1,76,000,00,00,000 ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்!

By சமஸ்

1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள். ஞாபகம் இருக்கிறது. அநேகமாக, ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்’ என்று செய்தியைத் தந்த பெரும்பான்மை தேசிய ஊடகங்கள் ‘நாட்டுக்கு இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி’ என்று தொகையை எழுத்தில் கொடுப்பதைக் காட்டிலும், எண்ணாகக் கொடுப்பதிலேயே உவகை அடைந்தன. ஏனென்றால், இதற்கு முன் இவ்வளவு பெரிய எண்ணை ஊடகங்கள் கையாண்டதில்லை.

அறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள்போல எண்களின் உலகத்துக்குள் சஞ்சரித்திருப்பவர்கள் அல்ல ஊடகவியலாளர்கள். தவிர, இந்தியச் சூழலில் லஞ்சம், ஊழலை வெளிக்கொணர்வதும் விவாதிப்பதும் ஊடகவியலாளர்களுக்கு அவ்வளவு இலகுவான சமாச்சாரமும் அல்ல. அது உயிர் விளையாட்டு. ஆட்சியாளர்களிடம் எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது. வாசல் வழியாகவும் வரலாம்; கொல்லைப்புறம் வழியாகவும் வரலாம் ஆபத்து. ஊடகவியலாளர் எந்த மிரட்டலுக்கும் அசையாதவர் என்றால், அமித் ஷா பாணியில் செய்தியை வெளியிடுவதற்கே நீதிமன்றத்தின் துணையுடன் சட்டபூர்வத் தடை வாங்கிவிடலாம். இவை எல்லாவற்றிலிருந்தும் விதிவிலக்கான, அரிதான விவகாரம் இது.

அலைக்கற்றை என்ற வார்த்தையையே நாட்டின் பெரும்பான்மை மக்கள் அப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்பட்டனர். ‘இது சரி - தவறு’ என்று விவாதிக்கப் பலருக்கும் புரிபடாத விஷயம். தொகையைக் குறிப்பிட்டிருப்பதோ தலைமைக் கணக்காயர் அறிக்கை. தலைமைக் கணக்காயர் அலுவலகமானது, ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டது. ஆக, இந்த எண்ணை உச்சரிக்க, அதாவது இந்த எண்ணை ஊழல் தொகை என்று சொல்லவும் நிரூபிக்கவும் ஊடகங்கள் மெனக்கெட வேண்டியது இல்லை. சட்டரீதியிலான நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இருக்கிறது. ஒரு ‘கட்டுக்குள் வளர்ந்த பிள்ளை’யான இந்திய ஊடகங்களுக்கு அலைக்கற்றை விவகாரத்தில் இருந்த ‘பாதுகாப்பான விளையாட்டு’ அளப்பரிய கிளுகிளுப்பையும் பரவசத்தையும் கொடுத்தது.

இந்திய ஜனநாயகத்தை மேம்படுத்தவும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் (2005) தகவல் உரிமைச் சட்டத்தை மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்திருந்தது. விளைவாக, சின்னதும் பெரிதுமாக நிறைய முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்திய வாய்கள் அப்போதுதான் ஊழலைப் பொதுவெளியில் தயக்கமின்றிப் பேசவும் ஆரம்பித்திருந்தன. இந்தப் பின்னணியில்தான் அது நிகழ்ந்தது. எண்களை விசாரணையின்றிப் பயன்படுத்துவது ஒரு நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் எப்படியெல்லாம் மாற்றியமைக்கும் என்பது தொடர்பில் எந்தப் பிரக்ஞையும் இல்லாமலேயே பெரும்பான்மையோர் அதைக் கையாண்டனர் (உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்; பின்னாளில் திருந்தியவன்).

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, தொலைத்தொடர்புத் துறையை ஆ.ராசா கையாண்ட விதம், ராசாவை வழக்கிலிருந்து விடுவிக்கும் இப்போதைய தீர்ப்பு… இவை எல்லாவற்றைக் காட்டிலும் இந்த வழக்கு இந்தியச் சமூகத்திலும் அரசியலிலும் எப்படியான மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது; அது ஏற்படுத்தியிருக்கும் மோசமான ஒரு விளைவுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது என்பதே நாம் பிரதான கவனம் அளிக்க வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தத் தீர்ப்பு வருவதற்குப் பல காலம் முன்னரே ‘1,76,000,00,00,000’ என்ற எண் பல்லிளித்துவிட்டது. நம்முடைய அமைப்பும் மனமும் எவ்வளவு பெரிய ஓட்டைகளை வைத்திருக்கிறது என்பதைக் காட்டிவிட்டது!

ஊதிப் பெருக்கப்பட்ட எண்!

இந்த மாய எண்ணின் சூத்திரதாரியான தலைமைக் கணக்காயர் வினோத் ராய் தன்னுடைய அறிக்கையில், ‘2008 இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு’ என்று குறிப்பிட்ட தொகையிலேயே நான்கு விதமான அனுமானங்கள் இருந்தன. ரூ.67,364 கோடி, ரூ.57,666 கோடி, ரூ. 69,626 கோடி, ரூ.1.76 லட்சம் கோடி என்று நான்கு அனுமானத் தொகைகளை அவர் தெரிவித்திருந்தார். அதேபோல, மத்தியப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை, ‘ரூ.35,000 கோடி இழப்பு’ என்றது. அதற்கு முன்பாக விசாரித்த மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு, ‘ரூ.22,000 கோடி’ என்றது. ஆக, இழப்பு மதிப்பு என்று ஒன்றுக்கு ஒன்று முரணாக ஏகப்பட்ட எண்கள்.

இதில் ‘இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு’ என்ற அனுமானத்துக்கான அடிப்படையாக வினோத் ராய் முன்வைத்தது, 2010-ல் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தின்போது அரசுக்குக் கிடைத்த ரூ. 1 லட்சம் கோடி தொகையுடனான ஒப்பீடு! ஏனென்றால், 2008-ல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது அரசுக்கு ரூ.10,772 கோடி மட்டுமே கிடைத்தது; அது மிகக் குறைவானது என்றார் வினோத் ராய். இந்த அடிப்படையிலேயே ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்துசெய்துவிட்டு, ஏலம் நடத்த 2012-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த ஏலம் போகும் என்று பேசியவர்களை எனக்குத் தெரியும். அரசாங்கம் ரூ.40,000 கோடி இலக்கு நிர்ணயித்தது. ஆனால், ரூ.9407 கோடிக்கு மட்டுமே ஏலம் போனது. ஆக, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்பது ஊதிப்பெருக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பது அப்போதே அப்பட்டமாகிவிட்டது.

பின்னாளில் இதுகுறித்து ஒப்புதல் வாக்குமூலமும் அளித்தார் வினோத் ராய். “நிச்சயமாக, ரூ.1.76 லட்சம் கோடி என்பது மிகைப்படுத்தப்பட்ட மதிப்புதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பரபரப்புக்குள்ளாக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. ஆனால், இந்த விஷயத்தின் மீது கவனத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று தனது சுயசரிதையில் எழுதினார். மேலும், “அவ்வளவு பெரிய தொகை என்பதாலேயே பொதுக் கணக்குக் குழு அதை விவாதிப்பதற்கு எடுத்துக்கொண்டது” என்றும் ஒரு பேட்டியில் சொன்னார். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் போலவே, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டிலும் இப்படி மிகைப்படுத்தப்பட்ட அனுமானங்களைச் சொல்லியிருக்கிறார் வினோத் ராய். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முதலில், ‘ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு’ என்றவர் பிறகு ‘ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு’ என்றார்.

