இன்னொரு திருப்புமுனையாகுமா தினகரன் வெற்றி?

By ஆர்.முத்துக்குமார்

யிரம் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு பெரும் அதிர்வுகளுடன் வந்திருக்கிறது. ஓர் இடைத்தேர்தலில் சர்வபலம் பொருந்திய கட்சிகளையெல்லாம் வீழ்த்தி, சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது சமகாலத் தமிழகத் தேர்தல் வரலாற்றில் நடந்திராதது. உண்மையாகவே சாதித்திருக்கிறார் தினகரன்.

மாநில ஆளுங்கட்சி, பிரதான எதிர்க்கட்சி, மத்திய ஆளுங்கட்சி என்ற முப்பெரும் கட்சிகளுக்கு எதிராகப் பெற்றிருக்கும் வெற்றியைப் ‘பணத்தால் பெற்ற வெற்றி’ என்று மட்டும் சுருக்குவது சரியாக இருக்காது. ஆளுங்கட்சி பணத்தோடு முழு அதிகாரத்தையும் பிரயோகித்துப் போட்டியிட்டதை நாம் மறந்துவிடலாகாது. ஆக, இந்த முடிவுக்குப் பின்னால் பல நுட்பமான அம்சங்கள் இருக்கின்றன.

பணப்பட்டுவாடா காரணமாக ரத்துசெய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்தபோதெல்லாம் தேர்தல் ஆணையம் சொன்ன பதில், “இடைத்தேர்தலை நேர்மையாக நடத்து வதற்கு ஏற்ற சுதந்திரமான சூழல் வரும்போது நடத்தப்படும்” என்பதுதான். பல மாதங்களாக இழுபறியாக இருந்த இரட்டை இலை விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்பட்டு, பழனிசாமி- பன்னீர்செல்வம் தரப்புக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட மறுநாள் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் சொன்ன ‘சுதந்திரமான சூழல்’ இதுதானா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

‘சின்ன’ சிக்கலும் தேர்தல் களமும்

இரு அணிகளும் இணைந்துவிட்ட நிலையில், அதிமுகவின் வேட்பாளராகக் களமிறங்கப்போவது பழனிசாமி ஆதரவாளரா, பன்னீர்செல்வம் ஆதரவாளரா என்ற சர்ச்சையும் உருவானது. இறுதியில் பன்னீர்செல்வத்தின் கை ஓங்கி, மதுசூதனன் நிறுத்தப்பட்டார். தனிக்கட்சி தொடங்கமாட்டேன், சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என்று சொல்லிக் களமிறங்கினார் தினகரன். திமுக தனது பழைய வேட்பாளர் மருதுகணேஷையே மீண்டும் நிறுத்தியது. பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இருந்தன.

சுயேச்சை வேட்பாளர் தினகரனுக்கு அவர் ஏற்கெனவே போட்டியிட்ட தொப்பி சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று பாஜகவினர் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தவிரவும், வேறு சில வேட்பாளர்களும் தொப்பி சின்னத்தைக் கோரவே, விசில், கிரிக்கெட் மட்டை என்று நகர்ந்தார் தினகரன். இறுதியில், குக்கர் சின்னம் கிடைத்தது. “எதிரிகளின் ‘பிரஷ’ரை அதிகரிக்கச் செய்யவே ‘பிரஷர் குக்கர்’ சின்னத்தைப் பெற்றோம்” என்றார் தினகரன்.

இடைத்தேர்தல் பிரசாரம் தொடங்கும்போது களத்தை மூன்று அம்சங்கள் சூழ்ந்திருந்தன. ஒன்று, அணிகள் இணைந்து, இரட்டை இலை சின்னமும் கிடைத்துவிட்ட நிலையில், ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற நெருக்கடி பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்புக்கு இருந்தது. இரண்டு, ஜெயலலிதா இல்லாத, அதிமுக பிரிந்துகிடக்கின்ற நிலையில் வெற்றி பெறாவிட்டால் எப்போது திமுக வெற்றிபெறும் என்ற நெருக்கடி நிரம்பிய கேள்வியோடு தேர்தலில் இறங்கியது திமுக. கட்சி, ஆட்சி, சின்னம் எதுவுமே கையில் இல்லை என்றாலும்கூட தன்னால் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையில் களமிறங்கினார் தினகரன்.

மாறிய காட்சிகள்

ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த சமயத்தில்கூட ஆர்.கே.நகரில் முதல்வரும் துணை முதல்வரும் சூறாவளிச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர். திமுகவும் மண்ணின் மைந்தர் மருதுகணேஷ் என்று சொல்லிப் பிரசாரத்தில் இறங்கியது. ஆனால் இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் தினகரன் களத்தில் இறங்கினார். சொந்த ஊரில் இருந்தெல்லாம் தொண்டர்களை அழைத்துவந்து, அவர்களைத் ‘தொழில்நுட்ப’ரீதியிலான களப்பணிகளில் ஈடுபடுத்தினார். ஆரம்பத்தில் திமுக, அதிமுகவுக்குமான போட்டிக்களமாக இருந்த ஆர்.கே.நகர் மெல்ல மெல்ல அதிமுக - தினகரனுக்கான போட்டிக்களமாக மாறியது.

இந்த இரு தரப்பும்தான் பணப்பட்டுவாடாவில் அதிக அளவில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நான்காயிரம், ஆறாயிரம், பத்தாயிரம் என்றெல்லாம் விதவிதமாக தொகை பற்றிப் பேசப்பட்டது. இருபது ரூபாய் நோட்டுகள் ‘டோக்கன்’களாகப் பயன்படுத்தப்படுகிறது என்றார்கள். இன்னும் இன்னும் பல நூதன வழிகள். ஒருகட்டத்தில், பணப்பட்டுவாடாவைத் தடுக்காவிட்டால் தேர்தல் நடக்காது என்றார் தமிழிசை. இடைத்தேர்தலையே நிறுத்த வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன.

அதிமுகவும் தினகரனும் களத்தில் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்த தருணத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் என்ன செய்துகொண்டிருக்கிறார், ஏன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை, அரவக்குறிச்சிக்குக் காட்டிய ஆர்வத்தை ஏன் ஆர்.கே.நகருக்குக் காட்டவில்லை என்பன போன்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுந்தன.

ஆளுங்கட்சி சர்வபலத்துடன் களமாடிக்கொண்டிருக்க, எதிர்க்கட்சியோ களத்தில் கவனமின்றியிருக்க, இடையில் புகுந்து வெற்றிக் கோட்டையைக் கைப்பற்றியிருக்கிறார் தினகரன். கடந்த தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளையும் இந்தத் தேர்தலில் பெற்றுள்ள வாக்குகளையும் ஒப்பீடுசெய்தால், தினகரனின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சூத்திரத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

தினகரனின் அணுகுமுறை

உண்மையில், இந்தத் தேர்தலில் தினகரன் எடுத்த துணிகர முயற்சி என்பது ‘இரட்டை இலையை வீழ்த்துவேன்’ என்று சொன்னதுதான். எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகளின் எதிர்வினைக்கு உள்ளாவோம் என்றெல்லாம் கவலைப்பட்டு ஒதுங்கி நிற்காமல், மாநில ஆளுங்கட்சியின் தலைமையில் இருக்கும் வெற்றிடம், பிரதான எதிர்க்கட்சியிடம் இருக்கும் சுணக்கம், மத்திய ஆளுங்கட்சியின் அதிகார பலத்துக்குப் பொருந்தாத களபலம் ஆகியவற்றைக் கணக்கிட்டு, இரட்டை இலையை வீழ்த்தி இரட்டை இலையை மீட்பேன் என்று தினகரன் சொன்னது முக்கியமான நகர்வு. அது அவருக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

சரி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டார். அடுத்தது என்னவாக இருக்கும்?

மூன்று மாதங்களில் பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்புவேன் என்று சொல்லியிருக்கிறார் தினகரன். தேர்தலுக்கு முன்பும் இதைத்தான் சொன்னார். ஆனால் அதை அவரால் சாதிக்க முடியவில்லை. தற்போது நிலைமை வேறு. கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்கு எட்டாத எதிரிகளையெல்லாம் தாண்டி அவர் பெற்றிருக்கும் வெற்றி அதிமுக தொண்டர்களை, முக்கியமாக, அதிமுக எம்.எல்.ஏக்களை யோசிக்கவைக்கும். அதிமுகவின் எதிர்காலம் தினகரன்தான் என்று அவர்கள் மனங்களில் நம்பிக்கைக்கீற்று தென்பட்டால், அவர்கள் அணி மாறுவதற்கு அரை நொடிகூட அதிக அவகாசம்தான். அணி மாற்றம் நிகழ்ந்தால் அடுத்தது ஆட்சிக் கவிழ்ப்புதான்.

இனி என்ன?

இங்கே கவனிக்க வேண்டிய அம்சம், இந்த நிமிடம் வரை ஆட்சி மாற்றம் பற்றிப் பேசும் தினகரன், அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதி காட்டுவாரா என்பதுதான். ஆட்சியே கவிழ்ந்தாலும், அடுத்துவரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதற்கு அவ்வளவு உத்தரவாதமில்லை. அதற்குப் பதிலாக, ‘நாங்களெல்லாம் ஒரு தாய் மக்கள்’ என்று சொல்லி முதல்வருடன் கைகுலுக்கினால் அது ஆகப்பெரிய அரசியல் திருப்பமாக அமையும். தேர்தலில் தோற்று, மத்திய அரசின் அழுத்தங்களிலிருந்து தப்பிக்க முதல்வரும்கூட அந்த முடிவுக்குத் தயாராகலாம்; அவர் வசமுள்ள முதல்வர் பதவி அப்படியே இருக்கும் என்று உத்தரவாதம் கிடைத்தால்!

ஆட்சிக்காலம் முடிவதற்குள் அதிமுகவை ஓரளவுக்கு வலுப்படுத்தவும் முடியும், ஆர்.கே.நகர் வெற்றியைக் காட்டி தினகரனை ஒரு தலைவராக முன்னிறுத்த முடியும். அது அடுத்த தேர்தலில் கணிசமான பலனைத் தரக்கூடும். இதற்கெல்லாம் முதல்வர் தயாராக இருப்பாரா, அப்படியே தயாராக இருந்தாலும், அதற்கு டெல்லி அனுமதி இருக்குமா என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறி. பலவீனமான பழனிசாமி – பன்னீர்செல்வம் அணியை எத்தனை நாட்களுக்குத்தான் ஆதரிப்பது என்று டெல்லி யோசித்தால், காட்சிகள் மின்னல் வேகத்தில் மாறக்கூடும்.

இந்த இடத்தில் திமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதும் முக்கியமான கேள்வி. திமுக கணித்தபடி தினகரனின் வெற்றி அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தினால், பிரச்சினையில்லை. வரும் தேர்தலில் வெற்றி எட்டிவிடும் தூரம்தான். பென்னாகரத்தில் டெபாசிட் இழந்த அதிமுக உடனடியாக ஆட்சியைப் பிடித்தது வரலாறு. அது திமுகவுக்கும் பொருந்தும். மாறாக, தினகரனின் வெற்றியையே வசமாகப் பிடித்துக்கொண்டு அதிமுகவில் எல்லா அணிகளும் ஜெயலலிதா சமாதியில் தியானமிருந்துவிட்டு, கோட்டைக்குக் கிளம்பிவிட்டால், திமுகவுக்கான ஆபத்து அடிவாசலை நெருங்கிவிட்டது என்று பொருள். எப்படிப் பார்த்தாலும் தினகரனின் வெற்றி தமிழக அரசியல் களத்தில் ஒரு திருப்புமுனை வெற்றிதான்!

- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர்.

‘தமிழக அரசியல் வரலாறு’

முதலான நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்