நிலவில் ஒரு குகை!

By என்.ராமதுரை

நி

லவில் பெரிய குகை இருப்பதாக ஜப்பான் அனுப்பிய விண்கலம் கண்டுபிடித்துள்ளது. எதிர்காலத்தில் நிலவுக்குச் செல்கின்ற விண்வெளி வீரர்கள் இந்தக் குகையில் தங்க முடியும் என்று கருதப்படுகிறது. அமெரிக்கா 1969-ல் தொடங்கி ஆறு முறை நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பியபோது அவர்கள் தங்களது விண்கலத்திலேயே தங்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் இரண்டு பேர் மட்டுமே சென்றதால், இப்படி விண்கலத்தில் தங்குவது சாத்தியமாக இருந்தது. தவிர, அவர்கள் நிலவில் அதிக காலம் தங்கவில்லை. 1972-ல் அப்போலோ 17 விண்கலத்தில் சென்றவர்கள்தான் நிலவில் அதிகபட்சமாக 75 மணி நேரம் தங்கினர்.

எதிர்காலத்தில் அடுத்தடுத்து பல விண்வெளி வீரர் கள் அனுப்பப்படும்போது நிலவில் நிறைய நாட்கள் தங்க வேண்டியிருக்கும். அவர்கள் நிலத்துக்கு அடியில் குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, அதில்தான் தங்கவேண்டியிருக்கும். அப்படியான குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும்வரை இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகையில் தங்கலாம்.

கடும் வெயில்; கடும் குளிர்

நிலவின் நிலப் பரப்பில் அதாவது திறந்த வெளியில் குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொள்வது என்பது அநேகமாக இயலாத விஷயம். நிலவில் பகல் என்பது பூமிக் கணக்குப்படி 14 நாட்கள். இரவு என்பது இதே போல 14 நாட்கள். நிலவில் பகல் நேரத்தில் உச்சி வேளையில் வெயில் சுமார் 106 டிகிரி (செல்சியஸ்) ஆகும். இரவில் குளிர் மைனஸ் 173 டிகிரி (செல்சியஸ்) அளவுக்கு இருக்கும். நிலவில் காற்று மண்டலம் இல்லை என்பதே இந்த நிலைமைக்குக் காரணம். நிலவில் உள்ள நிலைமையுடன் ஒப்பிட்டால், பூமியில் பதிவான அதிகபட்ச வெயில் (ஈரான் பாலைவனத்தில்) 70 டிகிரி (செல்சியஸ்) ஆகும்.

எனவேதான் நிலவுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆறு தடவைகளிலும் நிலவில் சூரியன் உதித்த சற்று நேரத்தில்தான் போய் இறங்கினர். நிலவில் உச்சி வெயில் நேரத்தில் போய் இறங்கவில்லை. வெயில் ஏறுவதற்கு முன்னர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

நிலவில் பல நாட்கள் தங்குவதானால் நிலத்துக்கு அடியில் குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொண்டாக வேண்டும். அல்லது நிலவின் துருவப் பகுதிகளில் போய் இறங்க வேண்டும் என்பதுதான் ஏற்கெனவே உள்ள நிலை. இப்படியான பின்னணியில்தான் ஜப்பானிய விண்கலம் நிலவில் குகையைக் கண்டுபிடித்துள்ளது.

நிலவில் குகை இயற்கையாக ஏற்பட்டுள்ளதாகும். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிலவில் எரி மலைகள் செயல்பட்டன. பூமியில் இப்போதும் எரி மலைகள் நெருப்புக் குழம்பைக் கக்குகின்றன. ஆனால், நிலவில் எரிமலைகள் அவிந்துவிட்டன.

பூமியில் எரிமலைக் குழம்பு கெட்டியானது. எரிமலை யின் வாய் வழியே வெளிப்படும் நெருப்புக் குழம்பு மேலும் மேலும் கெட்டிப்பட்டு, எரிமலை கொஞ்சம் கொஞ்சமாகக் கூம்பு வடிவில் உயர்ந்துகொண்டே போகும். நிலவில் அப்படியில்லை. நிலவில் நெருப்புக் குழம்பு பெரிதும் நீர்த்து இருக்கும். எனவே, அதிகப் பரப்பளவில் பரவி நிற்கும்.

கறுப்பின் காரணம்

இரவில் முழு நிலவைப் பார்த்தால் பல பகுதிகள் கறுப்பாகத் தெரியும். ஆரம்பகாலத்தில் தொலைநோக்கி மூலம் நிலவை ஆராய்ந்த விஞ்ஞானிகள், நிலவில் கறுப்பாகத் தெரிகின்ற பகுதிகளைக் கடல்கள் என்றே கருதினர். பின்னர்தான் அவை எரிமலைக் குழம்பு பாய்ந்து ஓடிய பகுதிகள் என்பது தெரியவந்தது. நீங்கள் பௌர்ணமி தினத்தன்று நிலவை உற்றுக் கவனித்தால் நிலவின் மேற்குப் பகுதி, வட பகுதி ஆகியவை கறுமையாக இருப்பது தெரியவரும். நிலவின் எரிமலைக் குழம்பில் இரும்புச் சத்து அதிகம் என்பதால், எரிமலைக் குழம்பு பரவிய பகுதிகள் இவ்விதம் கறுப்பாகத் தெரிவதாகக் கருதப்படுகிறது.

தொடர்ந்து பல பௌர்ணமிகளில் நிலவைக் கவனித்துவந்தால், நிலவு ஒரே மாதிரியாகத்தான் தென்படும். நிலவு எப்போதும் நமக்கு தனது ஒரு பாதியை மட்டுமே காட்டிவருவதால் இப்படியான நிலை உள்ளது. நிலவில் பெருக்கெடுத்து ஓடிய நெருப்புக் குழம்பு என்பது உருகிய பாறைக் குழம்பே ஆகும். பாறைக் குழம்பு ஆறிய பிறகு அதன் மேற்புறம் கெட்டிப்பட்டுவிட்டது. உள்ளே நெருப்புக் குழம்பு ஓடிய இடம் காலியான பிறகு, அது சுரங்கப்பாதை போலானது. இதை Lava Tube என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். நிலவில் இப்படி எரிமலைக் குழம்பு ஓடிய சுரங்கப்பாதைகள் பல உள்ளன என்பது முன்னரே தெரியும்.

காக்கும் சுரங்கம்

இந்தியாவின் சந்திரயான் உட்பட நிலவை ஆராய்ந்த பல விண்கலங்கள் நிலவில் உள்ள எரிமலை சுரங்கப்பாதைகளை ஆராய்ந்து தகவல் தெரிவித்துள்ளன. இந்த சுரங்கப்பாதைகள் சில இடங்களில் 300 மீட்டர் அகலத்துக்கு உள்ளன. சுரங்கப்பாதைக்குள் மைனஸ் 20 டிகிரி அளவுக்குக் குளிர் உண்டு. நிலவில் திறந்த வெளியில் இருக்கக்கூடிய கடும் வெப்பம் அல்லது கடும் குளிருடன் ஒப்பிட்டால் இது எவ்வளவோ பரவாயில்லை. இந்த சுரங்கத்துக்குள் தங்கிக்கொண்டால் காஸ்மிக் கதிர்வீச்சு, சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள், சிறியதும் பெரியதுமான விண்கற்கள் ஆகியவற்றின் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

நிலவில் உள்ள எரிமலை சுரங்கப்பாதைகளின் நுழைவு வாயில் போல ஆங்காங்கு வட்டவடிவக் குழிகள் உள்ளன. இந்தக் குழிகளுக்குள் இறங்கினால் சுரங்கப்பாதையில் போய்க்கொண்டே இருக்கலாம். நிலவைச் சுற்றிச் சுற்றிவந்து நிலவை ஆராய்ந்த ஜப்பானின் காகுயா விண்கலம் கண்டுபிடித்துள்ள புது விஷயம், இந்த சுரங்கப்பாதை ஒன்றில் பெரிய குகை ஒன்று உள்ளது என்பதாகும்.

அந்தக் குகை 100 மீட்டர் அகலமும் 50 கிலோ மீட்டர் நீளமும்கொண்டதாக உள்ளது. அந்தக் குகையில் பனிக்கட்டி அல்லது தண்ணீர் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. நிலவில் உள்ள சுரங்கப்பாதைகள் குறித்து ஜப்பானிய விண்கலம் நிறையத் தகவல்களை அளித்துள்ளது.

பூமியிலும் எரிமலை சுரங்கப்பாதைகள்

ஜப்பானிய விண்கலம் 2007-ல் நிலவுக்கு அனுப்பப்பட்டது. அது இரண்டு ஆண்டுகாலம் நிலவை விரிவாக ஆராய்ந்தது. காகுயா அனுப்பிய தகவல்கள் ஆராயப்பட்டு, இப்போதுதான் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நிலவுக்கு மறுபடி விண்வெளி வீரர்களை அனுப்ப சில நாடுகள் திட்டமிட்டுள்ள பின்னணியில் நிலவில் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2030 ஆண்டுவாக்கில் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப உள்ளதாக சீனா ஏற்கெனவே அறிவித்துள்ளது. நிலவில் குடியிருப்புகளை ஏற்படுத்து வது தங்கள் திட்டம் என சீனா அறிவித்துள்ளது. பிற நாடுகளுடன் சேர்ந்து நிலவுக்கு 2036-க்குள் விண்வெளி வீரர்களை அனுப்ப ஜப்பான் திட்டமிட்டுள்ளது. 2030 ஆண்டு வாக்கில் நிலவுக்கு நான்கு விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இவை ஒரு புறம் இருக்க.. நிலவில் மட்டுமின்றி பூமியிலும் இவ்வித எரிமலை சுரங்கப்பாதைகள் உள்ளன. அமெரிக்காவில் இடாஹோ மாகாணத்திலும் ஆரிகன் மாகாணத்திலும் உள்ளன.

தென் கொரியா, ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள், போர்ச்சுகல், கென்யா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளிலும் எரிமலை சுரங்கப் பாதைகள் காணப்படுகின்றன. ஹவாய் தீவில் உள்ள எரிமலை சுரங்கப்பாதை 65 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. செவ்வாய் கிரகத்திலும் எரிமலை சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- என்.ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்