இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகளை அறிவிக்காமல் அரசு நிறுத்திவைத்தது பலரின் கவனத்துக்கு வராத விஷயம். 250க்கும் மேற்பட்ட உள்நாட்டு பல்துறை அறிவியல் சாதனை விருதுகளை நிரந்தரமாகக் கலைத்துவிட்டதாகக்கூட அரசு அறிவித்தது. அனைத்தையும் சேர்த்து பாரத ரத்னா போல ஒற்றை விருது முறையே அறிவியலுக்கு உகந்தது என்றும் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
பத்ம விருதுகள்கூட குடியரசுத் தலைவரின் கைகளால் ஆண்டுக்கு 120 விருதுகள் வரை வழங்கலாம் என்று ஒரு விதி இருக்கிறது. இலக்கியம், மொழிபெயர்ப்பு என ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 60 பேருக்கு விருதுகளை சாகித்திய அகாடமி வழங்குகிறது. விளையாட்டுத் துறையை எடுத்துக்கொண்டால் கேல் ரத்னா விருதுகள், அர்ஜுனா விருது, துரோணாச்சார்யா விருது என 180 பேருக்கு மேல் ஆண்டுதோறும் கௌரவிக்கப்படுகிறார்கள்.
ஆனால், அறிவியல் துறைக்கு 2021க்குப் பிறகு எந்த விருதையும் அறிவிக்காமல் காலம் தாழ்த்திப் பல்வேறு நெருக்கடிகளுக்குப் பிறகு, 2022 பட்நாகர் விருதுகள் என்று சமீபத்தில் 12 பேருக்கு அறிவித்திருக்கிறார்கள். பட்டியலில் ஒருவர்கூடப் பெண் விஞ்ஞானி இல்லை என்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய அறிவியலும் பெண்களும்: சர்வதேச அளவில் இந்தியப் பெண் விஞ்ஞானிகள் பலர் சாதித்துள்ளனர். எனினும், சர் சி.வி.ராமன் தொடங்கி இந்திய விஞ்ஞானிகள் என்றாலே அது ஆண்பால்தான் என்றாகிவிட்டது மிகப் பெரிய துயரம். பெண்கள் ஆய்வாளர்கள் ஆவதா என்று புறக்கணித்த சி.வி.ராமனுக்கு எதிராகத் தனி ஒருவராகப் போராடி, பெங்களூருவின் இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் இடம்பிடித்து, முனைவர் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் எனும் பெருமையைப் பெற்றவர் கமலா சோஹோனி எனும் அறிவியல் போராளி.
» தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
அவர் மட்டுமல்ல - தட்பவெப்ப அறிவியலின் ஏழு இந்திய வானியல் ஆராய்ச்சி (சென்னை உள்பட) நிறுவனங்களின் அடிப்படைக் கருவிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்த அண்ணா மணி, உலக அளவில் இயற்பியல் துகளியலில் மிகப் பிரபலமாகி, தன் பெயரில் ஒரு நட்சத்திரத்தைக் கொண்டுள்ள பீபா சௌத்ரி, செயற்கைக் கருத்தரிப்பு முறையை உலகுக்கே கொடுத்த இந்திரா ஹிந்துஜா, நுண்கலைப் பொறியியல் மூலம் இந்திய ராணுவத்துக்கு 1950களில் ஆன்டனாக்களையும் வாக்கி டாக்கிகளையும் வழங்கிய முதல் இந்தியப் பெண் பொறியாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பல பெண் விஞ்ஞானிகள் நமது பாடப்புத்தகங்களில் இடம்பெற்றதில்லை.
உள்ளூர் ரோட்டரி, லயன்ஸ், அறிவியல் சங்க அங்கீகாரம்கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான், நமது சர்க்கரைக்கான உயர் கரும்பு ரகத்தை வழங்கிய - ‘இனிப்பு ராணி’ எனப் போற்றப்பட்ட - தாவரவியல் விஞ்ஞானி இ.கே.ஜானகி அம்மாவுக்குப் பத்ம விருது 1977இல் வழங்கப்பட்டது.
அதிர்ச்சி தரும் அம்சங்கள்: இந்தியாவின் உயரிய அறிவியல் விருது, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது. அது 1958இல் இந்திய அறிவியல்-தொழில் துறை ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர் மூலம், அதன் நிறுவனரின் பெயரில் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே வாழ்ந்து, இங்கேயே அறிவியலின் மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் விஞ்ஞானிகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கம்; விருதுத் தொகை ரூ.5 லட்சம்.
அதைத் தவிர, 65 வயதுவரை மாதம் ரூ.15,000 உதவித்தொகையும் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் சிஎஸ்ஐஆர் நிறுவன நாளான செப்டம்பர் 26 அன்று விருதுகளை அதன் இயக்குநர் அறிவிப்பதே வாடிக்கை. எம்.எஸ்.சுவாமிநாதன், சி.என்.ஆர்.ராவ் உள்பட இதுவரை 583 இந்திய விஞ்ஞானிகள் பட்நாகர் விருது பெற்றுள்ளார்கள். அதில் 19 பேர் மட்டுமே பெண்கள் என்பது அதிர்ச்சி தரும் உண்மை. இது 3%ஐ விடக் குறைவு.
விருது தொடங்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகின்றன. தூய அறிவியலுக்கான இந்த ஒரே உயரிய அங்கீகாரம் ஆண்டுக்கு ஒரு பெண் விஞ்ஞானிக்காவது கிடைத்திருக்கக் கூடாதா என்று யோசிப்பது இருக்கட்டும்... மூன்று ஆண்டுகளுக்கு ஒரு பெண் விஞ்ஞானி என்றுகூடக் கணக்கிட முடியாதது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு! இந்தியாவில் அறிவியல் ஆய்வாளர்களாகப் பெண்களே இல்லையா என்ன?
பெண் விஞ்ஞானிகளின் அவலநிலை: 2023 மார்ச் 15 அன்று மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இஸ்ரோ, சிஎஸ்ஐஆர் உள்பட இந்தியாவின் தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனங்களில், மொத்தம் 56,747 பெண் ஆய்வாளர்கள் உள்ளனர் (மொத்த ஆய்வாளர்களில் 16.6%). இதில் மருத்துவம், மரபணுவியல் உள்பட சுயநிதி அல்லது நிதியுதவி பெறும் தனியார் ஆய்வகங்களின் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை சேராது. எப்படி இருந்தாலும் இது உலக சராசரியான 33.8% பெண்கள் என்பதைவிட மிகக் குறைவானது.
ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் - இணைந்த அறிவியல் ஆய்வுத் திட்டம் இன்று சர்வதேச அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சந்ததி - சமத்துவ - இயக்கம் (Generation Equality Forum) எனும் உலகளாவிய அமைப்பு அறிவியல் தொழில்நுட்ப ஆய்வில் பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தி, ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ஆம் தேதியை அறிவியலில் பெண்களுக்கான சர்வதேச தினமாக அறிவித்து ஐ.நா. அவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.
இந்தியாவில் ஸ்டெம் அறிவியல் தொழில்நுட்பச் செயல்திட்டத்தில் 43% பெண்கள் உள்ளனர். இது ஜெர்மனி (27%), பிரிட்டன் (38%) ஏன் அமெரிக்காவைவிட (34%) அதிகம். ஆனால், நம் சமூக அமைப்புக்கே உரிய திருமணம், குழந்தைப் பேறு, குடும்பச் சூழல், ஆணாதிக்கப் பணியிடச் சூழல் போன்ற காரணங்களால் 16.6% பேர் மட்டுமே ஆய்வைத் தொடரும் நிலை.
ஸ்டெம் சார்ந்த தொழில் துறை தலைமை நிர்வாக அதிகாரிகளாக 3% பெண்களே உள்ளனர் என்பது மற்றொரு அவலம். அதைவிடப் பெரிய அவலம், பெண் ஆய்வாளர்களின் உழைப்பை முற்றிலும் சுரண்டிவிட்டு, ஆய்வைத் தன்னுடைய பெயரில் வெளியிட்டு மோசடியில் ஈடுபடும் ஆண் ‘விஞ்ஞானி’கள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. இந்நிலையில், விருதுகளிலும் பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வேதனை.
தனி விருது தேவை: புனேவில் தேசிய செல் (உயிரணு) அறிவியல் ஆய்வு மையத்தில் நினைவு சார்ந்த நோய், தோல் புற்றுநோய் என யாவற்றுக்கும் மையப்புள்ளியாக இயங்கும் குருத்தணு இழைய ஆய்வில் திருப்புமுனை வெற்றிகண்ட தீபா சுப்ரமணியம்; 2015இல் நாம் அனுப்பிய - இந்தியாவின் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி எனப் புகழப்படும் - அஸ்ட்ரோ-சாட் விண் தொலைநோக்கித் திட்டத்தில் பங்களித்த பெங்களூரு இந்திய வானியல் இயற்பியல் கழக இயக்குநர் அன்னபூரணி உள்படப் பலருக்கு இந்த ஆண்டு பட்நாகர் விருது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது.
இந்நிலையில் ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதுபோலப் பெண் விஞ்ஞானிகளின் சாதனைகளை அங்கீகரிக்கத் தனி விருதுகள் துறைவாரியாக ஏற்படுத்தப்படுவதே இந்த அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
நம் நாட்டில் ஒரு பெண் கல்வி கற்பதும், கல்லூரி செல்வதும், அதையும் கடந்து ஆய்வு மாணவி ஆகி முனைவர் பட்டம் பெறுவதும்கூட, கல்பனா சாவ்லா விண்வெளிக்குப் பறப்பதற்கு இணையான சாதனை என்பதே இன்றைய யதார்த்த நிலை. இதை மாற்ற அறிவுசார் பெருமக்கள் அனைவரும் கைகோக்க வேண்டும்!
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ஆம் தேதியை அறிவியலில் பெண்களுக்கான சர்வதேச தினமாக அறிவித்து ஐ.நா. அவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.
- தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
To Read in English: Where are you, women scientists?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago