பேருந்துப் போக்குவரத்து அரசுடைமையானது எப்படித் தெரியுமா?

By செல்வ புவியரசன்

போ

க்குவரத்துத் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி, ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு அரசை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பொங்கல் நாளும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நகரங்களிலிருந்து சொந்த ஊருக்குப் போய் பொங்கல் கொண்டாட எண்ணியிருந்தவர்கள் அரசுத் தரப்பிலிருந்து நல்ல செய்தி வராதா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நட்டத்தில் நடக்கும் பேருந்துப் போக்குவரத்தைத் தனியாரிடமே விட்டுவிட்டால்தான் என்னவென்று சிலர் எரிச்சலடையவும் செய்கிறார்கள்.

இந்திய அளவில், முதன்முதலாகப் பேருந்துப் போக்குவரத்தை அரசே ஏற்று நடத்தியது தமிழகம்தான். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நகர்மயமாதலில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது என்பதற்கு இங்கு நடைமுறையில் இருக்கும் பொதுப் போக்குவரத்து முறையும் ஒரு முக்கியமான காரணம். அதனாலேயே, வேலைவாய்ப்புகளுக்காக மாநிலத்தின் எந்த நகரத்துக்கும் எளிதில் சென்று திரும்பலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பொங்கல் கொண்டாடும் நேரத்தில் இப்படியொரு சோதனையா என்று கவலைப்படுபவர்கள் கடந்த கால அனுபவங்களை மறந்துவிடுகிறார்கள் என்பது துரதிர்ஷ்டம்.

மாறிப்போன காங்கிரஸ்

தமிழ்நாட்டில் பேருந்துப் போக்குவரத்து தொடங்கிய காலத்தில் டி.வி.எஸ், ஏ.பி.டி, ஜெய விலாஸ் என்று மிகச்சில முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. திமுக 1957-ல் சட்ட மன்றத்தில் நுழைந்தபோதே பேருந்துகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், அப்போதைய பேருந்து முதலாளிகளில் பெரும்பாலானோர் காங்கிரஸ்காரர்களாக இருந்தார்கள். எனவே, பேருந்துகளை அரசுடைமையாக்குவது என்ற கோரிக்கையையே காங்கிரஸை ஒழிக்க முனையும் திட்டம் என்கிற அளவுக்கு அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்ரமணியம் சட்ட மன்றத்தில் பகிரங்கமாகப் பேசினார்.

பேருந்துகளை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுதந்திரத்துக்கு முன்பே வலியுறுத்தியவர்கள் காங்கிரஸ்காரர்கள். 1944-ல் அமைக்கப்பட்ட போருக்குப் பிந்தைய மீள் கட்டுமானக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆர்.கே.சண்முகம், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இந்தியா முழுமையும் உள்ள அனைத்துப் பேருந்துகளும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு, திட்டக் குழுவும் பேருந்துகளைத் தேசியமயமாக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியது. ஆனால், காங்கிரஸ்காரர்களே ஆட்சிக்கு வந்து, பேருந்து முதலாளிகளில் பலர் காங்கிரஸ்காரர்களாகவும் இருந்த நிலையில் மாற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, பேருந்துகளை அரசுடைமையாக்கியது. முதல்வர் அண்ணாவின் ஆதரவுடன் மிகத் துணிச்சலாக நடவடிக்கைகளை மேற்கொண்டார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கருணாநிதி. அரசுப் பேருந்துகளால் அரசாங்கத்துக்கு நல்ல வருமானமும் கிடைத்திருக்கிறது.

கருணாநிதி முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, 1971 ஜூன் 18-ல் பேருந்துகள் உச்ச வரம்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. மோட்டார் வண்டி உடைமையாளர் பயணிப் பேருந்துகள் கையகப்படுத்தல் சட்டம், ஒப்பந்தப் பேருந்துகள் கையகப்படுத்தல் சட்டம் என்று அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட முன்வடிவுகள், ஒரு உரிமையாளர் 15 பேருந்துகளுக்கு மேல் வைத்துக்கொள்ள முடியாது என்ற சூழலை உருவாக்கியது. அதுவரையிலும் பேருந்து வழித்தடங்களுக்கான உரிமம் வழங்கப்படுவதில் முதலாளிகளின் நலனுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. அதன் பிறகுதான், பொதுமக்களின் நலன் கவனத்தில் கொள்ளப்பட்டது என்று இந்தப் பிரச்சினையில் மிகுந்த அக்கறை காட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினரான கே.டி.கே.தங்கமணியே கூறியிருக்கிறார். கருணாநிதிக்கு அடுத்தபடியாக, இந்த விஷயத்தில் மிகுந்த அக்கறை காட்டிய ஒருவராக தங்கமணியைப் பார்க்க முடிகிறது.

பயணியின் குரல்

தங்கமணியின் உரைகளில் பெரும்பகுதி ஒரு பயணியின் குரலாகவே எதிரொலித்திருக்கிறது. அனைத்துப் பேருந்துகளையுமே தேசியமயமாக்க வேண்டும், லாரிகளையும்கூட அரசே ஏற்று நடத்தவேண்டும் என்றெல்லாம்கூட அவர் சட்ட மன்றத்தில் பேசியிருக்கிறார். பொதுப் போக்குவரத்துத் துறையின் முக்கியத்துவம், அதன் சீர்கேடுகளைக் களையவேண்டியதன் அவசியம் பற்றி அவர் பேசியது காலத்தைத் தாண்டியும் இன்றும் பாடம் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

“ஒரு ஸ்க்ரூ அல்லது நட் போட்டு வைத்தால், அதிலே ரிவெட் பண்ணுவதற்கு குஷன் கிடையாது. பஸ் இரண்டு குதி குதித்தால் ஆணி வெளியே வந்துவிடுகிறது. குரோம்பேட்டையில் கட்டப்படுகிற வண்டிகள் எல்லாம் அப்படித்தான் இருக்கின்றன. வெறும் ஓட்டை ஓட்டையாக இருக்கிறது” என்று பேசிய தங்கமணி, அப்போதைய போக்குவரத்து அமைச்சரான பண்ருட்டி ச.இராமச்சந்திரன், பேருந்துக் கட்டுமானத்தில் எடுத்துக்கொண்ட கவனத்தைப் பாராட்டவும் தவறவில்லை. பொறியாளரான இராமச்சந்திரன் பேருந்துக் கட்டுமானம் குறித்து சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் வசூலாகும் தொகைக்கேற்ப ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் முறையை அறிமுகப்படுத்தினார் என்பதையும் இன்றைய அமைச்சர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு உளவியல் பயிற்சியளிக்க வேண்டும், டி.வி.எஸ். போன்ற தனியார் நிறுவனங்கள் பேருந்துப் பராமரிப்பில் காட்டிய அக்கறையை அரசுப் பேருந்துகளும் பின்பற்ற வேண்டும், தகுதியானவர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுக்களையும் நிர்வாகக் குழுக்களையும் அமைக்க வேண்டும் என்று தங்கமணி கூறிய ஆலோசனைகள் சட்ட மன்ற உரைத் தொகுப்புகளிலேயே உறங்கிக்கொண்டிருக்கின்றன. போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று பேசுகின்ற அரசும் விமர்சகர்களும் தங்கமணியின் உரைகளைக் கவனிக்க வேண்டும்.

போக்குவரத்துக் கழகம், மக்களின் கழகம்

தனியார் பேருந்துகளை அரசு ஏற்று நடத்தியபோது மக்கள் அதற்கு ஆதரவாகவே இருந்தார்கள். மதுரை திருமங்கலத்தில் நகரப் பேருந்துகளை இயக்கக் கூடாது என்று என்று ஒரு பேருந்து முதலாளி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடைசெய்தார். அப்போது மக்கள் அரசுப் பேருந்துக்குப் பதிலாகத் தனியார் பேருந்து வந்தால் தடுத்து நிறுத்துவோம் என்று அறிவித்தார்கள்.

நீதிமன்றங்களும்கூட அப்போது அரசுக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கின்றன. 75 மைல்களுக்கு மேல் ஓடக்கூடிய பேருந்துகளை அரசு ஏற்று நடத்தியபோது, அதை எதிர்த்து முதலாளிகள் வழக்கு தொடர்ந்தார்கள். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டுமே அரசுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பளித்திருக்கின்றன. ஆனால், இன்றைக்கு மக்களின் கழகமாக இருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு எதிராக மக்களையே திசைதிருப்பும் சூழல் உருவாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

தங்கமணி சுட்டிக்காட்டிப் பேசிய ஒரு உதாரணம் இன்றைய பிரச்சினைக்குத் தீர்வு காண உதவக்கூடியது. “ஏன் இங்கிலாந்திலே போக்குவரத்தை அரசாங்கம் ஏற்று நடத்தியது? அங்கே முதலாளிகள் எல்லாம் பஸ் போக்குவரத்து நடத்தினார்கள். அரசையும் மக்களையும் பழிவாங்கும் முறையிலே போக்குவரத்தை நிர்வகித்து வந்ததால், அரசாங்கமே அதை ஏற்று நடத்தியது”. பொதுப் போக்குவரத்துத் துறையில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றன. அரசு அதைப் பற்றி அக்கறை எடுத்துக்கொள்ளவே இல்லை. மறுப்பதற்கில்லை. அதற்காக அத்துறையைத் தனியாருக்கு ஒப்படைத்துவிடலாமா? லண்டனில் நடந்ததுபோல இங்கேயும் நடக்காது என்பது என்ன நிச்சயம்?

- புவி,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்