இ
யற்பியல் துறைப் பேராசிரியர் என்ற முறையில், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் 11, 12-ம் வகுப்பு இயற்பியல் பாடத்திட்ட வரைவு தொடர்பான எனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன். அறிவியல் கலைத்திட்டம் (science curriculum) செழுமையாக இருக்கிறது. “புத்திக்கூர்மை என்பது வெறும் தகவல் தொகுப்பு மட்டுமல்ல, எவ்வாறு தகவல் சேகரிக்கப்படுகிறது, எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைப் பொறுத்து அமையும்” என்ற கார்ல் சகனின் (Carl Sagan) மேற்கோளுடன் அமர்க்களமாகத் தொடங்குகிறது.
அறிவியல் பாடம் என்பது கேள்விகளை மனப்பாடம் செய்வதும், குறிப்பிட்ட கேள்விகளுக்குப் புத்தகத்தில் உள்ளதுபோல் எழுத்துப் பிசகாமல் தேர்வில் பதில் எழுதுவது போன்றும் இருக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாம் பாராட்டப்பட வேண்டிய அம்சங்கள்.
இந்தக் கலைத்திட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பாடத்திட்டமானது, கலைத்திட்டத்தில் சொன்ன விஷயங்களை அப்படியே எதிரொலிக்கவில்லை. ரொம்பவே வறட்டுத்தனமாக இருக்கிறது. குறிப்பாக சில பாடங்களில் ‘நியூமரிக்கல் பிராப்ளம்ஸ்’ மற்றும் அதற்குரிய கணக்குகள் என்று மட்டும் கொடுத்துள்ளனர். இதைப் பார்க்கிறபோது இந்தப் பாடத்திட்டமானது, நீட் தேர்வு, ஐஐடி நுழைவுத்தேர்வு போன்றவற்றை மட்டுமே கருத்தில் வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளதோ என்று தோன்றுகிறது. கலைத்திட்டத்தில் உள்ளது வரைவுப் பாடத்திட்டத்திலேயே இடம்பெறவில்லை என்றால், வெளியே வருகிற பாடப்புத்தகம் எப்படி இருக்குமோ?
அடிப்படை அறிவியலை மாணவர்கள் ஆர்வத்துடன் விரும்பிப் படிப்பார்கள் என்றால், நாட்டின் எதிர்காலத் தொழில்நுட்பமும் சிறப்பாக உருவாகும். ஆக, அடிப்படை அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டுமே தவிர, வெறுமனே தொழில்நுட்பம் சார்ந்து உருவாக்கப்படக் கூடாது. அதாவது, இப்போது பிரபலமாக உள்ள தொழில்நுட்பத்தைக் கற்பிப்பதைவிட, எதிர்காலத்துக்கான தொழில்நுட்பத்தை வடிவமைப்பவர்களாக மாணவர்களை மாற்ற வேண்டும். அடிப்படை அறிவியல் மீது ஒரு குழந்தைக்கு நாட்டம் இருக்குமானால், அதைச் சரியான முறையில் அவர்களுக்குக் கற்பித்து, அவர்களுடைய அறிவுத்தேடலை ஊக்குவித்தோம் என்றால், நாட்டின் எதிர்காலத்துக்குத் தேவையான தொழில்நுட்பம் தானாகவே மலரும். இதற்கு அடிப்படை யான அறிவியல் கண்ணோட்டத்தையும் அறிவியல் தேடலையும் கருத்தில் கொண்டே அறிவியல் பாடத்திட்டங்கள் எழுதப்பட வேண்டும்.
அடுத்ததாக, புதிய பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி. தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 எனும் கல்விமுறை வருவதற்கு முந்தைய ஆண்டில் (1977) பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியை அரசு நடத்தியது. குறிப்பாக, சென்னை மாநிலக் கல்லூரி இயற்பியல் துறையில் என்.சி.இ. ஆர்.டி. நிதி உதவியுடன் நடந்த பயிற்சியில் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டு கலந்துரையாடினார்கள். அதேபோல இப்போதும் புதிய பாடத்திட்டம் அமலாவதற்கு முன்னால் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிலரங்கங்களைப் பல்கலைக்கழகங்கள், ஐஐடி, கல்லூரிகளின் உதவியுடன் என்.சி.இ.ஆர்.டி. நடத்த வேண்டும்.
பாடத்திட்டத்தில் அறிவியல் கண்ணோட் டம் மிக எளிமையாக இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் ஏற்கெனவே அறிந்ததில் இருந்து அறியாத விஷயத்தை நோக்கி இயல்பாக நகர்த்துவதாக இருக்க வேண்டும். கம்பளி போர்த்தினால் குளிர்வதில்லையே ஏன் என்பதில் ஆரம்பித்து, வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பப் பரவல் குறித்து சொல்லித்தர வேண்டும். பிள்ளை யார் பால் குடித்தது உண்மையா என்பதில் ஆரம்பித்து, பரப்பு இழுவிசை பற்றிச் சொல்லித்தர வேண்டும். மிகவும் முக்கியமான விஷயம், அறிவியல் பாடங்கள் நேரடியாகத் தமிழில் எழுதப்பட வேண்டும், அல்லது எளிமையான மொழியாக்கமாக இருக்க வேண்டுமே தவிர, வறட்சியான மொழிபெயர்ப்பாக அமைந்துவிடக் கூடாது. தமிழ் வழியில் பாடம் நடத்தி அனுபவமே இல்லாத ஆசிரியர்களை வைத்து தமிழ்வழிப் பாடத்திட்டத்தை எழுதவே கூடாது. இப்பணிக்கு த.வி.வெங்கடேஸ்வரன் போன்ற அறிவியலாளர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அறிவியல் பாடத்திட்டத்தின் கலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, அட்டை யால் செய்யப்படும் விலை மலிவான ‘மைக்ராஸ்கோப்’ கருவியை ஒருவர் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கத் தயாராக இருப்பது குறித்த தகவல் இணையதளத்தில் இடம்பெற்றிருப்பது நல்ல விஷயம். அரசுப் பள்ளிகளில் ஆய்வுக்கூடங்களை முறையாகப் பராமரிப் பதற்குப் போதுமான அளவு நிதி ஒதுக்கீட்டை அரசு செய்தாக வேண்டும். பாடத்திட்டம் எழுதுகிற கல்லூரி ஆசிரியர்களைப் பகுதிநேரமாக அழைத்து அதில் ஈடுபடுத்துவதை முற்றாகக் கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்களால் கற்பித் தல் பணியையும் முறையாகச் செய்ய முடியாது, பாடத்திட்டமும் முழுமையாக இருக்காது. எனவே, முழு ஊதியத்துடன் அவர்களைப் பணியிலிருந்து விடுப்பளித் துப் பாடத்திட்டம் எழுதச் செய்ய வேண்டும். வெறுமனே பாடத்திட்ட மாற்றம் மட்டுமே கல்விமுறையில் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடாது. மேற்கண்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்தினால்தான் அது சாத்தியமாகும்!
- ப.சிவகுமார், ஓய்வுபெற்ற பேராசிரியர்,
குடியாத்தம் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர்.
தொடர்புக்கு: sivakumarpadmanabhan1946@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
16 days ago
கருத்துப் பேழை
16 days ago
கருத்துப் பேழை
16 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
20 days ago
கருத்துப் பேழை
20 days ago
கருத்துப் பேழை
20 days ago
கருத்துப் பேழை
23 days ago
கருத்துப் பேழை
23 days ago
கருத்துப் பேழை
23 days ago
கருத்துப் பேழை
30 days ago
கருத்துப் பேழை
30 days ago
கருத்துப் பேழை
30 days ago