ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி, உலக மனநல நாளாகக் கொண்டாடப்படுகிறது. ‘மனநலம் என்பது உலகளாவிய மனித உரிமை’ என்பதை இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக சர்வதேச மனநல சம்மேளனம் அறிவித்திருக்கிறது. ஆம்; மனநலம் என்பது அனைத்து மக்களுக்குமான அடிப்படை மனித உரிமை. ஒவ்வொருவருக்கும் அவர் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தச் சமூக-பொருளாதாரப் பின்னணியில் இருந்தாலும் மனநலத்தின் உயரிய நிலையை அடைய அவருக்கு முழு உரிமை உண்டு.
மனநலம் என்பது, தனிப்பட்ட ஒரு நபரின் தினசரி வாழ்க்கையை மட்டுமே சார்ந்ததல்ல. பல்வேறு சமூக-பொருளாதாரக் காரணிகள் ஒருவரின் மனநிலையை நிர்ணயிக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், தனிநபர் ஒருவர் மனநலமுடன் இருப்பது அவரின் பொறுப்பு மட்டுமல்ல, அந்தச் சமூகத்தின் பொறுப்பு, அரசாங்கத்தின் பொறுப்பு.
இன்றைய சூழலில் மனநலம் என்பது அவ்வளவு அத்தியாவசியமானதாக இருக்கிறது. பல்வேறு மனநலப் பிரச்சினைகளையும், அதற்குக் காரணமான, அதன் விளைவால் ஏற்படக்கூடக்கூடிய சமூகச் சீர்கேடுகளையும் சமீப காலத்தில் மிக அதிகமாகப் பார்த்துவருகிறோம். இந்நிலையில், மனநலம் தொடர்பாக சில அடிப்படைப் புரிதல்களை நாம் கொண்டிருப்பது அவசியமானது.
மனநலம் என்றால் என்ன? - ஒருவரின் எண்ணங்கள், உணர்வுகள், அறிவு ஆகியவை அவருக்கும் அவரைச் சார்ந்த சமூகத்துக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் நிலையையே மனநலம் என வரையறுக்கலாம். தன்னைப் பற்றியே சிந்தித்து சமூக நலனைப் புறக்கணிப்பதையும், அல்லது சமூகத்தைப் பற்றியே சிந்தித்துத் தனது நலனைப் புறக்கணிப்பதையும் மனநலச் சீர்கேடுகள் எனச் சொல்லலாம். ஒருவருடைய எண்ணம், உணர்வு, அறிவால் அவருக்கோ சமூகத்துக்கோ ஆபத்தான வகையில் அவரின் நடவடிக்கைகள் மாறினால் அதை மனநோய் எனச் சொல்லலாம்.
» மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம்: 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு
மனநலமின்மைகள் எல்லாமே மனநோயா? - பொதுவாக, உடல்நலப் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு மனநலப் பிரச்சினைகளைப் பற்றி யாருடனும் நாம் பகிர்ந்துகொள்வதில்லை. அதற்குக் காரணம், மனம் சரியில்லை என்றால் அதை மனநோய் என்று சொல்லிவிடுவார்களோ என்கிற பயம். நலமின்மைகள் வேறு; நோய் வேறு. நவீன வாழ்க்கையின் புதிய அழுத்தங்களினாலும் சமநிலையற்ற உணவுப் பழக்கங்களினாலும் பல்வேறு மனநலச் சீர்கேடுகளுக்கு நாம் ஆளாகியிருக்கிறோம், இவையெல்லாம் மனநோய் கள் அல்ல.
இந்தச் சீர்கேடுகளையெல்லாம் சரியான நேரத்தில் கவனப்படுத்தி, அதற்கான உதவியைக் கேட்டுப்பெற்றுச் சரிசெய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நமது அன்றாட வாழ்க்கையை நிம்மதியாகவும், நமக்கும் பிறருக்கும் பயனுள்ள வகையிலும் வாழ முடியும்.
மனநலம் ஏன் அவசியம்? - ஒருவர் உடல்நலத்துடன் இருந்தால் அது அவருக்கு மட்டுமே நல்லது. ஆனால், மனநலமுடன் இருந்தால் ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமே நல்லது. சமீப காலத்தில் மனநலப் பிரச்சினைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன - குறிப்பாகக் குழந்தைகள், பதின்பருவத்தினர், முதியவர்கள் பல்வேறு மனநலப் பிரச்சினைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். மனநலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், மனநலப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தாமல் உடனுக்குடன் சரிசெய்வதற்கான முயற்சியை எடுப்பதும்தான் அதிகரித்துவரும் இந்தப் பிரச்சினை களைத் தடுப்பதற்கான வழி.
உடல் நலமாக இருப்பதற்கு, மனம் நலமாக இருப்பது அவசியம். மனநலச் சீர்கேடுகளுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதால் உடல் பருமன், ரத்த அழுத்தம், இதய நோய்கள், குடல் நோய்கள், மறதி நோய் போன்ற நோய்கள் வருவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதேபோல மனச் சோர்வு, மனப்பதற்றம் போன்ற பிரச்சினைகள் இருக்கும்போது, நீரிழிவு நோய், சிறுநீரக நோய்கள் போன்றவற்றை வழக்கமான சிகிச்சைகளினால் கட்டுப்படுத்த முடியாமல் போவதாகவும் ஆராய்ச்சி கள் சொல்கின்றன.
உடல் நலமுடன் இருப்பது வாழ்நாளை அதிகப்படுத்தும், மனம் நலமுடன் இருப்பதுதான் வாழும் நாள்களை அர்த்தமுள்ளதாக மாற்றும். எனவே, மனநலமுடன் இருப்பது அனைத்து வகையிலும் அவசியமானது.
மனநோய்கள் ஏன் ஏற்படுகின்றன? - பெரும்பாலும் தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சில அதிர்ச்சியான சம்பவங்களால்தான் மனநோய்கள் ஏற்படும் என நாம் நினைக்கிறோம்; அது தவறானது. மனநோய்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
மரபணுக் கோளாறுகள், நோய்த் தொற்று போன்ற உடலியல்ரீதியான காரணங்கள், தனிப்பட்ட ஒருவரின் ஆளுமைப் பண்புகள், அவரின் உணர்வுகள், மதிப்பீடுகள், அனுபவங்கள் போன்ற உளவியல்ரீதியான காரணங்கள், சமூகச் சீர்கேடுகள், பாகுபாடுகள், வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, அரசாங்கத்தின் புதிய சட்டங்கள் போன்ற சமூகக் காரணிகள் எனப் பல்வேறு காரணங்களால் மனநோய்கள் ஏற்படலாம்.
தீவிரமான மனநோய்கள் பெரும்பாலும் உடலியல் காரணங்களால் ஏற்படுகின்றன. அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு மனநலப் பிரச்சினைகள் பெரும்பாலும் உளவியல்-சமூகக் காரணங்களினாலேயே வருகின்றன.
குணப்படுத்த முடியுமா? - முதலில், ‘மனநோய் என்றாலே அது ஒன்றுதான், அது குணப்படுத்த முடியாதது’ என்ற பொதுமைப்படுத்தப்பட்ட கருத்திலிருந்து நாம் வெளியே வரவேண்டும். மனநோய்களைப் பொறுத்தவரை பல்வேறு வகைகள் உண்டு. சில வகை மனநோய்கள் சரியான நேரத்தில் சிகிச்சையளித்தால் எளிதில் குணப்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன.
சில வகை மனநோய்கள் குணப்படுத்தக்கூடியவை; ஆனால், சற்று நீண்டகாலச் சிகிச்சை தேவைப்படுபவையாக இருக்கின்றன. மிக அரிதாக ஒரு சில தீவிர மனநோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படும், அந்தச் சிகிச்சையில் இருக்கும்போது முழுமையாகக் குணப்படுத்த முடியும். சிகிச்சையை நிறுத்தும்போது மீண்டும் நோய் அறிகுறிகள் வெளிப்படும்.
சிகிச்சை முறைகள் என்னென்ன? - நவீன மருத்துவ அறிவியல் வளர்ச்சியின் விளைவாக மனநல சிகிச்சை முறைகளில் பல புதிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தீவிர மனநோய்களைக்கூட முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய சாத்தியங்கள் உருவாகியிருக்கின்றன. மனநலச் சிகிச்சை முறைகளைப் பொறுத்தவரை இரண்டு வகையான சிகிச்சைகள் இருக்கின்றன. ஒன்று, மாத்திரை, மருந்துகள், உடலியல் சார்ந்த சிகிச்சை முறைகள்; மற்றொன்று, உளவியல் சிகிச்சை முறைகள்.
மனநலப் பிரச்சினைகளின் தன்மை, தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும். ஒருவருக்கு என்ன வகையிலான சிகிச்சை முறைகள் தேவைப்படும் என்பதை மனநல மருத்துவரே முடிவுசெய்வார். அதனால், மனநலப் பிரச்சினைகள் என்று வந்தால் உடனடியாக மனநல மருத்துவரைச் சென்று பார்ப்பதே சரியானது.
சரி, மனநோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளுக்கு அடிமையாகிவிடுவோம் என்று சொல்லப்படுவது உண்மையா? நிச்சயம் இல்லை. எந்த ஒரு சிகிச்சையும் அதன் தேவை கருதியே கொடுக்கப்படுகிறது, தேவையில்லாமல் யாருக்கும் எந்தச் சிகிச்சையும் கொடுக்கப்படுவதில்லை. சில வகையான மனநோய்கள் சில வாரங்களிலேயே முழுமையாகக் குணமாகக்கூடியவை.
அதற்குப் பிறகு அந்நோய்களுக்குச் சிகிச்சை தேவையில்லை. ஆனால், சில தீவிர மனநோய்களுக்கு நீண்ட நாள்கள் சிகிச்சை தேவைப்படலாம், அதற்காகவே நீண்ட நாள்களுக்கு மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றனவே தவிர, எந்த வகையிலும் அந்த மாத்திரைகள் அவற்றை எடுத்துக்கொள்வோரை அடிமையாக்காது. மனநோய்களின் தன்மையைப் பொறுத்தே சிகிச்சையின் கால அளவு நிர்ணயிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அக். 10: உலக மனநல நாள்
- தொடர்புக்கு: sivabalanela@gmail.com
To Read in English: Mental health, a fundamental human right
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago