தமிழகக் கடலோடிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் சாகாவரம் பெற்ற ‘ஆழி சூழ் உலகு' நாவலின் நதிமூலத்தை ஜோ டி குரூஸ் தொடங்கும் வரிகள் இவை:
“எனக்கு அப்போது வயது பன்னிரண்டு. ஆறாவது படித்தேன். பங்குக் கோயிலின் அடக்க பூசை ஒன்றில் குருவோடு பீடபரிசாரகனாக நான். ஊரே திரண்டு கோயிலில் கூடியிருந்தது. கோயிலுக்குள் வந்த மையப் பெட்டி வைக்கப்பட்ட மேசை மீது ‘இன்று நான் நாளை நீ' என்று பொறித்திருந்தது.
மலைஉருட்டியாரின் கண்களை மீன்கள் கொத்திவிட்டன. தலைவிரி கோலமாய் அவர் மனைவி. நிர்க்கதியாய் ஏழு குழந்தைகள். என்னைக் கதிகலங்க வைத்தது அந்தக் கடல்சாவு. மரணத்தின் தன்மையை அவதானிக்க ஆரம்பித்தேன்; பயத்துடன், ஆர்வத்துடன். பிறப்பொக்கும் அனைத்துயிர்க்கும் ஜனன வழி ஒன்றாயிருக்க, மரண வழிகள்தான் எத்தனையெத்தனை? ஒருபோதும் வெல்ல முடியாத அந்த மகா வல்லமை நமக்கு உணர்த்துவது என்ன?
என் அனுபவங்களின் விளைவாய் எழும் எண்ணமெல்லாம் எப்போதும் ஓர் எளிய கேள்வியையே சென்று சேரும். மரணத்தின் முன் வாழ்க்கையின் பெறுமதி என்ன?”
கண்ணாமூச்சி ஆட்டம்
மரண பயம் எல்லோருக்கும் பொது. ஆனால், ஒவ்வொரு நாளும் அதை எதிர்கொள்வதுதான் வாழ்க்கை என்றால், அந்த வாழ்க்கையை என்னவென்று சொல்வது?
ஆழி என்கிற வார்த்தையை நாம் கடலைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். கடலோடிகள் மத்தியில் ஆழிக்கு இன்னொரு அர்த்தம் உண்டு. கடலில் அலை பொங்குமிடம். கரைக்கடலில், அதாவது கரையிலிருந்து ஓரிரு கி.மீ. தொலைவுக்குள் பாறைகளில் அலை அடித்துப் பொங்கும் பகுதி. ஆழ்கடலுக்குக்கூட அஞ்சாதவர்கள் ஆழிக்கு அஞ்சுவார்கள். ஆழியைக் கடந்து, கரையிலிருந்து கடலுக்குள் செல்லும்போதும் சரி; கடலிலிருந்து கரை நோக்கித் திரும்பும்போதும் சரி... ஆழியைக் கடப்பது மரணத்தைக் கடப்பதற்குச் சமம்.
“ஒரு சிலும்பலும் இல்லாம வத்தக்குளம்போலக் கடல் கிடக்குறப்போகூட நெஞ்சுல கைவெச்சுக்கிட்டேதான் ஆழியைக் கடப்போம். ஆழிகிட்ட நெருங்கும்போதே மனசுக்குள்ள ஆத்தா வந்திருவா. ‘ஆத்தா… குமரி ஆத்தா… காப்பாத்து தாயே’னு வாய் தானா முணுமுணுக்கும். மாசா (அலை) வந்துச்சு, ரெண்டு பனை, மூணு பனை உசரம் தூக்கும். அப்படியே கட்டுமரத்தைத் தூக்கி வீசி நேரே நட்ட குத்தும். ஆழிகிட்ட மாசா வந்துட்டா கடல்ல குதிச்சுடுவோம். மரத்துல இருந்தா ஒரே அடிதான். அந்த எடத்துலயே சாவுதான்...”
- கடலோடிகள் ஒவ்வொரு நாளும் ஆழியைத் தாண்டும் கதை இது.
கடலோடிகள் ஒவ்வொரு நாளும் நிச்சயமற்றதன்மையோடுதான் கடலுக்குள் செல்கிறார்கள்; சாவுக்குத் துணிந்துதான் கடலுக்குள் செல்கிறார் கள் என்றாலும், கடல் சாவுகள் கடல்புறத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகள் சாதாரணமானவை அல்ல. கடலுக்கு இரு முகங்கள் உண்டு. ஒரு முகம் கடலம்மா. இன்னொரு முகம் காலன். இந்த இரு முகங்களுக்கும் எப்போதும் முகம்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் ஒரு கடலோடி.
தெளிவு நல்லதல்ல
கடல் நீர் தெளிந்தாற்போல இருப்பதைத் ‘தெளிவு’ என்று குறிப்பிடு வார்கள் கடலோடிகள். அப்படி இருந்தால், குளியர்கள் சங்கு குளிக்கக் கடலில் இறங்க மாட்டார்கள். மீனவர்களும் தெளிவை விரும்ப மாட்டார்கள். ஒரு காரணம், மீன்பாடு அந்தச் சூழலில் கிடைக்காது என்பது. இன்னொரு காரணம், அதைவிடவும் முக்கியமானது. ஆடா திருக்கை, சுறா போன்றவற்றின் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும் என்பது. பெரும் அலைகள் மட்டும்தான் சவால்கள் என்றில்லை. ஒரு கடலோடிக்குக் கடலில் சாவு எப்படி வேண்டுமானாலும் வரலாம். கடல் நாகம் கடித்தால் அந்த இடத்திலேயே ஆள் காலி.
தாச்சிக்கண்ட என்று ஒரு மீன் உண்டு. கரு நிறம் கொண்டது. சுமார் இரண்டு முழம் வரை வளரக்கூடியது. அதன் அருகில் ஒரு கட்டுமரமோ வள்ளமோ வந்தால் குறுக்கே ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நோக்கிப் பாயக்கூடியது. அப்படிப் பாயும்போது அதன் மீதுள்ள தண்ணீர் பட்டாலும் ஆள் சாக வேண்டியதுதான் என்கிறார்கள். ஈட்டி போன்ற மூக்கைக் கொண்ட ஊழி மீனும் இப்படிப் பாயக்கூடியது. பாய்ந்த வேகத்தில் உடலில் செருகிக்கொள்ளும் ஒரு கத்திபோல; உருவினால் சதையையும் சேர்த்துப் பிய்த்துக்கொண்டு வெளியே வரும். கரை தொலைவில் என்றால், சாவு உறுதி.
சுறாவேலாவைவிட அபாயகரமானது ஆடாதிருக்கை. சங்கு குளிப் பவர்கள் பலர் ஆடாதிருக்கை கடிக்கு இரையாகியிருக்கிறார்கள். கடலில் சாவின் முகவர்கள் இப்படி எத்தனையோ வடிவங்களில் வருவது உண்டு.
கடல் சாவு எனும் கொடூர சாஸ்வதம்
வாழ்க்கையில் சாவு சாஸ்வதம். எப்போதும். எல்லோருக்கும். எந்த வகையிலானாலும் சாவு கொடூரம்தான். எனினும், கடல் சாவு கொடூரத்தின் உச்சம். ஒரு மனிதன் செத்தபின் உண்டாகும் அழகை சவக்களை என்றெல்லாம் சொல்வோமே... கடல் சாவில் பிணத்துக்கும்கூட நல்ல கதி கிடைக்காது. உடல் விறைத்து, கண்கள், காதுகள் மீன்களுக்கு இரையான நிலையில், கை கால்களெல்லாம் ஊறி, சிதைந்து...
நான் கடலோடி சமூகத்தைச் சார்ந்தவன் அல்ல. ஆனால், கடல் சாவின் குரூர வலியைக் கொஞ்சம் அனுபவித்தவன். என் அப்பாவின் சாவு நடுக்கடலில் நடந்தது; என்னுடைய இள வயதில்; வெளிநாட்டில்; ஒரு கப்பலில். அப்பாவின் சடலத்தைப் பார்த்த அவருடைய சிநேகிதர்கள் சொன்னார்கள், ஊறி நைந்துபோன அந்தப் பிண்டத்தைக் கடிகாரத்தை வைத்துதான் யூகித்தோம் என்று. கடலைப் பார்த்துவிட்டுத் திரும்பும் ஒவ்வொரு முறையும் நான் ஒருபோதும் பார்த்திராத அப்பாவின் சடலம் கண் முன்னே வரும்... உடல் விறைத்து, கண்கள், காதுகள் மீன்களுக்கு இரையான நிலையில், கை கால்களெல்லாம் ஊறி, சிதைந்து...
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 3.88 லட்சம் பேர் நீரில் மூழ்கிச் சாகிறார்கள் என்கிறது உலகச் சுகாதார அமைப்பு. இதிலும், கவனிக்க வேண்டிய அரசியல் உண்டு. அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 4,000 என்றால், இந்தியாவில் 70,000. மக்கள்தொகை கணக்குப்படி அமெரிக் காவைவிட கிட்டத்தட்ட இந்தியா மூன்று மடங்கு பெரியது என்றாலும், இந்தியாவில் இந்த எண்ணிக்கை அமெரிக்காவைக் காட்டிலும் 16.5 மடங்கு அதிகம். இவற்றில் பெரும்பாலானவை கடல் சாவுகள்தான். இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோகிறது. ஏன் நம்மால் தடுக்க முடியவில்லை? ஒவ்வொரு எட்டு நிமிடத்துக்கும் ஓர் உயிர் நீரில் மூழ்குகிறது. ஏன் இதுபற்றி யாருமே பேசாமல் இருக்கிறோம்?
(அலைகள் தழுவும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago