஸ்தீனர்களுக்காக நடத்தப்பட்டதல்ல. எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் வாய்க்கால் தகராறு. சரியாக அந்த சமயத்தில் ஜோர்டான், எகிப்துடன் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்த ஏற்பாடு செய்து கொண்டபடியால், யுத்தத்தில் எகிப்தின் பக்கம் நிற்க வேண்டியிருந்தது. பிறகு இன்னொரு அண்டை நாடான சிரியாவும் போரில் தன்னை இணைத்துக்கொண்டது.
போர் ஆரம்பித்தது. ஆனால் தொடங்கிய 2 நாட்களிலேயே எகிப்தின் வான் படைகளை இஸ்ரேல் துவம்சம் செய்துவிட்டது. இதற்கு மேல் போரை நீட்டித்தால் இழப்புகள்தான் நிகர லாபமாக இருக்கும் என்று முடிவு செய்து எகிப்தும் ஜோர்டானும் 8-ம் தேதி போர் நிறுத்தம் செய்வதாக ஒப்புக் கொண்டன. வேறு வழியின்றி மறுநாள் சிரியாவும் போரை நிறுத்திக் கொள்ளவே, போரில் இஸ்ரேல் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 1948 போரின் போது எகிப்தின் வசம் சென்றிருந்த காஸாவின் பகுதிகள் இப்போது இஸ்ரேல் வசமானது. தவிர எகிப்தின் சினாய் தீபகற்பத்தையும் அது கைப்பற்றியிருந்தது. இந்தப் பக்கம் அதே 1948 போர்க்காலத்தில் ஜோர்டான் வசம் சென்றிருந்த மேற்குக் கரை, இப்போது இஸ்ரேலுக்குச் சொந்தமானது. எனவே, கிழக்கு ஜெருசலேமும் இஸ்ரேலின் சொத்தானது. வடக்கே சிரியா தனது கோலான் குன்றுகளை இஸ்ரேலிடம் இழந்திருந்தது.
இதன் நிகரம் என்னவென்று பார்த்தால் சுமார் 3 முதல் மூன்றரை லட்சம் பாலஸ்தீனர்கள் அகதிகளாகிப் போனார்கள். மேற்குக் கரை இஸ்ரேலுக்குச் சொந்தமாகிவிட்ட பின்பு அவர்கள் எப்படி அங்கே வாழமுடியும்? ஒன்று, நீங்களாக ஓடி விடுங்கள். அல்லது துரத்தப்படுவீர்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
ஏனெனில், போரின் வெற்றி குறித்து உலகம் பேசிக் கொண்டிருக்கும் போதே அல் அக்ஸா வளாகத்தில் தான் செய்ய உத்தேசித்திருந்ததைத் தாமதமின்றித் தொடங்கிவிட அவர்கள் நினைத்தார்கள். வேறென்ன? அகழ்வாராய்ச்சி.
இந்த இடம் யூதர்களுக்குச் சொந்தமானது. பண்டைய புராண இதிகாச சரித்திரக் கதைகளெல்லாம் அதைத்தான் சொல்கின்றன. சாலமன் தேவாலயம். அது இங்கேதான் இருந்திருக்கிறது. இதோ, அதன் சாட்சியாக மீதமிருக்கும் ஒற்றைச் சுவர். கண்ணீர்ச் சுவர். ஆனால் வெறும் சுவரை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. எனவே ஆய்வாளர்களே, நீங்கள் தோண்டத் தொடங்குங்கள். வளாகம் இனி உங்கள் பொறுப்பு. எங்கே வேண்டுமானாலும் தோண்டுங்கள். எவ்வளவு ஆழத்துக்கு, நீள அகலத்துக்கு வேண்டுமானாலும் தோண்டுங்கள். இந்த இடத்தில் ஒரு யூத தேவாலயம் இருந்ததற்கான ஆதாரங்களை மட்டும் எடுத்துக் கொடுத்து விடுங்கள். போதும்.
கவனியுங்கள். அது பயன்பாட்டில் இருந்த பள்ளிவாசல். ஒவ்வொரு நாளும்பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து புனித யாத்திரையாக வந்து செல்கிற இடம். இப்போது அது ஒரு தொல்பொருள் ஆய்வுப் பிராந்தியமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. யாரும் வர முடியாது. தொழ முடியாது. எதுவும் செய்ய முடியாது.
அல் அக்ஸாவின் மேற்குப் பகுதியில் அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 80 மீட்டர் நீள அகலங்களுக்கு ஆழக் குழி தோண்டி அந்தப் பக்கம் யாருமே நெருங்க முடியாதவாறு அகழி போல் அமைத்துவிட்டார்கள். வளாகத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்பது அப்போது வசிப்பிடம் தேடி ஓடிக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்குத் தெரியாது.
சரியாகச் சொல்வதென்றால், தோண்ட தொடங்கி ஓராண்டு முடிந்து, ஒரு சில மாதங்களுக்குப் பிறகுதான் அங்கே அகழ்வாய்வுப் பணிகள் நடக்கின்றன என்கிற விவரமே அதிகாரப்பூர்வமாக வெளியே தெரிந்தது. மேற்குப் பகுதி முழுவதும் தோண்டி முடித்த பின்னர், தென் மேற்கு எல்லையில் இருந்து தோண்ட ஆரம்பித்தார்கள். சுமார் 3 ஆண்டுகள் தோண்டிப் பார்த்த பின்பு சில புராதனமான கல்லறைகள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டன.
என்ன சிக்கலென்றால், அவை இஸ்ரேல் அரசு எதிர்பார்த்தது போல சாலமன் தேவாலயத்துடன் தொடர்புடையவையல்ல. மாறாக, உபாதா இப்னு அல் ஸாமித், ஷத்தாத் இப்னு அவ்ஸ் என்ற 2 நபித் தோழர்களுடைய கல்லறைகள். அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட கல்லறைகளில் அப்பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
இந்த விஷயம் வெளியே தெரிந்தால் சிக்கலாகிவிடும் அல்லவா? எனவே, அந்தப் பகுதியைச் சுற்றி மேலும் பல மீட்டர் ஆழங்களுக்கு அகழ்ந்து ஆராய்ந்து, யாரும் நெருங்கிப் பார்க்க இயலாமல் செய்தார்கள். ஆனால் எப்படியாவது தமக்கு சாதகமான ஓர் ஆதாரத்தை எடுத்தே தீர்வது என்னும் முடிவில் உறுதியாக இருந்தார்கள். மேலும் மேலும் மசூதியைச் சுற்றித் தோண்டிக் கொண்டே இருந்ததில், 1981-ம் ஆண்டு ஒரு சுரங்க வழி தென்பட்டது.
உடனே அது சாலமன் தேவாலயத்தின் அடிப்படைக் கட்டுமானத்திலேயே இருந்த சுரங்க வழிப் பாதை என்று சொன்னார்கள். பிரச்சினை என்னவென்றால் குறிப்பிட்ட தேவாலயத்தைப் பற்றிய சரித்திரக் குறிப்புகளைத் தருகிற எந்த ஒரு ஆவணத்திலும் அப்படியொரு சுரங்கப் பாதை இருந்தது குறித்த விவரம் கிடையாது.
அதெல்லாம் ஒரு பிரச்சினையா? உண்மையான பிரச்சினை முற்றிலும் வேறு. இப்படி ஆண்டுக்கணக்கில் பள்ளிவாசல் இருந்த வளாகத்தில் ஆழமாக தோண்டிக் கொண்டே சென்றதில், அல் அக்ஸா மசூதியின் கட்டுமானமே ஆட்டம் காண தொடங்கியது. ஒரு சிறிய இயற்கை சீற்றம் உண்டாகுமானால் கூட கட்டிடம் இடிந்துவிடும் என்ற நிலைக்குச் சென்றது.
இதனை யூதர்கள் வேறு விதமாகச் சொன்னார்கள். ‘‘காலம் காலமாகக் கண்ணீரைக் கொண்டு நாங்கள் நிகழ்த்தும் பிரார்த்தனைக்கு என்றேனும் கடவுள் செவி சாய்ப்பார். இந்த மசூதியை அவர் இடிந்து விழச் செய்வார். எங்கள் தேவாலயத்தைப் பிறகு நாங்கள் அங்கே திரும்பக் கட்டுவோம்’’
(தொடரும்..)
முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 4 | இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு முக்கிய புள்ளியான ஜெருசலேம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago