ஓர் ‘ஒலக சினிமா அனுபவம்

By ஆதி வள்ளியப்பன்

செ

ன்னை சர்வதேசத் திரைப்பட விழா இதோ இன்றுடன் நிறைவடைகிறது. ஓர் உலகத் திரைப்படம் வெளியான - அங்கீகரிக்கப்பட்ட ஆண்டிலேயே நமக்கும் பார்க்கக் கிடைப்பது 'டிவிடிக்கள் கால'த்திலும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் சர்வதேசத் திரைப்பட விழா அதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. அந்த வகையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு இது. எனினும், சில குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. சில சமயம், படம் திரையிடுவதில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்படும்போது ரசிகர்கள் திண்டாடிவிடுவார்கள். கடந்த ஆண்டு நடந்த ஒரு குழப்பியல் சம்பவம் மறக்க முடியாதது.

நான் பார்க்கச் சென்றிருந்தது ஃபின்லாந்தைச் சேர்ந்த அலெக்சி சால்மென்பெரா இயக்கிய 'தி மைன்' என்கிற படம். கனிமச் சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீரழிவதைப் பற்றியது. சுற்றுச்சூழல் பாதுகாவலனாக மனதுக்குள் வரித்துக்கொண்டு இயற்கையைக் காக்க எப்போதும் ஆயுதம் ஏந்தும் நான், இந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தைப் படித்துவிட்டு ஆவலாதியாக ஓடியிருந்தேன்.

வழக்கம்போலவே கடைசி நேரத்தில் புறப்பட்டாலும், படம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகத் திரையரங்கைச் சரியாகச் சென்றடைந்துவிட்டேன். தேசிய கீதத்துக்குப் பின்னர் படம் ஆரம்பித்தது. எனினும், ‘டைட்டில் கார்ட்ஸ்’ வரவில்லை. வசனங்களுக்கான ஆங்கில ‘சப்-டைட்டி’லும் ஒடவில்லை. உடனே ரசிகர்கள் குரல் கொடுக்க படம் நிறுத்தப்பட்டு, திரும்பவும் போடப்பட்டது. அப்போதும் டைட்டில்ஸ் வரவில்லை. ஒரு அல்சேஷன் நாய் திரையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, ‘DOGS’ என்கிற எழுத்துகள் திரையில் தோன்றின. அதுவும் ஒரு சப்டைட்டில் என்று தவறாக நம்பிவிட்டேன். சில படங்களில் கருவியிசை, தூரத்துக் குரல்கள், மூச்சுவிடுவது போன்றவற்றுக்குக்கூட சப்-டைட்டில் போடுவது உண்டு.

அந்த அல்சேஷன் நாய் தவிர, படத்தில் மிகச் சில கதாபாத்திரங்கள்தான். ஒரு பெரிய நிலத்தை விற்பதற்காக ஒரு இளைஞன், கண்ணுக்கெட்டும் தூரம்வரை விரிந்து கிடக்கும் வெட்டவெளிப் பிரதேசத்துக்கு வருகிறான். சரி, அந்த நிலத்தில்தான் கனிமச் சுரங்கம் அமைக்கப் போகிறார்கள் போலிருக்கிறது என்று நானும் ஆர்வமாகக் காத்திருந்தேன். படம் மெதுவாக ஊர்ந்து, நெளிந்து வளைந்து போய்க்கொண்டிருந்தது. கனிமச் சுரங்கம் கண்ணில் படவேயில்லை.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு குளத்துக்குள் ஒரு காலணி மிதப்பது போன்ற காட்சி வந்தது. இடையில் அந்தக் காலணிக்குள் ஒரு காலும் சேர்ந்து உள்ளூர் காவலரிடம் வந்துசேர்கிறது. அந்தக் காலணியை வீட்டுக்கு எடுத்துச் சென்று, அங்குலம் அங்குலமாகப் பிரித்து அழுகிய காலை பத்திரமாக அவர் வெளியே எடுக்கிறார்! இது அத்தனையையும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு எந்தப் பதற்றமும் இல்லாமல் காட்டுகிறார்கள். அப்போதுதான் எனக்கு முதல்முறையாக இடித்தது. எழுந்து சென்றுவிடலாமா என்று தோன்றியது. ‘அதுசரி, இது ஒரு சுற்றுச்சூழல் படமாயிற்றே, இந்தக் காட்சிக்குப் பின்னர் முக்கியமான திருப்பங்கள் வந்துவிட்டால் என்ன செய்வது?' என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.

வெட்டவெளி நிலப்பரப்பை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சிலர் காரில் கடந்து சென்றனர். இறுதியாக இறுதிக்காட்சியும் வந்துவிட்டது. படத்தில் வந்த ஐந்தாறு கதாபாத்திரங்களில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் 'காக்காயைச் சுடுவது மாதிரி' மாறி மாறிச் சுட்டு செத்துப் போனார்கள். நான் எதிர்பார்த்த கனிமச் சுரங்கம், சுற்றுச்சூழல் பிரச்சினை என எதுவுமே மருந்துக்குக்கூட எட்டிப் பார்க்கவில்லை. படம் முடிந்த பிறகுதான், நான் பார்க்க வந்த படம் இது இல்லை என்பது புரிந்தது. படத்தின் ஆரம்பத்தில் DOGS என்று ஆங்கிலத்தில் தோன்றிய எழுத்துகள், சப்டைட்டில் கிடையாது; அதுதான் படத்தின் தலைப்பு என்று ஒருவழியாகப் புரிந்தது. போக்டன் மிரிகா என்கிற ரோமானிய இயக்குநர் இயக்கிய படம் அது.

சர்வதேசத் திரைப்பட விழாக்கள் நமக்கு மிகவும் அவசியம். அதேசமயம், மேற்கண்ட இந்த ‘நாய் படம்’ போல, பொருத்தமற்ற படங்கள் வந்துவிடுகின்றன. படங்கள் குறித்த அறிவிப்பில் நேரும் குழப்பங்கள் ரசிகர்களைச் சோதித்துவிடுகின்றன. மேற்கண்ட படத்தில் விழாக் குழுவினர் செய்த தவறு, திரையிடுவதாக அறிவிக்கப்பட்ட படத்தைக் கடைசி நேரத்தில் மாற்றியதுதான். ஆனால், அது தொடர்பான அறிவிப்பைத் திரையரங்குக்கு வெளியே பெரிதாக எழுதி வைத்திருக்கலாம். குறைந்தபட்சம் படம் தொடங்குவதற்கு முன் திரைப்படத்தின் பெயர், இயக்குநர், கதைச்சுருக்கம் போன்றவற்றையாவது அறிவித்திருக்கலாம். இதுபோன்ற சம்பவம் இந்த ஆண்டு நடைபெறவில்லை என்பது ஒரு ஆறுதல். சர்வதேசத் திரைப்படங்களில் கதை தேடி கதாசிரியர்கள் பலர் வருவது இருக்கட்டும். உலகத் திரைப்படங்கள் மூலம் பல்வேறு நாடுகள் குறித்த ஒரு மேலோட்டமான பார்வை கிடைக்கும் என்று வரும் ரசிகர்களே அநேகம். இனி எந்தக் காலத்திலும் அவர்களுக்கு எனக்குக் கிடைத்த ‘அனுபவம்’ கிடைக்காதிருக்கட்டும்!

- ஆதி வள்ளியப்பன்,

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்