“வெண்மணி வெறும் கூலிக்கான போராட்டம் அல்ல!” - தியாகு பேட்டி

By செல்வ புவியரசன்

வெண்மணி படுகொலைச் சம்பவத்தின் காரணமாக, கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் பொதுவாழ்வுக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் தியாகு. அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘வெண்மணியின் குழந்தை’. விவசாயத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டவர். சிறைபட்டிருந்த ஆண்டுகளில் ‘மூலதனம்’ நூலை மொழிபெயர்த்தவர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினராகவும் ‘உரிமைத் தமிழ்த் தேசம்’ ஆசிரியராகவும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் தியாகு, வெண்மணி நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

கீழத் தஞ்சையில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் போராட்டம் எப்போது தொடங்கியது?

அப்போது காவிரித் தீரம் என்பது முப்போகம் விளையக் கூடிய பகுதி. விவசாயத் தொழிலாளர்களில் கணிசமானவர்கள் தலித் மக்கள். வர்க்கச் சுரண்டலும் சாதிய ஒடுக்குமுறையும் கடுமையாக இருந்தன. சாணிப்பால், சவுக்கடி என்று மிகக் கொடூரமான ஒடுக்குமுறைகள் இருந்தன. இவற்றுக்கு எதிரான போராட்டங்களை ‘30-கள் தொடங்கிப் பொதுவுடைமை இயக்கத்தினர் நடத்தியிருக்கிறார்கள்.

வெண்மணி படுகொலைச் சம்பவம் பற்றிய ஆய்வின் போது இந்தப் பகுதியில் பொதுவுடைமை இயக்கம் எப்போது வந்தது என்று விசாரித்தேன். “எங்கள் ஊர்களில் ‘60-களில்தான் கட்சியைக் கொண்டுவந்தோம். ஆனால், வெண்மணியைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டும் எங்களுக்கு முன்பே கட்சி இருந்தது. எனக்கே அது முழுமையாகத் தெரியவில்லை” என்று என்னிடம் சொன்னார் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன். அந்தப் பகுதியில் ஒரு முக்கியமான தலைவராக இருந்த அவர், அதற்கு முன்பு திராவிட இயக்கத்தில் இருந்தவர்.

வெண்மணி வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்த ராமையா என்ற பெரியவரிடமும் இதே கேள்வி யைக் கேட்டேன். இந்தப் பகுதியில் மணலூர் மணியம்மை ஊர் ஊராகச் சென்று இயக்கப் பணிகளைத் தொடங்கினார் என்று அவர் சொன்னார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த மணியம்மை, நிலச்சுவான்தாரர் களுக்குத் தெரியாமல் இரவோடு இரவாகச் சென்றுதான் அந்த வேலைகளைச் செய்திருக்கிறார். சின்னக்குத்தூசி யின் நண்பர் அவர். அப்போது சின்னக்குத்தூசி திராவிட இயக்கத்தில் இருந்தார். மணியம்மை பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றி செங்கொடிச் சங்கங்களை அமைத்தார். இரண்டு இயக்கமும் ஒரே காலகட்டத்தில் இந்தப் பகுதிகளில் வளர்ந்தன.

திராவிட இயக்கத்தின் பங்கைப் பற்றிச் சொல்லுங்கள்…

ஒரு பகுதி தலித் மக்கள் ‘திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’ என்ற பெயரில் இயங்கினார்கள். ஏ.ஜி.கே., பாச்சா போன்ற தலைவர்கள் அந்தச் சங்கத்திலிருந்து உருவானவர்கள்தான்.

1967-க்குப் பிறகு இந்தப் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்த காலகட்டத்தில், கூலி உயர்வால் பலனில்லை; தேவையில்லாத வன்முறைகள் நடக்கின்றன என்று சொல்லி இந்தப் போராட்டங்களைப் பெரியார் தவிர்த்தார். அப்போது பலர் அவரை விட்டு விலகி பொதுவுடைமை இயக்கத்துக்கு வந்துவிட்டார்கள். இப்போதும்கூட, அந்தப் பகுதியில் ‘திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’ இயங்கிவருகிறது. ஏ.ஜி.கே. பிற்காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி மீண்டும் அந்த அமைப்பில் இணைந்து மாநிலப் பொறுப்பாளரானார்.

முக்கியமாக, தலித் மக்களை அடிப்படையாகக் கொண்ட இயக்கமாக இருந்ததால், பொருளாதாரரீதியாக கூலி உயர்வுக்குப் போராடுவது மட்டுமே போதவில்லை. ஒன்றாகச் சேர்ந்தால் வலிமையாக இருக்கலாம் என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதன் காரணமாக அந்தப் பகுதியில் சாதியக் கொடுமைகள் தணிந்தன.

வெண்மணி பிரச்சினை எப்படித் தீவிரமானது?

1967 பொதுத் தேர்தல் முடிவுகள் மக்கள் மத்தியில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தின. மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருந்ததால், ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. வெண்மணி சம்பவத்துக்கு முன்பாகவே விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்றே ‘கிஸான் போலீஸ்’ என்று ஒரு பிரிவைத் தொடங்கினார்கள். நாகப்பட்டினம் தாலுகாவின் பல கிராமங்களில், அந்த போலீஸார் முகாமிட்டிருந்தார்கள். நிலச்சுவான்தாரர்களின் இடங்களில்தான் அந்த முகாம்கள் அமைக்கப்பட்டன.

கிராமங்களில் புகுந்து ஆடு, கோழிகளைத் திருடுவது, மக்களைத் தெருவில் மண்டிபோடச் சொல்வது, ‘பி.ராமமூர்த்தி ஒழிக’ என்று கோஷம் போடச் சொல்வது என்று அந்த போலீஸார் பல அக்கிரமங்களைச் செய்தனர். மறு பக்கம் நிலச்சுவான்தாரர்கள் ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்க’த்தை ஏற்படுத்தி, எந்த ஊரிலும் செங்கொடி ஏற்றக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தார்கள். அவர்களது சங்கத்தின் வெள்ளைக் கொடியைத்தான் ஏற்ற வேண்டும், இல்லையென்றால், அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று நெருக்கடி தந்தார்கள்.

கோபாலகிருஷ்ண நாயுடு நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவருடைய மாமா பக்கிரிசாமி நாயுடுதான் அவரை ஆட்டிப் படைத்தவர் என்று சொல்வார்கள்.

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பூந்தழங்குடி பக்கிரி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு நாள் இரவு ஏ.ஜி.கே.வை கொலைசெய்யக் காத்திருந்தவர்கள் அவருக்கு முன்பாக வந்த சிக்கல் பக்கிரியைக் கொன்றுவிட்டார்கள். நாகை வட்டம் முழுக்கப் பதற்றமாக இருந்தது. வெண்மணி உள்ளடங்கிய தேவூர் பகுதியில் நிலக்கிழார்களின் அடியாட்கள் குடிசைகளைக் கொளுத்தும் ஆபத்து இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அரசுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

1968 டிசம்பர் 25 முன்னிரவில் மிராசுதாரர்களின் அடியாட்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இருகூர் பக்கிரி கொல்லப்பட்டார். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என எல்லோரும் பயந்துகிடந்தார்கள். பக்கத்து ஊருக்குச் சென்று உதவி கேட்பதற்காக இளைஞர்கள் எல்லாம் ஊரை விட்டுச் சென்றிருந்தார்கள். அதனால்தான் இரவு அந்தச் சம்பவம் நடந்தபோது ஊரில் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்களே இருந்தார்கள்.

சம்பவ தினத்தன்று என்ன நடந்தது?

அன்று இரவு தொழிலாளர் குடியிருப்புக்குள் நீல நிற போலீஸ் வேன் போய் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்றார்கள். கோபாலகிருஷ்ண நாயுடுதான் அவர்களை வழிநடத்திச் சென்றார். ராமையாவின் குடிசை அந்த ஊரின் கடைசியில் இருந்தது. அந்தக் குடிசையைத் தாண்டியும் போக முடியாது.

அங்கு பதுங்கிக்கொண்டால் விட்டுவிடுவார்கள் என்றுதான் தொழிலாளர் குடும்பத்தினர் நினைத்திருப்பார்கள். குடிசையையே கொளுத்துவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து, நான் அங்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த தென்னை மரங்களில் தோட்டாக்கள் பாய்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

விவசாய சங்கத் தலைவர்கள் யாருமே அப்போது ஊரில் இல்லை. கேரளத்தில் சி.பி.எம். கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்துகொண்டிருந்ததால், தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் எல்லோரும் அங்கே இருந்தார்கள். ஏ.ஜி.கே. மீது ஒரு வழக்கு இருந்ததால், அவர் தலைமறைவாக இருந்தார். சம்பவத்தைக் கேள்விப்பட்ட பிறகுதான் அவர்கள் வந்துசேர்ந்தார்கள். பி.ராமமூர்த்தி வந்த பிறகுதான் காவல் துறை முற்றுகையை மீறி ஊருக்குள்ளேயே நுழைய முடிந்தது.

திமுக ஆட்சி இந்தச் சம்பவத்தை எப்படி எதிர்கொண்டது?

அண்ணாவால் இந்தச் சம்பவத்தை நினைத்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது. இது அவருக்குத் தெரிந்து நடந்தது என்றோ அவர் போலீஸை அனுப்பினார் என்றோ சொல்ல முடியாது. ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் கிஸான் போலீஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஒருமுறை சட்ட மன்றத்தில் அண்ணா பேசும்போது, “உங்கள் தோழர்களில் சிலர் பகலில் மார்க்சிஸ்ட்டுகள், இரவில் நக்ஸலைட்டுகள்” என்றே சொல்லியிருக்கிறார். விவசாயத் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஏ.ஜி.கே., மீனாட்சிசுந்தரம் போன்றவர்களைத்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார்.

தொழிலாளர்களின் சார்பாக நின்று அந்தப் பிரச்சினைக் குத் தீர்வு காண்பது; மக்களிடம் நேரடியாகச் சென்று அந்தப் பிரச்சினையை அணுகுவது, போலீஸ் அடக்குமுறையைத் தவிர்ப்பது என்றெல்லாம் கொள்கை இல்லாமல், அதிகாரவர்க்கம் எடுத்த முடிவுகளுக்கு இடம்கொடுத்துவிட்டபோது அண்ணா மீது குற்றச்சாட்டு வரத்தானே செய்யும்! முதலமைச்சர் என்ற முறையில் வெண்மணிக்கு அண்ணாவை அரசியல் பொறுப்பாக்குவதில் தவறில்லை.

பெரியாரைப் பொறுத்தவரை கூலி உயர்வுப் போராட்டங்களின் மீதே அவருக்கு நம்பிக்கையில்லை. தன்னிடமிருந்து விலகிப்போனவர்கள் மீதான கோபமும் திமுக ஆட்சி மீதான பரிவும் சேர்ந்துகொண்டன. பெரியார் நிலைப்பாட்டை ஏற்க முடியாதுதான்!

அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

செவ்வாழை சிறுகதையில் நிலப் பிரபுக்களின் கொடுநெஞ்சை சித்திரித்த அண்ணாவால் இப்போது காலம்காலமாய் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரபுத்துவத்தின் கோர முகத்தைக் காண முடியவில்லை. இந்தப் பிரச்சினையை மக்களுக்கு இடையிலான மோதலாகவோ அல்லது அமைதிக் குலைவாகவோதான் அவரது அரசால் பார்க்க முடிந்தது. ஆக, காங்கிரஸு அரசுக்கும் திமுக அரசுக்கும் வேறுபாடு இல்லாமல்போனது. அதே அதிகாரிகள்.. அதே போலீஸ் கொள்கை!

கேரளத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தபோது தொழிலாளர் போராட்டத்தில் போலீஸ் தலையிடாது என்ற கொள்கையை எடுத்தார்கள். ஆனால், போலீஸ் கொள்கையில் திமுக எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. வெண்மணியில் படுகொலைக்குக் காரணமானவர்கள், தொழிலாளர்கள் என்று இரு தரப்பினர் மீதும் வழக்கு போடப்பட்டது.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு மாநில அரசு கலைக்கப்படாமலிருந்த இடைக்காலத்தில் கட்சி சார்பில் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. வெண்மணி சம்பவத்துக்கு முன் நடந்த கொலை தொடர்பாகச் சிறையிலிருந்த தோழர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணைவிடுதலை பெற உதவ வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார்.

அவர்கள் விடுதலை பெற்று வெளியே சென்றார்கள். அதைப் போல வெண்மணி சம்பவத்துக்குக் காரணமான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்குப் பிணையை நீக்கி சிறையிலடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது. அவரும் பாலு நாயுடுவும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். திமுக ஆட்சி ‘டிஸ்மிஸ்’ ஆனபிறகுதான், அவர்களைப் பிணையில் வெளியே எடுக்க முடிந்தது.

வெண்மணி சம்பவத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்ன?

இது வெறும் கூலிக்கான போராட்டம் அல்ல. உதாரணமாக, தொழிற்சாலைகளில் முதலாளி உயர்ந்தவர், தொழிலாளர்கள் தாழ்ந்தவர்கள் என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், விவசாயத் தொழிலாளிகள் அப்படிக் கிடையாது. கூனிக் குறுகி, அடிபணிந்து வாழ்ந்த மக்களுக்கு முதலில் மான உணர்ச்சி ஊட்ட வேண்டியிருந்தது. பண்ணைகளுக்குக் காரியக்காரர்களாக இருந்தவர்கள், விவசாயத் தொழிலாளர்களைக் கடுமையாக ஒடுக்கினார்கள். ஊருக்குள் என்ன பிரச்சினை என்றாலும், அது கணவன் - மனைவி சண்டையாகவே இருந்தாலும்கூட, அவர்களைக் கையைக் கட்டி பண்ணையார்களின் முன்பாக நிறுத்திவிடுவார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி இவற்றையெல்லாம் மாற்றியமைத்தது. மாதம் ஒருமுறை அமாவாசை அன்று வேலைக்குப் போகாமல் கூட்டம் நடத்துவார்கள். அங்கு அத்தனை பேரும் கூடிப் பிரச்சினைகளையெல்லாம் பேசித் தீர்த்துக்கொள்வார்கள். தொழிலாளர்களிடம் தன்னம்பிக்கையும் சுயமரியாதை உணர்ச்சியும் உருவாகின.

பண்ணையார்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்ததா?

இப்படியான சூழல் உருவானதைத் தொடர்ந்து, கூலி ஒரு பிரச்சினையில்லை, முதலில் சங்கத்தைக் கலையுங்கள் என்று பண்ணையார்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். உண்மையில், வெண்மணி பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமே இதுதான்: ‘நெல் உற்பத்தியாளர் சங்க’க் கொடிகளை ஏற்ற வேண்டும் என்ற கட்டளையை ‘விவசாயத் தொழிலாளர் சங்க’ நிர்வாகிகள் மறுத்தார்கள். மறுப்பவர்களுக்கு அபராதம் போடப்பட்டது. அபராதத்தைக் கொடுக்க மறுத்தவர்கள் கடத்தப்பட்டார்கள். அப்படித்தான் வெண்மணியில் தகராறு முற்றியது.

ஆக, சங்கம் வைக்கிற உரிமை இருக்கிறதா இல்லையா என்பதுதான் பிரச்சினையே. சங்கம் வைத்தால் என்ன கிடைக்கும் என்பதற்கு, கீழத் தஞ்சை விவசாயத் தொழிலாளர்களுக்கு என்று இயற்றப்பட்ட குறைந்தபட்சக் கூலிச் சட்டமே சான்று. விவசாயத் தொழிலாளர்கள் என்ற முறையில், பொதுவுடைமை இயக்கம் தீவிரமாக இருந்தது. குறிப்பாக, சிபிஎம் அந்தப் பகுதியில் வலுவாக இருந்தது. திமுகவைச் சேர்ந்த மன்னை நாராயணசாமி போன்ற சிலரும் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஆதரித்தார்கள். பேச்சுவார்த்தையில் விவசாயத் தொழிலாளர்களின் சார்பில் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

இவற்றில் கிடைத்த பலன்களைப் பற்றிச் சொல்லுங்கள்…

நீ மனிதன், நீ இன்னொருவனுக்கு அடிமை கிடையாது என்ற உணர்வைத் தொழிலாளர்களிடம் ஊட்டி வளர்த்தெடுத்தது பொதுவுடைமை இயக்கம். அதுபோல், விவசாயத் தொழிலாளியின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கொடுக்க வேண்டும், போதிய ஓய்வு வேண்டும், வயலில் வேலை பார்க்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் உரிமை வேண்டும் என்ற உரிமைகளையெல்லாம் வென்றெடுத்தது.

