ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலை: அரசு கருணை காட்டுமா?

By ச.பாலமுருகன்

சிறைவாசிகள் பற்றிப் பேசுவது சமூகத்தின் பொதுப் பார்வையில் அவ்வளவு விரும்பத் தக்கதாக இருப்பதில்லை. சிறைகள் மனிதர்களின் தவறுக்காக - தண்டனையாக அல்லது விசாரணைக்காக - சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி வைத்துள்ளது. ‘சிறைவாசிகளின் ஒவ்வொரு நாளும் ஒரு வருடம் போன்றது. ஒரு வருடம் என்பது பல நீண்ட நாட்களைக் கொண்டது’ என்பது கவிஞர் ஆஸ்கர் ஒய்ல்டின் அனுபவ வரிகள். காலத்தின் சுமையை அதன் எடையை சிறைவாசிகள் நன்கு அறிவர்.

சிறை என்பதன் நோக்கம், வாழ்நாள் முழுதும் ஒரு மனிதனைத் தனிமையில் தள்ளி, அவனை அங்கேயே மடிய விடுவதல்ல. மாறாக, அந்த மனிதனைச் சீர்திருத்தி மீண்டும் சொந்தக் குடும்பத்திடமும் சமூகத்திடமும் திருப்பி அனுப்புவது. தமிழ்நாட்டில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைபேசுபொருளானது.

தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குக் காட்டிய ஆதரவு நிலையானது,அவர்களின் விடுதலையைச் சாத்தியமாக்கியது. ஆனால், பொதுச் சமூகத்தில் கவனப்படுத்த முடியாத சிறைவாசிகளின் விடுதலை என்பது, வெறுமனே அவர்களின் உறவினர்கள் அல்லது சில செயல்பாட்டாளர்கள் முன்னெடுக்கும் போராட்ட மாகவோ கோரிக்கையாகவோ சுருக்கப்பட்டு கவனம் பெறாமல் போய்விடுகிறது.

பொதுத் தன்மையின்மை: ஆயுள் சிறை என்பது பொதுவாக ஆயுள் காலம் முழுதும் சிறை என சட்டத்தின் பார்வை உள்ளது. ஆனால், அரசு தனது மன்னிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுவிக்க முடியும். இந்நிலையில், குறிப்பாக ஆயுள் சிறைவாசிகள் விடுதலை என்பது தொடர்ந்து ஒரு பொதுத்தன்மை இன்றி, ஆட்சியாளர், அதிகாரிகள் விருப்பு, வெறுப்பு, ஆதரவு நிலையைப் பொறுத்து அமைந்துள்ளது.

வீரப்பனின் சகோதரர் மாதையன், 30 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் கைதியாக இருந்த நிலையில், இறுதிவரை விடுதலை செய்யப்படாமல் சிறையிலேயே உயிரிழந்தார். இவரைப் போலப் பலரை உதாரணம் காட்ட முடியும். நீண்ட சிறைவாசம் மனிதர்களை வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழக்கச் செய்துவிடும். விடுதலையாவோம் என்ற நம்பிக்கையுமின்றி நீண்ட ஆயுள் சிறைவாசி வாழ்வது கடினமானது.

கோயம்புத்தூர் சிறை உள்ளிட்ட தமிழகத்தின் சிறைகளில் முஸ்லிம் சிறைவாசிகள் சுமார் 25 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களில் பலர் வயதானவர்கள். நோய்வாய்ப்பட்டவர்கள். தங்கள் குடும்பத்தினருடன் எஞ்சிய நாட்களை வாழ அனுமதிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

விடுதலையில் பாகுபாடு: முன் விடுதலை (premature release) என்பது நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்துசெய்வதல்ல. அந்தத் தண்டனையைக் குறைப்பது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்கு, அரசு வெளியிடும் சில அரசாணைகள் தடையாக இருக்கின்றன. முன் விடுதலைக்குத் தகுதியானவர்கள் - தகுதியற்றவர்கள் எனச் சிறைவாசிகளை இரண்டு பிரிவாகப் பிரித்துப் பார்க்கிறது அரசு.

ஒரு சிறைவாசி பெற்ற தண்டனையைப் பொறுத்து அவர் முன் விடுதலைக்குத் தகுதியானவரா தகுதியற்றவரா என முடிவுசெய்கிறது. உதாரணமாக, கொலைக் குற்றத்துக்குத் தண்டனை பெற்றவர் முன் விடுதலைக்குத் தகுதியானவர். ஆனால், அந்தக் கொலையையே பண ஆதாயத்துக்காகச் செய்தவர் விடுதலைக்குத் தகுதியற்றவர். மதம், சாதி சார்ந்து கொலை செய்தவர் விடுதலைக்குத் தகுதியற்றவர். ஆயுள் சிறைவாசிகள் எந்தக் குற்றத்துக்குச் சிறைத் தண்டனை பெற்றபோதும் ஒரே வகையான சிறை வாழ்வை ஒரு சேர அனுபவிக்கின்றனர்.

இந்நிலையில், விடுதலையில் பாகுபாடு காட்டுவது அடிப்படையில் சரியானதல்ல. முன் விடுதலைக்கு அடிப்படையாகச் சிறையில் சிறைவாசி கழித்த நாள்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட வேண்டும். சமீபத்தில், உச்ச நீதிமன்றம் (rajo @ rawa @ Rajendra Mandal v. State of Bihar) வழங்கிய தீர்ப்பில், ‘முன் விடுதலை என்பது விசாரணை நீதிபதிகள் அல்லது காவல் துறை வழங்கிய கருத்தை மட்டும் சார்ந்ததாக இருக்கக் கூடாது’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

சிறைவாசிகளின் முன் விடுதலையில் அவர்கள் மீது மதம் அல்லது வேறு விருப்பு, வெறுப்புத்தன்மை உள்ளதை உச்ச நீதிமன்றமும், மாநில அரசும் களைய வேண்டும். மேலும், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் சிறைவாசிகள் சிறையில் வாடுவதைத் தடுக்கவும் மாநில அரசுகள் தங்களுக்கென பொதுக் கொள்கைகளையும் பாகுபாடற்ற முன் விடுதலை விதிகளையும் உருவாக்க வேண்டியுள்ளது.

அந்தக் கொள்கையானது சிறைவாசி விடுதலையானால் மீண்டும் குற்றம் செய்வாரா, சிறையில் அவர் எப்படி நடந்துகொண்டார், சிறைவாசி குடும்பத்தின் சமூகப் பொருளாதார நிலை எப்படி உள்ளது என்பதை மட்டும் கணக்கில்கொள்வதாக இருக்க வேண்டும்.

முட்டுக்கட்டைகள்: கடந்த 2021 இறுதியில் தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள சுமார் 3,000 ஆயுள் சிறைவாசிகளில் 700 பேரை விடுதலை செய்யஉள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். விடுதலைக்குத் தகுதியுள்ள குற்றம்புரிந்த ஆயுள் சிறைவாசிகள் 10 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகும், விடுதலைக்குத் தகுதியற்ற குற்றம் புரிந்தவர்களின் விடுதலை 20 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றே முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், 700 சிறைவாசிகளின் விடுதலை இன்றுவரை முழுமை அடையவில்லை.

ஆளுநர் என்பவர் தனக்கெனத் தனி அதிகாரம் கொண்டவர் அல்லர்; மாநில அரசின் முடிவை மட்டுமே அவர் நிறைவேற்ற வேண்டும் என்றபோதும், ஆளுநர் அலுவலகத்தில் சில முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாட்டு அரசு தனது உரிமையை நிலைநிறுத்த உறுதியான செயல்பாடுகளை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் வழக்கு உள்ளிட்ட சில வழக்குகளில் ஆளுநர்கள், அரசின் கருத்தை மட்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்யப்பட வேண்டியவை: ஏற்கெனவே உச்சநீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுமாவட்ட அளவில் அதற்கான செயல்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தி உள்ளது. சிறைவாசிகளின்விடுதலைக்கான மனுக்கள் உரியவர்களின் பரிசீலனைக்குக் கொண்டு செல்வது, மனு நிராகரிக்கப்பட்டால் சட்ட உதவி செய்வது என்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவழிகாட்டுதல்களை தேசியச் சட்ட உதவி ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த முயற்சிகள் எளிய, ஆதரவற்ற ஆயுள் சிறைவாசிகளின் கோரிக்கைகளைக் கவனப்படுத்த உதவும்.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் ஆயுள் சிறைவாசிகளுக்கு விடுதலை என ஆண்டுக்கு ஒரு முறை முன் விடுதலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த அணுகுமுறைக்கு மாறாக, எல்லா மாதங்களிலும் சீராக ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்குச் செயல்திட்டங்கள், அதற்கான அறிவுரைக் குழுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலையானது இரக்கம் என்ற விசாலப் பார்வையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அது நம்பிக்கை தரக் கூடியது. ஏதோ ஒரு சூழலில் குற்றமிழைத்த மனிதர்கள் மீண்டும் தங்களைப் புதுப்பித்துக்கொண்டு மறுவாழ்வு வாழும் சூழலை உருவாக்க இந்த மனிதநேய அணுகுமுறை உதவும். பேரறிவாளன் விடுதலைக்காக, முன்பு நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில், ‘கருணா என்றால் கருணை எனப் பொருள்’ எனச் சுட்டிக்காட்டியிருந்தார். கருணாநிதியின் நூற்றாண்டில், எளிய விளிம்புநிலைச் சிறைவாசிகளுக்குக் கருணை காட்டுமா அரசு?

- தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com

To Read in English: Life convicts’ premature release: Will govt show mercy?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE