பொது சிவில் சட்டமும் அரசியல் நிர்ணய சபை விவாதமும்

By Guest Author

பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் நிர்ணய சபையில் இது குறித்த விவாதம் எவ்வாறு இருந்தது என்பதை விவரிக்கிறது இளம் வழக்கறிஞர் ஆர்.அனிருத் நாராயணன் எழுதியுள்ள இந்த கட்டுரை.

பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்சினை என்பது அரசியல் நிர்ணய சபையில் விவாதங்கள் தொடங்கிய காலத்திலிருந்தே இருந்துவரும் நீண்ட காலப் பிரச்சினையாகும். அரசியல் நிர்ணய சபையில் இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றபோது பல்வேறு அறிஞர்களுக்கிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக அரசமைப்புச்சட்டத்தின் நான்காவது பாகத்தில் 44ஆவது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, அரசு ஒரு பொது சிவில் சட்டத்தை இயற்றிட முயற்சித்திடும் என்று கூறப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நான்காவது பாகம் என்பது ‘அரசின் வழிகாட்டும் நெறி முறைகள்’ (‘Directive Principles of State Policy’) என்கிற தலைப்பின் கீழ் வருகிறது. வழிகாட்டும் நெறி முறைகள் என்பவை அரசு சட்டங்களை இயற்றும்போதும், கொள்கைகளை வகுக்கும்போதும் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான கொள்கைகள் மற்றும் சிந்தனைகளாகும். வழிகாட்டும் நெறிமுறைகளைக் கையாளவில்லை என்பதற்காக அரசு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. இவை இயற்கையாகவே வெறும் வழிகாட்டும் நெறிமுறைகள் மட்டுமேயாகும். இவற்றை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனில், அதற்காக, நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் தாக்கல் செய்ய முடியாது.

பொது சிவில் சட்டம் தொடர்பான அரசியல் நிர்ணய சபை விவாதம் என்பது, எதிர்காலத்தில் அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய ஒரு மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்தை எய்திட முடியும் என்கிற நம்பிக்கையுடன் இருந்தது. எனினும், பொது சிவில் சட்டம் தொடர்பாக முன்னெப்போதைக்காட்டிலும் இப்போது பிரச்சினைகள் அதிக அளவில் கிளப்பப்பட்டிருப்பதால், இது தொடர்பாக அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களை மீளவும் நுணுகி ஆராய்வது மிகவும் முக்கியமாகும்.

1948 நவம்பர் 23 அன்றுதான் முதன்முதலாக அரசியல் நிர்ணய சபையில் பொது சிவில்சட்டம் குறித்த விவாதம் கொண்டுவரப்பட்டது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், பண்டிட் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் போன்ற தலைவர்கள் பொது சிவில் சட்டம் குறிந்த சிந்தனையை ஆதரித்தவர்களில் முக்கியமானவர்கள். இந்தச் சட்டத்தை எதிர்த்தவர்களில் பிரதானமாக இருந்தவர்கள், சென்னையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மற்றும் உருதுக் கவிஞர் மௌலானா ஹஸ்ரத் மோஃஹானி உட்பட அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகித்த முஸ்லீம் உறுப்பினர்கள்.

ஒவ்வொரு மதத்தினரும் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள் அவர்களால் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருபவை என்றும் அவற்றை மாற்றக்கூடிய விதத்தில் ஒரு பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் அது கொடுங்கோன்மைமிக்கதாக இருந்திடும் என்றும், இது (நம் அரசமைப்புச் சட்டத்தின் 3ஆவது பாகத்தில் உள்ள) அடிப்படை உரிமைகளின் அங்கமாக இருந்திடும் மத உரிமைகளை மீறுவதாகும் என்றும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராகப் பிரதானமாக ஆட்சேபணை முன்வைக்கப்பட்டது. மேலும் நாடு பிரிவினைக்கு உள்ளாகியுள்ள நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால் சமூகப் பதற்ற நிலைமை உருவாகிடும் என்றும் கவலைகள் எழுப்பப்பட்டன.

இது தொடர்பாக, முகமது இஸ்மாயில் அரசமைப்புச் சட்டத்தின் 35ஆவது பிரிவிற்கு (தற்போதைய 44ஆவது பிரிவு) ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதாவது, பொது சிவில் சட்டத்தைத் தேர்வு செய்வதை குடிமக்களின் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும் என்றும், பர்சனல் சட்டங்கள் (personal laws) அமலில் இருக்கும்பட்சத்தில் அது பின்பற்றப்படலாம் என்றும் பொது சிவில் சட்டத்தைப் பின்பற்றாதவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை முஸ்லீம் உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். இவர்களில் சிலர் வேறு சில திருத்தங்களையும் அறிமுகப்படுத்தினார்கள். இவை இஸ்மாயில் முன்மொழிந்த திருத்தத்தை ஒட்டியே அமைந்திருந்தன.

இந்தத் திருத்தங்களை எதிர்த்த முதல் உறுப்பினர் கே.எம். முன்ஷி. சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பது என்பது அடிப்படையானது என்று ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது என்றும் எனவே பொது சிவில் சட்டத்தை வரையறுக்கும்போது இதனைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார். எனவே, முஸ்லிம்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அவர் கூறினார். மேலும், எந்தவொரு முன்னேறிய முஸ்லிம் நாடும் அந்தந்த நாடுகளில் வாழும் சிறுபான்மைக் குழுவினருக்காகத் தனித்தனியே தனிச் சட்டங்களைப் பெற்றிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட வாதங்கள், நாட்டின் ஒற்றுமை, பாலின சமத்துவம் மற்றும் நம் நீதி பரிபாலன அமைப்பு முறையின் நவீனமயம் என்பனவாக இருந்தன.

இதேபோல், முஸ்லிம் உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களை எதிர்த்துப் பேசிய அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், முஸ்லீம்களுக்காகத் தனி கிரிமினல் சட்டம் இருந்தபோது, பிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்ட பொது கிரிமினல் சட்டத்தை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்டார். மேலும் அவர், முஸ்லிம் உறுப்பினர்கள் காலனிய ஆட்சியாளர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையளவிற்குச் சொந்த மக்கள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, திருத்தம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்பு இப்பிரச்சினை மீது டாக்டர் அம்பேத்கர் பேசினார். நம்மைப் போன்று மிகப் பெரிய அளவிலான ஒரு நாட்டிற்கு பொது சிவில் சட்டம் இயற்றுவது சாத்தியமா என்று எதிர்த்தரப்பினர் எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் அளித்த அம்பேத்கர், "நாம் நம்முடைய நாட்டில் அனைத்து மனித உறவுகளையும் உள்ளடக்கிய விதத்தில் ஒரு பொது சட்டங்களைப் பெற்றிருக்கிறோம். எனவே ஒப்பீட்டளவில் பொது சிவில் சட்டம் என்பதும் ஒன்றுமில்லை. 1937 வரையிலும் வட கிழக்கு மாகாணங்களைத் தவிர, இந்தியாவின் இதர பகுதிகள் அனைத்திலும் முஸ்லீம்கள் இந்து வாரிசு சட்டத்தையே பின்பற்றிக் கொண்டிருந்தனர். 1937இல்தான் நாட்டின் இதரபகுதிகளில் வாழும் முஸ்லீம்களுக்கு இணையாக அனைத்து முஸ்லீம்களுக்கும் ஷரியத் சட்டம் கொண்டுவரப்பட்டது. பொது சிவில் சட்டம் இயற்றுவதன் நோக்கம் அனைத்துக் குடிமக்களையும், அவர்களுடைய தனிச் சட்டங்களுக்கு எதிராக முழுமையாக ஒரு பொது சிவில் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதல்ல. ஆயினும், பொது சிவில் சட்டத்தைப் பிரயோகிப்பது என்பது முற்றிலும் தன்னிச்சையானது என்கிற விதத்தில் இதுபோன்ற திருத்தங்கள் எதிர்கால நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படுவது சாத்தியமே" என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும், அன்றைக்கிருந்த அதே நிலைமை இன்றைக்குத் தொடர வேண்டும் என்று கோருவது நியாயமல்ல. தனிச் சட்டங்களைப் பாதுகாப்பது என்பது அரசமைப்புச் சட்டத்தின் 25(1)ஆவது பிரிவின்படி இப்போதும் சரியாகப் பொருந்தக்கூடிய ஒன்றே. அதாவது, பொது ஒழுங்கிற்கு, அறநெறிக்கு அல்லது சுகாதாரத்திற்குப் பங்கம் விளைவித்தால் மட்டுமே தனிச் சட்டங்கள் மீதான தலையீட்டை அனுமதிக்க முடியும்.

மேற்படி விவாதங்களைத் தொடர்ந்து சமூகம் இத்தனை ஆண்டுகளில் பொது சிவில் சட்டத்திற்கு நெருக்கமாகி இருக்கிறது என்று கூறுவதே நியாயமாகும். உதாரணமாக, 2005க்குப்பின் பெண்களும்கூட, சொத்தில் பங்குதாரர்கள் என்றும், 1956ஆம் ஆண்டு இந்து வாரிசு சட்டத்தின்படி மூதாதையர் சொத்தில் பங்கு பெறும் உரிமை படைத்தவர்கள் என்றும் கருதப்படத் தொடங்கிவிட்டார்கள். ‘முத்தலாக்’ நடைமுறையை உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்திருக்கிறது.

எனவே, இப்போது பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தவது என்பது, அன்றைய தினம் அரசியல் நிர்ணய சபையில் சில உறுப்பினர்கள் அச்சப்பட்டதுபோல, பெரிய அளவில் மாற்றங்களை விளைவிக்காது; நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தாது. நம் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களால் கற்பனை செய்யப்பட்ட ஒரு பொது சிவில் சட்டம் நமக்குத் தேவை. ஜீவித்திருப்பதற்கு ஒரே வழி முன்னேறுவதேயாகும்; நீண்ட காலத்திற்கு எவ்வித மாற்றமுமின்றி இருந்திடும் சமூகம் விரைவில் அழிந்துவிடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

> முந்தைய அத்தியாயம்: ‘பொது சிவில் சட்டம்’ முஸ்லிம்களை குறிவைக்கிறது: முனைவர் ஜெ.ஹாஜாகனி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்