கீழத் தஞ்சையில் வென்றெடுத்த முக்கியமான உரிமை ‘விழுந்த கூலி’. அதற்கு முன்னர் அற்றக் கூலிதான் கொடுக்கப்பட்டது. அற்றக் கூலியைப் பொறுத்தவரை, ஒரு நாள் உழைப்புக்குக் கூலியாக நெல்லோ பணமோ கொடுக்கப்பட்டது. அற்றக் கூலிக்கு விடிவதற்கு முன்பே வயலுக்குச் செல்ல வேண்டும், மாலை அந்தி சாய்ந்த பிறகுதான் கரையேற முடியும்.

விழுந்த கூலியின்படி, ஒரு கலத்துக்கு இத்தனை படி நெல் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக, கலத்துக்கு இத்தனை படி, கலத்துக்குள்ளேயே அளப்பதா அல்லது வெளியே அளப்பதா என்ற பிரச்சினை வந்தது. அந்தப் போராட்டமும் வெற்றி பெற்றது. இன்றைக்கு வெண்மணியைச் சுற்றியுள்ள கிராமங்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறிவிட்டன. வெண்மணி கிராமம் மட்டும் மாறவில்லை. இன்னும் அங்கு செங்கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது.

இன்றைய சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காவிரித் தண்ணீர் இல்லாமல் போனதால், பழைய வர்க்க உறவுகளே மாறிவிட்டன. வேலைக்கு ஆட்கள் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். இப்போது கூலி முக்கியமான பிரச்சினை இல்லை. கூலி உயர்வுக்காக இவ்வளவு தியாகங்கள் செய்து, போலீஸையும் அடியாட்களையும் எதிர்கொண்டு கொலைகளுக்கும் சாவுகளுக்கும் நடுவில் நின்று வெற்றிபெற்ற ஒரு இயக்கம், ஏன் காவிரி உரிமைகளை இழந்தபோது மெளனமாக இருந்தது? அந்த உரிமைகளை மீட்பதற்கு என்ன செய்தது? நிலம் இருப்பவன், இல்லாதவன் என எல்லோருக்குமான உயிர்நாடி காவிரிதானே.

நிலம் உள்ளவர்கள் மாற்று வழிகளைத் தேடிக்கொள்ளலாம். நிலமற்றவர்கள் அகதிகளாகத் திருப்பூருக்கும் கோவைக்கும் பெங்களூருக்கும் இடம்பெயர்ந்து போக வேண்டியிருக்கிறதே! கல்வி, வேலைவாய்ப்புகளுக்குப் பிறகு விவசாய வேலைகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் இல்லை. எனவே, நடுத்தர வயதுள்ளவர்கள் மட்டும்தான் அந்த ஊர்களில் விவசாய வேலைகள் பார்த்துக்கொண்டிருக் கிறார்கள்.

விவசாயத் தொழிலாளர்கள் என்ற உரிமையை வென்று கொடுத்து, சங்கங்களை உருவாக்கிய பொதுவுடைமை இயக்கம் தமிழர்களே என்று அவர்களை ஒருநாளும் அழைக்கவில்லை. தொழிலாளியாகக் கூலி உரிமையை இழக்கும்போது போராடிய இயக்கம், தமிழக உரிமைகள் சார்ந்து அவர்களைப் பயிற்றுவிக்கவே இல்லை. அகில இந்தியப் போராட்டத்தில் இவர்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவார்கள்.

ஆனால், இவர்களின் மாநில உரிமை என்னும் தேசிய இன உரிமை மறுக்கப்படும்போது இவர்களுக்காக யாரும் வர மாட்டார்கள். அந்த இடத்தில் ‘தமிழா இன உணர்வு கொள்’ என்று சொல்லும் திராவிட இயக்கம் வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இன உணர்வு என்பதை தேசிய இன உணர்வாக முழுதாக அடையாளப்படுத்தவே இல்லை. அது அவர்களுக்குத் தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு பொழுதுபோக்கு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்