பு
யலுக்குப் பின்னான அமைதியெல்லாம் இல்லை; இன்னமும்கூட போருக்குப் பிந்தைய போர்க்களம் போலவே காட்சியளிக்கிறது குமரி. மிகப் பெரிய சூறையாட்டத்தை எதிர்கொண்டிருக்கிறது மாவட்டம். ஆழ, அகல வேர் பரப்பி நின்ற வேம்பு, புளியமரங்களும்கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு வீழ்ந்திருப்பது ‘ஒக்கி’ புயலின் சூறையாட்டத்துக்கு உதாரணம். அப்படியென்றால் வாழை, தென்னை, ரப்பர் மரங்களின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா? நெல் வயல்கள் முழுக்கவும் நீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளுக்குள் சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை.
நவம்பர் 29 புதன்கிழமை பின்னிரவிலேயே குமரியில் தீவிர மழை தொடங்கியது. மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி, மெல்ல மெல்ல அதன் தீவிரம் அதிகமானது. ஒருகட்டத்தில் சூறைக்காற்று புயலைப் போல் வீசியது. ஆனால், இவ்வளவு பெரிய அபாயம் வரப்போகிறது என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறைந்தபட்ச முன்னெச்சரிக்கைகூடப் பொதுமக்களுக்கு விடுக்கப்படவில்லை. சூறைக்காற்றின் வீச்சு நேரம் செல்லச் செல்ல உச்சத்துக்குப் போனது.
செயல்படாத மாவட்ட நிர்வாகம்
தமிழ்நாட்டில் குமரிக்கு உள்ள விசேஷம், பாலை நீங்கலாக நான்கு வகை நில அமைப்புகளையும் கொண்ட ஒரே மாவட்டம் இது. குமரியின் அடையாள மான பசுமையின் ஆதாரமே இங்கு ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள்தான். நகர்ப் பகுதிகளில்கூட வீட்டுக்குச் சில தென்னை மரங்களேனும் வளர்க்கும் வழக்கம் ஒரு கலாச்சாரமாகவே இங்கு உண்டு. ‘ஒக்கி’யின் சூறையாட்டத்தில் முதல் அடி வாங்கியது மரங்கள்தான். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு வீழ்ந்தன.
சூறைக் காற்றின் தொடக்கத்திலேயே பெரியவர்கள், “இது ஏதோ புயல் மாதிரில்லா இருக்கு. என்னோட 80 வயசு அனுபவத்துல குமரியில இப்படிக் காத்த பாத்தது இல்ல!” என உயிர் பயத்தோடு பேசிக்கொண்டிருந்த தைக் கேட்க முடிந்தது. ஆனால், புயல் சூறையாடிவிட்டுச் செல்லும் வரை மாவட்ட நிர்வாகம் புயல் என்ற வார்த்தையையே உச்சரிக்கவில்லை.
அதிகாரிகளின் அலட்சியம்...
மக்களின் கண்ணீர்!
வியாழக்கிழமை சரியாக காலை 6.23-க்கு செய்தித் துறை சார்பில் ஊடகவியலாளர்களுக்கு ஓர் அறிவிப்பு வந்தது. “கன மழையின் காரணமாக குமரி மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை” என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பைத் தாங்கிய செய்தி அறிக்கையே அது. இதிலும் அவசியம் குறிப்பிட வேண்டிய விஷயம், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து இதை மழை என்றே சொல்லிக்கொண்டிருந்தது என்பதுதான்!
கடலோர மாவட்டம் - முன்கூட்டிய எச்சரிக்கை அவசியம் என்கிற உணர்வே இல்லாமல் இருந்ததுபோலச் செயல்பட்டது மாவட்ட நிர்வாகம். அரசாங்கத் தின் அறிவிப்பைப் பார்த்து, ‘சாதாரண மழைதானே!’ என்று இருந்ததன் விளைவையே குமரி மாவட்ட மக்கள் இன்று கண்ணீரோடு அனுபவிக்கிறார்கள். முதல்கட்டத் தகவல்களிலேயே ஏழு உயிர்கள் பறிபோய்விட்டது தெரியவந்திருக்கிறது!
கோளாறுகளும் குளறுபடிகளும்!
அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாது என்று நம்ப முடியவில்லை. போதிய அளவுக்கான முன்னெச்சரிக்கைகள் வந்தடைந்ததை எல்லோருமே சொல்கிறார்கள். முந்தைய நாளே மாவட்ட நிர்வாகத்துக்கு கன மழை, சூறைக்காற்று தொடர்பான முன்னெச்சரிக்கை வந்தடைந்ததாகச் சொல்லப்படுகிறது. இது உண்மை யெனில், இப்படி எச்சரிக்கை வந்தும், மக்களுக்குத் தகவல் அளிக்கப்படாததும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததும் மாவட்ட நிர்வாகத்தின் தோல்வி. ஒருவேளை மாவட்ட நிர்வாகத்துக்கே தகவல் இல்லை என்று சொல்வார்களானால், அது ஒட்டுமொத்த தமிழக அரசின் தோல்வி. ஆனால், இவர்களுடைய தோல்விகளுக்கு மக்கள் தண்டனை அனுபவிக்க வேண்டியிருப்பதுதான் பெரும் துயரம்!
காவல் துறையில் பணியாற்றும் என்னுடைய நண்பர் தனிப்பட்ட வகையில் பகிர்ந்துகொண்ட செய்தியை என்னால் இன்றுவரை ஜீரணிக்கவே முடியவில்லை. “குமரி பெரும் இயற்கைச் சீற்றத்துக்கு ஆளாகலாம் என்ற தகவல் எங்களுக்கும்கூட வந்தது. மீட்புப் பணிக்கு குமரிக்கு வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் இப்போது அரசுப் பணியாளர்கள் வந்துள்ளனர். ஆனால், குமரியில் அதே 29-ம் தேதிதான், திருவண்ணாமலை திருக்கார்த்திகை பாதுகாப்புக்காக 200 போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் எல்லாம் டிச. 3 அன்றுதான் ஊர் திரும்புகின்றனர். கொஞ்சமும் அரசு முன்னெச்சரிக்கையோடு யோசிக்கவில்லை என்பதற்கு இதைவிடவும் ஒரு உதாரணம் வேண்டுமா?”
உலகமே இது ‘ஒக்கி புயல்’ என்று பேசத் தொடங்கிய பின்னர்தான், புயலின் பேயாட்டம் - அது உருவாக்கிய பேரிழப்புகளுக்குப் பின்புதான் குமரி மாவட்ட நிர்வாகம் ‘ஒக்கி’ என்று பேசத் துவங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை என்பதோடு மட்டும் அல்ல; மீட்பு - நிவாரணப் பணிகளிலும் ஏராளமான கோளாறுகள், குளறுபடிகள்!
குமரி தலைநகரம் அல்லவே!
சென்னையில் வெள்ளம் வந்தபோது, அது ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கவனத்தையும் குவித்தது. முதல்வர் தொடங்கி, 30 அமைச்சர்களும் களத்தில் நின்றனர். ஆனால், குமரியோ மாநிலத் தலைநகரம் இல்லையே.. கடைக்கோடியில் அல்லவா இருக்கிறது. அந்த தூரம் வெளிப்படையாகத் தெரிகிறது. சாலைகளிலும் குடியிருப்புகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால், வீடுகளில் குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் இன்றி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கடலுக்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட கடலோடிகள் கதி என்ன என்று தெரியவில்லை. தேடும் பணி என்ற பெயரில் வழக்கமான பாவனையில் அரசு ஈடுபட்டிருப்பது மக்களைப் பதைபதைப்பில் ஆழ்த்தியிருக் கிறது. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலான இடங்கள் இருண்டு கிடக்கின்றன. ஆளும் அதிமுக அரசு ஆர்.கே.நகர் தேர்தலில் காட்டும் அக்கறையைக் குமரியில் காட்டுவதாகத் தெரியவில்லை. மீட்பு நடவடிக்கைக்காக 29 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 2,391 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெளியூர்க்காரர்களைத்தான் தன்னார்வலர்களாக எதிர்பார்த்து உதவிக்குக் காத்திருக்கிறது குமரி. அரசு தோல்வியுறும் இடங்களில் மக்கள்தானே தங்களுக்குள் உதவிக்கொள்ள வேண்டும்!
- என்.சுவாமிநாதன்,
தொடர்புக்கு: swaminathan.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago