நவீன அடிமைகளா சுயநிதிக் கல்லூரிப் பேராசிரியர்கள்?

By அருண் கண்ணன்

தமிழ்நாட்டில் மொத்தம் 2,657 கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 2,020 கல்லூரிகள் சுயநிதிக் கல்லூரிகள். சுயநிதிக் கல்லூரி களில் பணிபுரியும் ஆசிரியர்களும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் மிக மோசமான பணிச்சூழலில் உழல்கின்றனர். இக்கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, நம் கல்வியின் தரம் பெரிதும் பாதிக்கப்படுவதாகப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். இதைச் சரிசெய்ய, இந்நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் ஒன்றை இயற்றுமாறு திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பலரும் கூறிவருகின்றனர். அரசு இதில் கவனம் செலுத்தாததால், இக்கல்வி நிறுவனங்களின் எதேச்சதிகாரப் போக்கு தொடர்கிறது.

அலைக்கழித்த நிர்வாகம்: சென்னையில் உள்ள சுயநிதிக் கல்லூரி ஒன்றில் பணிபுரியும் பேரசிரியர் ஒருவர், அண்மையில் தனது மனைவிக்குப் பணிமாறுதல் கிடைத்ததால் தன்னைப் பணியிலிருந்து விடுவிக்குமாறு நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருக்கிறார். அக்கல்லூரி நிர்வாக விதிகளின்படி ஒருவர் வேலையிலிருந்து விலகுவதற்கு ஒரு மாதம் முன்பாகத் தகவல் தெரிவித்துவிட வேண்டும்.

அவரும் முதலில் ஒருமாத காலம் பணிபுரிந்து விட்டுச் செல்வதாக ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு, தவிர்க்க இயலாத காரணங்களுக்காக 20 நாட்கள் பணிபுரிந்த பிறகு தன்னை விடுவிக்குமாறு நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். நிர்வாகம் அக்கோரிக்கையை மறுத்ததுடன், மூன்று மாதச் சம்பளத்தைக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு அவரை நிர்ப்பந்தித்துள்ளது. பணத்தைச் செலுத்தினால் மட்டுமே அவருடைய அசல் சான்றிதழ்களைத் திருப்பித் தர முடியும் என்றும் பிடிவாதம் காட்டியது.

அப்பேராசிரியர் வேறுவழியின்றிக் குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் சென்று, அக்கல்லூரி நிர்வாகத்திடம் இறைஞ்சிக் கேட்டதால் பணிவிடுப்பு மற்றும் அசல் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. ஆனால், எல்லா நிறுவனங்களும் இப்படித் ‘தாராள மன’துடன் சான்றிதழ்களைக் கொடுத்துவிடுவதில்லை. சில நேரங்களில் நிறுவனங்களின் பிடிவாதப் போக்கால் பேராசிரியர்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பேராசிரியரின் மரணம்: 2010ஆம் ஆண்டு கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்ற ஓர் இளைஞர், சுயநிதிக் கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பிறகு, சில கல்லூரிகளில் பணிபுரிந்தவர் 2018இல் சென்னையில் உள்ள ஒரு சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் பணியில் சேர்ந்தார்.

தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிகப் பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் தனக்குப் பணி கிடைக்கும்பட்சத்தில் தன்னை இப்பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் நேர்முகத் தேர்வின்போதே கோரியிருந்தார். அது ஒப்புக்கொள்ளப்பட்டதால்தான் பணியில் சேர்ந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் பணிவாய்ப்பு கிடைத்தது. முதலில் அவரை விடுவிக்க மறுத்த சுயநிதிக் கல்லூரி நிர்வாகம், பிறகு அவருடைய அசல் சான்றிதழ்களைத் தரமறுத்தது. இதற்கு எதிராகப் பல கட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த அப்பேராசிரியர், திடீரென ஒருநாள் தற்கொலை செய்துகொண்டார்.

நிர்வாகம் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாகவே அவர் இறந்தார் என்பது குடும்பத்தாரின் குற்றச்சாட்டு. அவரது மரணத்துக்குப் பிறகுதான் பேராசிரியர்களிடமிருந்து தனியார் கல்வி நிறுவனங்கள் அசல் சான்றிதழ்களை வாங்கிவைத்துக்கொள்ளும் நடைமுறை தவறு என்று விமர்சனங்கள் எழத் தொடங்கின.

அதே காலகட்டத்தில், தனியார் கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்களிடமிருந்து அசல் சான்றிதழை வாங்கிவைத்துக் கொள்ளக் கூடாது என்று அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவும் (AICTE) அண்ணா பல்கலைக்கழகமும் சுற்றறிக்கை அனுப்பின. இதேபோல் பல்கலைக்கழக மானியக் குழுவும் 2020இல் சுற்றறிக்கை அனுப்பியது. இச்சுற்றறிக்கைகள் கள நிலைமையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனம்.

கடந்த ஆட்சிக் காலத்தின் இறுதியில், அரசுக் கல்லூரியில் உள்ள பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு விண்ணப்பிப்பதற்கு அசல் சான்றிதழும் பணி அனுபவச் சான்றிதழும் பேராசிரியர்களுக்குத் தேவைப்பட்டன.

