"திருமணம், மணவிலக்கு, வாரிசுரிமை, வக்ஃப் சொத்து நிர்வாகம் ஆகிய நான்கில் மட்டும் முஸ்லிம்களுக்கென தனியார் சட்டங்கள் உள்ளன. பொதுசிவில் சட்டத்தைக் கோருபவர்கள், எல்லோருக்கும் ஒரே மாதிரி சட்டம் இருப்பது போலவும், முஸ்லிம்களுக்கு மட்டும் தனியார் சட்டம் இருப்பது போலவும் ஒரு மாயையைத் தோற்றுவிக்கின்றனர்" என்கிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் ஜெ. ஹாஜாகனி. இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது.
வேறெந்த நாட்டிற்கும் இல்லாத இந்தியத் திருநாட்டிற்கே உரிய தனிச்சிறப்புகளில் தலையாயது வேற்றுமையில் ஒற்றுமை. வேற்றுமைகளை ஒற்றுமையாகக் கொண்டாடும் இத்தேசத்தின் பன்முகத் தன்மையை மறுத்து ஒரு மதம், ஒரு மொழி, ஒரு தேசம் என்ற தத்துவத்தில் நம்பிகைக் கொண்டவர்கள் பொதுசிவில் சட்டம் என்ற ஆயுதத்தைக் கையிலெடத்து பூங்காவனத்தை சுடுகாடாக்கும் பொல்லாத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரம் அவர்களின் கையில் இருப்பதால் இந்த அபாயத்தின் வீச்சு அதிகமாகியுள்ளது.
இந்தியாவில் சுமார் நானூறு தனியார் மற்றும் வழக்காற்றுச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதில் திருமணம், மணவிலக்கு, வாரிசுரிமை, வக்ஃப் சொத்து நிர்வாகம் ஆகிய நான்கில் மட்டும் முஸ்லிம்களுக்கென தனியார் சட்டங்கள் உள்ளன. பொதுசிவில் சட்டத்தைக் கோருபவர்கள், எல்லோருக்கும் ஒரே மாதிரி சட்டம் இருப்பது போலவும், முஸ்லிம்களுக்கு மட்டும் தனியார் சட்டம் இருப்பது போலவும் ஒரு மாயையைத் தோற்றுவிக்கின்றனர்.
மேலும், ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் சேர்த்து ஒரே குடிமை மற்றும் வழக்காற்றுச் சட்டங்கள் இல்லை என்பதையும் வசதியாக மறைத்து விடுகின்றனர். சொத்து, கடன், வியாபாரம், வாடகை உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் நாட்டு மக்களுக்கு பொதுவான சிவில் சட்டங்களே உள்ளன. குறிப்பிட்ட மதத்தினர், இன்றும் குறிப்பாக ஒரே குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட திருமணம், மணவிலக்கு போன்றவற்றிற்கே மார்க்க அடிப்படையிலான தனியார் சட்டங்கள் உள்ளன. இதை இந்திய அரசியல் சாசனத்தின் 25வது பிரிவு அனுமதித்து, உறுதிபடுத்துகிறது.
இந்தியாவில் வாழும் குடிமக்கள் யாவரும் விரும்பிய சமயத்தை ஏற்க, பின்பற்ற, பரப்ப இந்திய அரசியல் சாசனத்தின் 25வது பிரிவு உறுதியளிக்கிறது. இது அடிப்படை உரிமைகள் பற்றியதாகும். "நாடு முழுமைக்குமான பொது சிவில் சட்டத்தை இயற்ற அரசு முனைய வேண்டும்"’ என்று இந்திய அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுகிறதே என்பதை ஒரு வாதமாக வைப்பவர்கள், அந்தப் பிரிவின் தன்மை குறித்த உண்மையைத் திட்டமிட்டு மறைத்து விடுகின்றனர். அரசியல் சாசனத்தின் 36 முதல் 51 வரையுள்ள பிரிவுகள் வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகும். இந்தப் பிரிவுகளின் அடிப்படையில் எந்த நீதிமன்றமும் தீர்ப்போ, உத்தரவோ தர முடியாது.
அரசியல் சாசனத்தின் 45வது பிரிவு "பத்தாண்டுகளுக்குள் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாயம், இலவச கல்வி வழங்கப்பட வேண்டும்" என்று கூறுகிறது. விடுதலை அடைந்த 70 ஆண்டுகளில் இந்த நெறிமுறைக்கு வேதனைதானே விடையாக இருக்கிறது. அரசியல் சாசனத்தின் 47வது பிரிவு "போதையூட்டும் மதுவகைகள் உடலுக்குத் தீங்குசெய்யும் நச்சுப்பொருட்கள் ஆகியவற்றை அரசு தடைசெய்ய வேண்டும்" என்கிறது.
டாஸ்மாக் என்னும் அரசு நிறுவனம் மது விற்பனை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு முரணல்லவா? பிஹாரில் முழு மதுவிலக்குக் கொண்டுவந்த நிதிஷ்குமாருக்கு எதிராக, மதுவில் நன்மைகள் உள்ளன என உயர்நீதிமன்றம் கூறியதை எவ்வாறு எடுத்துக் கொள்வது. சமவேலைக்கு இருபாலருக்கும் சமஊதியம், அனைவருக்கும் கழிப்பறை என இலட்சியக் கனவுகள் பல வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளன. மக்களுக்கு நன்மை பயக்கும் இப் பிரிவுகளையெல்லாம் கனவிலும் நினையாது, மக்களைப் பிளக்கும் வகையில், அரசியல் சாசனப் பிரிவைத் தவறாகப் பயன்படுத்துவது நியாயமா?
முத்தலாக் விவகாரம் இப்போது பொது சிவில்சட்ட விவகாரத்திற்கு முன்வாசல் திறந்துள்ளது. "தலாக், தலாக், தலாக் என்று மூன்று முறை ஒரே சமயத்தில் கூறி, திருமண உறவை நீக்குவதை முத்தலாக்" என்று பொருள் கொண்டிருக்கின்றனர். இதை "தலாக்கே பித்ஆ" என்று குறிப்பிடுகின்றனர். பித்ஆ என்றால் நபிகள் நாயகத்தால் வழிகாட்டப்படாத, மார்க்க முரணான செயல் என்று பொருள். "பித்ஆ(புதிய சடங்குகள்) அனைத்தும் வழிகேடுகளே, வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்ப்பவைகளே" என்பது நபிமொழி. "தலாக், தலாக், தலாக்" என்று ஒரேசமயத்தில் கூறி மண உறவை முறிப்பது நரகிற்குப் போகும் பாதை என்று நபிமொழி கூறுகிறது.
திருமணத்தை வலிமையானதொரு வாழ்க்கை ஒப்பந்தம் என்கிறது இஸ்லாம். இல்வாழ்வில் பெரும் இழப்புகளை சந்திப்பவள் பெண்தான். எனவே அவளுக்கு திருமணத்தின்போதே, அவள் நிர்ணயிக்கிற மஹர் என்னும் மணக்கொடையை மணமகன் கொடுப்பதை இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ளது. இல்வாழ்வின் இலக்கும், நோக்கும் அன்பும், அறனும் தழைக்க மகிழ்வோடு வாழ்வதும், இணைந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிட்டால் பிரிந்து கொள்ளவும் இஸ்லாம் இரு பாலருக்கும் உரிமை தருகிறது. அதுவும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பிரிவதற்கு அனுமதி இல்லை. ஒருமுறை தலாக் என்ற அடிப்படையில் பிரிந்தால் 3 மாதம் காத்திருக்க வேண்டும். இரு தரப்பின் சார்பிலும் சமரசம் செய்வோர் ஏற்படுத்தப்பட்டு இணைத்து வைக்க முயல வேண்டும். இணக்கம் ஏற்பட்டால் இணைந்து கொள்ளலாம். இவ்வாறு இருமுறை தொடரலாம்.
மூன்றாவதாக தலாக் முறையைப் பயன்படுத்தும்போது, இஸ்லாம் கடும் நிபந்தனை விதிக்கிறது. இம்முறை தரப்படும் தலாக்கிற்குப் பின் இருவரும் இணைய முடியாது - அப்பெண் வேறு திருமணம் செய்து அது ரத்தாகும் வரை என்று எச்சரிக்கிறது. ஒருவர் எண்ணற்ற தலாக்குகள் மூலம் மனைவியைத் தொடர்ந்து விலக்கி வைத்து வஞ்சிக்கத் திட்டமிட்டிருந்தது நபிகளின் கவனத்திற்கு வந்தபோது மூன்று முறை என்று அது முறைமைப்படுத்தப்பட்டது.
பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்கவில்லை என்றால் திருமணம் செய்துவைத்த ஜமாஅத் அல்லது சமுதாயத் தலைவரிடம் முறையிட்டு, ஒரே முறையில் மணவிலக்கு பெற்றுக் கொள்ளலாம். இது குலாஃ எனப்படும். பெண்ணின் உடல்ரீதியான பலவீனம் மற்றும் உயிர்ப்பாதுகாப்பு இவற்றைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு ஒரே தவணையில் மணவிலக்கு வழங்கப்படுகிறது. இஸ்லாமிய சட்டங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், ஆதரவாகவும் இருக்கும்போது, ஒரே முறையில் தலாக், தலாக், தலாக் என்று கூறி மணவிலக்கு செய்யும் கொடுமை எங்குமே நிகழவில்லையா என்றால் நிகழ்ந்துள்ளன.
மதத்திற்கு முரணானவை மதத்தின் அடையாளங்களாக மாறும் மடமையும், மிடிமையும் எல்லா மதங்களிலும் இருக்கவே செய்கின்றன. மூடத்தனமான முத்தலாக் முறையை எதிர்த்தும், பெண்களின் மணவிலக்கு உரிமையான குலா குறித்து விழிப்புணர்வூட்டியும் முஸ்லிம் சமுதாயத்திற்குள் கடந்த கால் நூற்றாண்டு காலமாக வீரியமான விழிப்புணர்வு இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு முட்டை உள்ளிருந்து உடைக்கப்படுவதற்கும், வெளியிலிருந்து உடைக்கப்படுவதற்கும் வேறுபாடு அதிகமுண்டு. வெள்ளையர் ஆட்சியின் அச்சத்தால் வெளியே நடமாட அனுமதிக்கப்படாத முஸ்லிம் பெண்கள், இப்போது ஆண்களுக்கு நிகராக என்பதைவிட ஆண்களைவிட அதிகமாக, சிறப்பாகக் கல்வியில் அறிவு முத்திரை பதிப்பதை ஒரு கல்லூரி ஆசிரியனாக கண்கூடாகக் கண்டு மகிழ்கிறேன்.
முத்தலாக் உள்ளிட்ட மூடத்தனங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் முற்றாக ஒழிக்கப்பட சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டியுள்ளது. அதேநேரம், முஸ்லிம் பெண்களின் வாழ்வு சீரழிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி வெளிப்படுத்திய ஆவேசம், 25.10.2016 தேதியிட்ட ஏடுகளில் வெளிவந்துள்ளன. 'இது கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து அவர் வீசிய கருங்கல்' என்பதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒரு கணவன் மூன்றாண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தாலோ, தகவலே தெரியவில்லை என்றாலோ அல்லது கணவனின் நடவடிக்கை பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றாலோ மணவிலக்கு பெற முஸ்லிம் பெண்ணுக்கு வழி இருக்கிறது. 45 ஆண்டு காலமாக அவள் அபலையாக இருக்க வேண்டிய அவசியம் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் இல்லை.
கலீஃபா உமர்(அலி) ஒருமுறை தன் மகளை அழைத்து கணவனைப் பிரிந்து ஒரு பெண் அதிகபட்சம் எவ்வளவு காலம் இருக்கலாம் என்று கேட்கிறார். 'ஆறுமாதங்கள் வரை' என்கிறார் மகள். பெண்ணின் உணர்வுகளைத் தனது மகள் என்ற பெண்ணின் வழியே அறிந்த கலீஃபா உமர், ஆறு மாதங்களுக்கு மேல் மனைவியைக் கணவர்கள் பணிநிமித்தம் உட்பட எதன்பொருட்டும் பிரிந்திருக்கக் கூடாது என்றார்கள். ராணுவத்திற்கும் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இப்போது `தலாக், தலாக், தலாக்’ என்று மணத்தை முறிக்கும் மடமை நெறி போல, நபிகள் நாயகத்தின் காலத்தில் "நீ இனிமேல் என் தாய்க்குச் சமம்" என்று மனைவியிடம் சொல்லி திருமண உறவை தடாலடியாக முறிக்கும் ளிஹார் என்னும் முறை இருந்தது. இந்த முறையால் பாதிக்கப்பட்ட ஹவலா என்ற பெண்மணி, நபிகள் நாயகத்திடம் முறையிட்டார். அந்தப் பெண்மணிக்காக இறை வசனங்கள் இறங்கின (திருக்குர்ஆனின் அத்தியாயம் 58 தர்கித்தல் (அல்முஜாதலா) வசனங்கள் 1 முதல் 4 வரை). தடாலடியாக திருமண பந்தத்தை முறிக்க முடியாது என்பதற்கு இந்த இறை வசனங்களே போதுமான சான்று. இவ்வாறு எதார்த்த நிலை இருந்தும், முத்தலாக் முறையால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதால், முஸ்லிம்களுக்கு தனியார் சட்டமே கூடாது என்று பேசுவது, காவல் நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்தும், ஊழலும், பாலியல் வன்முறைகளும் நடந்துள்ளதால் அவற்றை மூடிவிட வேண்டும், காவல் துறையையே கலைத்துவிட வேண்டும் என்று சொல்வதற்குச் சமமானது.
ஹிந்து கூட்டுக் குடும்பத்திற்கு வருமான வரிச் சலுகையை தனியார் சட்டம் வழங்குகிறது. இது பிற மதத்தினருக்குப் பொருந்தாது. நாகலாந்து மாநிலத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு அரசியல் சாசனத்தின் 371ஏ பிரிவும், மிசோராம் பழங்குடி இன மக்களுக்கு அரசியல் சாசனத்தின் 371ஜி பிரிவும் தனியான குடிமைச் சட்டம் மட்டுமன்றி குற்றவியல் சட்டங்களையும் அனுமதித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 6வது அட்டவணையில் அஸ்ஸாம், மிசோராம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்குட்பட்ட மாகாண மற்றும் மாவட்ட கவுன்சில்களுக்கு குடும்பச் சட்டங்களை இயற்றிக் கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பன்மைத்துவத்தைக் கொண்டாடும் அரசியல் சாசனத்தைக் கொண்டுள்ள நம் நாட்டில், பொதுசிவில் சட்டம் என்ற போர்வையில் குதர்க்க வாதங்களை முன்வைத்து சிறுபான்மை மக்களைச் சீண்டுவது பீடுடைய செயலன்று. மேலும் நாடு முழுமைக்கும் ஒரேமாதிரியான குற்றவியல் சட்டமும் இல்லை. விபச்சாரம் ஒரு மாநிலத்தில் குற்றம், ஒரு மாநிலத்தில் அது ஒரு தொழில். பிகாரில் மது வைத்திருப்போரை அரசு கைது செய்யும், தமிழகத்தில் அரசே மதுவை விற்கும். ஒரே பொருளுக்கு புதுவையில் ஒருவிலை, தமிழகத்தில் கூடுதல் விலை, காரணம் சீரற்ற வரிவிதிப்பு. இதுதான் மக்கள் சமமாக நடத்தப்படும் விதமா?
ஆர்.எஸ்.எஸ் பிதாமகர்களில் ஒருவரான குரு கோல்வால்க்கர், 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று, தீனதயாள் உபாத்தியாயா ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, "பாரத ஒற்றுமையைப் பாதுகாக்க பொதுசிவில் சட்டம்தான் கருவியாகும் என்பது தவறு. இயற்கைக்கு எதிரானது. விபரீத விளைவுகளை உண்டாக்கக் கூடியது" என்று பேசியிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது. இது 21.8.2016 தேதியிட்ட மதர்லேண்ட் இதழிலும் வெளிவந்துள்ளது. நாட்டின் முதல் குடிமகனாக இருந்த பிரணாப் முகர்ஜி, 24.10.2016 அன்று குஜராத் மாநிலம் காந்தி நகரில், பாபு குஜராத் அறிவுசார் கிராமத்தில் ஆற்றிய உரையில், "1800 எழுத்து வடிவமற்ற மொழிகளும், 200 எழுத்துவடிவம் உள்ள மொழிகளும் பேசப்படுகிற 128 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில், பொது சிவில் சட்டம் சாத்தியமில்லை. இதன் மூலம் நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கக் கூடாது" என்று எச்சரித்தார்.
தேசத்திற்கு இன்று தேவை unity தானே தவிர uniformity அல்ல. பொதுசிவில் சட்டம் என்பதன் மூலம் மதவாத பாஜக நடத்த நினைக்கும் மடைமாற்று தந்திரத்தை ஏமாற்றும் நரித்தனத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
> முந்தைய அத்தியாயம்: இன்றைய தேதியில் ‘பொது சிவில் சட்டம்’ வேண்டாத ஒன்று: வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago