ச
மீப காலமாக, இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் தொடர்பான செய்திகளில்தான் ஊடகங்களின் கவனம் இருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக இங்கு இருந்துவரும் இலங்கை அகதிகளின் நிலை பொதுமக்களின் கவனத்திலிருந்து காணாமல் போயிருக்கிறது.
இலங்கையில் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள் தொடங்கியது முதல், தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் வசித்துவருகிறார்கள். அவர்கள் வசிக்கும் முகாம்களின் மோசமான நிலை, முகாம்களை விட்டு வெளியில் சென்றுவருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள், குறைந்த அளவிலான வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகள் போன்றவை அவர்களைப் பாதித்திருக்கின்றன. மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படும் இலங்கையின் மத்தியப் பகுதிகளிலிருந்து வந்த அகதிகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை, அவர்கள் நாடற்றவர் கள் எனும் நிலையில் இருப்பதுதான்.
எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
அகதிகள் சமூகரீதியிலான பிரச்சினைகளாலும் உளவியல் சிக்கல்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதை, தற்கொலைகள், பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துதல், குழந்தைத் திருமணங்கள் போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. நடுத்தர வயது அகதிகள் பலர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை யில் இருக்கிறார்கள். முகாம்களில் இருக்கும் அகதிகளில் 40% பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார், 28,500 அகதிகள் நாடற்றவர்கள் என்று சொல்லப்படும் நிலையில், அவர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவாக 2003 மற்றும் 2009-ல் சட்டத் திருத்தங்களைச் செய்தது இலங்கை அரசு. அகதிகள் நாடு திரும்புவதன் மூலம், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மாகாணத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம் அதிகரிக்கும் என்பதால், இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அதை விரும்பக்கூடும்.
எனினும், அகதிகள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்புவது என்பது மந்தமாகத்தான் நடந்துவருகிறது. 2009 மே மாதம் ஈழப் போர் முடிவுக்கு வந்த சமயத்திலும், நாடு திரும்ப விருப்பம் உள்ளவர்களுக்கு விசா கட்டணத்திலும், அனுமதிக்கப்பட்ட காலத்தைவிடவும் அதிக நாட்கள் தங்கியிருந்தால் விதிக்கப்படும் அபராதத்திலும் சலுகை அளிப்பதாக மத்திய அரசு அறிவித்தபோதும்கூட இலங்கைக்குத் திரும்புவதில் பலர் முன் வரவில்லை. அகதிகளுக்கான ஐநா ஆணையத்தின் அலுவலகத்துடன் இணைந்து, இந்திய அதிகாரிகள் கொண்டுவந்த திட்டத்தின் மூலம், கடந்த எட்டு ஆண்டுகளில், அகதிகளில் சுமார் 10% (9,238 பேர்)தான் இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார்கள். அகதிகள் நாடு திரும்ப மறுப்பதற்குச் சில முக்கியக் காரணங்கள் உண்டு.
தமிழ்நாட்டில் உள்ள 107 முகாம்களில் வசிக்கும் சுமார் 62,000 அகதிகள் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு நிவாரண உதவிகளைப் பெறுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில், அகதி முகாம்களைச் சேர்ந்த பல மாணவ, மாணவிகள் தொழில்சார் பட்டப் படிப்புகளில், குறிப்பாகப் பொறியியல் படிப்புகளில் சேரும் வகையில் தமிழக அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. தமிழகத்தில் முகாம்கள் அல்லாத வெளியிடங்களில் தங்கியிருக்கும் அகதிகள் சமூகத்தைச் சேர்ந்த 36,800 மாணவர்களும் இதில் பலனடைந்திருக்கிறார்கள்.
முக்கிய கவலை
வீடுகளின் தரம், பணிகளின் தன்மை ஆகியவற்றை எல்லாம் தாண்டி, இலங்கை அகதிகள் வாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள். அத்துடன், முழுக்க தமிழ்நாட்டிலேயே வளர்ந்த ஒரு புதிய தலைமுறை உண்டு. யாழ்ப்பாணம், முல்லைத் தீவு நகரங்களின் நினைவுடன் வாழும் தங்கள் பெற்றோர்போல் அல்லாமல், இலங்கை என்பது அவர்களுக்குக் கிட்டத்தட்ட வேற்று நாடுதான் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!
இலங்கையில் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதுதான் அகதிகளின் முக்கியக் கவலை. அகதிகளுக்கான ஐநா ஆணையம் 2015-ல் இலங்கை திரும்பிய அகதிகளிடம் நடத்திய ஆய்வில், அங்கு வாழ்வாதார வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கின்றன என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இலங்கையின் பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்த நிலைமையில் தற்போதைக்கு முன்னேற்றம் இருக்காது என்றே தெரிகிறது.
மலையகப் பகுதிகளிலிருந்து வந்த அகதிகள் நிலம் அற்றவர்கள். குறிப்பிட்ட அளவு நிலமாவது வழங்கப்படாவிட்டால், அவர்கள் நாடு திரும்ப விரும்ப மாட்டார்கள். தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய மலையகப் பகுதித் தமிழர்கள் தற்போது ஆர்வம் காட்டுவதில்லை எனும் நிலையில், அப்பகுதிகளின் நிலவரத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
தற்போதைய சூழலில், அகதிகள் நாடு திரும்பும் விஷயத்துக்கு இந்தியாவும் இலங்கையும் முன்னுரிமை வழங்குவதுபோல் தெரியவில்லை. ஆனால், இதேநிலைமை தொடர்ந்தால் இரு நாடுகளாலும் சமாளிக்க முடியாது. குறிப்பாக, இந்தியாவில் அதிக அளவில் அகதிகள் இருப்பது தமிழகத்தில்தான். இப்பிரச்சினை யில் விரைவில் தீர்வை எட்டுவது என்பது இரு நாடுகளும் முனைப்புக்காட்டுவதில்தான் இருக்கிறது. இதன் மூலம், இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு நீண்டகாலப் பிரச்சினை முடிவுக்குவரும் என்றால், இலங்கையைப் பொறுத்தவரை, இன நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிக்கு இது வழிவகுக்கும்.
உண்மையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள், இலங்கையுடனான பேச்சுவார்த்தையைப் புதுப்பிக்க மத்திய அரசுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியிருக்கின்றன. இலங்கை அகதி கள் சமூகம், தமிழக அரசு, இலங்கையின் வடக்கு மாகாண கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இலங்கை அகதிகள் தாங்களாகவே நாடு திரும்புவதற்கு இந்தியாவும் இலங்கையும் விரிவான திட்டங்களைக் கொண்டுவரலாம்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கியதுபோல், இந்தியாவிலேயே தங்க விரும்பும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதுபற்றி மத்திய அரசு பரிசீலிக்கலாம். பிரச்சினைக்கு உரியவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதை மறுக்கும் உரிமையும் அரசுக்கு உண்டு. எல்லாமே சரியாக நடந்தால், தமிழகத்தில் இருக்கும் அகதிகள் முகாம்களை மூடிவிட முடியும். இலங்கை யின் உள்நாட்டுப் போரைவிட நீண்ட காலமாக நடந்துவரும் ஒரு அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் முடியும்!
© ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago