மக்களின் ஆவணம் வரலாறு இல்லையா?

By சமஸ்

உயிரோட்டமான தனுஷ்கோடி அழிந்த அத்தியாயத்தை வாசித்த ஏராளமான வாசகர்கள் கேட்ட கேள்வி: “இப்படி ஒரு பேரழிவைப் பற்றி நமக்கு ஏன் முழுமையாகத் தெரியவில்லை? இந்தச் செய்திகளெல்லாம் ஏன் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லை?”

நம்முடைய பெரும்பாலான வரலாறுகள் களத்தில் அல்ல; தலைநகரங்களில் சௌகரியமான இடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன என்பது ஒரு காரணம். அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பதிவுகளைத் தொகுப்பவர்கள், மக்களிடம் உள்ள பதிவுகளைச் சீந்துவதே இல்லை என்பது ஒரு காரணம். பதிவுசெய்யப்படாத எவ்வளவு பெரிய உண்மையும் வரலாறு ஆவதில்லை என்பது முக்கியமான காரணம்.

ஓர் உதாரணம்

தனுஷ்கோடியை மூழ்கடித்த புயலின்போது, பாம்பன் பாலமும் உருக்குலைந்தது. ரயில்வே நிர்வாகம் 6 மாதக் கெடு தந்து, பாலத்தைச் சீரமைக்க ஒரு அணியை இறக்கியது. வெறும் 46 நாட்களில் இந்தப் பணிகளை முடித்தார் பொறியாளர் ஸ்ரீதரன். இது வரலாறு. ஸ்ரீதரனின் பணி கொண்டாடப்பட வேண்டியது என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், அந்தப் பணி அவ்வளவு சீக்கிரம் முடிவதற்கு முக்கியப் பங்காற்றியவர்கள் சுற்றுவட்டார மீனவ மக்கள். தங்கள் சொந்த வீட்டு வேலையாகப் பாலத்தின் கட்டுமான வேலையில் பங்கேற்றவர்கள் அவர்கள். இன்றைக்கு அவர்களுடைய பங்களிப்பு, மறக்கப்பட்ட கதை. காரணம் என்ன? முந்தைய பத்தியைப் படியுங்கள்.

நாட்டுப்புறப் பாடல்களில் வரலாறு

தனுஷ்கோடி மீனவ மக்களிடம் ஒரு மரபுண்டு. கரை வலை இழுக்கும்போது பாட்டுப் பாடுவது. அவர்கள் வாழ்வைச் சீரழித்த புயலுக்கு இந்தப் பாடல்களில் முக்கிய இடம் உண்டு. அந்தப் பாடல்கள் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் வாயிலாக நாட்டுப்புறங்களில் ஊர்ஊராகப் பரவியிருக்கிறது. அதன் தாக்கத்தில் வெளியூர்க்காரர்களும் புயல்பாட்டு பாடி யிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று செ. போத்தி ரெட்டியின் ‘தனுக்கோடி நாட்டுப்புறப் புயற்பாடல்கள்' புத்தகத்தில் காணக்கிடைத்தது. கடலோரத்தில் ஊர்ஊராக அலைந்து, மக்களிடம் பேசி நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்திருக்கிறார் போத்தி ரெட்டி.

இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் வேம்பார் பாக்கியம் எனும் பனைத் தொழிலாளி. புயல் அடித்த தேதியில் தொடங்கி, பார்வையிட வந்த எம்ஜிஆர் முதலானவர்களைத் தொட்டு, பாட்டெழுதியவர் பெயர் வரை சொல்லும் இந்தப் பாடல், நம்முடைய நாட்டுப்புறப் பாடல்கள் எந்த அளவுக்குப் புறக்கணிக்க முடியாத மக்கள் ஆவணம் என்பதற்கு ஒரு சான்று.

தனுஸ்கோடி நாட்டுப்புறப் புயல் பாடல்

தனுஸ்கோடி பாம்பன் முதல்

தயங்காத இராமேஸ்வரம்

அநியாயப் புயலடித்து

அழிந்த கொடுமை பாடுகிறேன்

அமைதியாகக் கேளும்

இந்தக் கதையை எந்த நாளும்

*

கண்டோர் நடுநடுங்க

காற்றுமழை புயலடிக்க

மண்டலத்தில் இக்கதையை

மனத்தெளிவாகப் பாடுகிறேன்

மக்களைப் போல நினைத்து

சபை மன்னிக்கணும் பிழைபொறுத்து (தனுஸ்கோடி)

*

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து

அறுபத்து நாலாம் ஆண்டில்

வாய்மையுள்ள டிசம்பர் மாதம்

வளருந்தேதி இருபத்திரெண்டில்

அடித்ததே புயற்காற்று

பாம்பன் தனுஸ்கோடியைப் பாத்து (தனுஸ்கோடி)

*

ஐயாயிரம் ஜனத்துக்குமேல்

ஆணும் பெண்ணும் அவதிப்பட்டார்

பேய்மழையும் காற்றினாலே

பேதலித்து உயிரைவிட்டார்

ஐயோ துயரமாச்சே

சில ஊரழிந்து போச்சே (தனுஸ்கோடி)

*

மாலை எட்டு மணிக்கு மேலே

மதிப்படங்கா சாமத்திலே

வேலை சோலிதான் முடித்து

வீற்றிருக்கும் வேளையிலே

வருகுதையா ரயிலு

வண்டியைப் புரட்டுதையா

வடகடலும் தென்கடலும்

மண் மோதித் தான் கிளம்பி

தொடர்பாகச் சந்தித்துமே

சூறாவளிப் போல் கொதித்து

வண்டியைத் தூக்கி அடிக்க

மக்கள் மருவி மருவித்துடிக்க (தனுஸ்கோடி)

*

ஐந்நூறு ஜனத்துக்கு மேல்

ஆணும் பெண்ணும் ரயிலில் வர

கால்கள்தான் முறிந்து

கடலோடு போகுதய்யா

ஐயோ பரிதாபம்

இது யாருபோட்ட சாபம் (தனுஸ்கோடி)

*

தனுஸ்கோடி ஊர்களெல்லாம்

தலைக்கு மேலே தண்ணீர் வர

துணியுடைகள் இல்லாமலே

தொங்குதய்யா வீட்டின் மேலே

மதில் இடிந்து சாய

மக்கள் தண்ணீரில் குதித்துப்பாய (தனுஸ்கோடி)

*

ஐயையோ மனைவி மக்கள்

அநியாயமாய்ப் போகுதென்று

மெய்சோர்ந்து மன்னவனும்

மெதுவாக இழுக்கும்போது

குடும்பத்தோட புரட்டி வெள்ளம்

கொண்டு போகுதே சுருட்டி (தனுஸ்கோடி)

*

வள்ளங்களும் விலாஞ்சிகளும்

வளைக்கச் சென்ற தோணிகளும்

வெள்ளத்திலே அடியும்பட்டு

பள்ளத்திலே இழுக்குது பார்

ஐயோ மக்கள் அலற

அடிபட்டுக் குடலும் சிதற (தனுஸ்கோடி)

*

வெள்ளரிப்பழம் போல

வெடித்துப்பிணம் மிதக்குதைய்யா

அள்ளிக்கொண்டு புதைப்பதற்கு

ஆளுதவி கிடையாமல்

அலையடித்து ஒதுக்க

நாய்நரி கடித்து இழுக்க (தனுஸ்கோடி)

*

இராமேஸ்வரம் ஊர்களிலே

தெருக்களெல்லாம் தண்ணீர் ஓட

பூமான்கள் கோவிலெல்லாம்

புரட்டித்தூக்கி அடிக்குது பார்

ஐயோ மக்கள் வாட

அடுத்த திட்டில் ஏறி ஓட (தனுஸ்கோடி)

*

சித்தம் புகழ் நடிகரவர்

ஜெமினி கணேசன் சாவித்திரி

அத்த ராத்திரி வேளையிலே

அமைந்தாரே கோவிலுக்குள்

ஆயாசப்பட்டார்

நடிகர் அழுதும் கண்ணீர் விட்டார் (தனுஸ்கோடி)

*

உடுப்பதற்கோ உடையுமில்லை

உண்பதற்கோ உணவுமில்லை

படுப்பதற்கோ பாயுமில்லை

பறக்குதுபார் வெள்ளத்திலே

பார்க்க பார்க்க துக்கம்

பார்த்துப் போனாலுமே ஏக்கம் (தனுஸ்கோடி)

*

கக்கன்ஜி நெடுஞ்செழியன்

காமாராஜர் அண்ணாதுரை

முக்கியமாய் எம்ஜியார்

பாம்பன் செய்தி கேட்டார்

பாங்காகவே புறப்பட்டார் (தனுஸ்கோடி)

*

ஏரோப்பிளேன் மீதேறி

எல்லோருக்குமாய் சோறுகட்டி

வாறார்கள் தனுஸ்கோடி

வந்துபார்த்தார் இராமேஸ்வரம்

சோர்ந்து கண்ணீர் விட்டார்

சோற்றுமூட்டை தூக்கிப்போட்டார் (தனுஸ்கோடி)

சோறு சோறு சோறு என்று

சுழலுதய்யா மக்களெல்லாம்

ஆரு சோறு போட்டாலும்

அரை வயிறு நிறையுதில்லே

நைந்தோடுது சோறு

மண்ணில் புரட்டித் தின்பதைப்பாரு (தனுஸ்கோடி)

*

சண்டாளப் புயலடித்து

தனஉயிரும் வீடும் போச்சே

கண்டு கவர்மெண்டாரும்

கனகோடி நிதி கொடுத்தார்

காமராஜரைத் தேடு

வேம்பார் பாக்கியம் கவிபாடு!

(மக்களின் பாடல் அவர்கள் வார்த்தையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.)

*

“புயல் தெரியலீயே… ரயிலை அனுப்பிட்டேனே!”

தனுஷ்கோடி புயல் மனரீதியாக அடித்துப் போட்டவர்களில் பி. ராமச் சந்திரன் முக்கியமானவர். புயலில் அடித்துச் செல்லப் பட்ட பயணிகள் ரயிலை அனுப்பிவைத்தவர். அப்போதைய, ராமேசுவரம் ரயில் நிலையத்தின் நிலைய அதிகாரி. அங்குள்ள மீனவ மக்களோடு மிக நெருக்கமான உறவைப் பராமரித்த ராமச்சந்திரனை ராமேசுவரத்தைவிட்டு மாற்றக் கூடாது என்று மனு மீது மனு போட்டு 9 ஆண்டுகள் அந்த ஊரிலேயே தக்கவைத்திருக்கின்றனர் உள்ளூர் மக்கள். ராமச்சந்திரனுக்கு இப்போது 93 வயதாகிறது. தனுஷ்கோடி புயலைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும், ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதவர் கண்ணீரின் இடையே பேசினார்.

புயல் நாளை நினைவிருக்கிறதா? அதை எப்படி மறக்க முடியும்?

இப்படிப் புயலடிக்கும்னு இந்தப் பாவிக்கு யாரும் சொல்லலீயே… புயல் தெரியலீயே... ரயிலை அனுப்பிட்டேனே… (அழுகிறார்)

ஆனால், பாம்பனுக்குத்தானே நீங்கள் ரயிலை அனுப்பினீர்கள்?

ஆமா, பாம்பனுக்கு நான் அனுப்பிச்சேன். அங்கேயிருந்து தனுஷ்கோடிக்கு பாம்பன் ஸ்டேஷன் மாஸ்டர் அனுப்பிச்சார். யாருக்குமே புயல் இப்படிச் சுருட்டும்னு தெரியலையே… (அழுகிறார்)

அப்போது சம்பவ இடத்துக்குப் போனீர்களா?

அதிகாரிகளோட படகுல போனேன். எங்கே பார்த்தாலும் மனுச ஒடம்பு மிதக்குது. ஐயோ, கொடுமை, கொடுமை… (மீண்டும் அழுகிறார்)

சரி, நாம் அதை விட்டுவிடலாம்... பாம்பன் பால மறுகட்டமைப்பில் மீனவ மக்கள் பங்களிப்பைச் சொல்ல முடியுமா?

(கண்களைத் துடைத்துக்கொண்டு…) அவா ஒத்தாசை இல்லேன்னா நடக்குற கதையா அது! உள்ளூர் மீனவா மட்டும் இல்லை; வெளியூர் மீனவாவும் வந்தா. மாப்ளாஸ் வந்தா. எல்லாருமா ஓடி ஓடி ஒழைச்சுதான் பாலத்தைத் திரும்ப தூக்கி நிறுத்தினா.

கடலோர மக்களிடையே நீண்ட நாட்கள் வேலை செய்திருக்கிறீர்கள். அவர்களுடனான உங்கள் உறவைச் சொல்லுங்களேன்…

ரொம்ப நல்ல மனுஷா. நான் தஞ்சாவூர் ஜில்லாக்காரன். ஊரை மறந்துட்டு அவாளோடேயே இருந்துடலாமானு நெனைச்சுருக்கேன். அவ்ளோ நல்ல மனுஷா.

அவாளுக்கு நான் ஸ்டேசன் மாஸ்டர் மட்டும் இல்லை. மனு எழுதிக் கொடுக்குறவன், கடுதாசி படிச்சுக் காட்டறவன், பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துல சேர்க்க யோஜனை சொல்லுறவன்… கூடையோடு மீனைத் தூக்கிட்டு வந்துட்டு, ‘சாமி… உங்களுக்குக் கொடுக்க எங்களுக்கு இங்கே மீனைத் தவிர என்ன இருக்கு? மீன் சாப்பிடாதவராப் போயீட்டீங்களே'ன்னு வருத்தத்தோடு போவா. அவாள விட்டு வந்துட்டேனேயொழிய இன்னும் எம் மனசுல அவா அப்படியே இருக்கா!

- சமஸ்

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்