இதைப் பயன்படுத்திக்கொண்டு சில சுயநிதிக் கல்லூரிகள் பணம் பறிக்கும் வேலையில் இறங்கின. தாங்கள் பணிபுரிந்த அனுபவச் சான்றிதழையும், அசல் சான்றிதழையும் திரும்பப் பெறுவதற்குப் பணம் கொடுக்க வேண்டிய அவலநிலை பேராசிரியர்களைக் கொந்தளிக்கவைத்தது.

பொய்த்துப்போன நம்பிக்கை: ஆட்சி மாற்றம் ஏற்பட்ட வுடன், பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களைக் கல்வி நிறுவனங்கள் திருப்பித்தர ஆணையிடுமாறு உயர் கல்வித் துறைச் செயலரிடம் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர் சங்கம் கோரியது. அதனைத் தொடர்ந்து உயர் கல்வித் துறையும் சுற்றறிக்கை ஒன்றைக் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியது. ஆனால், அதைக் கல்வி நிறுவனங்கள் மதித்து நடந்ததாகத் தெரியவில்லை.

ஒரு சுயநிதிக் கல்லூரி நிர்வாகம், தனது ஆசிரியர்களுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் பேராசிரியர்களின் சில அசல் சான்றிதழ்களை நிர்வாகத்திடமிருந்து திரும்பப் பெற ரூ.5,000 செலுத்த வேண்டும் என்றும், அனைத்துச் சான்றிதழ்களையும் திரும்பப் பெற வேண்டுமெனில், ஒரு மாதச் சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அசல் சான்றிதழ்களைப் பேராசிரியர்களிடமிருந்து வாங்கும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், அவர்களிடம் ஒரு
ஒப்புகைக் கடிதத்தைக்கூடத் தருவதில்லை என்பது இன்னொரு கொடுமை. ஒருவேளை நிர்வாகம் தங்களிடம் சான்றிதழ்கள் இல்லை என்று வாதிட்டால் அதை மறுப்பதற்குச் சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் எந்த ஆதாரமும் இருக்காது.

அதிர்ச்சியளித்த கல்லூரி: சில ஆண்டுகளுக்கு முன்னால், சென்னையில் உள்ள சுயநிதிக் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்த பேராசிரியர் ஒருவர், வேறு வேலை கிடைத்ததும் கல்லூரி நிர்வாகத்தை அணுகி, உடனடியாக விடுவிக்கக் கோரினார். முதலில் மூன்று மாதச் சம்பளத்தை வழங்கிவிட்டுச் செல்லச் சொன்னது நிர்வாகம்.

அவரும் அதைத் தர ஒப்புக்கொண்டார். ஆனால், நிர்வாகம் அவரைப் பணியிலிருந்து விடுவிக்க விரும்பவில்லை. எனவே, அசல் சான்றிதழ்களைத் திருப்பித்தராமல் காலம் தாழ்த்திவந்தது. விளைவாக, புதிய வேலையில் சேர்வதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டது.

திடீரென அக்கல்லூரி நிர்வாகம் தங்களிடம் அவருடைய அசல் சான்றிதழ்கள் இல்லை என்றும் இருந்த சிலவற்றையும் முன்பே கொடுத்துவிட்டதாகவும் கூறி, கல்லூரியிலிருந்து அவரை வெளியே அனுப்பியது. இப்படி, அசல் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் செய்யும் அராஜகங்களின் பட்டியல் மிக நீளமானது.

பேராசிரியர்கள் உடனடியாகத் தங்களை விடுவிக்கக் கோரும்போது இவ்வளவு கறாராக இருக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள், பேராசிரியர்களை உடனடியாகப் பணியிலிருந்து நீக்கும்போது, எந்த விதிகளையும் பின்பற்றுவதில்லை. சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் ஒரு மாதச் சம்பளத்தைக் கொடுத்தெல்லாம் பேராசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிப்பதாகத் தெரியவில்லை. எனவே, பேராசிரியர்களுக்கு எதிரான கொடுமைகள் சுயநிதிக் கல்லூரிகளில் அன்றாடம் நடக்கும் வாடிக்கையாகிவிட்டதுதான் சமூகத்தின் அவலம்.

ஆசிரியர்கள் இப்படியான சூழலில் பணிபுரிவது இக்கல்லூரிகளில் பயிலும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கற்றல் செயல்பாட்டைப் பாதிக்கும் என்பது அரசுக்குத் தெரியாதா? தங்களுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கும் இப்பேராசிரியர்கள், சுயமரியாதையுடன் வாழ மாணவர்களுக்கு எப்படி கற்றுத்தர முடியும்? தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் இத்தகைய அராஜகப் போக்கை இன்றைய திமுக அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பது அதன் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானதாகும்.

சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் திராவிட மாடல் ஆட்சியில், இத்தகைய சமூக அவலங்களை எப்படி நாம் தொடர அனுமதிப்பது? எனவே, சுயநிதிக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்தத் தனியான சட்டத்தைக் கொண்டுவருவது உடனடித் தேவையாகும். இந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் மாற்றம் வரும் என்று மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை நிறைவேற்றுவது அரசின் கடமை!

- தொடர்புக்கு: arunkannandrf@gmail.com

To Read in English: Are professors of self-financing colleges modern slaves?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE