பழம்பெருமையை மீட்கும் பக்கிங்ஹாம் கால்வாய் - கழிவுநீரை நன்னீராக மாற்றும் ‘உயிரியல் சீரமைப்பு’ பணி தீவிரம்

By துரை விஜயராஜ்

சென்னை: தமிழகத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்களில் எல்லாம் தண்ணீர் ஓடும். ஆனால், தலைநகரான சென்னையில் மட்டும் அப்படியே நேரெதிராக கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில், நீர் வழிப்போக்குவரத்துக்காக சென்னையில் வெட்டப்பட்ட பல கால்வாய்கள், அவர்களின் ஆட்சிக்கு பிறகு பராமரிப்பு இல்லாமல், மரண படுக்கையில் மடிந்து கிடக்கின்றன.

தற்போது, பக்கிங்ஹாம் கால்வாயில் 2 கி.மீ தூரத்துக்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, அதில் ஓடும் கழிவுநீரை, சுத்தமான நீராக மாற்றும் பணி நடந்து வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பக்கிங்ஹாம் கால்வாய் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் செயற்கையாக உருவாக்கப் பட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சம் காரணமாக, மக்களுக்கு வேலை கொடுப்பதற்கு, சுமார் 5 கி.மீ தூரத்துக்கு வெட்டப்பட்டு, அதன்பிறகு பல்வேறு நீர் நிலைகளுடன் இணைக்கப் பட்டு, மிகப்பெரிய கால்வாயாக பக்கிங்ஹாம் மாறியது. இந்த கால்வாய் மூலமாக வணிகம், போக்குவரத்து என 1960-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாடும், ஆந்திராவும் பெரும் பயனை அடைந்து வந்தன. தென்னிந்தியாவின் முக்கிய நீர் வழிப் பாதையாகவும் ஒரு காலத்தில் பக்கிங்காம் கால்வாய் அமைந்திருந்தது.

ஆந்திரா மாநிலத்தையும், தமிழகத்தையும் உள்ளடக்கிய, இந்த கால்வாய், காலப்போக்கில், ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு, பராமரிக்கப்படாமலும், பல்வேறு ஆக்கிரமிப்புகள், இயற்கை சீற்றங்களாலும் தனது அடையதளத்தை இழந்து, தற்போது சென்னையில் கழிவுநீரோடும் கால்வாயாக இருக்கிறது. இந்நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பக்கிங்ஹாம் கால்வாயை புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் சிஎம்டிஏ, நீர்வளத் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதில் பக்கிங்ஹாம் கால்வாயை புனரமைத்து, அழகுப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிலையில், தற்போது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட் பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் பைகிராப்ட்ஸ் சாலை முதல் லாக் நகர் வரையிலான சுமார் 2 கி.மீ தூரம், கழிவு நீரை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த நிறுவனம் கால்வாயில் 5 இடங்களில் தடுப்புகள் அமைத்து, கால்வாயில் ஓடும் திடக்கழிவுகளை அகற்றி வருகின்றனர். மேலும், அந்த இடங்களில் ‘டோசிங் பாயின்ட்’ (நுண்ணுயிர் கலவை தெளிக்கும் இடம்) அமைக்கப்பட்டு நுண்ணியிரிகள் கலந்த கலவையை பக்கிங்ஹாம் கால்வாயில் தெளித்து வருகின்றனர்.

இந்த நுண்ணியிரிகள் கூட்டமைப்பு, பக்கிங்காம் கால்வாயில் ஓடும் கழிவுகளை தூய்மையான நீராக மாற்றும் எனவும் தற்போது இந்த பணியானது சோதனை அடிப்படையில் நடைபெறுவதாகவும், சோதனை வெற்றி அடைந்தால் பக்கிங்ஹாம் கால்வாய் முழுவதும் இந்த பணிகள் விரிவுப்படுத்தப்படும் என்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘மும்பை, உத்திரபிரதேச மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வெற்றி அடைந்துள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக பக்கிங்ஹாம் கால்வாயில் ‘உயிரியல் சீரமைப்பு’ முறையில், கால்வாயில் ஓடும் கழிவு நீரை நுண்ணுயிர் கலவைகளை தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. சோதனை முறையில் நடந்து வரும் இந்த பணி, வெற்றி அடைந்தால், சென்னையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த பக்கிங்ஹாம் கால்வாய் முழுவதும் இந்த பணி மேற்கொள்ளப்படும்,’ என்றனர்.

இதுகுறித்து, பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவை அகற்றும் பணியில்(உயிரியியல் சீரமைப்பு) ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கூறும்போது, ‘இந்த கால்வாயில் தினந்தோறும் 40 முதல் 50 எம்எல்டி தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீரை உயிரியல் சீரமைப்பு முறையில் நல்ல நீராக மாற்றுகிறோம். 5 இடங்களில் நுண்ணுயிர் கலவைகளை சீராக கழிவுநீரில் தெளிக்க ‘டோசிங் பாயின்ட்’ அமைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், நுண்ணுயிர் கலவைகளை வாகனங்களில் சிறிய ரக டேங்கில் கொண்டு வந்து தெளிக்கப்படுகிறது.தற்போது, சோதனை அடிப்படையில் இந்த திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நீரில் உயிரியல் சீரமைப்பு நடைபெறுவதற்கு, 20 முதல் 30 நாட்கள் தேவைப்படும்.

இது முழுமையாக முடிந்த பிறகு, இந்த தண்ணீரை ஆய்வகத்தில் சோதனைக்குட்படுத்தி, அதில் உள்ள கழிவுகளின் அளவை கணக்கிடும் போது, முடிவு வெற்றிகரமாக அமைந்தால், இந்த திட்டம் முழு வீச்சில் விரிவுப்படுத்தப்படும். இந்த உயிரியல் சீரமைப்பு முறையால், கால்வாயில் ஓடும் நீரில் இருந்து வீசும் துர்நாற்றத்தை வெகு
வாக குறைத்து கட்டுப்படுத்த முடியும். மேலும், கடலில் சென்று சேரும்போது, கடல் நீர் மாசடைவதும் குறையும்’ என்றனர்.

மீண்டும் படகு போக்குவரத்து: ஆங்கிலேயர் காலத்தில் பக்கிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து இருந்தது. அரிசி, பருத்தி, மீன், கருவாடு உள்ளிட்ட வணிக போக்குவரத்துக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பெரிதும் பயன்பட்டது. மதராசப் பட்டினம் படத்தில் கூட சென்ட்ரல் எதிரே காட்டப்படும் படகு சவாரி காட்சி களும் பக்கிங்ஹாம் கால்வாய் தான்.

இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுத்து புனரமைக்கும் வகையில், பைகிராப்ட்ஸ் சாலை முதல் லாக் நகர் வரையிலான சுமார் 2 கி.மீ நீளத்தில் மீண்டும் படகு போக்குவரத்து கொண்டு வந்து, சுற்றுலா தலமாக மாற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இத்திட்டம் அந்த தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக, கால்வாயை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும், கால்வாயை புனரமைக்கும் பணியிலும் சிஎம்டிஏ, நீர்வளத் துறை, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், படகு போக்குவரத்துக்கான ஆய்வுகளும் அப்பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்