ஒரு வாரம். சென்னைவாசிகளால் மட்டும் அல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் மறக்கவே முடியாத ஒரு வாரம் 2015 டிச.1 முதலான டிச.8 வரையிலான ஒரு வாரம். குறிப்பாக டிச.1-2 இரு நாட்களின் துயரம் ஒருநாளும் மறக்க முடியாதது!
முன்னதாக, நவம்பர் மாதத்திலிருந்தே தமிழ்நாட்டில் மழை வலுத்துவந்தது. நவம்பர் முதல் டிசம்பர் வரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 181.5 செ.மீ., திருவள்ளூரில் 146 செ.மீ., சென்னையில் 160 செ.மீ. மழை கொட்டியது. இது வழக்கமான அளவைவிட பல மடங்கு அதிகம். டிசம்பர் 1-2 இரு நாட்களில் பெய்த வரலாறு காணாத 49 செ.மீ. மழை முழுக்கவும் எதிர்பாராதது என்று சொல்ல முடியாது. கணிக்கத்தக்க முன்னெச்சரிக்கைகள் வந்திருந்தன. ஆனால், அரசும் அரசாங்க இயந்திரமும் தூங்கி வழிந்துகொண்டிருந்தது.
02CHVCM-EDIT2-INDIA-WEATHER-FLOODS100
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகள் ஏற்கெனவே கடுமையான ஆக்கிரமிப்பில் இருந்தன. போதாக்குறைக்குத் தூர் வாரும் பணிகளும் நடக்கவில்லை. நீர்ப்போக்கு வழிகள் பெருமளவில் அடைபட்டிருந்தன. இந்தக் காரணங்களால் மழை கொட்டித் தீர்த்த அந்த நாளில் சென்னை வெள்ளக் காடாகியது. முந்தைய நாள் இரவே சென்னையின் வீதிகள் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தன. அரசின் மோசமான நிர்வாகத்துக்கான குறியீடுபோல மாறியது செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.
ஏரி உடைந்துவிடுமோ, உடைந்தால் என்னாகுமோ என்ற அச்சத்தில் இரவில் அவசர அவசரமாக 30,000 கன அடி நீரை அடையாற்றில் திறந்துவிட்டனர். கரைகள் ஏதும் பராமரிக்கப்படாத அடையாறு அவ்வளவு தண்ணீரைக் கொள்ள வழியில்லாமல் உடைத்துக்கொண்டு சாலைகளில் பாய்ந்தது. விளைவாக ஆறு எது; சாலை எது என்று அடையாளம் தெரியாத வகையில் நீரில் மூழ்கியது சென்னை!
சென்னையின் மூன்று ஆறுகளான அடையாறு, கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு; பிரதான கால்வாயான பக்கிங்காம் கால்வாய் யாவும் வெள்ளத்தைச் சுமக்க வழி தெரியாமல் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளை வெள்ளக்காடாக்கின. கார், லாரி, ஆட்டோ, குடிசைகள் என்று தண்ணீர் வந்த வேகத்துக்குக் கண் மண் தெரியாமல் எல்லாவற்றையும் அடித்துச் சென்றது. முடிச்சூர், தாம்பரம், சோளிங்கநல்லூர், வேளச்சேரி, அடையார், கோட்டூர்புரம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, மாம்பலம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, புரசைவாக்கம், பெரம்பூர், வேப்பேரி, வியாசர்பாடி, எண்ணூர், மணலி என்று வெள்ளம் மூழ்கடிக்காத சாலைகளே இல்லை.
பல இடங்களில் வீடுகளின் முதல் தளம் மூழ்கியது. மின்சார விநியோகம் ஒரு வாரம் வரை அடியோடு நிறுத்தப்பட்டது. செல்பேசிகள் செயலிழந்தன. சாலை, ரயில், விமானப் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. குடிநீர் விநியோகம் நின்றது. மக்கள் மொட்டை மாடியில் நின்று அபயக் குரல் எழுப்பினார்கள். எந்தவித முன்தயாரிப்பும் இல்லாமல் இருந்த அரசு செய்வதறியாது விழித்தது! மக்கள் தனக்குத் தானே என்று கைகோத்துப் படகுகளைக் கொண்டுவந்து மீட்புப் பணியில் இறங்கினார்கள். ஆம், சென்னை வீதிகளில் படகுகள் ஓடின.
மழை நின்ற பிறகும் சூழல் சரியாகவில்லை. வெள்ளக் காடாக இருந்த நகருக்குள் போக்குவரத்துக்கு எந்த வழியும் இல்லை. நகரில் பால், தண்ணீருக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. குடிநீர் கேன்கள் நூறு ரூபாய் கொடுத்தாலும் கிடைக்கவில்லை. மழை நின்ற சில மணி நேரங்களுக்கு மட்டுமே கிடைத்த பால் ஒரு லிட்டர் இருநூறு ரூபாய் வரை விற்றது. காய்கறிகள், பழங்கள் கண் காணாத பொருட்கள் ஆயின. 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கும் சென்றனர்.
வெளியூர்களிலிருந்து வந்த ரயில்கள் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் நிறுத்தப்பட்டன. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஓடுபாதையே ஆறுபோல மாறியதால் டிசம்பர் 2 முதல் 7 வரை வெளிநாட்டு விமான சேவையை நிறுத்தினார்கள். ரயில் போக்குவரத்து சீராவதற்குப் பத்து நாள்கள் ஆயிற்று. மக்கள் வீடுகளுக்குள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மழை நீரைக் குடிநீராக்கிக்கொண்டு, இருந்த மளிகைப் பொருட்களைக் கொண்டு ஒரு வேளை சமையலை இரு வேளை உணவாக்கிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள். வீடுகளையும் இழந்தவர்கள் பக்கத்திலுள்ள மண்டபங்களில், பள்ளிக்கூடங்களில், சாலையோரக் கட்டிடங்களில், ஆங்காங்கே நின்றிருந்த ரயில்களில் அடைக்கலம் ஆகியிருந்தனர். பெரும் துயரத்தின் இடையே தனித் துயரங்கள் சீந்துவாரின்றி கழிந்தன. யாருடைய கவனமுமின்றி கடந்த எழுத்தாளர் விக்கிரமனின் மரணம் ஒரு உதாரணம். மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 நோயாளிகள் மின்சாரம் இல்லாமல், செயற்கை சுவாசம் நின்று உயிரிழந்தது இன்னொரு உதாரணம்.
இந்தியாவின் தேசிய ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் டெல்லி ஊடகங்கள் ஆரம்ப நாட்களில் இந்த மனிதப் பேரவலத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. அரசு ஸ்தம்பித்து நின்றிருந்தது. பெரும் கோபத்துடன் கிளர்ந்தெழுந்த தமிழ்நாட்டு மக்கள் தனக்குத் தானே கைகோத்து மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் களம் இறங்கினார்கள். காவல் துறை, தீயணைப்புத் துறை, மின் வாரியம், சுகாதாரத் துறையினரோடு சென்னைக்கு வெளியே இருந்த மக்களில் பெரும் பகுதியினர் தன்னார்வலர்கள் அவதாரம் எடுத்து இணைந்தார்கள். சாதி, மத, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து படர்ந்த மனிதநேயம் எல்லா இதயங்களையும் இணைத்தது. உணவு, உடைகள், மருந்துகள் குவிந்தன. இவ்வளவு பெரிய இயற்கைச் சீற்றம் நடந்தும் உணவுக்காக கலவரம், வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி போன்ற சிறு தவறுகள்கூட நடக்கவில்லை என்பது மக்கள் எவ்வளவு ஒன்றுபட்டு இப்பெருந்துயரத்தை எதிர்கொண்டார்கள் என்பதற்கான வெளிப்பாடு. ஆனால், ஆளுங்கட்சியினர் கூச்சமே இல்லாமல், மக்கள் கொண்டுசென்ற நிவாரணப் பொருட்களை மறித்து அவற்றில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அரசியல் செய்துகொண்டிருந்தார்கள்.
வெள்ளம் வடிந்த பிறகு பேரிழப்புக்கான நியாயங்கள் கோரப்பட்டன. குற்றவாளிகள் யார் என்று விவாதங்கள் நடந்தன. எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக நிறையப் பேசப்பட்டன. ஆளும் அரசு கடுமையாகச் சாடப்பட்டது. ஏராளமான யோசனைகள் மக்கள் மத்தியில் உலா வந்தன. எல்லாவற்றையும் மறந்தோம். இன்று ஒரு புயல், பெருமழைக்கு குமரி தத்தளிக்கிறது!
-வ. ரங்காசாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago