பா
டத் திட்டத்தில் கவனம்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம், பாடப் புத்தகங்களின் மொழி. நான் பயிற்றுமொழியைச் சொல்லவில்லை. அது தமிழானாலும் ஆங்கிலமானாலும் அதற்குள்ளேயே புத்தக ஆசிரியர் ஒரு மொழியை உருவாக்கிக்கொண்டிருப்பார். அந்த மொழியைத்தான் சொல்கிறேன். எவ்வாறோ புத்தக மொழி என்பது வரைவுப் பாடத்திட்டத்தினரின் கண்ணில் படாமல் தப்பியுள்ளது. இலக்கியம் என்று அறிவிக்கப்பட்டவை தவிர, மற்ற எதிலும் மொழியின் இருப்பை உணராத நமது கல்வி மரபில் இது நடப்பதுதான்.
பாடத்திட்டம் பற்றிய வேறு சிலவற்றை முதலில் சொல்லிவிடுவோம். நமக்கு எப்படி யான சமுதாயம் வேண்டும்? அந்த சமுதாயத்தைப் படைப்பவர்களாக மாணவர்களை இந்தப் பாடத்திட்டம் எப்படி உருவாக்கும்? இப்படியானவற்றைப் பாடத்திட்டம் தெளிவா கக் கண்டதாகத் தெரியவில்லை.
இரட்டைக் கலாச்சாரம்
மாணவர்கள் விவாதித்துப் பழக வேண்டும் என்று விரும்பும் பாடத்திட்டம் உளவியல், மெய்யியல், சமூகவியல், தர்க்கம் போன்ற பாடங்களை விலக்கியிருக்கக் கூடாது. பழந்தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு போன்றவற்றை மையப்படுத்த வேண்டும் என்பது சரியே. ஆனால், நவீனத்துவத்துக்குச் சற்று முந்தைய காலத் தமிழகத்தின் சமூக வரலாறு பாடத்திட்டத்தில் இல்லை. அறிவியலைத் தேர்வுசெய்தவர்கள் மேற்படிப்பில் அறிவியலைத் தொடரலாம். கலைப் பாடங்களைத் தேர்வுசெய்தவர்கள் மேற்படிப்பில் அவற்றையே தொடரலாம் என்பது ஏற்பாடு. இப்படி மடை வைத்துப் பிரித்துவிடுவதால் புதிய கல்வித் திட்டம் பெரிய மாற்றம் ஒன்றையும் சாதித்திருக்காது.
அறிவியலும் இலக்கியமும் ஒன்றையொன்று விலக்கி, ஒட்டு உறவில்லாமல் வளர்ந்த இரட்டைக் கலாச்சாரப் பிளவு இன்னும் விரிவாகும். அறிவியல் படிப்பவர் கள் இரண்டு கலைப் பாடங்களையும், மற்றவர்கள் இரண்டு அறிவியல் பாடங்களையும் இறுதி ஆண்டிலாவது துணைப் பாடங்களாகக் கற்றுக்கொள்ளலாம். கல்விக்கு முடிவே இல்லை என்பது மெய் என்றால், அது துவங்கிய புள்ளியிலிருந்து பயணித்துக்கொண்டேயிருக்காமல், பல புள்ளிகளிலிருந்து மீண்டும் மீண்டும் தொடங்க வேண்டும். புதிய கல்வித் திட்டம் இதனைப் பேசியிருந்தால் பெரிய மாற்றம் ஒன்றுக் கான சிந்தனையைத் தூண்டியிருக்கும்.
பள்ளியே மொழிக் களம்
பாடங்களில் இருக்கும் விவரங்களை மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் ஒரு வாகனம் புத்தக மொழி என்பார்கள். ஆனால், நமது சூழல் கொஞ்சம் வேறுபட்டது. வரைவுப் பாடத்திட்டம் தான் விவாதிக்கும் மற்றவற்றோடு புத்தக மொழியை யும் விவாதித்திருக்க வேண்டும். மொழி இங்கு இரண்டு பொறுப்புகளைச் சுமக்கிறது. ஒன்று, தகவல் தொடர்புக்கான கருவி என்ற அதன் வழக்கமான பொறுப்பு. மற்றொன்று, தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் பொறுப்பு. புதிய விவரங்களுக்கு ஈடுகொடுத்து அவற்றைப் பேசும்போது மொழிகளுக்கு ஒரு வளர்ச்சி வரும். இந்த வளர்ச்சிக்கான முதன்மைக் களம் தமிழுக் குப் பள்ளிகளும் பாடப் புத்தகங்களும்.
புத்தக மொழி ஒரு சுமையாகிப் படிப்பவர்களுக்குக் கனக்கிறது. எழுதுபவர் அப்போது என்ன செய்யலாம்? விவரங்களைக் குறைக்காமல் மொழியை எளிமையாக்கும் வழியை அவர் காண வேண்டும். கலைச் சொற்களைப் பட்டியலிட்டு, அவற்றுக்கு விளக்கம் சொல்லி ஒரு அகராதியாகப் புத்தகத்தில் சேர்த்துவிடலாம் என்பது தீர்வாகாது. வரைவுப் பாடத்திட்டத்தில் ஒரு பாடத்துக்கு இப்படி ஒரு பரிந்துரை. சொல் மட்டும் பிரச்சினையல்ல; சொல்லும் விவரங்களே புத்தகத்தின் மொழியோட்டத்தில் மனதுக்குப் பிடிபடாத செய்திகளாகின்றன.
ஒவ்வொன்றுக்கும் ஒரு இணை புத்தகம்
புத்தக மொழி, புதிய அறிவுப் புலங்களுக்கான சொற்களை மட்டுமல்ல, ஒரு தமிழ்ச் சொல்லாடலை உருவாக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருக்கும் புத்த கம் தமிழிலிருந்து மொழிபெயர்த்ததைப் போல் தோன்றுகிறது. தமிழில் உள்ளதைப் படித்தால் அது ஆங்கிலத்தில் எழுதி மொழிபெயர்த்ததாகத் தெரிகிறது. பொருள் விளங்காத சொற்றொடர்கள். தொடர்பு புரியாத வாக்கியங்கள். தொங்களும் தொரிசலுமாக இரைந்துகிடக்கும் செய்திகள். இவற்றை இணைத்து ஒரு முழுச் சித்திரமாக மனத்திரையில் வரைந்துகொள்ள எத்தனை மாணவர்களுக்கு இயலும்? எழுதியவை அச்சேறுமுன் அவற்றைச் செம்மைப்படுத்தும் குழுக்களும் தேவை.
பாடப் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு இணை புத்தகத்தை உருவாக்க வேண்டும். அது பாடங்களின் தலைப்புகளை எளிய மொழியில் செறிவாக விவாதிக்கும் தனித் தனிக் கட்டுரைகளின் தொகுப்பாக அமையலாம். இவை பாடத்துக்குப் பாடமாகவும், படைப்புக்குப் படைப்பாகவும் இருக்கும். புத்தக மொழியில் இல்லாத நெகிழ்வோடு ஒரு சொல்லாடல் இவற்றில் வளரலாம். பாடப் புத்தகம் எழுதுபவர்களுக்கும் படைப்புத் திறன் வேண்டுமே!
- தங்க.ஜெயராமன்,
ஆங்கிலப் பேராசிரியர்,
‘காவிரிக் கரையில் அப்போது...’
நூலின் ஆசிரியர்.
தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
27 mins ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago