சுய சிந்தனைகளைத் தாய்மொழியிலேயே உருவாக்குவதுதான் கல்வியின் முக்கிய நோக்கம்!
தமிழ்நாட்டில் வீட்டில் தமிழ் பேசுகிறவர்களுக்கு அவர்கள் படிப்பதற்கு, எழுதுவதற்குத் தமிழின் தேவைபற்றிய கேள்வி இன்றைய பொருளாதாரச் சூழலில் எழுகிறது. தனிநபர் பொருளாதார முன்னேற்றத்தை முன்வைக்கும்போது இந்தக் கேள்வி எழுகிறது. அதற்குக் கருவியாக இருக்கும் கல்வி தொடர்பான கேள்வி இது. கல்வியின் நோக்கத்தைக் குறுகலாகப் புரிந்துகொள்ளும்போது, இந்தக் கேள்வி சந்தேகத்தை வெளிப்படுத்தும் கேள்வியாகத் தொனிக்கிறது. மாணவர்களின், பெற்றோர்களின் சந்தேகத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மாணவர்களை வேலைச் சந்தைக்குத் தயார்ப்படுத்தும் தனியார் பள்ளிகள் தமிழ் தேவையில்லை என்ற பதிலை அளிக்கின்றன. இந்தப் பதிலை நிலைநாட்ட நீதிமன்றங்களின் மூலம் இந்திய அரசியல் சட்டத்தின் துணையைத் தனியார் பள்ளிகள் நாடுகின்றன.
மாணவர்களின் மதிப்பெண்களைக் கூட்டுவதே பள்ளிகளின் கடமை என்று நம்புவதால், அதற்கு எளிது என்று நினைக்கும் சமஸ்கிருதம், பிரெஞ்சு போன்ற மொழிகளே மாணவர்கள் தேர்வுப் பட்டியலில் முதல் இடங்களில் வர வேண்டும் என்று தனியார் பள்ளிகள் முடிவுகட்டுகின்றன. இதனால், பள்ளியில் தமிழ் படிக்கத் தேவையில்லை என்ற இவர்களுடைய பதில், இன்றைய கல்விமுறையின் குதர்க்கம். இந்திய அளவில் அரசு வேலைகளுக்கு மட்டுமல்ல, பேசுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வணிகத்துக்கும் உதவும் என்ற அடிப்படையில் இந்தி, தமிழுக்கு முந்திய இடத்தைத் தனியார் பள்ளிகளில் பெறுகிறது. இங்கே கல்வியில் பணத்தை முதலீடுசெய்யும் பெற்றோர்களும் அதைத் திருப்பி எடுக்கும் வாய்ப்பைக் கூட்ட நினைக்கிறார்கள்.
கல்வியின் நோக்கம்
கல்வியின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று நல்ல குடிமக்களை உருவாக்குவது. நல்ல குடிமக்கள் என்றால், நாட்டின் பொருளாதார உற்பத்தியின் அளவுக்கும் தரத்துக்கும் பங்களிப்பவர்கள் என்பது ஒரு அம்சம்தான். ஜனநாயக அரசில் பங்குபெறுவது அதாவது, அரசின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் கண்காணிப்பது - அரசியல் சார்ந்த மற்றொரு முக்கியமான அம்சம். தங்கள் தேவைகளுக்காக அரசுடனும் அதைச் சார்ந்த நிறுவனங்களுடனும் தொடர்புகொள்ளும் தேவையைக் குடிமக்கள் விட முடியாது. தமிழ் ஆட்சிமொழியாக இருக்கும்போது தமிழறிவு இல்லாமல் குடிமக்களுக்குரிய கடமையை நிறைவேற்ற முடியாது; அரசின் மூலம் நிறைவேறும் தங்கள் சொந்தத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாது.
குடிமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமைகளை மொழித் தடையால் நிறைவேற்ற முடியாதபோது, நாட்டின் ஜனநாயகம் வெறும் கூடாகவே நிற்கும். கல்வியில் தமிழ் தேவையில்லை என்னும் முடிவு, ஆட்சியிலும் தமிழ் தேவையில்லை என்னும் வாதத்துக்கு இட்டுச்செல்லும். குடிமக்கள் பேசாத மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட அரசு ஜனநாயகத்துக்குப் புறம்பான அரசு. தமிழ் தேவையில்லை என்னும் வாதம் இத்தகைய ஆட்சிக்கே வழிவகுக்கும்.
கல்வியின் மற்றொரு நோக்கம் சுயமாகச் சிந்திக்கும் குடிமக்களை உருவாக்குவது. சுய சிந்தனைக்குக் கலாச்சார வேர் வேண்டும்; இந்த வேர்தான் சிந்தனைப் பழத்துக்குத் தனிப்பட்ட சுவை கொடுக்கும். எதிர் காலத்தை நோக்கும் சிந்தனைகள் கடந்த காலத்தை முற்றிலும் உதறிவிட்டு முன்னோக்கி நடக்க முடியாது. முன்னால் நடக்கப் பின்னாலும் பார்க்க வேண்டும் என்னும் கூற்றில் உண்மை இருக்கிறது.
புதிய சிந்தனைகளைத் தமிழர்களோடு பகிர்ந்து கொள்ளத் தமிழில் எழுத வேண்டும். இதற்குத் தமிழில் எழுதும் பயிற்சி முக்கியம். தமிழ் கற்பதன் தேவை என்ன என்று புரியும்போது, எதைக் கற்பிப்பது என்பது புரியும். தமிழில் கட்டுரை எழுதும் பயிற்சியின் தேவை புரியும். தமிழில் இன்று எழுதப்படும் கட்டுரைகளின் தன்மையை விமர்சனக் கண்ணோடு கவனித்தால் தமிழைச் சரியான முறையில் கற்பதன் தேவை புரியும்.
கலாச்சாரத்தின் நம்பகத்தன்மை
ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை மேலெடுத்துச் செல்பவர்கள் வாழ்க்கைத் தத்துவம், இலக்கியம் முதலியவைபற்றிப் பேசும் அறிவுஜீவிகள். சமூகம் பேசும் மொழியில் அவர்களுடைய அறிவு வெளிப்படவில்லை என்றால், அந்தச் சமூகத்தின் உயர் கலாச்சார வாழ்வில் நம்பகத்தன்மை இருக்காது; சமூகத்தின் கலாச்சாரம் பிளவுபட்டதாக இருக்கும். ஆங்கிலம் மட்டுமே முறையாகப் படித்தவர்களின் கலாச்சாரப் பார்வை தமிழ் இலக்கிய, வாழ்க்கைத் தத்துவப் பாரம்பரியத்தில் முளைத்ததாக இருக்காது; இது தமிழ் மொழி சார்ந்த கலாச்சாரப் பார்வையிலிருந்தும், அதிலிருந்து விளையும் படைப்பிலிருந்தும் விலகி நிற்கும்.
இவையெல்லாம் கல்வியில் தமிழ் மொழியின் இன்றியமையாமையைக் காட்டும். இவற்றுக்கு மேல், பலரும் சொல்லும் வேறு சில காரணங்களும் உண்டு. ஒரு சமூகத்தின் கலாச்சாரம் வாய்மொழி இலக்கியத் தில் மட்டும் இல்லை; அது புனைவில் எழும் எழுத்திலக்கியத்திலும், புனைவற்ற மற்ற எழுத்துகளிலும் காலங்காலமாக வடிக்கப்பட்டிருக்கிறது. அந்த எழுத்துக் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளவும் அதை மேலெடுத்துச் செல்லவும் அந்த மொழியைச் சிறப்புப் பாடமாகச் சிலருக்கு உயர் கல்வியில் கற்பிப் பார்கள். அப்படிப் பயின்றவர்கள், தாங்கள் கற்றதை அனைவருக்கும் எடுத்துச் சொல்லவும், அவர்கள் வேலைவாய்ப்புப் பெறவும் பள்ளிகளில் தமிழ் கற்றுத்தரப்பட வேண்டும். தமிழில் எழுதும் கலை அழியாமல் அடுத்து வரும் சந்ததியினருக்குச் சென்றடைய, கல்வியில் தமிழுக்கு இடம் வேண்டும். தங்களை அடையாளப்படுத்தும் தமிழோடு நெருக்கமான உறவை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்ளவும் இது வேண்டும். இந்த உறவு ஏற்படத் தமிழின் பெருமை மட்டுமே பேசத் தேவையில்லை. மாறிய காலத்துக்குத் தமிழ் பொருந்துவதைக் காட்டுவது இந்த உறவைப் பலப்படுத்தும். தமிழைக் கற்றுக்கொடுப்பதில் பின்னோக்கிய பார்வை முன்னோக்கும் பார்வைக்குத் தடையாக இருக்கக் கூடாது.
தமிழ் தடைக்கல்லா?
வாழ்க்கையின் ஓட்டத்துக்குத் தமிழ் நம் கழுத்தில் கட்டிய தடைக்கல் என்ற பரவலான பொதுமக்களின் எண்ணம் உடைவதற்கு, தமிழ் மனவிரிவுக்கு உதவுவதை மாணவர்களும் பெற்றோர்களும் உணரும்படி தமிழ்ப் பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும். இன்றைய வாழ்க்கைக்கும் தமிழ்ப் பாடத்துக்கும் தொடர்பு இல்லை என்ற அவநம்பிக்கையை அகற்றும் முறையில் அதை அமைக்க வேண்டும். தமிழைக் கட்டாயப் பாடமாக வைப்பதன் மூலம் எதிர்மறையான மனநிலையை மாற்ற முடியாது. அது அந்த மனநிலையை வலுப்படுத்தவே செய்யும். தமிழ்ப் பற்று இல்லை என்று பழிப்பதாலும் மாற்ற முடியாது. தமிழ்ப் பற்றினால் தமிழ் படிக்க வருவதைவிட, தமிழ் படிப்பதால் தமிழின் மீது பாராட்டு உணர்ச்சி வருவதே மேல். படிக்கும் தமிழ் எப்படிப்பட்ட தமிழாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் இதில் முக்கியமானது.
கல்வியில் தமிழ் தேவையா என்ற கேள்விக்குத் தேவை என்பதே பதில். மாணவர்களே தேவையை உணர்வதுதான் பதிலைத் தாங்களாகவே ஏற்றுக்கொள்ள வைக்கும். ‘தமிழ் வாழ்க!' என்பதல்லாமல் ‘தமிழ் வாழ வைக்கும்!' என்பதே அந்த உணர்வு; வாழ்தல் என்பது பணத்துக்கு அப்பாலும் உள்ளது என்னும் உணர்வு அது. தமிழைக் கட்டாயப் பாடமாக்கிச் சட்டம் இயற்றுவது மட்டுமல்ல அரசின் கடமை, தமிழை மாணவர்கள் விரும்பிப் படிக்கும் வகையில் தமிழ்ப் பாடத்திட்டத்தை அமைப்பதும் ஆகும்.
- இ. அண்ணாமலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள், நாகரிகங்கள் துறையில் வருகைதரு பேராசிரியர்; தொடர்புக்கு: annamalai38@yahoo.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago