பிரேசில் கால்பந்து வரலாற்றில் இதுவரை சந்தித்திராத தோல்வி! என்னதான் நடந்தது?
அந்த ஆட்டத்தைப் பற்றி எப்படித் துவங்குவது? முதல் கோல் விழுந்த 11-வது நிமிடத்தைச் சொல்வதா? அல்லது, 23-வது நிமிடத்திலிருந்து 29-வது நிமிடம் வரை பிரேசிலுக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் 4 கோல்கள் அடுத்தடுத்து ஜெர்மனி அடித்ததைச் சொல்வதா? அந்த அரை மணியில் இறுதி வாய்ப்பைக் கோட்டைவிட்ட மனத்தாங்கலில் பிரேசில் ரசிகர்களில் பாதிப் பேர் கண்ணீரும் கவலையுமாக மைதானத்தை விட்டு வெளியேறியதைச் சொல்வதா? அல்லது அதிர்ச்சியை மறந்து, மறைத்து தன் குழந்தையை விட்டு கேமரா முன் டாடா காண்பிக்க வைத்த பிரேசில் பெண்மணியைக் குறிப்பிடுவதா? உண்மையில், பிரேசிலுக்கு என்னதான் நடந்தது? நமக்குமே இன்னும் நம்ப முடியவில்லை.
ஆம்! பிரேசில் கால்பந்து வரலாற்றில் இதுபோன்ற ஒரு தோல்வியை அந்த அணி சந்தித்ததில்லை.
1920-ம் ஆண்டு உருகுவே அணிக்கு எதிராக 6-0 என்று தோல்வியைத் தழுவிய பிறகு, பிரேசில் இப்போது சந்தித்த 7-1 தோல்விதான் படு மோசமான தோல்வி.
சிதைவு, சீரழிவு
நெய்மார் இல்லாததால் பிரேசில் உடைந்துபோனது உண்மைதான் என்றாலும், அவர் இருந்திருந்தாலும் ஜெர்மனியின் இந்த கோல் மழையைத் தடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால், கேப்டன் தியாகோ சில்வா இல்லாதது தடுப்பாட்டத்தில் பெரிய ஓட்டையை விட்டுச்சென்றது என்னவோ உண்மை. நெய்மார் இல்லாமல் இந்தத் தோல்வி ஏற்பட்டதால் பிரேசில் ஆறுதல் அடைய ஒரு வாய்ப்பு உள்ளது. அவர் இருந்து இந்தப் படுதோல்வியைச் சந்தித்திருந்தால் அந்த அணி இன்னமும் உடைந்துபோயிருக்கும்.
உலக சாம்பியன் பிரேசில் என்பது பெரிய அளவில் பரப்பப்பட்டு, கால்பந்து ரசிகர்கள் மனதில் அது நிலைத்துவிட்டிருக்கும் சூழலில்தான் நடந்திருக்கிறது, ஒரு தேசமே நேசிக்கும் அணியின் சிதைவு.
பிரேசில் அணி மீது எப்போதும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அந்த அணி அந்த தேசத்தைப் போலவே மிகை உணர்ச்சி நிலைகளுக்கு வெகு சுலபமாக ஆட்படக்
கூடியது என்பதே. பந்து காலுக்கு வந்தவுடன் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. இதனால், சாதுரியமான காய்நகர்த்தல்கள், உத்தி வகுத்தல்கள், புத்திசாலித் தனமான நகர்வுகள் பிரேசில் அணியினரிடம் இல்லை. இது ஐரோப்பியக் கால்பந்து அணியினரிடத்தில் அதிகம். சமயம் பார்த்து சிங்கத்தின் குகைக்குள் புகுந்து, அதனை அடக்கி ஆட்கொள்வது ஐரோப்பியக் கால்பந்துக் கலாச்சாரம்.
ஒரு தேசத்தின் அழுகை
1975-ம் ஆண்டு முதல் பிரேசில் அணி சொந்த மண்ணில் சர்வதேசப் போட்டி ஒன்றிலும் தோல்வி யடைந்ததில்லை. ஆகவே, அனைத்துமே பிரேசிலுக்குச் சாதகமான அறிகுறிகளாகவே இருந்தன. ஆனால், 11-வது நிமிடத்திலிருந்து, 29-வது நிமிடம் வரை 5 கோல்களை ஜெர்மனி திணிக்க… ஒன்றும் புரியாமல், எப்படி ஆடுவது என்பதே பிரேசிலுக்கு மறந்துபோனது.
முதல் பாதியில் பிரேசிலின் ஆட்டம் அதன் சர்வ தேசத் தரத்துக்கு இணையாக ஒருபோதும் இல்லை என்பதே உண்மை. மார்செலோ அவரது இடத்தில் இல்லை. மைகான், தாந்தே ஆகியோர், பந்தைச் சுலபமாகத் தடுக்க வேண்டிய சில தருணங்களைக் கோட்டைவிட்டனர். மேலும், பந்தைக் கடத்தும்போது தங்கள் பகுதியிலேயே ஜெர்மனி வீரர்களுக்குக் கடத்தியதும் நடந்தது. இடைவேளைக்குப் பிறகு, தாந்தேவையும் மைகானையும் உட்கார வைப்பதற்குப் பதிலாக பெர்டினாண்டோ மற்றும் ஹல்க்கை உள்ளே அழைத்துக்கொண்டு, பதிலாக ராமிரேஸ், மற்றும் பாலினியோவைக் களமிறக் கினார்கள். இடைவேளைக்குப் பிறகான பிரேசில் ஆட்டம் இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் அறிவுபூர்வமாக இருந்தது. முதலில் ஆஸ்காரின் முயற்சியை ஜெர்மனி கோல் கீப்பர் நூயர் முறியடித்தார். பிறகு, உடனேயே பாலினியோ அடுத்தடுத்து இரண்டு ஷாட்களை கோல் நோக்கி அடிக்க அவற்றையும் அற்புதமாகத் தடுத்தார் நூயர். குறைந்த இடைவெளியில் மூன்று வாய்ப்புகள் பிரேசிலுக்குக் கிடைத்தன. ஆனால், ஒன்றும் பயனில்லை.
பிறகு, ஜெர்மனியின் முழு ஆதிக்கமே நிலவியது. ஆனால், ஒவ்வொரு முறை பிரேசில் ஜெர்மனி கோல் அருகே சென்ற பிறகும் ஜெர்மனி எதிர்த் தாக்குதலில் மேலும் கோல்களை அடிக்கும் என்ற நிலையே இருந்தது. அப்படித்தான் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் வலதுபுறமாக ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது, பந்து லாமுக்கு கிராஸ் செய்யப்பட்டது, அங்கு, அபாயகரமான மற்றொரு ஜெர்மனி வீரர் ஷுயர்லி பந்தை எடுத்துச் சென்று பக்கவாட்டுப் பாதத்தினால் கோலாக மாற்றினார். சீசர் வேதனையுடன் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
‘ஆயிரம் பக்கவாட்டுப் பாத ஷாட்’களில் பிரேசில் கொல்லப்பட்டது. பிறகு 78-வது நிமிடத்தில் இடதுபுறம் மீன்டும் மார்செலோவைத் திக்குமுக்காடச் செய்து பந்தை எடுத்து வந்து மீண்டும் ஷுயர்லேவுக்குப் பந்தை அடிக்க அவர் இடது காலால் கோலுக்குத் தூக்கி அடிக்க 7-வது கோல் விழுந்தது. பிரேசில் ஒரு கோல்கூட அடிக்கவில்லை.
உதைத்து நொறுக்கப்பட்ட கனவு
மேலும்மேலும் ஜெர்மனி அணியே கோல் அடிக்கும் போல்தான் இருந்தது. கிரிக்கெட் ஆட்டமாக இருந்திருந் தால், போதும் டிக்ளேர் என்று கூறியிருப்பார்கள். கால்பந்தில் அதற்கான வாய்ப்பில்லை. இருந்திருந்தால் ஜெர்மனி டிக்ளேர் செய்திருக்கும். இவ்வளவு சுலபமாக உலகக் கோப்பைக் கால்பந்து அரையிறுதியில் எதிரணி யினரின் கோல் எல்லைக்கு அடிக்கடி வர முடியும் என்பது பிரேசில் பாதுகாப்பு அரணின் விசித்திரமான ஆட்டத்தினாலேயே என்றால் அது மிகையில்லை. 90-வது நிமிடத்தில் போதும் என்று மனதுக்குள் ஜெர்மனி டிக்ளேர் செய்த தருணத்தில்தான் ஆஸ்கார் பிரேசிலுக்காக ஒரு கோலை அடித்தார்.
ஆனால், பிரேசில் கால்பந்து வரலாற்றிலேயே தன் சொந்த மண்ணில் அந்த அணி அடித்த கோல் ஒன்று சத்தமேயில்லாமல் எதிர்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறிவிடலாம். திறமையான அணி ஒன்றை ஜெர்மனியின் ஆட்டம் தகர்த்ததோடு ஒரு தேசத்தின் நம்பிக்கை, கனவு என்று அனைத்தும் தகர்ந்துபோனது. எந்த மகிழ்ச்சிக்காக, கடுமையான எதிர்ப்பையும் ஏழ்மையையும் மீறி இந்த உலகக் கோப்பைப் போட்டிகளை பிரேசில் நடத்தியதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை.
அந்த 6 நிமிடங்கள் ஒரு தேசத்தின் கனவு சிறுகச்சிறுக அழிக்கப்பட்டது. ஏதோ இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற புனித உரிமை பெற்ற அணி என்பது போலவே சொல்லாடல்கள் உருவாகியிருந்தன. ஆனால், அந்த அணியின் உண்மையான பலவீனத்தை மறைத்திருந்த சொல்லாடல்கள் தவிடுபொடியானதையே ஜெர்மனியின் ஆட்டம் நிரூபித்தது.
பிரேசிலின் இந்தப் படுதோல்விக்குப் பிறகு அந்த அணியின் ஸ்ட்ரைக்கர் ஃபிரெட் கூறியதை, நாம் ஒட்டு மொத்தமான மதிப்பீடாக முன்வைக்கலாம், “இந்தத் தோல்வியின் தழும்பு எங்கள் வாழ்க்கையில் இனி மறையப்போவதில்லை”
ஆம்! இந்தச் சிதைவிலிருந்து அந்த அணி மீண்டுவர சில காலம் பிடிக்கும்.
ஆர். முத்துக்குமார், தொடர்புக்கு: muthukumar.r@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago