‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | வாசகர்களின் பார்வையில்...

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடங்கிய காலத்தில் இருந்தே தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். ’உங்கள் குரல்’ பகுதி மூலம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. ’இந்து தமிழ் திசை’ மீதான நம்பிக்கையின் பேரில் மக்களின் குறைகளுக்கும் உடனுக்குடன் அரசு அதிகாரிகள் தீர்வு ஏற்படுத்தித் தருகின்றனர்.

மேற்கு சைதாப்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிக்காகப் பேருந்து நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்தும் பேருந்து நிறுத்தம் மாற்றப்படவில்லை. ’இந்து தமிழ் திசை’ வாயிலாகக் கோரிக்கை விடுத்தோம். உடனடியாகப் பேருந்து நிறுத்தத்தைப் பழைய இடத்துக்கு அதிகாரிகள் மாற்றித் தந்தனர். - இரா. எத்திராஜன், சென்னை

‘இந்து தமிழ் திசை’யின் முழுநேர வாசகரான நிலையில் அதன் இரண்டாம் பக்கத்தில் தொடங்கிச் சிறப்பு பக்கங்களில் வரும் மனிதநேயக் கட்டுரைகள் என் கவனத்தை ஈர்த்தன. அதில் எந்தப் பிரதிபலனும் பாராமல் சமூகத்துக்கு அறச்செயல்களைச் செய்வோரை அடையாளம் கண்டு அவர்களுக்குக் கவுரவம் வழங்கும்வகையில் வந்த கட்டுரைகள்தான் என்னைப் பொதுநலச் சேவைகளில் முழுநேரம் ஈடுபடத் தூண்டியது.

அதன் அடிப்படையில் இன்று வரை ஆதரவற்றோர் இல்லங்களில் நடக்கும் இறப்புகளை என் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வாகக் கருதி அவர்கள் உடல்களையும் இறுதிச்சடங்குகளையும் செய்து வருகிறேன். - வி.பி.மணிகண்டன், ஆதரவரற்றோர் சடலங்களை அடக்கம் செய்யும் சமூக சேவகர் மதுரை

நான் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து ’இந்து தமிழ் திசை’ வாசித்து வருகிறேன். எங்கள் பள்ளியில் வாரம் ஒரு முறை ’இந்து தமிழ் திசை’யில் வரும் ஒரு சிறப்புக் கட்டுரை, அரிய தகவலை எடுத்துத் தகவல் பலகையில் ஒட்டி வைப்பார்கள். அதைப் பற்றி 5 நிமிடம் சக மாணவர்களுடன் உரையாடும் அனுபவத்தைப் பள்ளி ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

பின்னர் கல்லூரியில் படிக்கும்போது நடுப்பக்கக் கட்டுரைகளை வாசித்து, கல்லூரி வாசகர் வட்டத்தில் விவாதிப்பது வழக்கம். தற்போது ஊடகத் துறையில் தனியார் வானொலியில்  பயணிக்கிறேன். அதில் பெரும்பாலும் ’இந்து தமிழ் திசை’யில் வரும் கருத்துகளைத்தான் மக்களோடு பகிர்ந்து வருகிறேன். - மணிகண்டன், ரேடியோ ஜாக்கி, மதுரை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடங்கியது முதலே அதன் வாசகனாய் தொடர்வதில் எனக்குப் பெருமை. ‘இந்து தமிழ் திசை’ சிறப்பே அதன் நடுப்பக்கக் கட்டுரைகள்தான். இதில் தொல்லியல் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவருவது மகிழ்ச்சியளிக்கக் கூடியது.

கீழடியில் அகழாய்வு தொடங்கிய பின்தான் அனைவரிடமும் தொல்லியலை அறிந்துகொள்ளும் ஆர்வம் உண்டானது. அந்த ஆர்வம், அங்கு நடக்கும் ஆய்வைத் தினமும் கால், அரைப்பக்கச் செய்தியாக அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்த்த ’இந்து தமிழ் திசை’ மூலம் உண்டானதுதான். - வே.ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர், ராமநாதபுரம்

தெருப் பிரச்சினை முதல் தேசப்பிரச்சினை வரை, உள்ளூர்ச் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை அனைத்துத் தரப்பு வாசகப் பரப்புக்கும் சம முக்கியத்துவம் தரும் நாளிதழாக ’இந்து தமிழ் திசை’ விளங்குகிறது.

இணைப்பிதழ்கள் அனைத்தும் வாசகர்களின் அறிவையும் மனதையும் நிரப்புகின்றன. சிறந்த அறிவுஜீவிகளைத் தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகப்படுத்தியது ’இந்து தமிழ் திசை’யின் முக்கியச் சாதனை. - பேராசிரியர் க.லெனின் பாரதி, நூலகர் வாசகர் வட்ட தலைவர், கோவை

கிராமத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் நான் பணி யாற்றுகிறேன். இங்கு 95 சதவீத மாணவ, மாணவிகள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் நாளிதழ் வாங்கிப் படிக்க இயலாது. எனவே, தினந்தோறும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வரும் செய்திகளை 10 நிமிடம் ஒதுக்கி அவர்களுக்கு எடுத்துச் செல்கிறேன்.

‘நூல்வெளி’யில் வரும் புத்தக விமர்சனத்தைப் படித்து, அந்த நூல்களைத் தேடிப் பிடித்து வாங்கி மாணவர்களுக்கு வழங்கி, மாதந்தோறும் நூல் விமர்சனக் கூட்டத்தை நடத்தி மாணவ, மாணவிகளைக் கொண்டு நூலை மதிப்புரை செய்து பேசச் செய்கிறேன். - பேராசிரியர் ம. ராஜா, லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி

கடந்த 10 ஆண்டுகளில் ‘இந்து தமிழ் திசை’யின் பணி குறிப்பிடத்தகுந்தது. தமிழகம், புதுச்சேரியில் அரசியல் சார்பின்றி இருக்கும் நாளிதழ் என்றால் அது ’இந்து தமிழ் திசை’தான். உண்மையான செய்திகளைப் படிக்கப் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக விவசாயம் சார்ந்த கட்டுரைகள், அது தொடர்பான பேட்டிகள் மிகுந்த கவனத்தை ஈர்க்கின்றன.

பனை விதைகள் குறித்த விழிப்புணர்வைப் பள்ளிதோறும் சென்று மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாளிதழில் வந்த செய்திகள் பெரும் உந்துதலாக இருந்தது. - ஆனந்தன், தலைவர், பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு, புதுச்சேரி

கடந்த 10 ஆண்டுகளில் ’இந்து தமிழ் திசை’ மூலம் கற்றுக்கொண்டதில் மிக முக்கிய மானதாக நான் கருதுவது, புத்தகத்தைத் தேடிச் செல்லுங்கள், அது உங்களுக்கு எல்லாம் அளிக்கும் என்பதுதான். புத்தகத்தையும் எழுத்தாளர்களையும் வாசகனுக்குக் கொண்டுசெல்வதில் ’இந்து தமிழ் திசை’ செய்துவரும் பணி முக்கியமானது.

மௌனி, தஞ்சை பிரகாஷ், கரிச்சான்குஞ்சு, சுந்தர ராமசாமி, கி. ராஜநாராயணன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், தியோடர் பாஸ்கரன் இவர்கள் எல்லாம் ’இந்து தமிழ் திசை’ வழியாகத்தான் எனக்கு அறிமுகமானார்கள். - லெனின், ஹோமியோபதி மருத்துவர், விழுப்புரம்

வெகு காலமாக ஆங்கிலத்தில் வருகிற தரமான நாளிதழ் போன்று தமிழிலும் வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை ’இந்து தமிழ் திசை’ நிறைவேற்றியுள்ளது. கருத்துப் பேழை பகுதி என்னை மிகவும் கவர்ந்துள்ளது. உதாரணத்துக்கு வேங்கை வயல், மணிப்பூரில் நடந்த சம்பவங்கள் இந்தப் பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் துல்லியமாக விமர்சித்திருந்தன.

’இந்து தமிழ் திசை’யின் ரிலாக்ஸ் பக்கத்தில் வரும் திரைபட விமர்சனங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. இதில் வரும் திரை விமர்சனங்களை படித்து விட்டுத்தான் திரைப்படம் பார்க்கும் நிலைக்கு மாறிவிட்டேன். - ர.தசரதராஜுலு, வருவாய் துறை அலுவலர், கள்ளக்குறிச்சி மாவட்டம்

கடந்த பல ஆண்டுகளாக எங்களது மக்கள் நலன் சார்ந்த விரிவாக்கப் பணிகளுக்கு ’இந்து தமிழ் திசை’ தொடர் ஊக்கமும் தனது ஆதரவையும் வழங்கி வருகிறது.

மாணவர்களுக்கு தேவையான நல்ல கருத்து களையும் தொடர்ந்து வெளியிட்டு மாணவச் சமூகத்துக்கும் நற்பணியைச் செய்து வருகிறது. - முனைவர். தி. ராஜ் பிரவின், விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் ஒருங்கிணைப்பாளர், கடலூர்

தொகுப்பு: ஆனந்த விநாயகம், ஆண்டனி செல்வராஜ், ஜனநாயகசெல்வம், எஸ்.முஹம்மது ராஃபி, இல.ராஜகோபால், எஸ்.கல்யாணசுந்தரம் அ.முன்னடியான். எஸ்.நீலவண்ணன், முருகவேல். க.ரமேஷ் .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE