‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | பிரபலங்களின் பார்வையில்...

By செய்திப்பிரிவு

அனைவருக்கும் வழிகாட்டி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஊடகச் சேவையில் 10 ஆண்டுக் காலப் பயணத்தை நிறைவு செய்து 11ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சமுதாய மேம்பாட்டுக்காக நல்ல நோக்கத்தோடும் அக்கறையோடும் நடுநிலையான செய்திகளைத் தருவதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அன்றாட நிகழ்வுகள், அரசியல் விழிப்புணர்வு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு, திரைத்துறை, பல்சுவை என்று பல துறை அறிவையும் சமுதாயத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் விதமாகத் தந்துகொண்டிருப்பது ‘இந்து தமிழ் திசை’யின் பெருமை. ‘இந்து தமிழ் திசை’யின் ஊடகச்சேவை, சமுதாயத்துக்குப் பயன்படும் நோக்கத்தோடு இன்னும் பலப்பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்று என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். - தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர்.

தாக்கத்தை ஏற்படுத்தும் செய்திகள்: எனக்குப் பிடித்த நாளிதழ்களில் ஒன்று 'இந்து தமிழ் திசை’. நேர்மையை என்றைக்குமே கடைபிடிக்கும் சிறந்த பத்திரிகை. எதையும் மிகைப்படுத்தியோ குறைத்தோ அளிக்காமல், கண்ணியத்துடன் செய்திகளை வழங்கி வரும் நாளிதழ். இந்த நாளிதழைப் படிக்கப் படிக்கப் பல சுவாரசியத் தகவல்கள் கிடைக்கும். அண்மையில், ஆணிகளால் மரத்தின் ஆயுள்காலம் குறைகிறது என்கிற தலைப்பில் மிகவும் நுட்பமான செய்தியை வெளியிட்டிருந்தனர்.

வனத்துறை அமைச்சர் என்பதால் அந்தச் செய்தியைப் படித்தேன். ஆணியால் எப்படி மரத்தின் ஆயுள் காலம் குறையும் என்று எனக்குத் தோன்றியது. பொள்ளாச்சியில் நிறைய இடங்களில் விளம்பரப் பதாகைகளை வைக்க மரத்தில் ஆணிகளை அடித்துச் சென்றுவிடுகின்றனர். மனிதர்களின் உடம்பில் நுரையீரல், இதயம் போன்றவை இருக்கின்றன. அவற்றுக்கு ஒன்றும் ஆகாது என மனித உடலின் வெளிப் பகுதியில் ஆணி அடித்தால் என்ன ஆகும்? உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

மனித உள்ளுறுப்புகளை எப்படித் தோல் காக்கிறதோ, அப்படித்தான் மரத்தையும் அதன் பட்டைகள் காக்கின்றன என்று ஒப்பிட்டு, அழகாகச் செய்தியில் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து இதுபோன்று செய்துவந்தால் நாளடைவில் மரம் பட்டுப்போய் விடும் என்கிற தகவலையும் குறிப்பிட்டிருந்தனர். 'இந்து தமிழ்திசை' நாளிதழின் செய்திகள் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம். - மா. மதிவேந்தன், தமிழக வனத்துறை அமைச்சர்

வெற்றிடம் நிறைவு: ஏதோ ஒரு எண்ணம் மனதை அரிக்கத் தொடங்கி இருந்தால், அதைப் பொது வெளியில் வைத்தாக வேண்டும் என்கிற ஆர்வம் மேலெழுந்து கொண்டிருந்தால், உடனே தோன்றுவது, அதை ஒரு கட்டுரையாக வடிவமைத்து, ‘இந்து தமிழ் திசை'க்கு அனுப்பிவிட வேண்டும் என்பதுதான். அனுப்பிய கட்டுரைகளை மதித்து வெளியிடுவது ‘இந்து தமிழ் திசை’யின் சிறப்பு. நான் அனுப்பிய ஒரு கட்டுரையும் வெளியிடாமல் விடுபட்டது இல்லை.

தமிழ்ப் பத்திரிகை உலகில் இருந்த ஒரு வெற்றிடத்தை ‘இந்து தமிழ் திசை’ நிறைவு செய்திருக்கிறது. முன்னதாக, ஆங்கில ‘தி இந்து’ குழுமத்தினரிடம் அவ்வப்போது, ஒரு உலகத் தரம் வாய்ந்த பத்திரிகை தமிழில் தேவை என்கிற என் ஆசையைத் தெரிவித்து வந்திருக்கிறேன். - வே.வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணீயம் பல்கலைக்கழகம்

கெளரவமான விமர்சனம்: ‘இந்து தமிழ் திசை’ இன்று பதினோராம் ஆண்டில் கால் பதிக்கிறது. சமூகம் செயல்படும் அதீதமான வேகத்தில், பத்து ஆண்டுகள் மக்களின் உணர்வுகளைப் புரிந்து வெற்றிகரமாகக் கடப்பது என்பதே சாதனைதான்.

'இந்து தமிழ் திசை'யின் சினிமா பக்கமான 'இந்து டாக்கீஸ்' இணைப்பிதழ், வெவ்வேறு திரைப்படங்களை நன்கு ஆராய்ந்து கௌரவமாக விமர்சனம் செய்வது நல்ல விஷயம். - கார்த்தி, நடிகர்

‘தி இந்து’வின் நீட்சி: என் சிறு வயது முதலே வாழ்வின் ஓர் அங்கமாக விளங்கி வருகிறது ‘தி இந்து’ நாளிதழ். அதன் நீட்சியாக ‘இந்து தமிழ் திசை’ பதிப்பு வெளியானபோது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. அழகான தமிழில் ‘தி இந்து’ தரத்தில் கட்டுரைகளைத் ‘இந்து தமிழ் திசை’ தருகிறது. - ரவிசந்திரன் அஷ்வின், கிரிக்கெட் வீரர்

காத்திரமான கட்டுரைகள்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழை நான் தொடர்ந்து படிக்கக் காரணம் அதன் நம்பகத்தன்மை. அதில் வெளியாகும் கட்டுரைகள் வியாபார நோக்கில் அல்லாமல் உண்மைக்கு நெருக்க மானவையாக இருப்பது நாளிதழின் சிறப்பு.

நடுப்பக்கக் கட்டுரைகளையும் சனிக்கிழமைதோறும் ‘நூல் வெளி’ பகுதியில் வெளியாகும் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளையும் தவறாமல் வாசிப்பதோடு சேமித்தும் வைத்திருக்கிறேன். அந்தப் பக்கங்களில் வெளியாகும் விமர்சனக் கட்டுரைகள் காத்திரமானவை. - திலகவதி ஐ.பி.எஸ்.

கூர்த்தீட்டும் தொடர்கள்: கற்பனைத் தொடர்களைத் தவிர்த்து சிந்தனையைக் கூர்த்தீட்டும் கட்டுரைத் தொடர்கள் ‘இந்து தமிழ் திசை’யின் சிறப்பம்சங்களில் ஒன்று. நடுப்பக்கம் உள்ளிட்ட தனிப்பட்ட கட்டுரைகளும் முனைவர் பட்டத்துக்கான ஆய்வறிக்கையின் தரத்தில் மின்னுபவை.

இந்தக் கட்டுரைத் தொடர்களின் புத்தக வடிவம் செய்தித்தாளின் தொடர் வாசகரல்லாத மற்றவர்களுக்கும் வரம்! எந்தச் செய்தியிலும், அம்சத்திலும் தரம், அறம் இரண்டையும் உத்தரவாதமாகக் கொண்டதால் வாசகர் மனதை வென்று இன்று பத்தாண்டைக் கொண்டாடுகிறது. - பட்டுக்கோட்டை பிரபாகர், எழுத்தாளர்

காலப்பேழை: பத்தாண்டுகள் மிகச் சிறப்பாகப் பணியாற்றி 11-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ‘இந்து தமிழ் திசை’. தமிழ் நாளிதழ்களுக்கிடையே புத்தொளி பாய்ச்சி வாசக மனங்களில் தற்காலச் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளை நடுநிலையுடன் எடுத்துரைப்பதில் ‘இந்து தமிழ் திசை’ முன்னத்தி ஏர் என்றால் மிகையாகாது.

ஆங்கிலத்தில் வெளிவரும் ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’க்கு இணையாக நான் ‘இந்து தமிழ் திசை’யைக் கருதுகிறேன். இதில் வரும் கருத்துப் பேழை கட்டுரைகள் காலக் கண்ணாடி; நாம் வாழும் காலத்தின் நினைவுகளைச் சேர்த்து வைக்கும் காலப்பேழை. இதன் கட்டுரைகள், தமிழக அரசின் பல முற்போக்குத் திட்டங்களுக்கு ஆற்றல் தோற்றுவாயாக அமைந்திருக்கின்றன. - நா.சோமசுந்தரம், கமாண்டன்ட், இந்தியக் கடலோரக் காவல் படை

கலையும் இலக்கியமும்: பொதுவாகப் பத்திரிகைகள் செய்திகளைச் சொல்வதற்காக மட்டும்தான் என நினைத்திருந்தேன். ஆனால், ‘இந்து தமிழ் திசை’ வந்ததற்குப் பிறகு அதில் கலை சார்ந்த விஷயங்கள், நூல் பற்றிய திறனாய்வு, எழுத்தாளர்கள் பற்றிய விரிவான கட்டுரைகள் இடம்பெறுவதைப் பார்க்கிறேன். கலை, இலக்கியம் சார்ந்து சமகாலத்தில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு இயங்கும் ஒரு கண்ணாடியைப் போன்றதாகத்தான் ‘இந்து தமிழ் திசை’யைப் பார்க்கிறேன்.

திரைத் துறை சார்ந்த பல விஷயங்களை, விமர்சனங்களைப் பதிவுசெய்வதில் முக்கியமானப் பணியை ‘இந்து தமிழ் திசை’ கடந்த 10 ஆண்டுகளாகச் செய்து வருகிறது. நம்முடன் பயணித்து சம காலத்தைக் காட்டும் பத்திரிகையாகவும் ‘இந்து தமிழ் திசை’ இருக்கிறது. - செழியன், தேசிய விருது பெற்ற இயக்குநர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர்.

எல்லோருக்கும் வழிகாட்டட்டும்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் தலையங்கம் மிகவும் விரும்பி வாசிக்கும் பகுதி. தேர்ந்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் எழுதும் இந்தப் பகுதியால் நல்ல சிந்தனைகள் உதிக்கின்றன. சித்திரங்களோடு கூடிய குழந்தைகளுக்கான ‘மாயா பஜார்’ பகுதியும் வெகு சிறப்பு. - அலெக்சாண்டர் பாபு, நகைச்சுவைக் கலைஞர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்