அடிப்படையில், நாட்டின் தலைமைக் கணக்காயர் என்ற பதவியை, கணக்காயம் எனும் அமைப்பையே கேலிக்கூத்தாக்கிவிட்டார் வினோத் ராய். அதன் மீதான நம்பகத்தன்மையை நாசமாக்கிவிட்டார். அவரால் விளைந்த ஒரே நன்மை என்றால், நம்பகத்தன்மை மிக்க ஒரு அதிகாரப் பீடத்தில் அமர்ந்துகொண்டு ஒருவர் சொன்னால், - அவர் என்ன சொன்னாலும் - அதைக் கேட்டுக்கொள்ளும் சூழலில்தான் இந்நாட்டின் அத்தனை அமைப்புகளும் இருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது மட்டும்தான்! இது எத்தகைய விளைவை உண்டாக்கியிருக்கிறது என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

எல்லா நீதிகளையும் வீட்டுக்கு

அனுப்பிய ஊழல் விவாதம்!

உண்மையில், சமகால இந்திய அரசியலின் உரையாடல் போக்கையே வினோத் ராயின் மாய எண் பெரிய அளவில் மாற்றியமைத்துவிட்டது. சமூக நீதி, மதச்சார்பின்மை, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் இப்படிக் கடந்த நூறாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் அரங்கின் பிரதான தளத்துக்கு மேலேறிவந்த எல்லா ஜனநாயக விழுமியங்களையும் வினோத் ராயின் மாய எண் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இந்திய அரசியல் விவாத களத்தின் ஆக முக்கியமான கதையாடலாக ஊழலை அது உருவாக்கியது. அரசியலை அளவிடுவதற்கான உச்ச மதிப்பீட்டுக் கருவியாக ஊழலை அது கட்டமைத்தது.

விளைவாக, இந்நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் பல சக்திகள் பின்தள்ளப்பட்டன. புதிய அரசியல் அலைக்கற்றை ஒன்று உருவானது. ‘ஊழல் ஒழிப்பு’ என்ற பெயரில் உருவெடுத்த அந்த அலைக்கற்றையானது தூய்மைவாதத்தோடும் தேசியத்தோடும் தன்னைப் பிணைத்துக்கொண்டது. தேசியத்தின் வண்ணத்தில் ஊழல் எதிர்ப்பைப் பேசும், ஊழல் எதிர்ப்பின் பெயரால் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் புதிய தேசியவாதிகளை மையம் நோக்கி அது நகர்த்தியது. ஒரு அண்ணா ஹசாரே அதன் துணை விளைவு, ஒரு அர்விந்த் கெஜ்ரிவால் அதன் துணை விளைவு, ஒரு பாபா ராம்தேவ் அதன் துணை விளைவு, ஒரு மோடி அதன் துணை விளைவு!

இந்தப் புதிய அரசியல் அலைக்கற்றையானது ஊழலை முன்னிறுத்தி ஏனைய எல்லா நியாயங்களையும் அழித்ததோடு, கடைசியில் அது எதை நியாயமாகப் பேசியதோ அந்த ஊழல் எதிர்ப்பிலும் ஓட்டை போட்டதுதான் மாய எண் ஏற்படுத்திய உச்ச சேதாரம்!

சில மாதங்களுக்கு முன்பு தமிழின் முன்னணிப் புலனாய்வு வார இதழ்களில் ஒன்றான ‘நக்கீரன்’ பத்திரிகையின் ஆசிரியர் கோபாலுடன் ஊடகங்களின் சமகாலப் போக்கு தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு விஷயம் இந்தக் கட்டுரையோடு பொருந்தக் கூடியது என்று நினைக்கிறேன். “முன்பெல்லாம் புலனாய்வு இதழ்களில் உள்ளூர் அளவில் அடிக்கடி லஞ்சம், ஊழல்களை அம்பலப்படுத்தும் செய்திகளைக் காண முடியும். இப்போது அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதே என்ன காரணம்?” என்று கேட்டேன். நாடு முழுக்கவுமே இப்படி ஒரு போக்கு இருக்கிறது என்றவர் அதை விளக்கினார். “லஞ்ச ஊழல் விஷயங்களை ரொம்ப சிரமப்பட்டுதான் வெளிக்கொண்டு வர்றோம். ஆனா, அதுக்கு உரிய கவனம் இன்னைக்கு மக்கள் மத்தியில இல்லை. முன்னாடிலாம் ஒரு பத்தாயிரம் ரூபா ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டார்னு செய்தி போட்டாக்கூட அவ்வளவு பரபரப்பா பேசுவாங்க. நடவடிக்கை இருக்கும். படிக்குறவங்க நம்ம வேலை பண்ணுற இடத்துல இப்படித் தப்பு நடந்தாலும் அதை வெளியே கொண்டுவரணும்னு தோணுதுங்கன்னு சொல்லிப் பேசுவாங்க. இப்போ அதெல்லாமே மாறிட்டு. ஒரு அதிகாரி கோடி ரூபாயை லஞ்சமா வாங்குறார்னு படத்தோடு போட்டாலும் அதுக்கு எந்தக் கவனமும் இல்லை. இதெல்லாம் ஒரு காசா, குத்தமான்னு ஒரு மனோபாவம் உருவாகிடுச்சு. ஒரு அமைப்புக்குள்ள இருக்குற ஆட்கள் தப்பைப் பொறுத்துக்க முடியாம தகவல் கொடுக்குறப்போதான் பத்திரிகைகள் உள்ளே நுழையுறோம். இப்போ அதுவே குறைஞ்சுடுச்சு!”

நேற்றைக்கு ஆயிரம் லஞ்சங்களுக்கே பதற்றமான மக்களுக்கு ஏன் கோடி ஊழல்கள் இன்று சாதாரணம் ஆகிவிட்டன? நாடு செழித்து, சாமானியர்கள் கைகளிலும் கோடிகள் மலிந்துவிட்டதா?

வெவ்வேறு தருணங்களில் நானே பலர் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன், “ஏன் சார், ஒண்ணேமுக்கா லட்சம் கோடிக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு விஷயமா?”

ஆம், அலைக்கற்றை விவகாரம் ஊழல் விஷயத்தில் பொதுபுத்தியைக் கூர்மையாக்கவில்லை; மழுங்கடித்துவிட்டது. அலைக்கற்றை விவகாரம் பற்றியெரிந்த நாட்களில் என்னுடைய சகா ஒருவர் சொன்னார், “பொதுவாக, நம் நாட்டில் ஒரு திட்டத்தில் லஞ்சம், ஊழலுக்கான சாத்தியம் என்பது 10% முதல் 30% வரை. அப்படியென்றால், இங்கே ஊழல் நடந்ததாகக் கொண்டாலும், அதிகபட்சம் எவ்வளவு பணம் கை மாறியிருக்கும்? அதிகபட்சம் சில ஆயிரம் கோடிகள்! ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி என்று திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் வாயிலாக, நாளைக்கு ரூ.10,000 கோடியை ஒருவர் லஞ்சமாகப் பெற்றார் என்றால்கூட அதை ஒரு விஷயமாக மக்கள் கருத முடியாத சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்!”

அப்படித்தான் ஆகிவிட்டது. இந்திய அரசியல் வர்க்கமானது வினோத் ராய் அனுமானமாக ‘இழப்பு’ என்று குறிப்பிட்ட ரூ.1.76 லட்சம் கோடியை ‘ஊழல்’ என்று மொழிபெயர்த்து, மக்கள் மனதில் வெற்றிகரமாக அதைப் பதித்தும்விட்டது. இன்று ஒரு லட்சம் கோடியை ஒரு அரசியல்வாதியோ அதிகாரியோ பணமாக வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டாலும் மக்களுக்கு அது பெரிய விஷயம் அல்ல. சாத்தியமே இல்லாத ஒரு மாய எண்ணின் பெயரால் ஊழலுக்கான சொரணையையே மக்களிடம் மழுங்கடித்துவிட்டோம். ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. ஊழல் நடந்ததா, இல்லையா; குற்றம் நிரூபிக்கப்பட்டதா, இல்லையா என்பதல்ல; ஒரு மாய எண்ணிடம் ஒரு தேசமே தோற்றுவிட்டது என்பதுதான் பிரதான பிரச்சினை!

- சமஸ்,

தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்