அரசியல் துறவி சோனியா!

By ஆ.கோபண்ணா

 

பி

ரதமராக இருந்த இந்திரா காந்திக்கு மிகவும் சோதனையான காலக்கட்டத்தில் உற்ற துணையாக இருந்த சஞ்சய் காந்தி விமான விபத்தில் மரணமடைந்தது ராஜீவ் காந்தியின் எதிர்கால திசையை மாற்றியமைத்தது. விமான ஓட்டியாக தமது வாழ்க்கையை 13 ஆண்டுகாலம் மகிழ்ச்சியாக கழித்துக்கொண்டிருந்த ராஜீவ் காந்தி அரசியல் பிரவேசம் செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால், ராஜீவ் காந்தி அரசியலில் ஈடுபடுவதை சோனியா காந்தி எதிர்த்தார். அதேநேரத்தில் இந்திரா காந்திக்கு ஏற்பட்ட சோதனைகளை அருகிலிருந்து பார்த்த சோனியா காந்தி தமது முடிவை மாற்றிக்கொண்டு, ராஜீவ் காந்தி அரசியலுக்கு வருவதை ஏற்றுக்கொண்டார்.

எனக்கு மகள் இல்லையே என்கிற குறையை எனது மருமகள் போக்கிவிட்டார் என்று ஒருமுறை இந்திரா காந்தியே கூறியிருக்கிறார்.

பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பிய நடவடிக்கைக்குப் பிறகு, எந்த நேரத்திலும் தாம் கொல்லப்படலாம் என்கிற மனநிலை பிரதமர் இந்திரா காந்திக்கு இருந்தது. இதுகுறித்து ராஜீவ் காந்தியுடன் பலமுறை பேசியிருக்கிறார்.

இந்நிலையில், பிரதமராக இருந்த இந்திரா காந்தியை 1984 அக்டோபர் 31-ம் தேதி அவரது மெய்க்காவலர்களே சுட்டு படுகொலை செய்தனர். அந்தக் கோர நிகழ்வின்போது வீட்டிலிருந்த சோனியா காந்தி வெளியே ஓடிவந்தார். இந்திரா காந்தியின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். மருத்துவமனையை நோக்கி வாகன நெரிசல் காரணமாக கார் மெதுவாக சென்றது. மாலை 3.15 மணிக்கு ராஜீவ் மருத்துவமனைக்கு வந்தார். எங்கும் மக்கள் திரள்.

ஒருபுறம், தலைமைப் பதவியை ஏற்க வேண்டுமென்று கட்சித் தலைவர்கள் ராஜீவ் காந்தியை நெருக்கிக் கொண்டிருந்தனர். முதன்மைச் செயலாளரான பி.சி. அலெக்சாண்டர், காத்திருக்கும் அறைக்குச் சென்றபோது அங்கே சோனியா அழுதபடி, ‘‘நீங்கள் பதவியை ஏற்றுக் கொள்ளாதீர்கள், வேறு யாரேனும் அந்தப் பொறுப்பை ஏற்கட்டும்” என்று கடினமான குரலில் அழுத்தமாக கூறினார். ராஜீவ் காந்தி மனைவியிடம், “இது என்னுடைய கடமை, நான் இதை செய்து தான் ஆகவேண்டும்” என்று மென்மையாகக் கூறினார்.

இந்நிலையில் பி.சி. அலெக்சாண்டர் “நேரமாகிவிட்டது, உடனே வாருங்கள்” என்று அழைத்தார். ‘‘நாடாளுமன்ற காங்கிரஸ் குழு முடிவெடுக்கட்டும். குடியரசுத் தலைவருக்குச் சொல்லிவிடுங்கள். பின்னர் பதவியேற்புக்கான நேரத்தைக் குறியுங்கள்” என்றார் ராஜீவ் காந்தி.

ஒருமுறை ராஜீவ், “நான் அரசியலில் ஈடுபடுவதில் என் மனைவிக்கு விருப்பமில்லை. என்னை இழந்து விடுவோமோ என்ற எண்ணமே அவருக்கு இருந்தது ” என்று கூறியிருந்தார். .

நாடாளுமன்றத் தேர்தலுக்காக மூன்று மாநிலங்களில் தீவிர சுற்றுப்பயணம் செய்துவிட்டு கடைசியாகத் தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரம் செய்ய ராஜீவ் காந்தி 1991 மே 21 ஆம் தேதி மாலை வருகைபுரிய திட்டமிட்டிருந்தார். அன்று காலை முதல்கட்ட தேர்தலுக்காக வாக்களித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்து குடும்பத்தோடு ஒருசில நிமிடங்களைச் செலவிட்டார். அதுதான் சோனியா தம் கணவரை உயிரோடு பார்த்த கடைசி தருணம்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பயங்கரவாதிகளால் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். எது நடந்துவிடும் என்று அஞ்சினாரோ அது நடந்துவிட்டது. தமது உயிருக்கும் மேலான கணவரை சோனியா காந்தி இழந்தார்.

கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 146 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கிற நிலை ஏற்பட்டது. நாடாளுமன்ற காங்கிரஸ் குழு கூடி சோனியாவை ஏகமனதாக தலைவராக தேர்வு செய்தது.ஆனால் பிரதமர் பதவியை ஏற்க மறுத்த அவர் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் பெயரைப் பரிந்துரை செய்தார்.

தமது முடிவை சோனியா காந்தி நாடாளுமன்ற காங்கிரஸ் குழுவின் கூட்டத்தில் தெரிவித்து ஆற்றிய உரையில், கடந்த 6 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருக்கிறேன். நான் ஏற்கனவே தெரிவித்தது போன்று, பிரதமர் பதவியில் எனக்கு நாட்டமில்லை” என்று குறிப்பிட்டார். சோனியா மேலும் பேசும்போது, ‘‘என் உறுதியில் உள்ள நியாயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என் முடிவை ஏற்றுக் கொள்ளுங்கள். அதை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். உங்களோடு சேர்ந்து பணியாற்றுவதோடு, இந்த நாட்டுக்காகவும் உழைப்பேன என்று உறுதியளிக்கிறேன்’’ என்றார்.

பிரதமர் பதவிக்கு பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை ஏற்க வைத்ததன் மூலம் இந்தியாவை பத்தாண்டு காலம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர் சோனியா காந்தி. அந்த பத்தாண்டுகளில் சராசரி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதம். அனைவருக்கும் இலவச கல்வி, நில கையகப்படுத்துதல் சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், வங்கிகள் மூலமாக கல்விக் கடன், விவசாய கடன், மதிய உணவுத் திட்டம் என பல்வேறு சாதனைகளை மன்மோகன் சிங் ஆட்சியில் செய்திட உற்ற துணையாக இருந்தவர் சோனியா காந்தி.

நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டிற்காக குரல் எழுப்பியவர் சோனியா காந்தி. அவரது கடுமையான முயற்சியின் காரணமாக மாநிலங்களவையில் 2010-ம் ஆண்டில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை மக்களவையில் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இந்தியாவில் முதன்முதலில் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல், மக்களவை சபாநாயகராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மீரா குமார் ஆகிய இரு பெண்களை உயர் பதவிகளில் அமர்த்தியவர் சோனியா காந்தி.

காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி தலைமைப் பண்புகளை நிரம்பப் பெற்றிருந்தார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பிரதமர்களாக இருந்தபோது அவர்கள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து சோனியா அறிந்து வைத்திருந்தார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தமது அரசியல் அணுகுமுறையை அமைத்துக் கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தை எப்படி கையாள்வது என்பதையும் அவர்களிடமிருந்தே கற்றுக் கொண்டார். 2004 தேர்தலுக்காக 30 ஆயிரம் மைல்கள் பயணம் செய்து 148 பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்.

இத்தகைய அணுகுமுறையை கையாண்ட காரணத்தினால்தான் 1998-ல் 141 இடங்கள், 1999-ல் 114 இடங்கள், பிறகு 2004 இல் 145 இடங்கள் பிடித்து காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினார். 2009-ல் நடைபெற்ற தேர்தலில் 206 இடங்களைப் பெற்று முன்பை விட பெரும் வெற்றியை ஈட்டித் தந்தார். ஆனால் 2014-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1928-ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் மோதிலால் நேரு தலைமை ஏற்றார். 1929-ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு தந்தையிடமிருந்து பதவியைப் பெற்றார். இன்று சோனியா காந்தியிடமிருந்து மகன் ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பைப் பெறுகிறார். இதனைத் தொடர்ந்து, சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார். எந்தப் பதவியையும் ஏற்காமல் இந்திய தேசிய காங்கிரஸுக்கு ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தக் கூடியவராகத் தொடர்ந்து செயல்படுவார்.

கணவர் மறைவிற்குப் பிறகு 7 ஆண்டுகள் அரசியல் துறவறம் மேற்கொண்ட சோனியா காந்தி, காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை நிர்பந்தமான சூழலில் ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்களின் வற்புறுத்தலின் காரணமாக 1998-ல் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

19 ஆண்டுகள் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக அரசியல் பயணம் மேற்கொண்டார்.

அன்று இந்திரா காந்தியை தேஷ் கி நேத்தா - தேசத்தின் ஒரே தலைவர் - என்று அழைத்தார்கள். இன்று அதே அடைமொழி சோனியா காந்திக்கும் பொருந்தும்.

ஆ.கோபண்ணா, தலைவர்,

ஊடகத் துறை, தமிழக காங்கிரஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்