1973 செப்டம்பர் 11 - சீலேயின் குடியரசுத் தலைவர் சால்வதோர் அய்யந்தே படுகொலை செய்யப்பட்ட நாள். இன்று அவரது 50ஆவது நினைவு நாள்.
அமெரிக்க சிஐஏ-வின் திட்டப்படி, தளபதி பினோசெத் ஆணைப்படி, சீலே ராணுவத்தினர் செய்த படுகொலை, ஊடகங்களில் ‘அய்யந்தே தற்கொலை’ என்று அறிவிக்கப்பட்டது. ஊரடங்கினால் மௌனிக்கப்பட்ட சீலேயில், குடியரசுத் தலைவருக்கு முறையான சவஅடக்கம்கூட நடைபெறவில்லை. சர்வாதிகாரக் காட்டாட்சியில் ஆயிரக்கணக்கில் படுகொலைகள் நடந்தேறின; எண்ணற்றோர் புலம்பெயர்ந்தனர்.
அய்யந்தேவின் நெருங்கிய நண்பரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான கவிஞர் பாப்லோ நெரூதா, அய்யந்தே கொல்லப்பட்டதற்குப் பன்னிரண்டாம் நாள் (செப்டம்பர் 23) உயிரிழந்தார். மருத்துவமனையிலிருந்து சடலத்தைக் கொண்டுவருவதற்கு முன், ராணுவம் நெரூதாவின் வீட்டை இடித்துவிட்டது. ஆனால், அவரது இறுதிச் சடங்கின்போது - சூழலின் இறுக்கத்தில் - அடக்குமுறையை மீறி, அய்யந்தே படுகொலைக்கான முதல் எதிர்ப்புக் குரல் வெடித்துப் புறப்பட்டது.
என்ன செய்தார் அய்யந்தே? காலியான கருவூலமும் நான்கு பில்லியன் டாலர் கடனுமாகத் தத்தளித்த சீலேவில் பதவியேற்றிருந்த சால்வதோர் அய்யந்தே, ஏன் இப்படிப் படுகொலை செய்யப்பட்டார்? அமெரிக்காவிடம் கூடுதல் கடன்களை வாங்காததோடு, சீலேவின் மீட்சிக் கான நடவடிக்கைகளை மேற்கொண்டதே அய்யந்தே செய்த ‘தவறு’கள்!
» மேக்கப் இல்லாமல் த்ரிஷா நடித்துள்ள ‘தி ரோட்’
» திருப்பத்தூர் | வேன் மீது லாரி மோதி விபத்து - ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழப்பு
1. வங்கிகளையும் தொழில் நிறுவனங்களையும் அய்யந்தே அரசுடைமை ஆக்கினார்; 2. பெருநில உடைமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்த 60 லட்சம் ஏக்கர் விளைநிலங்களை அரசுடைமை ஆக்கினார்; 3. கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிய தாமிரச் சுரங்கங்களை அரசுடைமை ஆக்கினார்; மூன்றாம் உலக நாடுகளுக்கான ‘புதிய சர்வதேச பொருளாதார முறைமை’யை (New International Economic Order) உருவாக்க முயன்றார்; 4. தலைநகர் சான்தியாகோ தெ சீலேயில், 1972இல் நடைபெற்ற ஐ.நா. வர்த்தகம்-வளர்ச்சிக்கான மாநாட்டில் (UNCTAD) ‘சீலேயின் சர்வதேசப் பொருளாதார உறவுக்கான திட்ட’த்தை முன்வைத்தார். சீலே மட்டுமல்ல, காலனி ஆட்சியிலிருந்து மீண்ட எல்லா நாடுகளும் தற்சார்பை மேம்படுத்தவே செல்வத்தைப் பயன்படுத்த முயல்கின்றன. ஆனால், அமெரிக்காவின் செல்வம், பிற நாடுகளை அழிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருகிறது.
அமெரிக்காவின் அடாவடித்தனம்: ஜனநாயகப் பாதையில் பதவிக்கு வந்த அய்யந்தே, சோஷலிசப் பாதையில் முன்னேறினால், லத்தீன் அமெரிக்காவில் புரட்சிகர கூபாவின் (Cuba) காஸ்த்ரோவை விடச் செல்வாக்குமிக்க தலைவராகிவிடுவார் என்று கருதினார், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிஞ்சர். சீலே கம்யூனிஸ்ட் நாடாக மாறிவிடாமல் ‘காப்பாற்ற’, சிஐஏ இயக்குநர் ரிச்சர்டு ஹெல்ம்ஸ் நிதி ஒதுக்கீடு செய்தார். சீலேயின் பொருளாதாரத்தை மீண்டும் சீரழிக்கவும், அய்யந்தேவைக் கொன்று, பினோசெத் தலைமையில் ராணுவ சர்வாதிகாரத்தை நிறுவவும் அதிபர் ரிச்சர்ட் நிக்சன் உவப்புடன் ஒப்புதல் அளித்தார்.
கூபாவில் நிகழ்ந்த ‘தவறு’ வேறெங்கும் நடந்துவிடக் கூடாதென்று நிக்சன் கருதியதால், அடுத்த 10 ஆண்டுகள் சீலே, அர்கென்தினா (Argentina), உருகுவாய் (Uruguay) ஆகிய தென் அமெரிக்கத் தென்கூம்பு நாடுகளில் ரத்த ஆறு ஓடியது. ‘தி சூய்சைட் மியூசியம்’ (ஆரியெல் தார்ஃப்மேன், சீலே), ‘தி ஹௌஸ் ஆஃப் ஸ்பிரிட்ஸ் (இசாபெல் அய்யந்தே), ‘மதர்ஸ் அண் ஷேடோஸ்’ - தமிழில்: நிழல்களின் உரையாடல் (மார்த்தா த்ராபா, அர்கென்தினா), ‘இமேஜினிங் அர்கென்தினா (லாரென்ஸ் தார்ன்டென்), ‘டேஸ் அண் நைட்ஸ் ஆஃப் லவ் அண் வார் (எதுவார்தோ கலியானோ, உருகுவாய்) என இந்த ரத்த ஆற்றின் போக்கைக் கண்ணால் கண்ட சாட்சிகள் எழுத்தில் பதிவுசெய்துள்ளார்கள். இந்த இருண்ட காலத்தின் படுகொலைகள், 2009 ஈழப் போரின் படுகொலைகளுக்கு ஒப்பானவை.
இத்தகைய ‘ஜனநாயக மீட்பு’ நடவடிக்கைகளுக்கு இடையே, 1977இல் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற ஜிம்மி கார்ட்டர், சிஐஏ-வின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளை நிறுத்திவைத்தார்.
உசுப்பிவிடப்பட்ட சிஐஏ: 1979இல், நிகாராகுவாவில் சாந்தினிஸ்தா புரட்சி வெற்றியடைந்தது. ‘வாட்டர் கேட்’ ஊழல் அம்பலமானது. வியத்நாமில் தோல்வி ஏற்பட்டது. எத்தியோப்பியா, அங்கோலா, நமீபியா, ஜிம்பாப்வே, கிரெனாதா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் புரட்சிகர இயக்கங்கள் வெற்றியடைந்தன. இவ்வளவு தாழ்ந்துவிட்ட கௌரவத்தை மீட்க ரொனால்டு ரீகன் மீண்டும் சிஐஏ-வை உசுப்பினார்.
1979இல் குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் இணைந்து, ‘ஜனநாயகத்துக்கான திட்ட’த்தை உருவாக்கின. 1982இல் உலகெங்கும் ‘ஜனநாயகமும் மனித வளர்ச்சியும் மேம்பட’ பல்லாயிரம் வலதுசாரி பத்திரிகையாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். 1983இல் ‘தேசிய ஜனநாயகத்துக்கான அறக்கொடை’ (என்இடி) உருவாக்கப்பட்டது. அதற்கும் அமெரிக்க அரசுக்கும் தொடர்பில்லை என்ற செய்தி ஊடகங்களால் பரப்பப்பட்டது. கூப அரசுக் கவிழ்ப்புக்கு என்இடி நிதியை வாரி வழங்கியது. கொடுங்கோன்மை அரசுகளுக்கு எதிரான மக்கள் இயக்கங்களை உளவு பார்த்து ஒடுக்கும் வேலையையும் ‘அரசு சாரா அமைப்புகள்’ செவ்வனே செய்தன.
1989இல், போப் ஜான் பால்-II உடன் இணைந்து, போலந்து நாட்டின் கம்யூனிச ஆட்சியைக் கவிழ்த்தார் ரீகன். கூபாவில் சிஐஏ கைக்கூலிகள் மக்கள் மீது கொடூரத் தாக்குதல்களை நடத்தின. சர்வதேச ஊடகங்களில் இவை ‘கூப அரசின் மனித உரிமை மீறல்கள்’ எனச் சித்தரிக்கப்பட்டன.
1998இல் வெனிசுவேலா (Venezuela) தேர்தலில் வென்று, ஊகோ சாவேஸ் பதவிக்கு வந்தார். நாட்டின் எண்ணெய் வளங்களை அரசுடைமை ஆக்கி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக அமைப்பை நாட்டில் நிலைநிறுத்தினார். சாவேஸைக் கொல்லத் திட்டமிட்ட ‘சுமேத்’ என்கிற அரசு சாரா நிறுவனம், 2002இல் சாவேஸைக் கடத்திக் கொல்லும் திட்டத்திலும், 2004இல் பொது வாக்கெடுப்பில் (referendum) அவரை வீழ்த்துவதிலும் தோல்வியே கண்டது.
சீமோன் பொலீவாரின் வழித்தோன்றலான ‘செயல்வீரர் சாவேஸ் அலை’ 10 ஆண்டுகள் சுழன்றடித்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்புக்கு வழிகோலும் பரஸ்பரப் பொருளாதார உதவி, வர்த்தகம், சந்தை, லாப நோக்கின்றிக் கடனளிக்கும் வங்கி உள்ளிட்ட அமைப்புகளை அவர் நிறுவிவிட்டார்.
‘இளஞ்சிவப்பு அலை’: 2006இல், சீலேயில் முதல் முறையாகப் பெண் மருத்துவர் மிச்சேல் பச்சேலே குடியரசுத் தலைவரானார். அதே ஆண்டில், அய்மாரா பழங்குடி இனத்தவரான ஈவோ மொராலெஸ், பொலிவியாவின் குடியரசுத் தலைவரானார். ஜனநாயக சோஷலிஸ்ட்டுகளான ரஃபாயில் கொர்ரேயாவும் (ஈக்வதோர்), இனாசியோ லூலாவும் (பிரேசில்) பதவிக்கு வந்தனர். இதுவே லத்தீன் அமெரிக்க வரலாற்றில் ‘இளஞ்சிவப்பு அலை’ (Pink Tide) எனப்படுகிறது.
கடுஞ்சினம் கொண்ட அமெரிக்கா, சாவேஸை உயிரியல் தாக்குதலில் (Induced cancer) கொல்லமுயற்சித்தது. அதன் உண்மைத்தன்மை விவாதத்துக்குரியது. ஆனால், சாவேஸ் புற்றுநோயால்தான் இறந்தார். சாவேஸ் மறைவுக்குப் பின் (2013) பதவிக்கு வந்த நிக்கோலாஸ் மாதுரோவுக்கும் நிறையக் குடைச்சல்களைக் கொடுத்தது. ஐந்தே ஆண்டுகளில் (2018), இடதுசாரியான லோபெஸ் ஒப்ரதோர் மெக்சிகோவில் பதவிக்கு வந்தார். தொடர்ந்து பொலிவியா, பெரூ, கொலம்பியா, பிரேசில், சீலே ஆகிய நாடுகளில் இடதுசாரிகள் பதவிக்கு வந்து, லத்தீன் அமெரிக்காவில் ‘இரண்டாம் இளஞ்சிவப்பு அலை’யை எழுப்பியுள்ளனர்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அய்யந்தே படுகொலையோ, 638 முறை நடந்த காஸ்த்ரோ கொலை முயற்சிகளோ, 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சாவேஸ் மீதான படுகொலை முயற்சிகளோ லத்தீன் அமெரிக்காவில் இறையாண்மைமிக்க அரசுகள் உருவாவதைத் தடுத்துவிடவில்லை. 2001 செப்டம்பர் 11 அன்று, நியூ யார்க்கில் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களின் தகர்ப்பு, ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ என்ற பொய்யை வரலாறு நிராகரித்துவிட்டது. எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற, இஸ்லாமிய நாடுகளை அழித்தொழிக்க, அது ஒரு சப்பைக்கட்டு என்ற உண்மை வெளியாகிவிட்டது. அமெரிக்காவுக்கு அதன் மக்களே பாடம் புகட்டுவார்கள்; அப்போது பொலீவாரின் திட்டமான லத்தீன் அமெரிக்க ஒன்றியம் உருவாகக்கூடும்!
- அமரந்த்தா
மொழிபெயர்ப்பாளர்
தொடர்புக்கு: amarantha1960@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago