பண்ணை இட்ட தீ!

By செல்வ புவியரசன்

டிசம்பர் 25, 1968. காவிரிக் கரையின் சரித்திரத்தில் காலத்துக்கும் அழியாத ரத்தக்கறை படிந்த நாள். 44 பேர் ஒரே குடிசைக்குள் வைத்து தீமூட்டிக் கொன்றழிக்கப்பட்ட நாள். கருகி இறந்தவர்களில் 19 பேர் குழந்தைகள் என்பது அந்தப் பாதகத்தை நிகழ்த்திய மனங்களில் நிறைந்திருந்த குரூரத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.

காவிரி தந்த நீர் வளமும் நில வளமும் தஞ்சை மண்ணின் வளம் பெருக்கியது. லாபம் கண்ட நிலவுடைமையாளர்கள் அதை மேலும் மேலும் பெருக்கிக்கொள்ள தங்களது நிலங்களில் உழைத்த தொழிலாளர்களைச் சுரண்டினர். உழைப்புச் சுரண்டலானது தொழிலாளர்கள் நிலையை அடிமை நிலைக்கு இட்டுச்சென்றது. அவசரச் செலவுகளுக்காகக் கடன் வாங்கியபோது எழுதிக்கொடுத்த உறுதிச் சீட்டுகள் அடிமை சாசனங்களாய் மாறின. அதைத் துருப்புச் சீட்டாக்கி, விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பண்ணையடிமைகளாய் நடத்தப்பட்டார்கள். அந்தக் கொடுமைகளின் பின்னணி தெரியாமல் வெண்மணி சம்பவத்துக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

சாணிப்பால் கொடுமை

பண்ணையார்களின் வீட்டிலிருந்து அதிகாலை மூன்று மணிக்குக் கொம்பூதும். உடனே பண்ணையடிமைகள் எழுந்து, ஏர் மாட்டைப் பூட்டிக்கொண்டு வயலுக்குக் கிளம்பிவிட வேண்டும். நாலரை மணிக்குள் உழவைத் தொடங்கியாக வேண்டும். காலைக் கஞ்சி பதினோரு மணிக்கு. அதன் பிறகு, இரவு எட்டு மணி வரை மற்ற வயல் வேலைகளைப் பார்த்துவிட்டுத்தான் குடிசைக்குத் திரும்ப வேண்டும். அந்தக் குடிசையும்கூட பண்ணையார் ஒதுக்கித்தந்த இடத்தில்தான்.

இந்த எழுதப்படாத விதிமுறைகளை மீறும் தொழிலாளிகளைத் தண்டிப்பதற்கென்றே கொடுமையான தண்டனை முறைகள் வழக்கத்தில் இருந்தன. அதிலொன்று சாணிப்பால். மாட்டுக்கு மருந்து புகட்டும் மூங்கில் குழலில், சாணத்தைக் கரைத்து குடிக்கச் செய்வார்கள். சாட்டையின் பிரிகளுக்கு நடுவில் கூழாங்கல்லை வைத்து ரத்தம் சொட்டச் சொட்ட அடிப்பது, சுட்டுப் பொசுக்கும் மணலில் ஒற்றைக் காலில் நிற்கவைப்பது, கால்களுக்குக் கிட்டிப் போடுவது என்று உடலை வதைக்கச் செய்யும் பல்வேறு கொடுமைகளை இழைப்பதே தினசரி நிகழ்வாயிருந்தது.

முதல் எதிர்ப்புக் குரல்

1937 டிசம்பரில் நீடாமங்கலத்தில் நடந்த தென்தஞ்சை மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் சமபந்தி போஜனத்தில் சாப்பிட்டார்கள் என்பதற்காக நிலவுடைமையாளர்கள் தலித்துகளை மரத்தில் கட்டிவைத்து அடித்தார்கள். அவர்களின் தலையை மொட்டையடித்து, வாயில் சாணிப்பால் ஊற்றினார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்து தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுயமரியாதை இயக்கம் களத்தில் இறங்கியது. தந்தி வழியாக இச்செய்தி பெரியாருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே ‘விடுதலை’ ஆசிரியர் குழுவிலிருந்த அ.பொன்னம்பலனாரைக் கள விசாரணைக்கு அனுப்பிவைத்தார். ‘விடுதலை’, ‘குடிஅரசு’ ஏடுகளின் வழியாக இந்தக் கொடுமையை அறிந்த தமிழகம் கொதித்து எழுந்தது.

நிலவுடைமைக்கு ஆதாரமாக இருக்கும் சாதியையும் அதைப் பாதுகாக்கும் மதத்தையும் கண்டித்து திராவிட இயக்கம் வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த வேளையில், பொதுவுடைமை இயக்கம் தொழிலாளர்களுக்கான தீவிரப் போராட்டங்களின் வழியாக நிலவுடைமையாளர்களுக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்தது. 1940-களில் தஞ்சை மண்ணில் பொதுவுடைமைக் கட்சியின் வழிகாட்டுதலோடு விவசாயத் தொழிலாளர்களின் சங்கங்கள் வேர்விட்டு, கிளை பரப்பின. பி.சீனிவாசராவ், மணலி கந்தசாமி ஆகியோர் அவற்றை முன்னின்று இயக்கினார்கள். இந்தப் போராட்டங்களின் விளைவாக, பண்ணையார்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கு இழைத்த தீங்குகளுக்கெல்லாம் ஒரு தீர்வு பிறந்தது. அவர்கள் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் வேண்டியிருந்தது. 1952-ல் இயற்றப்பட்ட பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம், தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அடிமைத் தளையிலிருந்து விடுபட்ட தொழிலாளர்கள் அடுத்தக் கட்டமாக, கூலி உயர்வுப் போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள். விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் அவர்களை வழிநடத்தின. இந்தப் போராட்டங்கள் வெறும் கூலி உயர்வுப் போராட்டங்கள் மட்டுமல்ல, முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்கிறபோது நிலவுடைமையாளரும் அவர் நிலத்தில் வேலை செய்யும் தொழிலாளியும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் என்ற வகையில் சாதிய வேறுபாடுகளை உடைத்தெறியும் உள்நோக்கத்தையும் கொண்டிருந்தது. இவை எல்லாம் சேர்ந்துதான் தொழிலாளர்களுக்கு எதிராகக் கோபத்தை உண்டாக்கியது.

கணபதியா பிள்ளை அறிக்கை

வெண்மணி சம்பவம் நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பே, தமிழக முதல்வர் அண்ணா உடல்நிலை மோசமான நிலையில் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார் (அடுத்த ஒன்றரை மாதத்தில் அவர் இறந்தார்). செய்தியறிந்து நிலைகுலைந்துபோன அண்ணா, உடனே தனக்குப் பதிலாக அமைச்சர்கள் மு.கருணாநிதியையும் எஸ்.மாதவனையும் வெண்மணிக்கு அனுப்பிவைத்தார். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தியும் இதுதொடர்பாக அண்ணாவை சந்தித்துப் பேசினார். அதற்கு அடுத்த நாளே, கீழத் தஞ்சையில் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றியும், நிலவுடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றியும் விசாரிப்பதற்காக நீதிபதி கணபதியா பிள்ளையைக் கொண்டு தனி நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார் அண்ணா. (பெரியாரும் அப்போது உடல்நிலை மோசமாகி, சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் என்பதை அப்போது வெளிவந்த ‘விடுதலை’ ஏடுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது).

கணபதியா பிள்ளை ஆணையத்தின் அறிக்கை வரலாற்றில் கவனமாகத் தவிர்க்கப்படும் ஒன்றாகிப்போனது துரதிருஷ்டம். விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினைக்குக் காரணம் அடுத்த ஊரிலிருந்து ஆட்களை அழைத்துவந்து வேலை செய்வதுதான். எனவே, அந்த முறையைத் தடுத்து உள்ளூர் ஆட்களுக்கே வேலை கொடுக்க வேண்டும் என்ற முக்கியமான ஒரு பரிந்துரையைச் செய்தது கணபதியா பிள்ளையின் அறிக்கை. மேலும், ஒரு நாளைக்கு உழவு வேலை ஐந்து மணி நேரம், இதர வேலைகளுக்கு ஏழு மணி நேரம் என்று வேலை நேரத்தையும் வரையறுத்தது. தஞ்சை மண்ணில் நடந்துவந்த விவசாயப் போராட்டங்களின் முக்கியமான கோரிக்கைகளையெல்லாம் ஏற்றுக்கொண்ட அந்த ஆணையம் அவற்றை அரசுக்குப் பரிந்துரை செய்தது. அண்ணாவுக்குப் பின் முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அவற்றை ஏற்று நடைமுறைப்படுத்தியது. விளைவாக, பிற பகுதிகளை ஒப்பிட கீழத்தஞ்சை பகுதியில் விவசாயத் தொழிலாளர்களுக்கு அதிகமான கூலி கிடைக்கும் வாய்ப்பு உருவானது.

திருத்தி எழுதப்பட்ட தீர்ப்புகள்

வெண்மணி வழக்கில் 106 பேர் கைதுசெய்யப்பட்டார்கள். நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, மேல்முறையீடு செய்யப்பட்டு உயர் நீதிமன்றம் வரைக்கும் சென்றது. கடைசியில், “இவ்வளவு நிலங்களுக்குச் சொந்தக்காரர் இப்படி நெருப்பு வைக்கிற காரியத்தைச் செய்வாரா?” என்ற கேள்வியின் பெயரால், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டார்கள். ஆனாலும் வெண்மணியில் பண்ணை இட்ட தீ பற்றிப் படர்ந்து விவசாயத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தை வளர்த்தெடுத்தது. போராட்டக் களத்தில் பொதுவுடைமை இயக்கம் தீவிரம் கொண்டது. அடிமைத் தளைகளுக்குக் காரணமாக இருக்கும் சாதியையும் மதத்தையும் திராவிட இயக்கம் அம்பலப்படுத்தியது. தலித்துகளுக்கு நிலவுரிமையைப் பெற்றுத்தரும் இயக்கத்தை காந்திய இணையர்களான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் முன்னெடுத்தார்கள்.

ஜாலியன் வாலாபாக்கின் ரத்தக்கறை படிந்த மண்ணை இளம்வயதில் பகத்சிங் சேகரித்துச் சென்றார் என்று வரலாற்றில் படித்திருக்கிறோம். அதைப் போல சுதந்திரப் போராட்ட வீரரான ஐ.மாயாண்டிபாரதி, 44 பேர் எரிக்கப்பட்ட ராமய்யாவின் குடிசையிலிருந்து சாம்பலை சேகரித்துச் சென்றார். அந்தச் சாம்பல் வெண்மணி நினைவிடத்தில் இன்னும் பாதுகாக்கப்படுகிறது. ஆண்டுதோறும் டிசம்.25-ல் மாநிலம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பேர் அங்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கிறார்கள். அன்று குடிசைக்கு வைத்த தீ இன்னும் தொழிலாளர் மனங்களில் கனன்றுகொண்டே இருக்கிறது!

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்